Skip to content
Home » குப்தப் பேரரசு #35 – கலைச்செல்வங்கள்

குப்தப் பேரரசு #35 – கலைச்செல்வங்கள்

குப்தப் பேரரசு

வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல அரசுகளும் பேரரசுகளும் தோன்றியிருக்கின்றன. பல திறமையான அரசர்கள் தங்களுடைய வாள் பலத்தாலும் படைபலத்தாலும் அவற்றை விரிவாக்கம் செய்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். அரசர்களும் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் தங்களுடைய நிர்வாகத் திறமையினால் அவற்றைப் பல ஆண்டுகள் நிலை நிறுத்தி நல்லாட்சியைத் தந்திருக்கிறார்கள். ஆயினும் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் ஓர் அரசின் பெருமையைப் பேச வைப்பது அவர்கள் தந்த கலைப் படைப்புகள்தான். ஓர் அரசு தன் காலத்தே உருவாக்கிய சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்கும் முன் நிற்கும் போது, அவர்களின் வீரமும் போர்த்திறமையும் அவற்றின் முன் அடிபட்டுப் போகின்றன. அப்படி குப்தர்களும் காலத்தால் அழியாத பல கலைப் படைப்புகளை உருவாக்கிச் சென்றிருக்கின்றனர்.

காந்தாரக் கலை என்று சொல்லப்படும் கிரேக்க – இந்தியக் கலவை உருவாகிய காலகட்டத்தை அடுத்து உருவாகிய குப்தர்களின் கலைப்படைப்புகளில் ஓரளவு அதன் தாக்கம் இருந்தாலும் பெரும்பாலும் பாரதத்தின் தனித்துவமே குப்தர்களின் படைப்புகளில் அதிகமாக இருந்ததைக் காணமுடிகிறது.  ஒரு காலத்தில் வட இந்தியா முழுவதும் பரவி இருந்ததன் காரணமாக குப்தர்களின் படைப்புகள் கிழக்கில் அசாமிலிருந்து மேற்கில் குஜராத் / சௌராஷ்ட்ராவின் பகுதிகள் வரைக்கும், வடக்கில் பஞ்சாபிலிருந்து தெற்கில் விந்திய மலைச்சாரல் வரைக்கும் கிடைக்கின்றன. அசாமிலுள்ள தா பர்பதியா என்ற இடத்தில் இருக்கும் செங்கல்லால் எழுப்பட்ட கோவில் குப்தர்களின் பழங்காலக் கட்டடக் கலைக்கு உதாரணமாக உள்ளது.

அடுத்ததாக புண்டரவர்த்தனம் என்று அப்போது அழைக்கப்பட்ட வங்காளத்தின் வடபகுதியில் உள்ள பல கோவில்கள் குப்தர்களுடையவை. அவர்களுடைய ஆட்சியின் மையப்பகுதிகளாக இருந்த கங்கைச் சமவெளியைப் பற்றியும் மத்தியப் பிரதேசப் பகுதிகளைப் பற்றியும் சொல்லவே வேண்டியதில்லை. பல இடங்களில் அவர்கள் வடித்த கட்டடங்களும் சிற்பங்களும் இன்றும் குப்தர்களின் பெருமையைப் பேசுகின்றன. குறிப்பாக மதுராவிலிருந்து பில்ஸா செல்லும் வழியில் உள்ள தேவ்கட், உதயகிரி, சாஞ்சி, ஏரன் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களும் கோவில்களும் உலகப் புகழ் வாய்ந்தவை. அங்கெல்லாம் உள்ள சிதிலமடைந்த நிலையில் காணப்படும் செங்கல்களால் கட்டப்பட்ட பல கோவில்கள், குப்தர்கள் காலத்தவை. பஞ்சாபைப் பொருத்தவரை முர்தியிலுள்ள ஜைனக் கோவில், பேரா, சுனெட் ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள் ஆகியவை குப்தர்களின் கலைக்குச் சான்றாக இருக்கின்றன.

கட்டடக் கலை

ஆரம்ப காலகட்டங்களில் வெட்டவெளியில் உள்ள சிற்பங்கள், பின் பீடம் ஒன்றில் நிறுத்தப்பட்ட விக்ரஹங்கள் அதன்பின் சிறிய கட்டடம் ஒன்றில் வைத்து வழிபடப்பட்ட மூர்த்தங்கள் என்றெல்லாம் இருந்த கோவில்களின் கட்டடக் கலை பெருமளவில் விரிவடைந்தது குப்தர்களின் காலத்தில்தான். மலைகளைக் குடைந்து ஏற்படுத்தப்பட்ட குடைவரைக் கோவில்களையும், சமவெளிகளில் உள்ள கட்டுமானக் கோவில்களையும் குப்தர்கள் கட்டினர். இவ்வகையில் ஏற்படுத்தப்பட்ட முதல் கோவில்களில் ஒன்றாக சாஞ்சியில் உள்ள ஒரு கோவில் குறிப்பிடப்படுகிறது. சிறிய கர்ப்பக்கிரஹம், அதன் மேல் சிகரம் இல்லாத சமதளம், எந்தவித வேலைப்பாடும் இல்லாத சுவர்கள், முன்னால் கட்டப்பட்ட சிறு மண்டபம் ஆகியவற்றை இந்தக் கோவில் கொண்டுள்ளது. மண்டபமும் கர்ப்பக்கிரஹமும் சிறு எழுச்சி ஒன்றின் மேல் கட்டப்பட்டுள்ளன. அதன்பின் இந்தக் கலை வளர்ச்சியடைந்து ஜகதி (பீடம்), சிகரம் ஆகியவற்றைக் கொண்ட கோவில்கள் கட்டப்பட்டன. கோஷ்டங்களும் அதில் சிற்பங்களும் பலவித வேலைப்பாடுகள் கொண்ட சுற்றுச் சுவர்களும் கொண்ட கோவில்கள் பல குப்தர்கள் காலத்தின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்பட்டன. குப்தர்களின் முக்கியமான கோவில்கள் சில அமைந்துள்ள இடங்கள் பின்வருமாறு :

• உதயகிரி குடைவரைக் கோவில்
• திகோவாவில் உள்ள விஷ்ணுவின் கோவில்
• பூமராவில் உள்ள சிவன் கோவில்
• நச்சன குதாராவில் உள்ள பார்வதியின் கோவில்
• கத்வாவில் உள்ள கோவில்
• தேவ்கட்டில் உள்ள தசாவதாரக் கோவில்
• புத்தகயாவில் உள்ள போதிசத்வர் கோவில்

நச்சன குதாராவில் உள்ள பார்வதி கோவிலின் வாயில். இவ்வகையான வேலைப்பாடுகளும் தோரணங்களும் குப்தர்களின் கலைப்படைப்பின் முத்திரையாகும்.

குப்தர்களின் காலத்தில் குறிப்பாக விமானங்கள் பல அடுக்குகள் கொண்டதாகக் கட்டப்பட்டதைப் பார்க்கலாம். சமதளக் கூரையிலிருந்து சாதாரண விமானம், அதன்பின் பஹுபூமிகா என்று குறிப்பிடப்படும் பல அடுக்குகள் கொண்ட விமானம், ஆமலகா, வேதிகா, அந்தகா, சுகநாசி என்று பெயருடைய விமானத்தின் பகுதிகளில் பலவிதமான வேலைப்பாடுகள், அழகான சிற்பங்கள் என்று கோவில் கட்டடக்கலை வளர்ச்சியடைந்தது குப்தர்களின் காலகட்டத்தில்தான் என்பதைப் பல்வேறு கோவில்கள் எடுத்துக்காட்டுகின்றன. குப்தர்களின் கோவில்களில் பெரும்பாலானவை செங்கற்களால் கட்டப்பட்டவை. அச்சில் வார்க்கப்பட்ட தூண்களும் கட்டடத்தின் பகுதிகளும் இவ்வகைக் கோவில்களில் பொருத்தப்பட்டதையும் காணமுடிகிறது.

சிற்பங்கள்

புராணங்களில் கூறப்பட்ட பல மூர்த்தங்களை அப்படியே வடிவெடுத்துச் செய்ததில் குப்தர்களின் சிற்பிகளுக்குத் தனி இடம் உண்டு. சிவன், விஷ்ணு, தேவி, முருகன் போன்ற தெய்வங்களின் எண்ணற்ற வடிவங்களுக்கு உருவம் அளித்தவர்கள் குப்தச் சிற்பிகள். மௌரிய, குஷாணர்களின் காலங்களில் கலைப்படைப்புகள் சிறந்து விளங்கினாலும் அவை புத்த, சமணச் சிற்பங்களில் அருமையாக வெளிப்பட்டன. ஆனால் ஹிந்து தெய்வங்களின் பல்வேறு பரிணாமங்களை வெளிக்கொணர்ந்தது குப்தர்கள்தான். தேவ்கட்டில் உள்ள தசாவதாரக் கோவிலில் உள்ள கிருஷ்ணரின் வரலாற்றைக் கூறும் பாகவதச் சிற்பங்கள் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். தேவகி தன் குழந்தையை வசுதேவரிடம் அளிப்பது, வசுதேவர் கோகுலத்திற்குச் செல்வது, நந்தகோபரும் யசோதையும் பலராமரையும் கிருஷ்ணரையும் தங்கள் கைகளில் தாங்குவது, கம்சவதம் போன்ற காட்சிகள் மிகவும் அழகாக அதேசமயம் எளிமையாக இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளன.

போலவே ராமாயணக் காட்சிகளைச் சித்தரிக்கும் சிற்பங்களும் இங்கே உள்ளன.

தனிப்பட்ட முறையில் வைணவர்களாக இருந்தாலும், முக்கியமான சிவபெருமானுடைய கோவில்கள் பல குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்டவையே. மிக அழகான சிவலிங்கத் திருமேனிகள் கோ, உச்சாஹரா, பூமரா ஆகிய இடங்களில் காணக்கிடைக்கின்றன. சிவனுடைய லிங்க வடிவத்தையும் மூர்த்த வடிவத்தையும் ஒன்றிணைத்துப் பல சிற்பங்கள் வடித்ததில் முன்னோடியாக இருந்தவர்கள் குப்தர்கள். இதில் உச்சாஹராவில் உள்ள ஏகமுகி சிவலிங்கம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மிகவும் அமைதி தவழும் முகத்துடன் கூடிய சிவபெருமானின் தலையில் உள்ள ஜடை இரண்டு அடுக்குகளாகப் பின்னப்பட்டுள்ளது. கழுத்தில் உள்ள ஆபரணமாக இருந்தாலும் சரி, மேல் ஜடையில் காணப்படும் பிறைச் சந்திரனாக இருந்தாலும், நெற்றியில் உள்ள மூன்றாவது கண்ணாக இருந்தாலும் சரி ஒவ்வொரு பகுதியும் மிக கவனமாகச் செதுக்கப்பட்டு சிவபெருமானின் உருவத்திற்கு அழகு சேர்க்கிறது.

சிவ-சக்தித் தத்துவத்தின் இணைப்பாக உள்ள அர்த்தநாரீஸ்வர வடிவம் குப்தர்களின் சிற்பக்கலைக்கு இன்னோர் உதாரணமாகும். நச்சனக் குதாரா என்ற இடத்தில் கிடைக்கப்பட்ட மஹாநட சிவனின் வடிவம் பின்னாளில் எழுந்த நடராஜ சிற்பங்களுக்கெல்லாம் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

தாண்டவ ரூபத்தில் உள்ள இந்தச் சிற்பத்தின் மேற்பகுதி மட்டுமே இப்போது கிடைத்துள்ளது. கம்பீரமாகத் தோற்றமளிக்கும் முகம், மேலே உள்ள இரண்டு கரங்களும் வீசியாடும் தன்மை, கீழே உள்ள கரம் ஒன்று பக்கவாட்டில் நீண்டிருக்கும் விதம் என்று முழுமையான விக்கிரம் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும் என்பதைச் சிதிலமடைந்த சிற்பமே எடுத்துக்காட்டுகிறது. இடதுபுறம் சற்றே சாய்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கும் இச்சிற்பம் நடனம் ஆடும்போது உடல் நகரும் வேகத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.

விஷ்ணுவின் பரமபாகவதர்களாகத் தங்களைக் கூறிக்கொண்ட குப்தர்கள், நின்ற, அமர்ந்த, கிடந்த நிலைகளைத் தவிர பல அற்புதமான வடிவங்களில் பெருமாளின் சிற்பங்களை எழுப்பினர். உதயகிரியில் உள்ள வராகச் சிற்பம் இவற்றில் முக்கியமானதாகும். பார்ப்போரை வியக்கச் செய்யும் அதன் பிரம்மாண்டம் இறைவனின் பேரவதாரம் ஒன்றை நேரடியாகக் கண்முன் வந்து காட்டுகிறது. கிட்டத்தட்ட பதின்மூன்று அடிகள் கொண்ட இந்தச் சிற்பம் உதயகிரியின் குகை ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட தாமரை மாலை ஒன்றை இந்த வராகர் அணிந்திருக்கிறார். பொதுவாக வராகத்தின் முகத்தில் அமர்ந்த நிலையில் சித்தரிக்கப்படும் பூதேவி இங்கே கொம்பு ஒன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் வகையில் சிற்பம் அமைந்திருப்பதும், தேவர்கள் இந்தக் காட்சியை ஆச்சரியத்துடன் பார்ப்பதும், திருமாலின் காலடியில் ஆதிசேடன் அவரை வணங்குவதும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பூமாதேவி கடலில் அசுரனால் அமிழ்த்தப்பட்டு அவரை விஷ்ணு வெளிக்கொண்டு வந்ததால், வருணன் கடலில் காட்சியளிப்பது பக்கவாட்டில் செதுக்கப்பட்டிருக்கிறது.

சற்றுத் தள்ளி கங்கையும் யமுனையும் தத்தமது வாகனங்களான முதலையிலும் ஆமையிலும் காட்சியளிக்கின்றனர். இருவரும் பிரயாகையில் கலந்து, கடலோடு சங்கமிப்பதும் இங்கே காட்சியமைக்கப்பட்டிருக்கிறது . இப்படி இரு நதிகளும் சிற்ப வடிவில் காட்சியளிப்பது முதலில் குப்தர்கள் காலத்தில்தான் என்று கூறப்படுகிறது.

மதுராவில் குப்தர்கள் காலத்து அரிதான விஷ்ணுவின் வடிவம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. மேல்பகுதி மட்டுமே உள்ள இந்தச் சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ள திருமாலின் வடிவமாக இருக்கவேண்டும். விஷ்ணுவின் தலையில் வித்தியாசமான முறையில் முத்துக்களாலான மகுடம் உள்ளது. இந்த முத்துக்கள் மகுடத்தில் உள்ள சிம்மம் ஒன்றின் வாயின் வழியாக வெளிப்படுகிறது. விக்கிரகத்தின் கழுத்தில் உள்ள ஆபரணமும் முத்துக்களால் ஆனதாகும். விஷ்ணுவின் உருவத்திற்குப் பின்னால், விசிறி போல அமைந்த பின்னணியில் அவரது அவதாரங்களான வராகமும் நரசிம்மமும் காணப்படுகின்றன. கீதையில் சொல்லப்படும் விஷ்ணுவின் விஸ்வரூபத்தில் சித்தரிக்கப்படும் அவருடைய பல தலைகளில் நரசிம்மமும் வராகமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்தச் சிற்பமும் திருமாலின் விஸ்வரூபக் காட்சியை சித்தரிப்பதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

தேவ்கட்டில் உள்ள விஷ்ணுவின் கோவிலில், புராணங்களிலிருந்து செதுக்கப்பட்ட மூன்று காட்சிகள் குப்தர்களின் கலைத்திறமைக்கு இன்னொரு சான்றாகும். அதில் ஒன்று நர-நாராயண தவக்காட்சி. அருகே உள்ள மலை, தவச்சாலையில் அருகருகே வசிக்கும் சிங்கமும் மான்களும் இதில் அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. போலவே பாற்கடலில் பள்ளி கொள்ளும் சேஷசாயியான விஷ்ணுவின் சிற்பம் இன்னொன்று. லக்ஷ்மிதேவி விஷ்ணுவின் பாதங்களை வருட, மேலே மயில் வாகனத்தில் கார்த்திகேயன், யானை வாகனத்தில் இந்திரன், தாமரை மலர்மீது பிரம்மா, நந்தியின்மீது சிவன் பார்வதி என்று பல்வேறு தெய்வங்கள் இந்தச் சிற்பத்தின் அருகே காணப்படுகின்றன. மூன்றாவது சிற்பம் கஜேந்திரமோட்சக் காட்சியைக் காட்டுகிறது.

முதலை வாயில் சிக்கிய யானை, அதனைக் காப்பாற்ற கருட வாகனத்தில் பறந்தோடி வரும் திருமால் என்று அனைவரின் முக பாவனைகளும் சிறந்த முறையில் இந்தச் சிற்பத்தில் உள்ளன.

புத்தர் அல்லது போதிசத்வருடைய சிற்பமும் குப்தர்கள் காலத்தில் பல மாறுதல்களை அடைந்தது. குஷாணர்கள் காலத்து புத்த சிற்பங்களை ஒப்பு நோக்கும்போது பல அடிப்படை வித்தியாசங்களை குப்தர்களின் புத்தர்களில் காணலாம். உதாரணமாக குஷாணர் காலத்துப் புத்தர்களின் பின்னால் உள்ள ஒளிவட்டம் வெறுமையாக இருக்கும். ஆனால் குப்தர்களின் சிற்பங்களில் தாமரை போன்ற பல வடிவங்களைக் கொண்டதாக இந்த ஒளிவட்டம் உள்ளது. புத்தரின் மேலாடை இடது தோளில் மட்டும் குஷாணர்களின் சிற்பங்களில் உள்ளது. ஆனால் குப்தர் சிற்பங்களில் இரு தோள்களையும் தழுவும் மேலாடை சித்தரிக்கப்பட்டுள்ளது.

சாமரத்தோடு பல மங்கலச் சின்னங்களையும் உள்ளதாக குஷாணர்கள் புத்தரின் சிற்பங்களை வடித்தனர். ஆனால் குப்தர்களின் சிற்பங்களில் சாமரம் மட்டுமே உள்ளது. போலவே அபயமுத்திரையைக் காட்டும் புத்தரின் வலது கரம் பின்னால் உள்ள கல்லோடு ஒட்டியே குஷாணர்களின் சிற்பங்களில் செதுக்கப்பட்டது. ஆனால் குப்தர்களோ அதைத் தனியாக முன்னால் வடிவமைத்து, சில இடங்களில் தனிப்பட்ட கல்லால் செதுக்கியிருக்கின்றனர். குஷாணரின் புத்தர்களில் வட்டவடிவமாக உள்ள கண்கள் நன்கு திறந்திருக்கும். ஆனால் குப்தர்களின் புத்தர் சிற்பங்களில் கண்கள் நீளமாக, சற்றே திறந்திருக்கும் பாவனையில் இருக்கும்.

சுடுமண் சிற்பங்கள்

கோவிலில் உள்ள கற்சிற்பங்கள் மட்டுமல்லாது, கலைத்திறன் உள்ள பல சுடுமண் சிற்பங்களும் குப்தர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. கடவுளர்கள், ஆண்/பெண் உருவங்கள், விலங்குகளின் உருவங்கள் என்று அவற்றை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். கடவுளர் உருவங்களைப் பொருத்தவரை கோவர்த்தன கிரியைத் தூக்கி நிற்கும் கிருஷ்ணர், பீடத்தில் உள்ள சிவலிங்கம், கைலாய மலையில் அமர்ந்திருக்கும் சிவனும் பார்வதியும், மகிஷாசுரமர்த்தனி என்று பல சிற்பங்கள் கிடைத்துள்ளன.

அஹிச்சஹத்ராவில் கிடைத்துள்ள பல சுடுமண் சிற்பங்கள் சிவ புராணத்தில் உள்ள பல நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. தக்ஷனுடைய யாகத்தை அழித்தல், பைரவராக உருவமெடுத்தல், பிக்ஷாடனத் திருவுருவம் போன்றவை இங்கே கிடைத்த சிற்பங்களுக்கு சில உதாரணமாகும். தக்ஷிணாமூர்த்தியின் உருவம் பொறிக்கப்பட்ட சுடுமண் பலகை ஒன்றும் இங்கே கிடைத்துள்ளது.

குப்தர்களின் கலைப்படைப்புகளைப் பொருத்தவரை, அதற்கு முன்பிருந்த காலகட்டத்திலிருந்து பெருமளவில் மாறுபட்டு ஒரு புதியவகைப் பாணியைத் தனதாக்கிக் கொண்டவை என்று சொல்லலாம். குப்தர்களின் பாணியைப் பின்பற்றி சமகாலத்திலும் பிற்காலத்திலும் பெருமளவில் கோவில்களும் சிற்பங்களும் படைக்கப்பட்டதைப் பார்க்கிறோம். தென்னகத்தில் இருந்த பாண்டியர்களின் குடைவரைக் கோவில்களில்கூட குப்தர்கள் கலையின் தாக்கம் இருந்தது என்பதைப் பார்க்கும்போது, அவர்களுடைய படைப்புகளின் ஆழமும் வீச்சும் எவ்வளவு தூரம் இருந்தது என்பது தெளிவாகும்.

முன்பிருந்த கலைப்படைப்புகளை எடுத்துக்கொண்டு அதைச் சீர்செய்து எளிமையாகவும் அழகாகவும் தந்தவர்கள் குப்தர்கள். அவர்களுடைய சிற்பங்களில் தென்படும் அழகும் நளினமும் காண்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் இருந்தது. நுட்பமான வேலைப்பாடுகளைக்கூட மிகுந்த அழகோடு தந்து பார்ப்பவர்களை ஈர்க்கும் தன்மையோடு படைத்தவர்கள் குப்தர்களின் சிற்பிகள். அதே நேரத்தில், அக்காலத்தைய பல்வேறு சமயங்களின் கூறுகளையும் ஆன்மிகத்தையும் தங்களின் கலைப்படைப்புகளில் மரபு மாறாமல் சித்தரித்து நவீனம் என்ற பெயரில் அவற்றின் உட்கருத்துகளை சிதைக்காமல் அளித்து, சாதனை செய்தவர்களும் அவர்களே. புராணக் கதைகளாகட்டும், பைரவர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற இறை உருவங்களாகட்டும், அமைதி தவழும் புத்த பகவானின் சிற்பங்களாகட்டும் அந்தந்தச் சமயத்தின் நெறிகள் குப்தர்களின படைப்புகளில் அப்படியே வெளிப்பட்டன. கலை அழகையும் ஈர்ப்புத்தன்மையையும் வெளிப்புறத்திலும் ஆன்மிக ரீதியான கருத்துக்களை உட்புறத்திலும் கொண்டு குப்தர்களின் படைப்புகள் மிகச்சிறந்த கூட்டணியாக அமைந்ததால்தான் இன்றளவும் அவை நீடித்து நிலைக்கின்றன.

(தொடரும்)

படங்கள் நன்றி: தொல்லியல் துறை

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *