ஒரு நாடோ, அரசோ வீழ்ச்சியடைவதற்கான அறிகுறி தெரிய ஆரம்பிப்பது பெரும்பாலும் அந்நாட்டின் பொருளாதாரத்தில்தான். நாட்டின் பரப்பளவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதன் படைபலம் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் அதன் அடிப்படை ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது என்பது அதன் பொருளாதாரத்தில் ஏற்படும் தேக்கங்களால் தெரியவரும். நவீன காலத்தில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து பெரும்பாலும் இந்த வீழ்ச்சியிலிருந்து பல நாடுகள் மீண்டு விடுகின்றன. ஆனால் அதுபோன்ற வசதிகள் ஏதுமில்லாத பண்டைக்காலத்தில் அரசுகள் வலிமை குறைந்து அழிந்து போனதை நாம் பார்க்கமுடிகிறது. அதுபோன்ற சோதனையைத்தான் குப்தர்களின் அரசும் சந்தித்தது.
சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர், குமாரகுப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் அதிக அளவிலும், வகைகளிலும் நாணயங்களை அச்சடித்துப் புழக்கத்தில் விட்ட பெருமையை உடைய குப்தர்கள், ஸ்கந்தகுப்தரின் ஆட்சிக்காலத்தில் அவ்வளவு அதிகமாக நாணயங்களை அச்சடிக்கவில்லை. இதை, குப்தர்களின் பொருளாதாரம் தேக்கமடையத் தொடங்கியதற்கான அறிகுறியாக ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவரது ஆட்சியின் பிற்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தெளிவாகக் காட்டும் கண்ணாடியாக அவர் வெளியிட்ட நாணயங்கள் இருந்தன.
ஸ்கந்தகுப்தரின் நாணயங்கள்
ஸ்கந்தகுப்தரும் தன் பங்குக்கு சில நாணயங்களை அச்சடித்தாலும் தன் முன்னோர்களைப் போல பல வகைகளில் அவற்றை அச்சடிக்கவில்லை.
வில்வீரர் வகை நாணயங்கள்
ஸ்கந்தகுப்தரின் வில்வீரர் வகை நாணயங்களில் ஒரு புறம் அரசர் வில்லையும் அம்பையும் தாங்கி நிற்கிறார். அவரின் வலதுபுரம் கருடத்வஜம் காணப்படுகிறது. அருகில் ‘ஸ்கந்த’, ‘ஜயதி மஹீதலம்’, ‘ஜயதி திவம் ஸ்ரீக்ரமாதித்யா’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சில நாணயங்களில் வில் வீரர் என்பதைக் குறிக்கும் சுதன்வி என்ற வார்த்தையும் காணப்படுகிறது. நாணயத்தின் மற்றொரு புறத்தில் லக்ஷ்மிதேவியின் உருவம் காணப்படுகிறது. அருகே ‘ஸ்ரீ ஸ்கந்தகுப்த’, ‘க்ரமாதித்யா’ போன்ற வாசகங்கள் காணப்படுகின்றன.
அரசரும் லக்ஷ்மிதேவியும் உள்ள நாணயங்கள்
வில்வீரர் வகை நாணயங்களிலிருந்து சிறிதே மாறுபடும் இந்த வகை நாணயங்களில் வில்லும் அம்பும் ஏந்திய அரசரின் அருகே அதே பக்கத்தில் லக்ஷ்மிதேவி காணப்படுகிறார். இருவருக்கும் இடையே கருடனின் உருவம் உள்ளது. பின்பக்கதிலும் லக்ஷ்மிதேவியின் உருவம் தாமரையுடன் காணப்படுகிறது. ஜூனகாத் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது போல, தன்னுடைய குலப் பெருமையை மீட்க உதவிய ‘குல லக்ஷ்மி’தேவிக்கு நன்றிக்கடனாக இவ்வகை நாணயங்களை ஸ்கந்தகுப்தர் வெளியிட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தவகை நாணயங்களில் அரசரின் அருகே இருக்கும் உருவம் லக்ஷ்மிதேவி அல்ல, அரசியுடையது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அந்த உருவத்தின் கையில் இருக்கும் தாமரை அது லக்ஷ்மிதேவி என்பதற்கான குறியீடு ஆகும். தவிர, நாணயத்தின் பின்னால் இருக்கும் லக்ஷ்மிதேவியின் உருவமும் அரசரின் அருகே உள்ள உருவமும் ஒரே மாதிரி உள்ளன. அரசியை நாணயங்களில் போது அரசரின் அருகே இருக்குமாறு சித்தரிப்பதே வழக்கம் அன்றி இருவருக்கும் இடையில் கருடன் இருக்குமாறு பொறிப்பது வழக்கமல்ல. மேலும் குப்தர்கள் நாணயங்களில் அஸ்வமேதம் போன்ற தருணங்களைக் குறிக்கும் நாணயங்களிலேயேதான் அரசியின் உருவம் உள்ளது. அதுவும் சாமரத்துடன்.
இந்தக் காரணங்களால் நாணயத்தில் உள்ளது லக்ஷ்மிதேவியே என்பதும் தன்னுடைய குலப்பெருமையை மீட்டெடுத்ததன் நன்றிக்கடனாகவே ஸ்கந்தகுப்தர் தன்னருகே தேவியின் உருவத்தைப் பொறித்தார் என்பதும் சரியான விளக்கமாகவே தோன்றுகிறது.
மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர, ஸ்கந்தகுப்தர் காலத்தைச் சேர்ந்த ஒரே ஒரு குதிரைவீரர் வகை தங்க நாணயமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள ‘க்ரமாதித்யா’ என்ற வார்த்தையை வைத்து அதை ஸ்கந்தகுப்தர் காலத்தவையாக நாணயவியலாளர்கள் கருதுகின்றனர்.
ஸ்கந்தகுப்தருடைய ஆரம்பகாலத் தங்க நாணயங்கள் அவருடைய முன்னோர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் போலவே தரமுள்ள பொன்னால், 132 கிரயின்கள் எடையுடன் வெளியிடப்பட்டன. ஆனால், பின்னால் வெளியிடப்பட்ட வில்வீரர் வகைத் தங்க நாணயங்களில் பொன்னுடைய மாற்றுக் குறைந்து எடை அதிகமுடன், அதாவது 114.6 கிரயின்கள் எடையோடு வெளியிடப்பட்டன. ஆகவே நாணயத்தின் மதிப்புக் குறைந்தவையாக (debased currency) இவை இருந்தன. பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கமே இப்படி நாணய மதிப்புக் குறைக்கப்பட்டதன் காரணம் என்பது தெளிவு.
வெள்ளி நாணயங்கள்
நாட்டின் மேற்குப் பகுதியிலும் மத்தியப் பகுதியிலும் ஸ்கந்தகுப்தர் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் கிடைக்கப்பெறுகின்றன. மேற்குப் பகுதியில் கிடைத்த வெள்ளி நாணயங்களில். ஒருபுறத்தில் கருடன், நந்தி, யாககுண்டம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள நாணயங்கள் கிடைத்தன. மறுபுறத்தில் குப்தர்களின் மற்ற வெள்ளி நாணயங்களைப் போலவே அரசரின் மார்புவரையான உருவம் உள்ளது. கருடன் உள்ள நாணயங்களில் மறுபுறத்தில் விரிந்த சிறகுகளையுடைய கருடனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ‘பரமபாகவத மகாராஜாதிராஜ ஸ்ரீ ஸ்கந்தகுப்த கிரமாதித்யா’ என்று எழுதப்பட்டுள்ளது. யாககுண்டம் உள்ள நாணயங்களில் ‘பரமபாகவத ஸ்ரீ விக்ரமாதித்ய ஸ்கந்தகுப்த’ என்று எழுதப்பட்டுள்ளது. நந்தியின் உருவம் பொறித்த நாணயங்கள் கத்தியவார் பகுதியில் ஆட்சிசெய்த வலபி அரசர்களுடைய சின்னமான நந்தியை குப்தர்களும் தங்கள் நாணயங்களில் பொறித்தவர்.
இப்படி குப்தர்களின் அரசின் மேற்குப் பகுதியான குஜராத், சௌராஷ்டிரம் ஆகிய இடங்களில் கிடைத்த நாணயங்களைப் பொருத்தவரை, அவை குமாரகுப்தரின் காலத்தைப் போல அதிக அளவில் கிடைக்கவில்லை. ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின் பின்பகுதியில் மேற்குப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அரசின் பிடியிலிருந்து தளரத் தொடங்கியிருந்ததையே இது காட்டுகிறது.
ஸ்கந்தகுப்தரின் ஆட்சி
ஸ்கந்தகுப்தர் ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதையும் திறமையான ஆட்சியாளர் என்பதையும் அவருடைய காலத்தைய ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், அவருடைய முன்னோர்களைப் போல அல்லாமல் பல கடினமான பிரச்சனைகளை அவர் சந்திக்கவேண்டியிருந்தது. சமுத்திரகுப்தரும் சந்திரகுப்த விக்கிரமாதித்தரும் பல நாடுகள் மீது போர் தொடுத்து குப்தர்களுடைய அரசை விரிவாக்கினர். குமாரகுப்தர் தன்னுடைய நிர்வாகத்திறனால் அதைக் கட்டிக்காத்தார். ஆனால் ஸ்கந்தகுப்தரோ அவருடைய ஆட்சிப் பரப்பைத் தக்கவைத்துக்கொள்ள ஆரம்பத்திலேயே போராட வேண்டியிருந்தது. ஒரு வழியாக ஹூணர்களையும், உள்நாட்டில் கிளர்ச்சி செய்த அரசர்களையும் அவர் அடக்கி ஆண்டபோதும், ஆட்சியின் ஆரம்பத்தில் ஏற்பட்டதைப் போலவே கடைசிக்காலங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஸ்கந்தகுப்தரைச் சூழ்ந்தன.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் தன் தந்தை விட்டுச் சென்ற ஆட்சிப்பரப்பைத் திறமையாகக் கட்டிக்காத்தார் என்றே ஸ்கந்தகுப்தரைச் சொல்லலாம். மேற்கே சௌராஷ்ட்ரா, கத்தியவார், குஜராத் ஆகிய பகுதிகளிலிருந்து கிழக்கே வங்காளம், காமரூபம் வரையிலும் வடக்கே இமயத்திலிருந்து தெற்கே விந்தியமலை வரையிலுமான ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை ஸ்கந்தகுப்தர் ஆட்சி செய்தார். அவரது ஜுனாகத் கல்வெட்டும் அந்தக் பகுதிகளில் கிடைத்த அவரது வெள்ளி நாணயங்களும் நாட்டின் மேற்குப் பகுதியில் ஹூணர்களை வென்று தனது ஆதிக்கத்தில் கொண்டுவந்திருந்த மேற்குப் பகுதி மீதான அவரது கட்டுப்பாட்டைக் காட்டுகின்றன.
வலபி அரசர்களின் பரம்பரையில் வந்த பட்டாரகன் என்பவர் ஸ்கந்தகுப்தரின் சேனாதிபதியாக முதலில் இருந்தார் என்று அறியப்படுகிறார். ஆரம்பகாலத்தில் வடமேற்கிலும் மேற்கிலும் ஊடுருவிய ஹூணர்களைத் தோற்கடித்து விரட்டியதில் இந்த பட்டாரகனின் பங்கு முக்கியமானதாக இருந்தது என்று தெரிகிறது. வலபி வம்சத்தில் பின்னால் வந்த அரசர்கள் குப்தர்கள் மீதான விசுவாசத்தைத் தங்கள் செப்பேடுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். போலவே மத்திய இந்தியப் பகுதியிலும் கிழக்கே வங்காளத்திலும் குப்தர்களின் ஆதிக்கம் சிறப்பாகவே இருந்தது.
இவை ஒருபுறம் இருந்தாலும் உள்நாட்டிலிருந்து அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவேயில்லை. அவருடைய மாற்றாந்தாயான ஆனந்த தேவியும் சகோதரனான பூருகுப்தனும் வேறு வழியில்லாமல் ஸ்கந்தகுப்தரது ஆட்சியை ஏற்றுக்கொண்டாலும் அவர்களால் மறைமுகத் தொல்லைகள் தொடர்ந்து இருந்துவந்தன. குமாரகுப்தரின் ஆட்சியின் இறுதிக்காலத்தில் அவர் பெற்ற வெற்றிகளால் மட்டுமே அவருக்கு அரசவையில் சிலர் ஒத்துழைப்புத் தந்தனர். தொடர்ந்து போர் பூமியில் தன்னுடைய நாட்களைச் செலவிட்ட காரணத்தால் உட்பூசலை அவரால் கடுமையாக அடக்க முடியவில்லை.
‘வெளிப்பகையைக் காட்டிலும் உட்பகை பெரும் தீமை தரும்’ என்ற வாக்கியத்திற்கு உதாரணமாகவே இருந்தவர் ஸ்கந்தகுப்தர். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் நாட்டின் நிலைமையைச் சீர்திருத்த தகுந்த ஆளுநர்களை நியமித்து சிறிது காலம் அமைதி நிலவ அவர் வழி வகுத்தாலும் அது தொடர்ந்து நீடிக்கவில்லை. போர்கள் அடிக்கடி நடந்ததால் நாட்டின் பொருளாதாரம் தேக்கமடைந்து நாணயத்தின் மதிப்புக் குறைக்கப்பட்டதை ஏற்கெனவே பார்த்தோம். போதாததற்கு, நாட்டின் வடமேற்குப் பகுதியில் ஹூணர்கள் மீண்டும் ஊடுருவினர். இம்முறை ஸ்கந்தகுப்தரின் தளபதிகளால் அவர்களைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் மேற்குப் பகுதிகள் சிறிது சிறிதாக குப்தர்களை விட்டுச் சென்றன.
இவற்றின் காரணமாக ஸ்கந்தகுப்தரின் இறுதி நாட்கள் இருள் சூழ்ந்து காணப்பட்டதாக ஆய்வாளர் வின்சென்ட் ஸ்மித் தெரிவிக்கிறார். சிலர் அவர் ஹூணர்களோடான போரில் தன் உயிரை இழந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். ஆர்.டி.பானர்ஜி போன்ற ஆய்வாளர்கள், ஸ்கந்தகுப்தர் தனது வடமேற்கு எல்லையைக் காப்பதில் தவறிழைத்துவிட்டதாகவும், தொடர்ந்து ஹூணர்கள் ஊடுருவிக்கொண்டிருந்தபோது அவர்களைத் தடுக்க ஏதும் செய்யாமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார். பின்னாளில் பஞ்சாபையும் மாளவத்தையும் ஹூணர்கள் கைப்பற்ற ஸ்கந்தகுப்தரின் செயலற்ற தன்மைதான் காரணம் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் இதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. ஹூணர்களின் படையெடுப்பு மீண்டும் மீண்டும் தொடர்ந்து வடமேற்கில் இருந்தபோதிலும், ஸ்கந்தகுப்தரின் அவர்கள் அங்குள்ள பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்ததற்கு ஏதும் ஆதாரம் இல்லை. ஆகவே, அவர்களைத் தொடர்ந்து முறியடித்து குப்தர்களின் படைகள் பின்வாங்கச் செய்திருக்கவேண்டும். இதன் காரணமாக ஸ்கந்தகுப்தர் தன் ஆட்சிக்காலம் வரையில் ஹூணர்களை திறம்படச் சமாளித்தார் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதற்கு மேற்குப் பகுதியில் அவர் நியமித்திருந்த திறமையான ஆளுநரான பர்ணதத்தனும் தளபதியான பட்டாரகனும் உதவி புரிந்திருக்கக்கூடும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஸ்கந்தகுப்தரின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதி வரை குப்தர்களின் பொருளாதாரம் சரிந்திருந்தாலும், அவர்களின் ஆட்சியும் அதிகாரமும் தொடர்ந்து வலுவாகவே இருந்தது என்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
நிலைகுலையவிருந்த ஒரு பேரரசை மீட்டெடுத்து அதை சிறப்போடு நடத்திச் சென்ற ஒரு பேரரசராகவே ஸ்கந்தகுப்தரை வரலாறு நினைவுகூர்கிறது. துரிதமாகப் பேரரசின் நிலையைச் சரிப்படுத்தி ஒரு அமைதியான, நிலையான ஆட்சியைத் தந்தவர் ஸ்கந்தகுப்தர். பின்னாளில் உட்பகையாலும் வெளிப்பகையாலும் சிக்கல்கள் எழுந்தாலும் அதையும் சமாளித்து தனது ஆட்சி இருக்கும் வரை குப்தர்களின் பெருமை குலையாமல் பார்த்துக்கொண்டவர் அவர். ஆனால் அவருக்குப் பின் வந்த அரசர்களின் திறமையின்மையினால் பேரரசு சரியத் தொடங்கியது. ஸ்கந்தகுப்தருக்கு வாரிசு இல்லாத காரணத்தால், தனது சகோதரனான பூரகுப்தருக்கு அவர் ஆட்சிப் பொறுப்பை அளித்து விடைபெற்றார். இது வாரிசு இல்லாத காரணத்தாலா அல்லது தொடர்ந்து தனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த பூரகுப்தனை எதிர்ப்பதை விட, அவனுக்கே அரசு போகட்டும் என்ற மனப்பான்மையினாலா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஆயினும் அப்படிப் பெற்ற அரசை பூரகுப்தரும் அவரது வம்சத்தினரும் விரைவிலேயே இழக்கவேண்டியிருந்தது.
(தொடரும்)