எந்த அரசும் படைபல ரீதியில் வலிமையாக இருக்கலாம். ஆனால், அதன் நிதி நிர்வாகம் சரியாக இல்லையென்றால் அந்த அரசு நிலைத்திருப்பது கடினம். குப்தர்களின் அரசு இதற்கு விதிவிலக்கல்ல. சமுத்திரகுப்தரின் காலத்தில் அரசு விரிவடைந்த பிறகு அரசின் நிதி நிர்வாகத்தில் குப்தர்கள் மிகுந்த கவனம் செலுத்தியதை அறியமுடிகிறது. அக்காலத்தைய அரசுகள் பலவற்றைப் போலவே, நிலவரி அரசுக்கு வருமானத்தைத் தரும் முக்கியமானதொன்றாக இருந்தது. பல்வேறு வகையான நிலங்களுக்கு ஏற்ப வரிகள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன.
மௌரியர்களின் ஆட்சிக்காலத்தின் போது பெரும்பாலும் அரசுக்கு உரிமையான நிலங்கள், தனியார் நிலங்கள் என்ற இரண்டு பிரிவுகளே பிரதானமாக இருந்தது. அரசு நிலங்களிலிருந்து வசூலிக்கப்படும் வரி ‘சீத’ என்றும் தனியார் நிலங்களிலிருந்து வசூலிக்கப்படும் வரி ‘பாக’ என்றும் அழைக்கப்பட்டன. ஆனால் குப்தர்களின் ஆட்சியின்போது பாக என்றும் பாகபோக என்றும் இரண்டு வகை வரிகள் வசூலிக்கப்பட்டதைக் காண முடிகிறது. இவை பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலிக்கப்பட்டன. ஏரன் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் கருவூலத்தில் ஹிரண்யமும் (பொன்னும்) தானியங்களும் இருந்ததைக் குறிக்கிறது.
நிலவிற்பனைப் பரிவர்த்தனைகளின் போது விண்ணப்பம் (விக்ஞாபனம்), ஆவணங்களைச் சரிபார்த்தல், எல்லைகளைத் தனியாகப் பிரித்தல் என்று மூன்று நிலைகள் இருந்தன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இதன்மூலம் பெரும்பாலான நிலங்கள் அரசுடைமையாகவே இருந்தது தெளிவாகிறது. அந்த நிலங்களிலிருந்து உபரிகர, உத்ரங்க என்ற இரண்டு வகை வரிகள் வசூலிக்கப்பட்டன என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவற்றுக்கு இடையேயான வேறுபாடு பற்றிப் பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. உபரிகர என்பது தாற்காலிகமாக நிலத்தை உழுவோர் கொடுக்கும் வரி என்றும் உத்ரங்க என்பது நிரந்தரமாக நிலத்தை உழுவோர் கொடுக்கும் வரி என்றும் ப்ளீட் கருதுகிறார். ஆனால் ஒரே சமயத்தில் இருவகை வரிகளும் ஒரே நிலத்திலிருந்து வசூலிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் உண்டு. ஆகவே இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. இன்னும் சிலர் தமிழகத்தில் உள்ள மேல்வாரம் போன்ற வரிதான் உபரிகர என்று கூறுகின்றனர். இது விளைச்சலில் ஒரு பகுதியை நிலத்தின் உரிமையாளருக்கு, அதாவது அரசருக்கு அளிப்பது. அப்படியானால் உத்ரங்க என்ற வரி எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அதற்கான சரியான விளக்கம் கிட்டவில்லை. ஆறில் ஒரு பங்கு விளைச்சல் நிலவரியாக வசூலிக்கப்பட்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
நிலவரியைத் தவிர வேறு சில வரிகளும் அரசால் வசூலிக்கப்பட்டன.
1. அரசரின் பரிவாரங்களோ படைகளோ குறிப்பிட்ட பகுதியைக் கடந்து செல்லும்போது அங்குள்ளோர் அளிக்கவேண்டிய தொகை அபடசத்ர ப்ரவேஷ்ய என்று அழைக்கப்பட்டது. இது சட்டபூர்வமான வரியாக இல்லாமல், மரபான வழக்கத்தை ஒட்டி வசூலிக்கப்பட்ட தொகையாக இருந்தது.
2. அபாரம்பரகோபலீவர்த என்பது நீண்ட தூரம் அரசருடைய வண்டிகள் செல்லும்போது அவற்றை இழுத்துச் செல்லும் காளைகள் பலவீனமடைந்தால், அவற்றுக்கு ஈடாக அந்தந்த ஊர்களில் இருப்போர் புதியதாக காளைகளை அளிக்கவேண்டும் என்ற விதியைக் குறிக்கிறது. பல்லவ அரசர் சிவஸ்கந்த வர்மனின் ஆட்சியிலும் இதே போன்ற ஒரு நடைமுறை இருந்தது என்பது அவனுடைய கல்வெட்டுகளிலிருந்து தெரியவருகிறது (அபாரம்பரபலிவத்தகஹணம்).
3. அபுஷ்பக்சிரசந்தோக என்பது அரசு அதிகாரிகள் ஒவ்வொரு ஊருக்கு வரும்போது அவர்களுக்கு பாலும், மலர்களும் அளிக்கவேண்டும் என்ற நடைமுறையைக் குறிப்பது
4. அரசில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தமாக இருந்தன. அவற்றிலிருந்து வரும் வருவாய் அனைத்தும் அரசுக்கே சென்றது.
5. பசுக்களையும் கன்றுகளையும் கொல்வது கடும்தண்டனைக்கு உரியதாகக் கருதப்பட்டு பெரிய அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவற்றைத் தவிர ஊர்க்காவல் படைக்கான வரி, வர்த்தகக் குழுக்கள் அளிக்கவேண்டிய வரி, கைவினைக் கலைஞர்கள் செலுத்தவேண்டியது போன்ற வரிகளும் புழக்கத்தில் இருந்தன.
குப்தர்களின் அரசில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதாக பாஹியானின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலும் மக்கள் மது அருந்துவதில்லை, மற்ற உயிரினங்களைக் கொல்வதில்லை என்கிறார் அவர். மதுபானக் கடைகளை தாம் காணவேயில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். அக்காலத்திலேயே அரசுக்கு அதிக வருவாயைத் தரக்கூடிய மதுபானத்திலிருந்து வரும் வரியைக் கொண்டு அரசை நடத்தாமல் ஒரு முன்னுதாரணமாக குப்தர்களின் அரசு இருந்தது என்பது குறிப்பிடத்தக்க செய்தி. தற்காலத்தைய அரசுகளைப் போல குப்தர்களில் அரசும் பல தொழில்களைத் தொடங்கி நடத்தியது. பொது நிறுவனங்களைப் போல இவை செயல்பட்டன. உலோகத் தாதுக்களை எடுக்கக்கூடிய பல சுரங்கங்களுக்கும் அரசே உரிமையானதாக இருந்தது. இவையெல்லாம் நல்ல வருவாயை அரசுக்குத் தேடித்தந்தன.
செலவினங்கள்
படைபலத்துக்கான செலவுகள் அரசின் செலவினங்களில் பெரும் பங்கை வகித்தன. வீரர்களுக்கும் யானை குதிரை போன்ற விலங்குகளைப் பராமரிப்பதற்கும் பெரும் தொகை செலவிடப்பட்டது. மத சம்பந்தமான செலவினங்களும் அரண்மனைச் செலவுகளும் அடுத்ததாக கணிசமான பங்கை வகித்தன. நீர்ப்பாசனம், சாலைகள் அமைப்பது போன்ற கட்டுமானச் செலவுகளும் அரசின் செலவினங்களில் அடங்கும். கல்வி அளிப்பதற்காக பெரும் தொகையும் நிலமும் ஒதுக்கப்பட்டன.
அரசின் வரவு செலவுக் கணக்குகள் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்ட கணக்காளர்களால் அடிக்கடி சரிபார்க்கப்பட்டன. அதற்கான தனித்துறையே அரசரின் நேரடி மேற்பார்வையில் இயங்கி வந்தது. நாட்டில் நிலவிய வட்டி விகிதத்தையும் அரசு கண்காணித்து அதிக வட்டியை யாரும் வசூலித்துவிடாமல் தடை செய்தது என்பது ஆச்சரியகரமான விஷயமாகும்.
நீதி முறை
அரசர் சட்டங்களை இயற்றாமல் தர்மசாஸ்திரங்கள் அளித்த சட்டங்களைப் பாதுகாப்பவராக மட்டுமே இருந்தார் என்று பார்த்தோம். அவற்றைச் செயல்படுத்த உதவியாக நீதிபதிகளை அரசர் நியமித்தார். அந்த நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பு திருப்தியளிக்காத நிலையில் வழக்குகள் அரசரால் நேரடியாக விசாரிக்கப்பட்டன. குப்தர்களின் காலத்தில் ப்ருஹஸ்பதி, நாரதர், காத்யாயனர் ஆகியோர் அளித்த ஸ்மிருதிகள், அதாவது சட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த ஸ்மிருதிகள் மனுஸ்மிருதியைக் காலத்திற்கு ஏற்ப திருத்தி அளிக்கப்பட்டவையாகும். மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டு அந்தக் காலத்தின் பழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்றவாறு இந்த ஸ்மிருதிகள் திருத்தப்பட்டன என்று அவை தெரிவிக்கின்றன. இதிலிருந்து சட்டங்கள் எப்போதும் நிலையாக இல்லாமல் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டன என்பதும் தெளிவாகிறது.
சட்டம் பதினெட்டு தலைப்புகளில் பிரிக்கப்பட்டது. ருணதானம் (கடன்கள்), உபநிதி (வைப்பு நிதி), சம்புயோத்தானம் (கூட்டுறவு நிறுவனங்கள்), தத்தஸ்யபுனராதானம் (பரிசுகள்), அசுஸ்ருஸுசாப்யுபேட்ய (ஒப்பந்த மீறல்), வேதனாஸ்யானபாகர்ம (ஊதியம் வழங்காமலிருப்பது), விக்ரீயாசம்ப்ரதானம் (விற்பனை வீழ்ச்சி), க்ஷேத்ரவிவாதா (நிலத்தகராறுகள்), ஸ்த்ரீபுருஷ்யோ சம்பந்த (பாலினத் தொடர்புகள்), தாயபாக (வாரிசுரிமைத் தகராறுகள்), சாஹசம் (வழிப்பறிக் கொள்ளை), வாக்பாருஷ்யம் (மானநஷ்டவழக்கு), தண்டபாருஷ்யம் (அடிதடி), த்யூதம் (சூதாட்டம்) போன்றவை அவற்றுள் அடங்கும்.
இந்தப் பிரிவுகளில் உட்பிரிவுகளும் உள்ளன. குடிமையியல் சட்டங்களும் குற்றவியல் சட்டங்களும் இந்தப் பிரிவுகள் ஒன்றில் அடங்கும். தனித்தனி நீதிமன்றங்கள் இந்த இரண்டு பிரிவு வழக்குகளையும் விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த நீதிமன்றங்களுக்கு சபை என்று பெயர். குல, ஸ்ரேணி, கண போன்ற உள்ளூர் நீதிமன்றங்களும் இருந்தன. ஆனால் அவற்றிற்கு குற்றவியல் வழக்குகளை விசாரிக்க உரிமையில்லை. பெரிய வழக்குகள் சபை என்ற நீதி மன்றத்தால் மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்தன. அங்குள்ள நீதிபதிகள் அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்டார்கள். மரணதண்டனை போன்ற கடும் தண்டனைகளை விதிக்கும் உரிமை சபாவிடம் மட்டுமே இருந்தது. அங்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் அரசரின் மேல்முறையீட்டுக்குச் சென்றபோது, நீதிபதியின் தீர்ப்பை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே தன்னுடைய தீர்ப்பை அரசர் வழங்கினார் என்று அக்காலத்தைய நூல்கள் தெரிவிக்கின்றன. நாரத ஸ்மிருதியில் குறிப்பிட்டபடி தலைமை நீதிபதியின் கருத்தையே பெரும்பாலும் அரசர் பின்பற்றினார்.
நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. அதன்பின் நீதிபதி ஒருவர் அந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுவார். வழக்கு ஆவணத்தைப் பரிசீலித்து அதை ஏற்றுக்கொள்வதைப் பற்றி அவர் முடிவு செய்வார். வழக்கின் தலைப்பிற்கும் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தாலோ, அதைச் சரியாக புரிந்துகொள்ள முடியாதவண்ணம் எழுதப்பட்டிருந்தாலோ, எழுத்தே சரியாக இல்லையென்றாலோ, முரண்பட்ட தகவல்கள் தரப்பட்டிருந்தாலோ அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் வாதியும் பிரதிவாதியும் நீதிமன்றத்திற்கு முன்வந்து தங்களுடைய வாதங்களை முன்வைக்க வேண்டும். அங்கு வரமறுக்கும் ஆட்களுக்கு நீதிமன்ற அழைப்பு (சம்மன்) அனுப்பப்படும். அப்போதும் வராத பட்சத்தில்தான் ஒருவர் கைதுசெய்யப்படுவார். அதிலும் திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், அரசரின் அதிகாரிகளுக்கும், யாகம் செய்கிறவர்களுக்கும், ஆடு மாடுகளை மேய்த்துப் பிழைப்பு நடத்துகிறவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கைதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. சாட்சி சொல்கிறவர்களுடைய தகுதியும் நன்கு ஆராயப்பட்ட பிறகே அவர்களது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரிதாகச் சில சமயங்களில் சுடுநீரில் கையை வைத்தோ, நெருப்பில் நடக்கச்சொல்லியோ அல்லது விஷத்தை உட்கொள்ளச் சொல்லியோ தங்களது உண்மைத்தன்மையை நிரூபிக்குமாறு வழக்குத் தொடுத்தவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். சுவான்சங் சுடுநீரில் கையை வைத்து நிரூபிக்கச் சொன்ன வழக்கு ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
வழக்கின் தீர்ப்புகள் ஆவணப்பூர்வமாகவே தொடர்புடைய நபர்களுக்கு அளிக்கப்பட்டன. மரணதண்டனை அரிதாகவே வழங்கப்பட்டது என்று பாஹியான் கூறுகிறார். அதிகபட்சமாக செய்த குற்றத்திற்கேற்ப அபராதங்கள் விதிக்கப்பட்டன என்றும் இரண்டாவது முறை ஒரு நபர் கடுமையான குற்றம் ஒன்றைச் செய்தால் தண்டனையாக அவரது வலதுகை துண்டிக்கப்பட்டது என்கிறார் அவர். புது சாட்சியங்கள் கொண்டுவரப்பட்டால் வழக்கு மீள்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நடைமுறையும் அப்போது இருந்தது.
இப்படி அரசு நிர்வாகமும் நீதிமுறையும் செம்மையாக, சொல்லப்போனால் தற்போதைய நவீன முறைகளைவிடத் தெளிவாக இருந்த காரணத்தால்தான் ஒரு பெரும் பேரரசை நூறாண்டுகள் குப்தர்களால் ஆள முடிந்தது என்று சொல்லலாம்.
(தொடரும்)