பொயு 495ம் ஆண்டு வரை புதகுப்தரின் கல்வெட்டுகள் கிடைப்பதிலிருந்து அந்தக் காலகட்டம் வரை அவரது ஆட்சி இருந்தது என்பதை அறிகிறோம். ஸ்கந்தகுப்தரால் தோற்கடிக்கப்பட்டுப் பின்வாங்கிய ஹூணர்கள் சில காலம் வரை பாரசீகத்தின்மீது தங்களது கவனத்தைச் செலுத்தியிருந்தனர். ஆனால் ஸ்கந்தகுப்தருக்குப் பிறகு குப்தர்கள் பலவீனம் அடைவதைக் கண்ட ஹூணர்கள் பாரதத்தின் வடமேற்குப் பகுதியில் அதிக அளவில் ஊடுருவத் தொடங்கினர்.
காந்தாரத்தை வென்று அங்கு ஒரு தளம் அமைத்துக்கோண்ட ஹூணர்கள் அங்கிருந்து தமது ஆதிக்கத்தை விரிவாக்கத் தொடங்கினர். போலவே, நாட்டில் ஆங்காங்கே இருந்த சிற்றரசர்கள் பலரும் தன்னாட்சிக் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இப்படியான ஒரு குழப்பமான சூழ்நிலையில் பூரகுப்தரின் மூன்றாம் மகனான பாலாதித்தர், நரசிம்ம குப்தர் என்ற பெயரோடு அரியணை ஏறினார். பௌத்தத் துறவியான வசுபந்துவின் சீடராக இவர் இருந்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இவரது ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடும் பௌத்த நூலான ஆர்ய மஞ்சுஸ்ரீ மூல கல்பம், அவரது ஆட்சி நிசப்தமாகவும் எதிரிகள் இல்லாமலும் இருந்தது என்று குறிப்பிடுகிறது. ஆகவே நரசிம்ம குப்தரின் ஆரம்பகால ஆட்சி அமைதியாக நடந்தது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை சீர்குலைய ஆரம்பித்தது. தோரமானாவின் தலைமையில் ஹூணர்கள் இந்தியாவின் உட்பகுதிக்குள்ளும் ஊடுருவ ஆரம்பித்தார்கள் என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் சுட்டுகின்றன. பஞ்சாப் பகுதியை வென்று சட்லெட்ஜுக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட பகுதிகளை தோரமானா தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தான். சந்திரபாகா (ஜீனாப்) நதிக்கரையில் தோரமானா தங்கியிருந்தபோது அங்கே அவனுடைய உபாத்தியாயனாக குப்த வம்சத்தைச் சேர்ந்த ஹரிகுப்தன் என்பவன் இருந்ததாக ஜைன நூலான குவலயமாலா குறிப்பிடுகிறது. பாஞ்சாலத்தில் கிடைத்த பொயு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சில நாணயங்கள் ‘மகாராஜா ஹரிகுப்தர்’ என்ற பெயரைக் கொண்டுள்ளன. இவற்றை வைத்து குப்தர்கள் குடும்பத்திற்குள்ளேயே உட்பூசல் நிலவியது என்றும் ஹரிகுப்தன் ஹூணர்களின் தலைவனான தோரமானாவிற்கு உதவி செய்ததாகவும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அடுத்ததாக கௌசாம்பியைக் கைப்பற்றிய தோரமானா, அதை வென்றுவிட்டு நேராக மாளவத்தை நோக்கிப் படையெடுத்தான். அந்தப் பகுதியில் ஏரன் ஒரு கேந்திரமான இடமாக இருந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அங்கே அப்போது குப்தர்களின் ஆளுநராக இருந்தவருடைய பெயர் பானுகுப்தர். இவருக்கும் நரசிம்ம குப்தருக்கும் உள்ள உறவுமுறை சரிவரத் தெரியவில்லை.
ஏரன் கல்வெட்டுகள்
ஏரனில் உள்ள தூண் கல்வெட்டு ஒன்று (பொயு 510) ‘ஜயதி ப்ரவீர’ – தீரமிக்க, ‘ராஜ மஹான்’, ‘பார்த்த சம’ – பார்த்தனுக்கு இணையான என்றெல்லாம் அடைமொழி வைத்து பானுகுப்தரைக் குறிப்பிடுகிறது. ராஜா என்று மட்டுமே இவரைக் குறிப்பிடுவதிலிருந்து அங்கிருந்த பகுதிகளின் ஆளுநராக மட்டுமே இவர் இருந்திருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. அங்கே நடைபெற்ற போர் ஒன்றில் பானுகுப்தரின் தளபதியான கோபராஜா என்பவர் வீரமரணம் அடைந்தார் என்றும் அதையடுத்து கோபராஜாவின் மனைவி அவரோடு உடன்கட்டை ஏறியதையும் இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதிலிருந்து ஹூண அரசன் தோரமானாவிற்கும் பானுகுப்தரின் தலைமையிலான குப்தப் படைகளுக்கும் அங்கே போர் நடந்திருக்கவேண்டும் என்றும் அதில் தளபதி கோபராஜா இறந்து பட்டிருக்கவேண்டும் என்றும் தெரிகிறது.
மேலும் இந்தப் போரில் பானுகுப்தர் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. மஞ்சுஸ்ரீ மூல கல்பம் நூல் புதகுப்தருடைய மறைவிற்குப் பிறகு மகதத்திற்கும் கௌட தேசத்திற்கும் இரு அரசர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்று கூறுகிறது. இது நரசிம்ம குப்தரையும் பானுகுப்தரையுமே குறிக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த நூலில் தோரமானாவின் படையெடுப்பின்போது பானுகுப்தர் மாளவத்தை இழந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான மற்றொரு சான்று ஏரனில் உள்ள இன்னொரு கல்வெட்டில் உள்ளது.
ஏரனில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற சிற்பம் அங்குள்ள வராக உருவமாகும். பொதுவில் விஷ்ணுவின் அவதாரமான வராகத்தை மனித உடலோடும் வராக முகத்தோடும்தான் வடிப்பது வழக்கம். ஆனால் இங்கே வராகத்தின் முழு உருவமும் விலங்கு வடிவில் செய்யப்பட்டிருக்கிறது. இதன் உடல்முழுவதும் பல்வேறு அழகான சிற்பங்கள் உள்ளன. அதன் கழுத்துப் பகுதியில் பிராமி எழுத்துருவில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் ‘உலகை ஆண்டுகொண்டிருக்கும் மஹாராஜாதிராஜா தோரமானாவின் முதலாம் ஆட்சியாண்டில் பால்குன மாதம் பத்தாம் நாள் சொர்க்கத்திற்குச் சென்ற மைத்ரய கோத்திரத்தைச் சேர்ந்தவரும் ஹரிவிஷ்ணுவின் மகனுமான மகராஜா மாத்ரிவிஷ்ணுவின் தம்பி தான்யவிஷ்ணு தன்னுடைய பெற்றோர்களின் நற்கதிக்காக வராக ரூபமுள்ள விஷ்ணுவின் இந்தக் கோவிலை எழுப்பினான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாத்ரிவிஷ்ணு, தான்யவிஷ்ணு சகோதரர்கள் புதகுப்தரின் ஆட்சியின்போது மகாவிஷ்ணுவிற்காக த்வஜஸ்தம்பம் ஒன்றை எழுப்பியதைப் பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அந்தச் சகோதரர்களில் மாத்ரிவிஷ்ணுவின் மறைவை அடுத்து தான்யவிஷ்ணு ஏரனின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான் என்பதையும் பானுகுப்தர் தோரமானாவால் தோற்கடிக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு தெளிவாக்குகிறது.
பானுகுப்தரின் தோல்வியை அடுத்து தன் விசுவாசத்தைச் சட்டென்று மாற்றிக்கொண்ட தான்யவிஷ்ணு தோரமானாவின் ஆட்சியை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் அவரை மகாராஜாதிராஜா என்று புகழ்வதையும் கல்வெட்டு குறிப்பிடுவதிலிருந்து மாளவம் முழுவதும் தோரமானாவின் ஆதிக்கத்தில் பொயு 510இல் வந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மாளவத்தை வென்ற தோரமானா அடுத்ததாக கங்கைச் சமவெளியை நோக்கி தன் படைகளோடு சென்றான். அங்கே நரசிம்மகுப்தருக்கும் ஹூணர்களுக்கும் இடையே நடந்த போரில் நரசிம்ம குப்தர் தோல்வியடைந்து வங்காளத்திற்குப் பின்வாங்கியதாக மஞ்சுஸ்ரீ மூலகல்பம் நூல் தெரிவிக்கிறது. நரசிம்ம குப்தர் சில காலம் ஹூணர்களின் சிற்றரசராக இருந்து அவர்களுக்குக் கப்பம் கட்டியதாகவும் அந்த நூல் குறிப்பிடுகிறது. குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதையும் வென்றெடுத்து குப்தர்களைச் சிற்றரசர்களாக ஆக்கிய தோரமானா ஒரு சிறந்த வீரன், திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. மகதத்தை வென்று திரும்பும்போது தோரமானா வாரணாசியில் இறந்துபட்டான். அதன்பிறகு மகதம் மீண்டும் நரசிம்ம குப்தரின் வசமானதாகத் தெரிகிறது.
தோரமானாவிற்குப் பிறகு அவனுடைய மகனான மிகிரகுலன் ஹூணர்களின் தலைவனாகப் பொறுப்பேற்றுக்கொண்டான். வட இந்தியாவின் பெரும்பகுதி ஹூணர்கள் வசமிருந்ததை அவனுடைய ஆட்சிக்காலத்தில் கிடைத்த பல கல்வெட்டுகள் சுட்டுகின்றன. உதாரணமாக குவாலியரில் கிடைத்த பொயு 528ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு மாளவத்தில் உள்ள கோப என்ற மலையில் சூரியனுக்கு மிகிரகுலன் ஒரு கோவில் கட்டியதைத் தெரிவிக்கிறது. ஆகவே பொயு 528 வரை அங்கே அவனுடைய ஆட்சி நிலவியதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
மிகிரகுலனுடைய ஆட்சி மிகக் கொடுமையாக இருந்ததாக சில நூல்கள் குறிக்கின்றன. சைவ சமயத்தைப் பின்பற்றிய மிகிரகுலன், தன்னுடைய வெள்ளி நாணயங்களில் ரிஷபமுத்திரையைப் பொறித்திருந்தான். சிவனுடைய பரமபக்தன் என்று குறிப்பிடப்படும் அவனுடைய நாணயங்களில் திரிசூலமும் இருந்தது. ஜயதி மிஹிரகுலா, ஜயதி வ்ருஷத்வஜா என்றெல்லாம் அந்த நாணயங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. கஷ்மீரில் மிஹிரேஸ்வரர் என்ற பெயரில் சிவனுக்கு ஒரு கோவிலையும் அவன் எழுப்பினான்.
ஒரு சமயம், பௌத்த மதத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு மடாலயத்தை அணுகி நிபுணர் ஒருவரைத் தன்னிடம் அனுப்புமாறு மிகிரகுலன் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அவர்கள் சரியான ஆளை அவனிடம் அனுப்பவில்லை என்பதால் அவன் பௌத்தர்கள் மேல் கடுங்கோபம் அடைந்ததாகவும் பின்னாளில் இங்கு வந்த சீன யாத்திரிகரான சுவான்சாங் குறிப்பெழுதிவைத்திருக்கிறார். ‘பௌத்த மதத்தின்மீது மிகுந்த மரியாதை கொண்ட நான், அதைப் பற்றிக் கற்றுக்கொள்ள சிறந்த பிக்ஷு ஒருவரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் என்னிடம் ஒரு வேலையாளை நீங்கள் அனுப்பியிருக்கிறீர்கள். இனிமேல் உங்களிடம் என்ன மரியாதை எனக்கு இருக்கிறது?’ என்று மிகிரகுலன் ஆத்திரத்தோடு கூறியதாகவும் பௌத்த மடாலயங்கள் அனைத்தையும் அழித்து மதகுருக்களை கொல்ல அவன் ஆணையிட்டதாகவும் அந்தக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
அதை அடுத்து பௌத்த மடாலயங்கள் அழிக்கப்பட்டு பல பௌத்த குருமார்கள் ஹூணப்படையினரால் கொல்லப்பட்டனர். சுமார் 1600 மடாலயங்கள் அழிக்கப்பட்டதாக சுவான்சங் குறிப்பிடுகிறார். இந்தியாவிலிருந்து பௌத்த மதம் அழிவதற்கு மிக முக்கியமான காரணமாக இந்த நிகழ்வு இருந்தது.
இதையெல்லாம் ரசிக்காத நரசிம்மகுப்தர் ஹூணர்களுக்குக் கப்பம் கட்ட மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மிகிரகுலன், மீண்டும் மகதத்தை நோக்கிப் படையெடுத்தான். அதை அறிந்த நரசிம்ம குப்தர் தன்னுடைய அமைச்சர்களிடம் ‘அந்தத் திருடர்கள் மீண்டும் இங்கே வருகிறார்கள். அவர்களோடு போர் செய்ய என்னால் முடியாது. உங்கள் அனுமதியோடு நான் நாட்டை விட்டே செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வனப்பகுதிகளில் தலைமறைவானதாக சுவான்சங்கின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கண்டவர் கலங்கும் வீரர்களான சமுத்திரகுப்தரும் சந்திரகுப்தரும் பிறந்த வம்சத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இந்நிகழ்வை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் இந்த நிலை அதிக நாள் நீடிக்கவில்லை. மாளவத்தின் ஒரு பகுதியை ஆட்சிசெய்த யசோதர்மன் விஷ்ணுவர்த்தனன் என்ற அரசன் மிகிரகுலனின் ஆட்சிக்கு முடிவுகட்டினான். மண்டஸோரில் கிடைக்கும் அவனுடைய இரண்டு கல்வெட்டுகள் அவன் ஹூணர்களைத் தோற்கடித்த செய்தியைத் தெரிவிக்கின்றன. குப்தர்களாலும் ஹூணர்களாலும் வெல்லப்படமுடியாத பகுதிகளை அவன் வென்றதாகவும் ‘ஸ்தாணுவைத் தவிர’ (சிவன்) எவருக்கும் தலைவணங்காதவனான மிகிரகுலன் யசோதர்மனின் பாதங்களில் தன் தலையை வைத்து வணங்கியதாகவும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. விஷ்ணுவர்த்தனனின் வீரதீரச் செயல்களைக் குறிப்பிடும் இரண்டாவது கல்வெட்டு ராஜாதிராஜன், பரமேஸ்வரன் போன்ற பட்டப்பெயர்களை அவன் ஏற்றுக்கொண்டதையும் தெரிவிக்கிறது. இதிலிருந்து மிகிரகுலனைத் தோற்கடித்து மாளவத்திலிருந்து விரட்டி அந்தப் பகுதி முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்கு யசோதர்மன் கொண்டுவந்தது தெளிவாகிறது.
அவனிடம் தோற்று வடக்கு நோக்கிச் சென்ற மிகிரகுலனை, மலைக்கணவாய் ஒன்றில் நரசிம்ம குப்தர் தன் படைகளோடு சந்தித்துப் போர் புரிந்தார். இந்தப் போரில் குப்தர்களின் படை வென்றது. அதை அடுத்து மிகிரகுலனைக் கொல்ல முயன்ற நரசிம்ம குப்தரை அவருடைய தாய் தடுத்ததாகவும் அதன் காரணமாக மிகிரகுலனின் தலை தப்பியதாகவும் அவனை குப்தர்கள் சிறை வைத்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன. அதன்பின் சிறையிலிருந்து விடுதலை அடைந்து காஷ்மீரை நோக்கிச் சென்ற மிகிரகுலன் அங்கே உள்ள சில பகுதிகளைப் பிடித்துகொண்டு ஆட்சி செய்தான்.
ஹூணர்களை இப்படி யசோதர்மனும் நரசிம்மகுப்தரும் தோற்கடித்த பின்னர், மகதமும் வங்காளமும் மட்டும் குப்தர்களின் ஆட்சியின்கீழ் இருந்ததன. குப்தர்களின் அடுத்த அரசராக நரசிம்மகுப்தரின் மகனான மூன்றாம் குமாரகுப்தர் பொறுப்பேற்றார்
மூன்றாம் குமாரகுப்தர்
தாமோதர்பூரில் கிடைத்த செப்பேடு ஒன்றின்படி குப்தர்கள் ஆண்டு 214இல் அதாவது பொயு 533ஆம் ஆண்டு ஆட்சி செய்த குப்த அரசரின் பெயர் ‘பரமதைவத பரமபட்டாரக மகாராஜாதிராஜ’ என்ற பட்டங்களோடு உள்ளது. அரசரின் பெயரின் ஆரம்ப எழுத்தான ‘கு’ என்பதை வைத்து அது குமாரகுப்தராக இருக்கவேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஸ்வேதவராஹஸ்வாமி கோவிலின் திருப்பணிக்காகவும் பலி, சாரு, சத்ரம், பசுவின் பால், தூபம், புஷ்பம், மதுமர்க்கம், தீபம் ஆகிய வழிப்பாட்டின் பொருட்களுக்காகவும் விடப்பட்ட நிவந்தங்களைப் பற்றிய செய்திகள் அந்தச் செப்பேட்டில் உள்ளன. அதற்கான நிலக்கொடையையும் அதன் விவரங்களையும் செப்பேடு கூறுகிறது. முக்கியமாக புண்டரவர்த்தனத்தின் ஆளுநராக அரசரின் மகன் இருந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இவற்றிலிருந்து பொயு 530 வாக்கில் மூன்றாம் குமாரகுப்தர் ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. பிடரியிலிருந்து கிடைத்த இவருடைய தாமிர முத்திரை ஒன்று அவரது தந்தையின் பெயரை நரசிம்மகுப்தர் என்றும் பாட்டனாரின் பெயர் பூரகுப்தர் என்றும் குறிப்பிடுகிறது. குப்தர்களின் வம்சாவளியைப் பற்றிய குழப்பத்தை இது ஒரு வகையில் தீர்த்துவைத்தது.
ஹூணர்களிடமிருந்து மாளவத்தை மீட்ட யசோதர்மன் குப்தர்களின் அரசு மீது பொயு 540ஆம் ஆண்டு படையெடுத்தான். அந்தப் போரில் குமாரகுப்தர் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அவரது தந்தை நரசிம்மகுப்தர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது ஆய்வுக்குரிய ஒன்று.
விஷ்ணுகுப்தர்
மூன்றாம் குமாரகுப்தருடைய மகனான விஷ்ணுகுப்தர் அவரை அடுத்து பதவிக்கு வந்தார். பொயு 540ஆம் ஆண்டிலிருந்து 550ஆம் ஆண்டுவரை அவரது ஆட்சி இருந்தது. குப்தர்கள் வம்சத்தில் வந்த கடைசி அரசராக அவர் கருதப்படுகிறார். அவரைப் பற்றிய தகவல்கூட நாலந்தாவில் கிடைத்த ஒரு முத்திரையில்தான் உள்ளது. அதில் அவருடைய வம்சாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர அவரைப் பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை.
பொயு 550க்கு பிறகு குப்தர்கள் வம்சம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. பொயு 551ஆம் ஆண்டைச் சேர்ந்த மகாராஜ நந்தனா என்பவருடைய ஒரு செப்பேட்டில் குப்தர்களின் அரசர் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதன்பின் கிடைக்கும் சாசனங்கள் மகாராஜாதிராஜா என்று மற்ற வம்சத்தைச் சேர்ந்த அரசர்களையே குறிப்பிடுகிறது. இவற்றிலிருந்து விஷ்ணுகுப்தரே குப்தர்களின் வம்சத்தின் கடைசி அரசராகக் கருதலாம்.
ஆனால் குப்த என்ற பின்னெட்டுடைய வேறு சில அரசர்களின் சாசனங்களும் நாணயங்களும் இடைப்பட்ட காலத்தில் கிடைக்கப்பெற்றன. ஆனால் அவர்களுடைய பதவி என்ன, ஆட்சிக்காலம் என்ன என்பதைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவர்களில் சிலரைப் பார்ப்போம்.
வைணிய குப்தர்
கிழக்கு வங்காளத்தில் கிடைத்த குணெய்கர் செப்பேடு ஒன்று இவருடைய பெயரைக் குறிப்பிடுகிறது. வைணிய குப்தரின் சிற்றரசரான மகாராஜ ருத்ரதத்தனுக்கு சில கிராமங்களை புத்த விஹாரம் ஒன்று கட்டுவதற்காக அவர் அளித்தது அந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிற்றரசர் ஒருவர் இருந்த காரணத்தால் இவரும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன்னாட்சி செய்துகொண்டிருந்திருக்கக்கூடும். பெரும்பாலும் வைணவ சமயத்தைப் பின்பற்றிய குப்தர்களுக்கு விதிவிலக்காக சைவ சமயத்தை வைணிக குப்தர் பின்பற்றியதாகவும் செப்பேடு கூறுகிறது. இந்தச் செப்பேட்டைத் தவிர இவரது பெயர் பொறித்த சில நாணயங்களும் அந்தப் பகுதியில் கிடைத்துள்ளன. த்வாதசாதித்தர் என்ற இவரது சிறப்புப் பெயரும் அந்த நாணயங்களில் காணப்படுகிறது.
ப்ரகாசாதித்தர்
குப்தர்களின் நாணயங்களைப் போலவே பொன் நாணயங்களை வெளியிட்ட ப்ரகாசாதித்தர் என்ற அரசரைப் பற்றியும் பல கருத்துகள் உலவுகின்றன. குதிரை வீரர் நாணயங்கள, கருட முத்திரை பொறித்த நாணயங்கள் போன்றவற்றை இவர் வெளியிட்டிருக்கிறார். சில ஆய்வாளர்கள் இவரது ஆட்சிக்காலத்தை ஸ்கந்தகுப்தருக்கும் புதகுப்தருக்கும் இடையில் உள்ள காலகட்டம் என்று குறிக்கின்றனர். சிலர் பூரகுப்தருடைய மற்றொரு பெயர்தான் இது என்று கூறுகின்றனர். ஆனால் அவருக்கு விக்ரமாதித்யா என்ற பெயர் உள்ளதால் அவர் வேறு என்று இன்னும் சிலர் கருதுகின்றனர். நரசிம்மகுப்தருடைய நாணயங்களை விடத் தரமான பொன்னால் ப்ரகாசாதித்தரின் நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவருக்கு முற்பட்டவராகவே இவர் இருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். மஞ்சுஸ்ரீ மூல கல்ப நூல் இவரை பானுகுப்தரின் மகன் என்றும் தோரமானா மகதத்தை வென்ற பிறகு அவனால் அங்கே அரசனாக நியமிக்கப்பட்டவர் என்றும் கூறுகிறது. தோரமானாவின் ஆதிக்கத்தை ஒப்புக்கொண்டதால் அவரை அங்கே சிற்றரசராக நியமித்ததாகக் கூறும் இந்த நூல், இவருடைய இயற்பெயரை சந்திரகுப்தர் என்று கூறுகிறது. இதை ஏற்றுக்கொண்டால் ப்ரகாசாதித்தரை மூன்றாம் சந்திரகுப்தர் என்றே நாம் கருதவேண்டும்.
மேற்குறிப்பிட்ட அரசர்களைத் தவிர கிருஷ்ணகுப்தர், ஹர்ஷகுப்தர், ஜீவிதகுப்தர் ஆகியோரும் குப்த வம்ச அரசர்களாகக் கருதப்பட்டாலும் அவர்களைப் பற்றிய தகவல்கள் அதிகமில்லை.
குப்தர்களுக்குப் பின்
குப்தர்களின் வம்சம் மறைந்துகொண்டிருந்தபோதே, வட இந்தியாவின் பல புதிய வம்சங்களின் தன்னாட்சி தொடங்கிவிட்டது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் குப்தர்களின் சிற்றரசர்களாக இருந்த வலபி வம்சத்தினர் தங்களுடைய சுதந்தர ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். கங்கைச் சமவெளிப்பகுதியை கன்னோஜியைத் தலைநகராகக் கொண்டு மௌகாரி வம்சத்தினர் ஆள ஆரம்பித்தனர். போலவே யசோதர்மன் விஷ்ணுவர்த்தனின் தலைமையில் பெரு வெற்றி கண்ட ஔலிகர்கள் மாளவத்தில் ஆட்சி செய்தனர். இப்படி வட இந்தியா பல்வேறு சிறிய அரசுகளாக, எப்படி குப்தர்களின் வம்சம் உருவாவதற்கு முன் இருந்ததோ, அப்படியே மாற்றம் கண்டது. இந்த நிலை வர்த்தனர்களின் பேரரசு உருவாகும் வரை நீடித்தது.
ஸ்ரீகுப்தரால் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் பேரரசாக இருந்த குப்தர்களின் மறைவு பாரதத்தின் வரலாற்றில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் நிர்வாகச் சீரமைப்பு, கலை, இலக்கியம், சமூகம் போன்று பல துறைகளிலும் குப்தர்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். அவற்றின் சில கூறுகளை அடுத்து வரும் சில அத்தியாயங்களில் பார்க்கலாம்.
(தொடரும்)