Skip to content
Home » குப்தப் பேரரசு #29 – பூரகுப்தரின் வம்சம்

குப்தப் பேரரசு #29 – பூரகுப்தரின் வம்சம்

பொயு 455ஆம் ஆண்டிலிருந்து பொயு 467ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த ஸ்கந்தகுப்தருக்குப் பிறகு குப்தர்களின் அரச வம்சத்தில் பெரும் குழப்பம் நிலவியது. பொதுவாக அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டது ஸ்கந்தகுப்தருக்குப் பின் அவரது மாற்றாந்தாய் மகனான பூரகுப்தரே (சம்ஸ்கிருதத்தில் பூருகுப்தர்) ஆட்சிக்கு வந்தார் என்பது. இந்தத் தகவல் நமக்குத் தெரியவருவது மூன்றாம் குமாரகுப்தரின் பிடரி முத்திரையில் உள்ள சாசனத்திலிருந்து. அந்தக் கல்வெட்டு ‘மகாராஜாதிராஜ ஸ்ரீ பூரகுப்தர், மகாராஜாதிராஜ ஸ்ரீ குமாரகுப்தருக்கும் அவரது மனைவி மகாதேவிக்கும் பிறந்தவர்’ என்ற குறிப்பைக் கொண்டுள்ளது. அவர் தன்னுடைய தந்தையின் பாதாரவிந்தங்களை மிகுந்த விசுவாசத்துடன் தியானிப்பவர் என்றும் அந்தக் கல்வெட்டு சொல்கிறது.

இந்தக் கல்வெட்டை வைத்துக்கொண்டு சிலர், முதலாம் குமாரகுப்தருக்கு அடுத்து அரியணை ஏறியவர் ஸ்கந்தகுப்தர் அல்ல, பூரகுப்தர் என்று வாதிடுகின்றனர். சிலரோ, ஸ்கந்தகுப்தர்தான் பூரகுப்தர் என்று ஒரே போடாகப் போட்டு விடுகின்றனர். ஆனால், இப்படி சகோதரர்களுக்குள் அரசப் பரம்பரை மாறும்போது, முந்தைய அரசரைக் குறிப்பிடுவது கட்டாயம் இல்லை என்பது பல்வேறு உதாரணங்களால் தெரியருகிறது. சாளுக்கிய அரசன் விஷ்ணுவர்த்தனின் சதாரா சாசனத்தில் அவனது சகோதரனும் பேரரசனுமான இரண்டாம் புலிகேசியின் பெயர் குறிப்பிடப்படவில்லை, அஜந்தாவின் சில கல்வெட்டுகளில் இரண்டாம் ருத்ரசேனனின் பெயர் இல்லை. தாரபட்டன் என்ற அரசனின் பெயர் அவன் மகனின் கல்வெட்டிலேயே குறிப்பிடப்படவில்லை. இது போன்ற பல உதாரணங்களைச் சுட்டி, பூரகுப்தரின் வம்சத்தினர் ஸ்கந்தகுப்தரின் பெயரைக் குறிப்பிடாததை மட்டும் வைத்து ஸ்கந்தகுப்தர் அரசாளவில்லை என்றோ, அவர்தான் பூரகுப்தர் என்றோ எடுத்துக்கொள்ள இயலாது என்று வரலாற்றறிஞர்கள் சுட்டுகின்றனர். ஸ்கந்தகுப்தரின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பட்ட பல கல்வெட்டுகளிலிருந்தும் அவரது நாணயங்களிலிருந்தும் அவரது ஆட்சிக்காலம் ஒரு தசாப்தத்தையும் தாண்டி நீண்டது என்பது சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பூரகுப்தர் ஸ்கந்தகுப்தருக்கு அடுத்தே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது தெளிவு. அவர்களுக்கு இடையே ஏற்கனவே ஆட்சிப் போட்டி இருந்ததால் நாட்டின் நிலைத்தன்மையைக் கருதியும் பூரகுப்தருக்குப் பல வாரிசுகள் இருந்ததையும் கவனத்தில் கொண்டு ஸ்கந்தகுப்தர் அவருக்கு அடுத்த ஆட்சிப்பொறுப்பை விட்டுக்கொடுத்தார் என்றே கருதவேண்டியிருக்கிறது.

கிட்டத்தட்ட சில ஆண்டுகள் இடைவெளியில் இருவரும் பிறந்ததால், பூரகுப்தர் ஆட்சிக்கு வரும்போது அவருக்கும் வயது முதிர்ந்துவிட்டது என்று தெரிகிறது. பூரகுப்தருக்கு அடுத்து வரிசையாக மூன்று அரசர்கள் பட்டமேறியதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுவதால், அவர்களுக்கு இடையே இருந்த உறவு என்ன என்பது பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்தது. அந்தக் கல்வெட்டுகளின் துணை கொண்டே அதைப் பற்றி ஆராய்வோம்.

சாரநாத்தில் உள்ள புத்தர் சிலையில் இருக்கும் ஒரு கல்வெட்டு பொயு 473ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அதில் குமாரகுப்தர் என்பவர் பூரகுப்தரின் மகனாகவும் அரசராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். நாலந்தாவில் கிடைத்த இருமுத்திரைகளில் இரு அரசர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒன்று விஷ்ணு குப்தர் என்ற அரசருடையது, இவர் தம்மை பூரகுப்தரின் மைந்தனான நரசிம்மகுப்தரின் பேரனாகவும் குமாரகுப்தரின் மகனாகவும் குறித்துள்ளார். இன்னொரு முத்திரை புதகுப்தர் என்ற அரசருடையது. அதில் அவர் தம்மை பூரகுப்தரின் மகனாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பூரகுப்தருக்கு குமாரகுப்தர், புதகுப்தர், நரசிம்ம குப்தர் என்ற மூன்று மகன்கள் இருந்திருக்கலாம் என்றும் நரசிம்மகுப்தருக்கு குமாரகுப்தர் என்ற மகன் இருந்தார் என்றும் அவருக்கு விஷ்ணு குப்தர் என்ற மகன் இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

பூரகுப்தரை அடுத்து (இரண்டாம்) குமாரகுப்தரும், புதகுப்தரும், நரசிம்ம குப்தரும் அடுத்தடுத்து அரியணை ஏறியிருக்கிறார்கள். அதன் பின் நரசிம்ம குப்தரின் வம்சத்தினர் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதாக இந்தக் கல்வெட்டுகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். சோழ வம்சத்தின் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அவரது மகன்கள் அடுத்தடுத்து ஆண்டதைப் போன்ற நிகழ்வு இது. இவர்கள் எந்த வரிசையில் ஆண்டார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும் நரசிம்ம குப்தரின் வழித்தோன்றல்கள் தொடர்ந்து ஆட்சி செய்ததால், அவரே சகோதரர்களின் கடைசியாக ஆட்சி செய்தார் என்று வைத்துக்கொள்ளலாம். புதகுப்தரின் ஆட்சிக்காலத்தின் தொடக்கம் பொயு 476 என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆகவே பூரகுப்தரை அடுத்து இரண்டாம் குமாரகுப்தரும் அதை அடுத்து புதகுப்தரும் ஆண்டதாகவே நாம் கொள்ளவேண்டும்.

எனவே ஸ்கந்தகுப்தரின் ஆட்சிக்காலத்தின் இறுதியாண்டான பொயு 467லிருந்து புதகுப்தரின் ஆட்சித் தொடக்கமான பொயு 476 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் பூரகுப்தரும் இரண்டாம் குமாரகுப்தரும் ஆட்சி செய்திருக்கின்றனர். குமாரகுப்தரின் சாரநாத் கல்வெட்டு அவரது ஆட்சி ஆண்டாக பொயு 473ஐக் குறிப்பிடுகிறது. ஆகவே 4-5 ஆண்டுகளுக்கு மேல் பூரகுப்தர் ஆட்சி செய்திருக்க முடியாது. அவரது ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் பேரரசின் பரப்புக் குறையத் தொடங்கியதைப் பார்த்தோம். மேற்குப் பகுதியில் ஹூணர்கள் ஊடுருவி பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். நாட்டின் பொருளாதரமும் தள்ளாடத் தொடங்கியிருந்தது. ஆனால் இதைச் சரிசெய்ய பூரகுப்தருக்கு வயதும் இல்லை வலுவும் இல்லை. ஆகவே குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் எதும் அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெறவில்லை.

‘வசுபந்துவின் வாழ்க்கை’ என்ற பௌத்த மத நூல் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட விக்ரமாதித்தன் என்ற அரசன் வசுபந்து என்ற புத்தமதத் துறவியினால் கவரப்பட்டு அந்த மதத்தைத் தழுவினான் என்றும் வசுபந்துவைத் தன் மனைவிக்கும் மகனான பாலாதித்தன் என்பவனுக்கும் ஆசிரியராக நியமித்தான் என்றும் குறிப்பிட்டுள்ளது. தன் சகோதரனான ஸ்கந்தகுப்தரைப் போல பூரகுப்தரும் விக்ரமாதித்தன் என்ற சிறப்புப் பெயரை வைத்துக்கொண்டார் என்றும் தன்னுடைய நாணயங்களில் அவ்வாறு பொறித்துக்கொண்டார் என்றும் தெரிகிறது. அவரது மகனான நரசிம்மகுப்தருக்கு பாலாதித்தர் என்ற பெயர் இருந்தது நரசிம்ம குப்தர் வெளியிட்ட நாணயங்களினால் தெரியவருகிறது. சந்திரகுப்த விக்கிரமாதித்தனின் காலத்திலிருந்தே அயோத்தி மாநகரம் குப்தர்களின் தலைநகராக இருந்தது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பூரகுப்தர் துறவறத்தைத் தழுவியிருக்கலாம் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. அதன்காரணமாக போர் எதுவும் அவரது ஆட்சிக்காலத்தில் நடக்கவில்லை.

தன் முன்னோர்களைப் போலவே பூரகுப்தரும் தங்க நாணயங்களையும் வெளியிட்டிருக்கிறார். ஆனால் அவை ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களைப் போலவே மாற்றுக்குறைந்தவையாக இருந்தன. அவர் வெளியிட்ட வில்வீரர் வகை நாணயங்களில் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. ஒன்றில் பூர என்ற பெயரும் ஸ்ரீவிக்ரம என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. இன்னொரு பிரிவில் பூர என்ற பெயர் காணப்படவில்லை. பூரகுப்தர் வெளியிட்ட குதிரை வீரர் வகை நாணயங்களில் ஸ்ரீப்ரகாஸாதித்ய என்ற பெயர் காணப்படுகிறது. நாணயத்தின் பின்புறம் ‘விஜய வஸுதாம் ஜயதி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வகை நாணயங்களில் குதிரையில் சவாரி செய்யும் அரசர் வில்லைத் தாங்கியுள்ளார். தன்னுடைய வலதுகையில் உள்ள வாளால் சிங்கம் ஒன்றை வீழ்த்துகிறார். அருகில் கருடனின் உருவம் உள்ளது.

இரண்டாம் குமாரகுப்தர் (குமாரகுப்த க்ராமாதித்தர்)

சாரநாத் கல்வெட்டு கூறும் பொயு 473ஐ இவரது ஆட்சித் தொடக்கமாகக் கொண்டால் பொயு 476 வரை, அதாவது மூன்றாண்டுகளே இவர் ஆட்சி செய்திருக்கிறார். சாரநாத்திலுள்ள இரண்டு புத்தர் சிலைகளில் ஒன்றில் இவரது கல்வெட்டு உள்ளது. நின்ற நிலையில் உள்ள இந்தப் புத்தர் சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குப்தர்களின் வருடமான 154 குறிப்பிடப்பட்டுள்ளது (பொயு 473). அந்த வருடத்தில் அரசராக இருந்த குமாரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் (பூமீம் ரக்‌ஷதி குமாரகுப்த) பௌத்தத் துறவியான அபயமித்ர தன்னுடைய பக்தியினால் புத்தரின் பிரதிமையை உருவாக்கியதாகவும் ஈடு இணையற்ற கலைத்திறனினால் அது படைக்கப்பட்டதாகவும் பூஜை செய்வதற்காக (பூஜார்த்தம்) அது உருவாக்கப்பட்டதாகவும் அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட தானத்தைச் செய்தவர் தன்னுடைய ஆன்மிகத் தகுதியினால் தன் அன்னை, தந்தை, முன்னோர்களோடு உலகியல் ஆசைகளிலிருந்து விடுபடுபவர்களாக என்றும் அது குறிக்கிறது.

இப்படி உலகியல் ஆசைகளிலிருந்து விடுபடக் குறிக்கும் இந்தக் கல்வெட்டில் அதன் அளப்பரிய கலைத்திறனைப் பற்றிச் சிலாகிக்கும் வாக்கியம் இடம்பெற்றது கவனிக்கப்படவேண்டியது. இதைத் தவிர பரிவ்ராஜக மஹாராஜ ஹஸ்தி என்பவர் வெளியிட்ட செப்பேட்டிலும் இரண்டாம் குமாரகுப்தர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். குப்தர்கள் ஆண்டு 156ல் (பொயு 475) இந்தச் செப்பேடு வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் குமாரகுப்தர், ‘குப்த ந்ருப ராஜ்ய புக்தம்’ அதாவது குப்தர்களின் பேரரசைக் கட்டிக்காத்ததைக் குறிப்பிட்டிருக்கிறது. அதைக் கொண்டு இரண்டாம் குமாரகுப்தரும் பேரரசராகவே இருந்தார் என்றும் ஹஸ்தி அவரது சிற்றரசராக இருந்தார் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் ‘ஆயிரக்கணக்கான பசுக்கள், யானைகள், குதிரைகள், பொன் நாணயங்கள் ஆகியவற்றை ஹஸ்தி தானமாகக் கொடுத்ததாகவும் பல நிலக்கொடைகளை அளித்ததாகவும்’ அந்தச் செப்பேடு கூறுவதிலிருந்து இந்த ஹஸ்தி என்பவரும் வலிமையான அரசராகவே இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

மாண்டசோரில் கிடைத்த இன்னொரு கல்வெட்டு தந்த சில செய்திகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அங்கே லாட விஷயம் என்ற மாகாணத்திலிருந்து குடியேறிய பட்டு நூல் நெசவாளர்களின் வணிகக் குழுவினால் சூரியனுக்கு ஒரு கோவில் முதலாம் குமாரகுப்தரின் காலத்தில் கட்டப்பட்டது. அந்தக் கோவில் இரண்டாம் குமாரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் புனர்நிமாணம் செய்யப்பட்டதாக அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ‘குமாரகுப்தே ப்ருத்வீம் ப்ரஸாசதி’ என்று குமாரகுப்தர் உலகாண்டதாக இந்தக் கல்வெட்டும் குறிப்பதால், குப்தர்களின் அரசு அவருடைய காலத்தில் பேரரசாகவே இருந்தது என்பதற்கான சாட்சியாக இந்தக் கல்வெட்டை நாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம்.

புதகுப்தர்

குறுகிய காலமே ஆட்சி செய்த இரண்டாம் குமாரகுப்தருக்குப் பிறகு அவரது சகோதரரான புதகுப்தர் பொயு 476இல் அரியணை ஏறினார். அவரது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாரநாத் கல்வெட்டே தெரிவிக்கிறது. அங்குள்ள இரண்டாவது புத்தர் சிலையில் குப்தர்கள் ஆண்டு 157இல் (பொயு 476) ‘ப்ருத்வீம் புதகுப்தே ப்ரஸாசதி’ என்று புதகுப்தர் உலகாண்டதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தர் சிலை அமர்ந்த நிலையில் அபயமுத்திரையோடு உள்ளது. இந்தச் சிற்பமும் அபயமித்ர என்ற பௌத்தத் துறவியின் ஏற்பாட்டினாலேதான் உருவாக்கப்பட்டுள்ளது.

அவரது ஆட்சிக்காலத்தில் கிடைத்த அடுத்த முக்கியமான சாசனம் தாமோதர்பூரில் கிடைத்த செப்பேடாகும். இது பொயு 482ம் ஆண்டைச் சேர்ந்தது. பரமபட்டாரகர், மகாராஜாதிராஜர் என்ற அடைமொழிகளால் புதகுப்தரை விளிக்கிறது. அக்னிஹோத்திரம் செய்வதற்காக கார்படிகன் என்ற ஒரு அந்தணனுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையை ஆவணப்படுத்துகிறது இந்தச் செப்பேடு. குப்தர்களின் செப்பேட்டில் காண்பது போலவே அக்கால நிர்வாக முறையையும் அதிகாரிகளின் பதவிகளையும் இந்தச் செப்பேடு குறிப்பிடுகிறது. ஒவ்வொரு நாளும் ஐந்து யாகங்கள் செய்யப்படவேண்டும் என்ற நிபந்தனையும் (பஞ்சமகா யஞ்ஞ ப்ரவர்த்தனா) இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரில் இதே வருடத்தில் கிடைத்த இன்னொரு செப்பேட்டிலும் நிலக்கொடையைப் பற்றிய இன்னொரு ஆவணம் காணப்படுகிறது. நாபகன் என்ற ஒருவன் தன்னுடைய பெற்றோர்களின் புண்ணியத்திற்காக சந்திரக்கிராமம் என்ற ஊரில் இருந்த சிறிது நிலத்தை அந்தணர்களுக்கு அறக்கொடையாக அளிக்க விரும்பினான். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் சபை அதை மேற்பரிசீலனைக்காக பலாஸவ்ருந்தக என்ற தலைமையகத்திற்கு அனுப்பி வைத்தது. தற்போதைய ஊராட்சி ஒன்றியத்தைப் போன்றது இந்தப் பல்வேறு கிராமங்களின் கூட்டுத் தலைமையகம். அந்தத் தலைமையகம் பத்ரதாஸ என்ற ஆவணக் காப்பாளரிடம், நன்கொடையாக அளிக்கப்படவேண்டிய நிலத்தின் உரிமை, உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க ஆணையிட்டது. நிலத்தைப் பார்வையிட்டு விசாரணை முடிந்தபின் ஆவணக் காப்பாளர் அதன் உரிமை சரியானதே என்று அறிக்கை அளித்தார். அதையடுத்து அந்தக் கிராமத்திலிருந்து குறிப்பிட்ட அந்த நிலப்பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு நன்கொடையாக அளிக்கப்பட்டது.

பஹார்பூரில் பொயு 479ஆம் ஆண்டைச் சேர்ந்த இன்னொரு செப்பேடும் புதகுப்தரின் காலத்தது. ஆகவே வங்காளம் புத்தகுப்தரின் ஆட்சியின் கீழ்தான் இருந்தது என்பது அந்தச் செப்பேட்டால் தெளிவாகிறது. சில ப்ராமணர்கள் அங்குள்ள ஜைன விஹாரத்திற்கு அருகரின் பூஜைக்குத் தேவையான பூக்கள், விளக்கு, சாம்பிராணி ஆகியவற்றை வாங்க அளித்த கொடை பற்றிய விவரம் இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் நிலவிய சமயப் பொறைக்கு எடுத்துக்காட்டாக இந்தச் செப்பேடு விளங்குகிறது.

புதகுப்தர் ஆட்சிக்காலத்தின் முக்கியமான கல்வெட்டு ஒன்று ஏரானில் உள்ளது. பொயு 484ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு அங்குள்ள ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 48 அடிகள் உயரமுடைய இந்தத் தூண் சகோதரர்களான மாத்ரிவிஷ்ணு, தான்யவிஷ்ணு ஆகியவர்களால் எழுப்பப்பட்டது. புதகுப்தரின் ஆட்சிக்காலத்தில் மகாராஜா சுரஷ்மிசந்திரன் காலிந்தி (யமுனை) நதிக்கும் நர்மதை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்ததாகவும் ஜனார்த்தனன் என்ற பெயரை உடைய மகாவிஷ்ணுவிற்காக த்வஜஸ்தம்பம் ஒன்றை அங்கே இந்தச் சகோதரர்கள் எழுப்பியதாகவும் அந்தத் தூணிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேற்குறிப்பிடப்பட்ட கல்வெட்டுச் செய்திகளின்படி, நாட்டின் மேற்குப்பகுதிகளில் ஹூணர்களின் ஊடுருவல் இருந்தபோதிலும் ஏரான் பகுதியைத் தன்னகத்தே கொண்ட மாளவம் உட்பட நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளை புதகுப்தரும் ஆட்சி செய்தார் என்பது தெரிகிறது. கிழக்கில் புண்டரவர்த்தனம், வாரணாசி உட்பட கங்கைச் சமவெளியில் உள்ள பல இடங்கள், யமுனைக்கும் நர்மதைக்கும் இடையில் உள்ள நிலப்பகுதி ஆகிய பல பகுதிகளில் புதகுப்தரின் ஆதிக்கம் நிலவியது. பெரும் போர்கள் எதுவும் இவர் காலத்தில் நடக்கவில்லையென்றாலும் நாட்டின் பல பகுதிகளை கைவிட்டுப் போகாமல் கட்டிக்காத்த அரசராக புதகுப்தர் அறியப்படுகிறார். ப்ரகாசாதித்யர் என்ற பெயரில் சில வெள்ளி நாணயங்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் புதகுப்தரின் ஆட்சியின் இறுதிக்காலத்தில், ஹூண அரசனான தோரமானன் நாட்டின் மேற்குப் பகுதி முழுவதையும் கைப்பற்றிக்கொண்டதோடு மாளவத்தின் மீதும் தாக்குதல் நடத்தை அதையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தான்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *