ஸ்கந்தகுப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் சில கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அவற்றிலிருந்து சில ஆச்சரியமான செய்திகள் கிடைக்கின்றன. பித்ரி என்றும் பிடரி என்றும் அழைக்கப்படும் இடத்தில் உள்ள தூண் கல்வெட்டைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். காஸியாபூருக்கு அருகில் உள்ள இந்த இடத்தில் கிடைத்த கல்வெட்டு சமஸ்கிருதத்தில் அமைந்ததாகும். இதில்தான் குப்தர்களின் வம்சத்திற்கு ஏற்பட்ட தொல்லைகள் பற்றியும் அவற்றை ஸ்கந்தகுப்தர் எப்படி எதிர்கொண்டு சமாளித்தார் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஹுணர்களை எதிர்கொண்டு பெற்ற வெற்றியும் இதில் புகழப்பட்டுள்ளது. அந்த ஊரில் சாரங்கன் என்ற திருநாமத்தைக் கொண்ட விஷ்ணுவின் கோவிலைக் கட்டுவதற்காக அளிக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றி இந்தக் கல்வெட்டு பேசுகிறது.
பாட்னாவின் அருகிலுள்ள பீகார் என்ற இடத்தில் கிடைத்த மற்றொரு தூண் கல்வெட்டும் ஸ்கந்தகுப்தர் காலத்தையது ஆகும். இரு பகுதிகளைக் கொண்ட இக்கல்வெட்டும் சமஸ்கிருதத்தில் அமைந்துள்ளது. முதல் பகுதியில் ஸ்கந்தகுப்தரின் தந்தையான குமாரகுப்தரின் மனைவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும் அது காலப்போக்கில் அழிந்துவிட்டது. அனந்தசேனன் என்ற அமைச்சரின் மனைவி என்று அந்த அரசி குறிக்கப்பட்டுள்ளார். ஸ்கந்தகுப்தபதம் என்ற ஊரில் யாகத்தூண் ஒன்றை அமைத்ததைப் பற்றி இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதோடு ‘அக்ரஹாரம்’ ஒன்றையும் அந்த ஊரில் அமைப்பதற்கான கொடை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கந்தக் கடவுளையும் அன்னையர் எழுவரையும் (சப்தமாதர்கள்) புகழ்ந்து ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
இரண்டாம் பகுதி குப்தர்கள் வம்சவளியைப் பற்றிப் பேசுகிறது. பரமபாகவதன் என்று ஸ்கந்தகுப்தரைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு, அஜபுரம் என்ற ஊரில் ஒரு நீண்ட கால நிதியை அளித்ததாகச் சொல்கிறது. ஆனால் எதற்காக அந்த நிதி அளிக்கப்பட்டது என்ற விவரம் அழிந்துவிட்டது. முதல் பகுதியில் உள்ள ஸ்லோகங்களை வைத்து இங்கு முருகப்பெருமானுக்கும் சப்தமாதர்களுக்கும் கோவில்கள் எழுப்பப்பட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உபரிகர், குமாராமத்யர் (இளவரசரின் மந்திரி), சௌல்கிகர் போன்ற அதிகாரிகளின் பெயர்கள் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணமாக இது ஒரு பெரும் கொடையாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது.

குஜராத்திலுள்ள ஜுனாகட், சிங்கங்களுக்குப் புகழ்பெற்ற கிர் சரணாலயத்திற்கு அருகில் உள்ளது. பண்டைக்காலத்தில் இது கிரிநகரம் என்று அழைக்கப்பட்டது. இந்த இடத்தில் அசோகரது பதினான்கு பாறைக் கல்வெட்டுகளும் மகாக்ஷத்ரபனான ருத்ரதாமனின் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதே பாறையின் வடமேற்குப் பகுதியில் ஸ்கந்தகுப்தரது கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் எழுத்துரு பொயு ஐந்தாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சௌராஷ்ட்ராவின் எழுத்துருவைச் சேர்ந்தது. இதன் மொழி சமஸ்கிருதம். குப்தர்களின் ஆண்டு 136ஐச் சேர்ந்தது இது (பொயு 455-56)
மகாவிஷ்ணுவின் துதிகளோடு ஆரம்பிக்கும் இந்தக் கல்வெட்டு, ஸ்கந்தகுப்தர் கத்தியவார், சௌராஷ்ட்ரப் பகுதிகளைக் கவனித்துக்கொள்ள பர்ணதத்தன் என்பவரை நியமித்ததாகக் குறிப்பிடுகிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு சாதக பாதகங்களை ஆராய்ந்து பர்ணதத்தனை அந்தப் பகுதியின் ஆளுராக ஸ்கந்தகுப்தன் நியமித்தானாம். பர்ணதத்தன் தன் மகனான சக்ரபாலிதனை பல்வேறு விதமாகப் பரீட்சை செய்த பிறகு, ஜுனாகட்டின் நிர்வாகியாக நியமித்தார். சக்ரபாலிதன் நகர மக்களை அமைதியான முறையில் நிர்வகித்தான் என்று சொல்லும் இந்தக் கல்வெட்டு, ஒரு நகர நிர்வாகிக்கு உரிய குணங்களைப் பட்டியலிடுகிறது. அவருக்குக் கடன்கள் இருக்கக்கூடாது (இல்லாவிட்டால் லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் மூலம் கடனை அடைக்க முயல்வார்), வாக்கு சாதுர்யம் நிரம்பியவராக அவர் இருக்கவேண்டும், கருணை கொண்டவராகவும் (தாக்ஷிண்யம்) புன்னகையோடும் மகிழ்வோடும் உரையாடுபவராகவும் (பூர்வஸ்மிதாபாஷணா), தான தர்மங்களில் ஆர்வமுடையவராகவும் அவர் இருக்கவேண்டும் என்கிறது. சக்ரபாலிதன் அடிக்கடி நகர மக்களுடைய வீடுகளுக்கு சர்வ சாதாரணமாக, ஆர்ப்பட்டமில்லாமல் விஜயம் செய்து (க்ருஹப்ரவேச) அவர்களுடைய குறைகளைக் கேட்டறிவானாம். தவிர, தன் வீட்டிலேயே விருந்துகளுக்கு ஏற்பாடு செய்து நகர மக்களுக்கு அழைப்பு விடுவானாம். இந்தக் காரணங்களால் அவனுடைய மதிப்பு ஊரில் அதிகரித்ததாம்.
ஆனால் அந்த மதிப்புக்கு விரைவிலேயே பெரும் சோதனை ஒன்று ஏற்பட்டது. அந்த வருடம் பாத்ரபத மாதத்தில், அதாவது ஆவணி-புரட்டாசி மாதங்களில் பருவமழை அதிகமாகப் பெய்ததால், அந்த ஊரில் உள்ள சுதர்சன ஏரி நிரம்பி வழிந்து ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. அருகிலுள்ள ஊர்ஜயவதம் (ரைவதகம்) என்ற மலையிலிருந்து வரும் பலாஸினி, ஸ்வர்ணசிகதா ஆகியா ஆறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டு, அந்த வெள்ளம் சுதர்சன ஏரிக்கு வந்து சேர்ந்து அந்த உடைப்பைப் பெரிதாக்கியது. ஏரியின் நீர் வெளியேறியதால் நிலைகுலைந்த மக்கள் இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தவித்தபோது, சக்ரபாலிதன் களத்தில் இறங்கினான். தன்னுடைய சொந்த நிதியைப் பெருமளவு செலவழித்து ஏரியின் உடைப்பை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுத்தான். இரண்டு மாதப் பணிக்குப் பின், குப்தர்கள் ஆண்டு 137ம் ஆண்டு வாக்கில் இந்த உடைப்புச் சரிசெய்யப்பட்டது என்ற தகவலைக் கல்வெட்டு தருகிறது. உடைப்பைச் சரி செய்தது மட்டுமல்லாமல், ஏரியின் கரைகளைச் செப்பனிட்டு, மீண்டும் அம்மாதிரி உடைப்பு ஏற்படாவண்ணம் செய்தான் சக்ரபாலிதன். ஏழு ஆள் உயரத்திற்கு கரைகளை வலிமையாக எழுப்பி, நீண்டகாலம் அது உடையாமல் இருக்க (சாஸ்வத் கல்ப காலம்) வழிசெய்தான் அவன் என்கிறது கல்வெட்டு.
இதில் உள்ள இன்னொரு பகுதி, பர்ணதத்தனை ஸ்கந்தகுப்தர் அந்த மாகணத்தின் ஆளுநராக நியமித்த விவரத்தைக் கூறிவிட்டு, பர்ணதத்தனின் மகனான சக்ரபாலிதன் ‘சக்ரப்ருத்’ அதாவது சக்ரபாணியான விஷ்ணுவுக்கு அங்கே ஒரு கோவிலை எழுப்பிய விவரத்தைத் தருகிறது. ஏரிக்குக் கரை எழுப்பிய கையோடு, அது நல்லபடியாக நிறைவேறியதற்கு நன்றியாக இந்தக் கோவிலை சக்ரபாலிதன் கட்டியிருக்கலாம்.
மற்றபடி, நாம் ஏற்கனவே பார்த்த ஸ்கந்தகுப்தரின் வெற்றிகள் இதிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாம்புகள் போல நாட்டில் பல இடங்களிலும் இருந்த சிற்றரசர்கள் கலகம் செய்ததும் அவற்றை கருடர்கள் போன்று ஸ்கந்தகுப்தரின் ஆளுநர்கள் அடக்கியதும் பேசப்பட்டுள்ளது. மிலேச்சர்களான ஹூணர்களை ஸ்கந்தகுப்தர் வென்று துரத்தியது, (குமாரகுப்தரின்) மற்ற மகன்களை விட்டு அதிருஷ்டலக்ஷ்மி ஸ்கந்தகுப்தரை அரசளாத் தேர்ந்தெடுத்தது ஆகியவை கூறப்பட்டுள்ளன. ஸ்கந்தகுப்தரின் ஆட்சியில் எவரும் மதத்தை விட்டு விலகவில்லை, எவரும் ஏழைமையையும் துன்பத்தையும் அனுபவிக்கவில்லை. பேராசைக்காரர்களாகவும் கடும் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்பவர்களாகவும் மக்கள் இருக்கவில்லை என்றும் இந்தக் கல்வெட்டு அப்போது நடைபெற்ற நல்லாட்சி பற்றி விவரிக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு அருகிலுள்ள கஹோம் தூண் கல்வெட்டும் ஸ்கந்தகுப்தரின் மற்றொரு முக்கியமான கல்வெட்டு. சமஸ்கிருத மொழியைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு குப்தர்கள் ஆண்டு 141ஐச் சேர்ந்தது (பொயு 460-61). நூற்றுக்கும் மேற்பட்ட அரசர்களை ஸ்கந்தகுப்தர் தோற்கடித்ததாக உயர்வு நவிற்சியில் குறிப்பிடும் இந்தக் கல்வெட்டு கஹோம் என்ற ஊரில் இருந்த மாத்ரர என்ற ஒருவர் உலகில் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்களினால் கவலை அடைந்ததாகவும் அதனால் ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறுகிறது. அதைக் குறிக்கும் வகையில் ஐந்து ‘அர்ஹர்களின்’ திருமேனியை அவர் செய்துவைத்ததாக இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அதன்படியே நின்ற நிலையில் உள்ள ஐந்து துறவிகளின் உருவங்கள் இந்தத் தூண் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் சமண சமயத்தைச் சேர்ந்த ஐந்து தீர்த்தங்கரர்களே அவர்கள் என்று குறிப்பிடுகின்றனர். ஆதிநாதர், சாந்திநாதர், நேமிநாதர், பார்ஸ்வநாதர், மகாவீரர் ஆகியோரின் உருவங்களே அங்கு உள்ளன என்பது அவர்களின் கருத்து.
மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகளைத் தவிர, பண்டைக்காலத்தில் இந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இந்தோரில் கிடைத்த செப்பேடு ஒன்றும் ஸ்கந்தகுப்தரின் காலத்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. குப்தர்கள் ஆண்டு 146 (பொயு 465-66)ஐச் சேர்ந்த இந்தச் செப்பேடு, சூரிய வணக்கத்தோடு ஆரம்பிக்கிறது. ஸ்கந்தகுப்தரை பரமபட்டாரகர், மஹாராஜாதிராஜர் என்ற அடைமொழிகளோடு குறிக்கும் கல்வெட்டு, சர்வநாகன் என்ற விஷயபதியினால் ஆளப்பட்டிக்கொண்டிருந்த அந்தர்வேதி என்ற மாகாணத்தைச் சேர்ந்தவனும் சந்திரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவனும் சதுர்வேதிகளின் குடியில் பிறந்தவனும் அக்னிஹோத்திரத்தை விடாமல் செய்பவனுமான பிராமணன் தேவவிஷ்ணு, தன் நலனுக்காக ஒரு கொடை அளித்தான். க்ஷத்திரியர்களான அசலவர்மனும் ப்ருகுந்தசிம்ஹனும் கட்டிய சூரியதேவனுடைய கோவிலில் விளக்கெரிப்பதற்காக அந்த ஊரைச் சேர்ந்த வணிகர்களின் குழுவில் வைப்பு நிதி ஒன்றை அவன் அளித்தான். அது நிரந்தர வைப்பு நிதியாக ஜிவந்தன் என்பவனுடைய தலைமையிலான அவ்வூர் எண்ணெய் வணிகர்களால் பேணப்படும். அதிலிருந்து வரும் வட்டி கோவில் விளக்கெரிப்பதற்காக இரண்டு பலம் எண்ணெய் வாங்குவதற்கு ஆகும் செலவிற்குப் பயன்படுத்தப்படும். சந்திர சூரியர்கள் உள்ள வரையிலும் இந்தக் கொடை செயல்படுத்தப்படும். இக்கொடைக்குத் தீங்கு விளைவிப்பவன் பசுவை வதைத்த பாவத்திற்கும் பிராமணனைக் கொன்ற பாவத்திற்கும் பஞ்சமாபாதகங்களைச் செய்பவன் செல்லும் நரகத்திற்கும் செல்வானாக என்ற ‘ஒம்படைக் கிளவி’யோடு செப்பேடு நிறைவடைகிறது.
சமயம்
பாரத தேசத்தில் வாழ்ந்த பல மன்னர்களைப் போலவே, வேத நெறியைப் தாம் பின்பற்றினாலும் மற்ற சமயங்களையும் ஆதரிக்கும் மன்னராக ஸ்கந்தகுப்தர் இருந்தார். அவருடைய காலத்தில் ஷண்மதங்களும் சிறப்பாக விளங்கியது என்பதற்கு சிவன், விஷ்ணு கோவில்களைத் தவிர சூரியனுக்கும், தேவிக்கும், ஸ்கந்தருக்கும் கோவில்கள் இருந்தது என்றும் அவற்றிற்கு அவரும் அவருடைய அதிகாரிகளும் நன்கொடைகள் வழங்கியதும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. போலவே, சமண சமயத்தைச் சேர்ந்த மாத்ரர், கஹாமில் ஐந்து தீர்த்தங்கரர்களின் திருமேனிகளை ஸ்தாபித்ததாக மேலே பார்த்தோம். இதிலிருந்து சமண, பௌத்த மதங்களும் அவர் காலத்தில் ஆதரிக்கப்பட்டு வந்தன என்பது தெரிந்துகொள்ள முடிகிறது. நாலந்தா பல்கலைக் கழகமும் ஸ்கந்தகுப்தரின் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
(தொடரும்)