குப்தர்களின் பெருமைக்கு முக்கியமான காரணம் அவர்களது படைபலம் என்று சொன்னால் அது மிகையல்ல. சமுத்திரகுப்தர், சந்திரகுப்த விக்கிரமாதித்தர், குமாரகுப்தர், ஸ்கந்தகுப்தர் என்று போரில் தோல்வியே கண்டிராத அரசர்கள் நூறாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்ததற்கு வலுவான கட்டமைப்புக் கொண்ட குப்தர்களின் ராணுவ வலிமை முக்கியமான பங்காற்றியது. காலாட்படை, குதிரைப் படை, யானைப்படை, தேர்ப்படை என்று அக்காலத்தில் இருந்த நால்வகைப் படைகளும் குப்தர்களிடத்தில் இருந்தாலும் அவற்றிற்குப் பின்புலமாக போர்ச்சபை ஒன்று செயல்பட்டு வியூகங்களை வகுத்தது. அரசின் வலுவான பொருளாதாரமும் இதற்குத் துணை செய்தது.
குப்தர்களின் படை ஆறு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் யானைப் படைப் பிரிவின் பணி முக்கியமானது. படைகளின் முன் சென்று காடுகளின் ஊடே வழி அமைப்பது, கடுமையான வழிகளைச் சீர்செய்வது, பாதையில் ஆறுகள் போன்ற நீர்வழிகள் குறுக்கிட்டால், அவற்றை நீந்திக்கடந்து பாலங்கள் அமைக்க உதவுவது, எதிரிகளைப் படைகளின் நடுவே ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்தி அவற்றைச் சிதறடிப்பது, கோட்டையின் கதவுகளை உடைப்பது, சில நேரம் படைகள் பின்வாங்க நேரிட்டால் அவற்றுக்குப் பாதுகாப்புத் தருவது என்று பல வேலைகளை யானைப்படை செய்தது. இவ்வளவு கடினமான படைகளை அது செய்யவேண்டியிருந்ததால், யானைகளுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையிலேயே எப்போதும் அவை இருந்தன.
குப்தர்கள் மிகுந்த கவனம் செலுத்திய இன்னொரு படைப்பிரிவு அவர்களின் குதிரைப் படைப் பிரிவாகும். மிக வேகமாகச் சென்று மின்னல் வேகத் தாக்குதலை நடத்த ஏதுவாக உயர்ஜாதிக் குதிரைகளை வாங்கி அவற்றைப் பராமரித்தனர் குப்தர்கள். யானைகளைவிட அதிக எண்ணிக்கையில் அவர்களிடம் குதிரைகள் இருந்தன. போர்கள் நடக்கும்போது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி வியூகங்களை வகுக்க குதிரைப் படை பயன்பட்டது. நால்வகைப் படைகளையும் தனித்தனியாகப் பிரித்து, அவற்றில் எது முன்செல்லவேண்டும் எது மையத்திலும் பக்கவாட்டிலும் இருந்து இயங்கவேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்க குதிரை வீரர்கள் அந்தந்தப் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள்மூலம் படைகள் நடத்தப்பட்டன.
குப்தர்களின் தேர்ப்படைகள் பெரும்பாலும் பக்கவாட்டில் இருந்தே இயங்கின. அவற்றில் வில் வீரர்கள் நிறுத்தப்பட்டு எதிரிப்படைகள்மீது அம்புமாரி பொழிந்து தாக்கும் முறை பின்பற்றப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு குதிரைகள் பூட்டிய தேர்கள் படைகளில் பயன்படுத்தப்பட்டன. தேர்களில் காலாட்படையினருக்குத் தேவையான ஆயுதங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. மலைப்பாங்கான இடங்களில் போர்கள் நடந்த போது பெரும்பாலும் அங்கே தேர்ப்படை அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை.
மேற்குறிப்பிட்ட முப்பெரும்படையின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும் போர்களின் வெற்றி தோல்வி, காலாட்படையினரின் தீரத்தைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. படைகளின் அணிவகுப்பில் முன்னால் நின்று எதிரிகளை முன்னேறித் தாக்கி வீழ்த்துவது, வேல், வாள் போன்ற ஆயுதங்களை வைத்துச் சண்டையிடுவது போன்றவற்றின் பயிற்சி பெற்ற வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் குப்தர்களின் படையில் இருந்ததாக நூல்கள் குறிக்கின்றன.
அரசுக்கு நிரந்தரமாகச் சேவை செய்த இந்த நால்வகைப் படைப் பிரிவினரைத் தவிர, தாற்காலிகமாகக் கூலிப்படையினரையும் சில போர்களில் குப்தர்கள் பயன்படுத்தினர். காட்டில் வசித்து வந்த பழங்குடியினரைக் கொண்ட இந்தப் படைப்பிரிவு நீண்ட நாட்கள் நடந்த போர்களில் பயன்படுத்தப்படவில்லை. நிரந்தரமான படைப்பிரிவினரைப் போல பயிற்சி இல்லாத இப்பிரிவினர், குறுகியகாலப் போர்களில் முன்னணிப் படை வீரர்களாகப் பணியாற்றினர். அதிகம் அறியப்படாத நிலப்பகுதிகளில் அங்கு வசிக்கும் இதுபோன்ற பழங்குடியினரைக் கொண்டு முன்னிலைத் தாக்குதலை நடத்துவது குப்தர்களின் வழக்கமாக இருந்தது. மூர்க்கமாகப் போர் செய்யும் இவர்களால் எதிரிப்படையினர் சளைத்த பிறகு பயிற்சி பெற்ற தங்கள் படையை அவர்கள்மீது ஏவி நிர்மூலமாக்கும் வியூகத்தை குப்தர்கள் கடைப்பிடித்தனர்.
எப்போது அரசுக்கு விசுவாசமாக இதுபோன்ற கூலிப்படையினர் செயல்பட மாட்டார்கள் என்பதால், அவர்களை அடிக்கடி போர்களில் ஈடுபடுத்துவது தவிர்க்கப்பட்டுவந்தது. சில சமயங்களில் போர்களில் பின்வாங்கும் எதிரிப்படையினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பி சரணடைந்த போது அவர்களையும் போர்களில் குப்தர்கள் ஈடுபடுத்தினர். எதிரியின் கையைக் கொண்டே அவர்களின் கண்ணைக் குத்துவது போன்ற இந்தச் செய்கை சில இடங்களில் அவர்களுக்கு வெற்றி தேடித்தந்தது.
குப்தர்கள் பெருமளவில் கடற்போர்களில் ஈடுபடவில்லை என்றாலும் அவர்களிடம் ஒரு தேர்ச்சி பெற்ற கடற்படை இருந்ததை அறிகிறோம். வெளிநாட்டுத் தொடர்புகளுக்கு உதவுவதோடு, வணிகர்களோடு செல்லும் கப்பல்களோடும் இந்தப் படைவீரர்கள் சென்றனர். தாம்ரலிப்தியிலிருந்து தூர தேசங்களுக்கும் குப்தர்களின் ஆளுமையில் இருந்த தீவாந்தரங்களுக்கும் இந்தக் கப்பல்கள் அடிக்கடி சென்று வந்தன.
போர்ச்சபை
களத்தில் படைகள் செயல்பட்டு வெற்றி தேடித்தருவதற்கு அவற்றின் பின்னாலிருந்து செயல்பட்ட போர்ச்சபையும் போர் அலுவலகமும் பெரும் பங்காற்றின. போர்களைப் பற்றிய முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் போர்ச்சபையிடம் இருந்தது. போர் அமைதிக்கான அமைச்சர் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ‘ஸந்திவிக்ரஹிகர்’ என்று அழைக்கப்பட்ட இந்த அமைச்சர் எப்போது போர் தொடங்கலாம், எப்போது போரை நிறுத்தி சமாதானம் செய்துகொள்ளலாம் போன்ற முடிவுகளை எடுத்தார். சமுத்திரகுப்தரின் பிரயாகைக் கல்வெட்டை எழுதிய ஹரிசேனன் ஸந்திவிக்ரஹிகர் என்ற பதவியை வகித்தவராவார். போர்கள் அதிகமாக நடைபெறும் காலங்களில் பல ஸந்திவிக்ரஹிகர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைவராகச் சில சமயம் மஹாஸந்திவிக்ரஹிகர் என்ற பேரமைச்சரும் இந்தத் துறையில் இருந்தனர்.
போர்களைத் தொடங்கும் முன்பும் போர்கள் நடக்கும் தருணங்களிலும் இந்த சபையினரின் ஆலோசனையை அரசர் கேட்டு நடப்பார். போர்ச்சபையின் கீழ்தான் உளவுத்துறை இயங்கி வந்தது. அவர்களின் ஆலோசனையும் போர்ச்சபையினரால் கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. எந்த நேரத்திலும் இந்தச் சபை கூடக்கூடிய அளவில் அதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சபையில் இருக்கும் முடிவுகள் ரகசியமாக வைக்கப்பட்டன.
போர்கள் தொடங்கியபிறகு போர் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு போருக்கான உத்தரவுகள் அதிலிருந்து இடப்பட்டன. நால்வகைப் படைகளை நடத்துவதிலும் ஏன் கூலிப்படைகளைக் கையாள்வதிலும் திறமை மிக்க அலுவலர்கள் அதில் இருந்தனர். படைகளின் தளபதிகளும் இந்த அலுவலகத்தில் இடம்பெற்றனர். படைகளுக்குப் பயிற்சி அளிப்பது, படைகளின் பிரிவுகளை செம்மைப்படுத்துவது போன்ற பணிகளை இந்த அலுவலகம் மேற்பார்வையிட்டது. உதாரணமாக குதிரைகளுக்குத் தேவையான உணவுகளை அனுப்புவது அதற்குத் தேவையான உபகரணங்களைச் சரிபார்ப்பது போன்றவை அலுவலகத்தின் மேற்பார்வையில் நடந்தது. குதிரை, யானை போன்ற விலங்குகளைக் குளிப்பாட்டுவது அதற்குத் தேவையான அலங்காரங்கள் செய்வது போன்ற பணிகளையும் இந்த அலுவலகம் கண்காணித்தது.
பல்வேறு வியூகங்களை வகுக்கும் சாஸ்திர நிபுணர்களும் அங்கே இருந்தனர். படைகளுக்கு உதவியாகச் செல்லும் குடிமைப் பணியாளர்கள் போர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்டனர். மருத்துவர்கள், சமையல்காரர்கள், வண்டிக்காரர்கள், புரோகிதர்கள், அரசருடன் செல்லும் பணிப்பெண்கள் ஆகிய பலர் இந்தப் பணியாளர்களில் அடங்குவர்.
போர் முறைகள்
போர் முறைகளாக மூன்றை சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தர்மவிஜயம் என்ற அறப்போர், லோபவிஜயம் என்ற அடுத்தவர் பொருளை அபகரிப்பதற்காகச் செய்யப்படும் போர், அசுர விஜயம் என்ற கொடூரமான போர். சாணக்கியர் போன்ற ராஜதந்திரிகள் லோபவிஜயம் என்ற போர்முறைகளைக்கூட அரசியல் காரணங்களுக்காக ஆதரித்தாலும், குப்தர்கள் தங்களுடைய போர் முறையை தர்ம விஜயம் என்றே தங்களுடைய கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றனர்.
இந்த முறையில் போர் தொடங்குவதற்கு முன்பு எதிரி நாட்டு அரசனுக்குத் தூது அனுப்பி நிபந்தனைகள் விதிப்பது, அந்த நிபந்தனைகளுக்கு அவன் ஒப்புக்கொள்ளாவிட்டால் போரைத் தொடங்குவது என்ற வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. போர்கள் திறந்த வெளியில் நடைபெற வேண்டும். தர்மசாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறே அவை நிகழவேண்டும் என்ற நியதிகளும் உண்டு. இந்த விதிகளில் நிராயுதபாணியான ஒருவனைக் கொல்லக்கூடாது, போர்க்கைதிகளைச் சித்தரவதை செய்யக்கூடாது, இரவு நேரங்களில் போர் செய்வதைத் தவிர்க்கவேண்டும் போன்றவை உண்டு. குப்தர்கள் இது போன்ற விதிகளைப் பின்பற்றியே போர் செய்தாலும், எதிரி இந்த முறைகளைப் பின்பற்றாமல் தன்னுடைய போர்முறைகளை மாற்றினால், அதற்கேற்ப தங்கள் போர்முறைகளை மாற்றிகொண்டு போர் செய்யும் நடைமுறையையும் குப்தர்கள் பின்பற்றினர். சமுத்திரகுப்தர் விந்திய மலைப்பகுதிகளில் வெற்றி கொண்டு தன்னுடைய சிற்றரசர்களாக ஆக்கிக்கொண்ட ‘வனராஜாக்களின்’ படைகளையும் தேவைப்படும்போது தங்களுடைய படைகளில் பயன்படுத்திக்கொண்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள்
தற்போது படைவீரர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிப்பாய், சுபேதார் போன்ற பதவிகள் போல, அக்காலத்திலும் பதவிகள் இருந்தன. நால்வகைப் படைகளுக்கும் தலைவராக இருந்தவரின் பதவி மஹாபாலாதிக்ருதர் என்று அழைக்கப்பட்டது. இது குப்தர்காலச் செப்பேடு ஒன்றிலிருந்து தெரியவருகிறது. சில இடங்களில் இந்தப் பதவியின் பெயர் மஹாபாலாத்யக்ஷர் என்று குறிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த ராணுவமும் அவரது கண்காணிப்பில்தான் இயங்கியது. இதைத் தவிர மஹாசேனாதிபதி என்ற பதவியும் இருந்தது. மஹாசேனாதிபதி என்பவர் ஒரு குறிப்பிட்ட படைப்பிரிவுக்குத் தலைவராக இருந்தார் என்று தெரியவருகிறது. மஹாசாமந்தர் என்ற பெயரிலும் இந்தப் பதவி சில கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது. சில நேரங்களில் அரசரே மஹாசேனாதிபதியாகச் செயல்படுவது உண்டு. சமுத்திரகுப்தர் பெரும்பாலான போர்களில் தாமே மஹாசேனாதிபதியாகச் செயல்பட்டார் என்று அவரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மஹாசர்வதண்டநாயகர் என்ற இன்னொரு பதவியும் குப்தர் கல்வெட்டுகளில் வழங்குகின்றது. சர்வதண்டநாயகர்கள் என்ற சிறுபடைப்பிரிவின் தலைவர்கள் இந்த மஹாசர்வதண்டநாயகரின் கீழ் பணிபுரிந்திருக்கக்கூடும். இந்தப் பதவிகளை வகித்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் படைகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிலர் இவர்கள் ஊர்க்காவலைக் கவனித்தவர்கள் என்று கூறுகின்றனர். நிலக்கொடையைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பெரும்பாலானவை இந்த மஹாதண்டநாயகர்கள் என்ற பதவியைக் குறிப்பிடுகின்றன. ஆகவே இது ராணுவப் பதவி அல்ல என்ற வாதத்திற்கு அந்தக் குறிப்புகள் வலுச்சேர்க்கின்றன. ஆனால் போர் இல்லாத சமயங்களில் படைவீரர்கள் இது போன்ற குடிமையியல் துறைகளிலும் ஈடுபட்டனர் என்பது இன்னும் சில குறிப்புகளால் தெரியவருகிறது.
ரணபாந்தாரகர் என்பது இன்னொரு பதவியின் பெயர். நாட்டின் படைபலம் வலுவாக இருக்கவேண்டுமென்றால் அதற்குத் தகுந்த நிதி அளிக்கப்படவேண்டும். அப்படி நிதி ஒதுக்கீடு செய்ய நாட்டின் பொருளாதாரமும் வலுவானதாக இருக்கவேண்டும். படைபலம் என்பது பெரும் செலவு பிடிக்கும் ஒரு துறையாக அப்போதே இருந்தது. அதனால், அதன் தேவைகளை அறிந்து தகுந்த நிதியை ஒதுக்கீடு செய்வது, அதன் வரவு செலவுகளைக் கண்காணிப்பது போன்றவற்றை ஒரு தனி அமைச்சரகமே கவனித்து வந்தது. அதன் தலைவராக இருந்தவர் ரணபாந்தாரகர் என்பவர். போரைத் தொடங்குமுன் தகுந்த நிதி வசதி உள்ளதா என்பதை அரசர் இவரிடம் கேட்டு உறுதி செய்தபின்னரே போருக்கான முஸ்தீபுகள் செய்யப்பட்டன.
பஸர் என்ற இடத்தில் கிடைத்த முத்திரை ஒன்றில் ‘ஸ்ரீ ரண பாந்தாரக அதிகாரணஸ்ய’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய ஆணையின் பெயரில் என்று இதற்குப் பொருள். ஆகவே ராணுவநிதி தொடர்புடைய அனைத்திற்கும் பொறுப்புள்ளவராக இருந்தது இந்தப் பதவி என்பது தெரிகிறது.
வைணிய குப்தரின் கல்வெட்டு ஒன்றில் ‘பிலுபதி’ என்ற பதவி குறிப்பிடப்பட்டுள்ளது. யானைப்படைப்பிரிவின் தலைவராக இருந்தவரின் பதவியே இப்பெயரில் அழைக்கப்பட்டது. பல்வேறு சிறு படைப்பிரிவுகளைக் கொண்ட யானைப்படைக்கு ‘மஹாபிலுபதி’ என்பவர் தலைமை வகித்தார். ஆகவே போரில் ஈடுபடும் யானைப்படைகளின் தலைவராக மஹாபிலுபதியும் அவருக்குக் கீழே பல்வேறு பிலுபதிகளும் இருந்தனர் என்பது தெளிவாகிறது. இதுபோலவே குதிரைப்படைகளுக்கும் காலாட்படைகளுக்கும் சிறு படைப்பிரிவின் தலைவர், அவர்களுக்கு எல்லாம் மேலதிகாரி போன்ற பல பதவிகள் இருந்திருக்கக்கூடும். உதாரணமாக பால அஸ்வபதி என்ற குதிரைப்படைத் தலைவரின் பதவி ஒரு கல்வெட்டில் உள்ளது.
பல்வேறு கல்வெட்டுகளும் அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல்களும் நமக்குத் தெரிவிப்பது குப்தர்கள் வலுவான கட்டமைப்புக் கொண்ட ஒரு படைப்பிரிவை வைத்திருந்தார்கள் என்பதை. களத்தில் செயல்படும் படைகளைத் தவிர அவர்களுக்கு உதவியாகச் செல்பவர்கள், அவர்களைக் கண்காணிக்கும் அலுவலகம், போர் வியூகங்களை வகுக்கவும் முக்கிய முடிவுகளையும் எடுக்கவும் அதிகாரம் படைத்த சபை என்று பல்வேறு குழுக்கள் பின்புலத்தில் செயல்பட்டன. கூடவே நிதி நிலைமையைக் கண்காணிக்கவும் தகுந்த அமைச்சர்கள் இருந்தனர். இந்தக் காரணங்களால்தான் நாட்டின் பல அரசுகளை வென்று ஒரு பெரும் அரசை குப்தர்களால் ஸ்தாபிக்க முடிந்தது.
(தொடரும்)