Skip to content
Home » குப்தப் பேரரசு #31 – அரசாட்சியும் நிர்வாகமும்

குப்தப் பேரரசு #31 – அரசாட்சியும் நிர்வாகமும்

குப்தப் பேரரசு

பொது யுகத்திற்கு முன்பு வட பாரதத்தில் ஆட்சி செய்த மௌரியப் பேரரசைவிட அதிகமான பரப்பளவில் ஆதிக்கம் செலுத்திய குப்தர்களின் அரசு, அந்த ஆதிக்கத்தைக் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் தக்கவைத்துக்கொண்டது என்றால் அதற்கு வாளின் வலிமை மட்டுமே காரணமல்ல. ஒரு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பும் அதற்குப் பெரும் துணையாக இருந்தது. அப்படிப்பட்ட நிர்வாகத்தின் சில கூறுகளை நாம் சென்ற அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம் என்றாலும், அதன் அடிப்படைகளை இன்னும் கொஞ்சம் விரிவாகவும் ஆழமாகவும் இங்கே பார்க்கலாம்.

மத்திய அரசு

முடியாட்சி நிலவிய காலங்களில் இருந்தது போல, குப்தர்களின் அரசிலும் சகல வல்லமை வாய்ந்தவராக அரசர் இருந்தபோதிலும் அரசின் ஏழு அங்கங்களின் ஒன்றாகவே அரசர் கருதப்பட்டார். அமைச்சர்கள், நிர்வாகம், அரண், ராணுவம், கருவூலம், துணை அரசர்கள் ஆகிய ஆறு பிரிவுகள் அரசைக் கட்டிக்காக்கும் தூண்களாக இருந்தன. இவை ஏழும் ஒன்றிணைந்து செயல்பட்டதாலேயே அரசாட்சி வலுவாக இருந்தது.

அரசருக்கு அடுத்தபடியாக யுவராஜா என்ற பெயரில் அடுத்த அரசர் அடையாளம் காட்டப்பட்டார். முதல் மகனே அடுத்த அரசராக முடிசூடுவது அக்கால வழக்கம் என்றாலும் குப்தர்கள் கறாராக அவ்வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பதைப் பார்த்தோம். அரசருக்குப் பல மகன்கள் இருந்தனர். அவர்களில் தகுதியானவரையே நாட்டை ஆளுவதற்கு ஏற்றவராக அரசர் தேர்ந்தெடுத்தார். அதைப் பொதுவில் அறிவிக்கவும் செய்தார். இது மற்ற மகன்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவது சகஜம் என்பதால் அவர்களுக்குப் பல்வேறு மாகாணங்களில் ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. பெரும்பாலும் இந்தப் பதவியை ஏற்று அவர்கள் அமைதியாக ஆட்சிக்கு உதவி செய்தனர் என்பதையே கல்வெட்டுகள் நமக்குக் காட்டுகின்றன.

இங்கே கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. அரசருக்கு எல்லா அதிகாரங்களும் இருந்தபோதிலும் அவர் தன்னிஷ்டப்படி ஆட்சி செய்ய முடியாது. ‘பரமபட்டாரகர்’, ‘பரம மகேஸ்வரர்’ என்றெல்லாம் கடவுளுக்குச் சமமாக அரசர் கருதப்பட்டாலும், அவையெல்லாம் அவர் தர்ம மார்க்கப்படி நடக்கவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தினவே தவிர, அவர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பதை அல்ல. அவருடைய செயல்கள் எல்லாம் தார்மிக அடிப்படையிலேயே அமைந்தன. ஏன், தற்போதைய அரசுகளைப் போல அவரால் சட்டங்கள் கூட இயற்ற இயலாது.

இந்து தர்மத்தில் கூறப்பட்ட தர்மசாஸ்திரங்களே அக்காலத்தில் நிலவிய சட்டங்கள். அவற்றின் அடிப்படையிலேயேதான் அரசர் ஆட்சி செய்ய முடியும். அந்த வகையில் அவர் அந்தச் சட்டங்களை நாட்டில் அமல்படுத்தும் நிர்வாகியே தவிர அவற்றில் திருத்தம் செய்து தனது சட்டங்களாகச் செய்யும் உரிமை பெற்றவரல்ல. அசோகர் போன்ற மௌரிய அரசர்களின் கல்வெட்டுகளில்கூட ‘சாசனம்’ என்ற சொல் அரச கட்டளை என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் குப்தர்களின் கல்வெட்டுகளில் அதைக்கூடக் காணமுடியாது.

அதைத் தவிர, அரசர் சரியாகச் செயல்படுகிறாரா என்பதைக் கண்காணிக்கவும் அவருக்குத் துணை செய்யவும் ‘மந்திரி பரிஷத்’ என்ற அமைச்சர்கள் குழு இருந்தது. நிர்வாகத்தில் அரசருக்கு ஆலோசனை கூறும் பொறுப்பு அமைச்சர்கள் குழுவையே சார்ந்தது. அரசர் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்குபெற மாட்டார். அவருடைய திட்டங்கள், அமைச்சரவைக் குழுவில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். அந்தக் கூட்டத்தில் திட்டங்களின் சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு அரசருக்கு முடிவு தெரிவிக்கப்படும். அதன்படியே அரசர் நடக்கவேண்டும். சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் போன்ற அரசர்கள் பெரும்பாலும் போர்க்களங்களிலேயே காலம் கழித்ததால், நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பு இந்த அமைச்சர் குழுவிடமே இருந்தது. உள்நாட்டு நிர்வாகத்தைக் கவனிப்பதைத் தவிர, வெளிநாட்டு ராஜரீக உறவுகளையும் மேம்படுத்துவது இவர்களின் முக்கியமான பணியாக இருந்தது.

அடுத்ததாக, சபா என்ற அரசவை அரசர்களுடைய முடிவுகளைத் தீர்மானிக்கும் இன்னொரு முக்கியமான குழுவாக இருந்தது. இதில் நாட்டின் பொதுமக்களில் பலர் பங்குபெற்றனர். சமுத்திரகுப்தரை அரசராக்குவதற்கு முதலாம் சந்திரகுப்தர் சபையின் அனுமதியைப் பெற்றார் என்று பிரயாகைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ‘சப்யேசூச்சவசிதேஸு’ என்று கல்வெட்டில் காணப்படும் சொற்றொடர் சபைக்கு அரசர் அளித்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அரசருடைய முடிவுகளைப் பெரும்பாலும் சபை அங்கீகரித்தாலும், அவை நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கக்கூடாது என்பதில் அரசவைப் பிரமுகர்கள் கவனமாக இருந்தனர்.

ஒரு நாட்டைக் கட்டியாளும் அரசருக்குக் கல்வி மிக முக்கியம் என்பதை குப்த அரசர்கள் உணர்ந்திருந்தனர். தத்துவப் பாடங்களிலும் மூன்று வேதங்களிலும் வார்த்தா என்ற பொருளாதாரக் கல்வியிலும் அரசியலிலும் அவர்கள் கல்வி பெற்றுத் தேறவேண்டிய கட்டாயம் இருந்தது. இவற்றைத் தவிர தகுந்த குருமார்களால் போர்ப்பயிற்சியும் அரசருக்கு அளிக்கப்பட்டது. பல்வேறு ஆயுதங்களைக் கையாளும் திறமை பெற்றவர்களாக அவர்கள் இருந்தனர். தனுர்வேதம் என்ற வில்வித்தை சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டது என்பதை வில் ஆயுதம் தாங்கிய தங்கள் உருவத்தைப் பொறித்துக்கொண்ட அரசர்களின் நாணயங்கள் உணர்த்துகின்றன.

அரசர் என்பவர் பல்வேறு நல்ல குணங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்பதும் அறவழி நடக்கவேண்டும் என்பதும் எழுதப்படாத விதிகளாக இருந்தன. அதிக கோபம் கொண்டவராக அவர் இருக்கக்கூடாது, ஆணவத்தோடு மற்றவர்களை நடத்தக்கூடாது, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அனைவரிடத்திலும் கருணையோடு நடக்கவேண்டும். மது, மாது போன்ற போக வஸ்துக்களில் மனத்தை அலையவிடக்கூடாது போன்றவை அரசருக்கான பண்புகளாகச் சொல்லப்பட்டன. வேத முறைப்படி யாகங்களைச் செய்யவேண்டும். தான தருமங்களைச் செய்யவேண்டும் என்பதெல்லாம் அரசரின் கடமைகளாகச் சொல்லப்பட்டன.

அடுத்ததாக, அரசரின் பாதுகாப்பு ஒரு முக்கியமான அம்சமாகச் சொல்லப்பட்டது. அடர்ந்த காடுகளின் வழியாகவும், குறுகிய சந்துகளின் வழியாகவும் விழாக்கள் சந்தைகள் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் செல்வதை அரசர் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது. ராஜபாட்டைகளில் தனக்கு விசுவாசமான பணியாட்களோடுதான் அரசர் பயணம் செய்வார். நோய்வாய்ப்பட்டவர்களின் அருகில் அரசர் செல்லக்கூடாது, அந்தப்புரங்களில் பணியாட்களை அமர்த்தும்போது தீர விசாரித்தே பணியில் அவர்களைச் சேர்க்கவேண்டும் போன்ற விதிமுறைகள் இருந்தன. அரசர் உணவருந்துமுன் அது பரிசோதிக்கப்பட்டு அது எந்தத் தீங்கையும் அளிக்காது என்பது சரிபார்க்கப்பட்ட பின்னரே அரசருக்கு அது அளிக்கப்பட்டது.

அமைச்சர்கள் குழுவும் அரசவையும்

அமைச்சரவைக் குழுவின் தலைவராக ‘முக்ய மந்திரி’ என்ற முதலமைச்சர் இருந்தார். அமைச்சரவையின் முடிவுகளை அவரே அரசருக்கு அறிவித்தார். அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் நல்ல குடும்பங்களிலிருந்து வந்திருக்கவேண்டும், கற்றவர்களாக இருக்கவேண்டும், அரசியலில் தேர்ந்தவர்களாகவும் விசுவாசமுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும், மண்ணின் மைந்தர்களாக இருக்கவேண்டும். அறிவாளிகளாகவும் நற்பண்புகள் கொண்டவர்களாகவும் மட்டுமல்லாமல் நல்ல உடல் வலிமையும் அவர்களுக்கு இருக்கவேண்டும் போன்றவை அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான தகுதிகளாக இருந்தன. முக்கியமாக நம்பிக்கையானவர்களாகவும் ரகசியங்களைக் காப்பவர்களாகவும் அவர்கள் இருக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

ஏதாவது ஓர் அமைச்சர் நாட்டின் நலனுக்கு மேலாக தன் சொந்த நலனைக் கருதுவார் என்றால் உடனே அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அமைச்சரவைக் கூட்டங்கள் குறைந்த நேரத்தில் முடிவுகளை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது. நீண்ட நேர அமர்வுகளில் ரகசியங்கள் வெளியே கசிவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதால் இந்த விதி பின்பற்றப்பட்டது. அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு அமர்வுகளில் ஒரு விஷயத்திற்கான முடிவு எட்டப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டங்கள் ஒரு தனிப்பட்ட இடத்தில் தகுந்த பாதுகாப்போடு நடந்தன. அதில் எடுக்கப்படும் முடிவுகள் ரகசியமாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் பொதுவானவர்கள் எளிதில் நெருங்கமுடியாத இடங்களில் இந்தக் கூட்டங்கள் நடந்தன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்னால் எந்தக் காரணத்தாலும் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சில சமயங்களில் காட்டின் நடுவே உள்ள மண்டபங்களில் இந்தக் கூட்டங்கள் நடந்தன. அதில் தூண்கள் இருக்கக்கூடாது, ஜன்னல்கள் இருக்கக்கூடாது, மறைவிடங்கள் இருக்கக்கூடாது போன்ற விதிகளெல்லாம் இருந்தது. ‘தூண்களுக்குக் கூட காது உண்டு’ போன்ற சொலவடைகள் எழுந்தது இந்தக் காரணங்களால்தான் போல.

போர்க்காலத்திற்கான ஆலோசனைகள் சொல்ல ராணுவக் குழு ஒன்று தனியாகச் செயல்பட்டது. எந்த நேரத்தில் போரைத் தொடங்குவது, எப்படிப் படையெடுப்புகளைச் சமாளிப்பது. பின்னடைவுகள் ஏற்பட்டால் மாற்றுத் திட்டங்கள் என்ன என்பதெல்லாம் இந்தக் குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன. பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடில்லாமல் குழுவில் அனைவருக்கும் சமமான இடம் அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரது கருத்தைச் சொல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்தக் குழு அமைச்சரவையின் ஒரு பகுதியாகச் செயல்பட்டதா அல்லது முற்றிலும் தனிப்பட்ட குழுவா என்பது சரியாகத் தெரியவில்லை.

பொதுவான அமைச்சரவைக் குழுவைத் தவிர, சில குறிப்பிட்ட ஆலோசனைகளைத் தருவதற்காக சிறப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நிபுணர்களாக இருப்பவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தக் குழுக்கள் அந்தந்த விஷயங்களில் சரியான வழிநடத்தல் அரசருக்குத் தேவையானபோது அதற்கு ஏற்ற முடிவுகளை எடுத்தன. உதாரணமாக சமயம் தொடர்பான விஷயங்களில் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தபோது, சமய, சாஸ்திர வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதன் ஆலோசனை கேட்கப்பட்டது. இப்படி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதன்பின் அதை அடிக்கடி மாற்றாமல் செயல்படுத்தும் முறையே அரசரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அரசவைப் புரோகிதர் அமைச்சரவைக் குழுவில் முக்கிய இடம் வகித்தார் என்று தெரிகிறது. புரோகிதர் வேதங்களில் தேர்ச்சியுற்று அறத்தைக் காப்பவராக இருந்ததால் அவருக்கு இப்படிப்பட்ட இடம் கொடுக்கப்பட்டது. அமைச்சரவை எந்த முடிவை எடுத்தாலும் சாஸ்திரங்களுக்கு விரோதமாக அந்த முடிவு இல்லை என்பதற்கான அத்தாட்சியை புரோகிதரே அளித்தார். அமைச்சரவையில் இடம்பெறும் புரோகிதர்கள் பெரும்பாலும் அரசகுருவாக இருக்கும் வழக்கம் இருந்ததால், அவரது முடிவே பல சமயங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமைச்சர்கள் பெரும்பாலும் பரம்பரையின் அடிப்படையில், அதாவது வாரிசுரிமையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மேற்சொன்ன தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டியிருந்தது. குப்தர்களுடைய பல கல்வெட்டுகள் தந்தைக்குப் பிறகு மகன், பிறகு அவனுடைய மகன் என்று வாரிசுகள் அமைச்சர் பதவிகளை வகித்ததற்குச் சான்றாக உள்ளன.

அரசவையில் பெரும்பாலும் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள், செல்வந்தர்கள் அங்கம் வகித்தனர். ஒரு வகையில் அது மக்களின் பிரதிநிதித்துவ சபையாக இருந்தது. அக்காலத்திய குடியரசுகளின் சபைகளை மாதிரியாகக் கொண்டு இத்தகைய அரசவை அமைக்கப்பட்டது. மக்களின் கருத்துகளை அவை பிரதிபலித்தன. இந்தச் சபைகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதைப் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. ஆயினும் அரசிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கு மிக்க அங்கமாக சபைகள் இருந்தன என்பதையும் பல கல்வெட்டுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

(தொடரும்)

பகிர:
nv-author-image

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *