Skip to content
Home » ஹெலன் கெல்லர் #1 – பிறப்பும் பின்னணியும்

ஹெலன் கெல்லர் #1 – பிறப்பும் பின்னணியும்

இன்றைய 21ஆம் நூற்றாண்டில் மாற்றுத்திறனாளிகளையும் மாற்றுத்திறன் குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் பரவலாக நம்மிடையே உள்ளது. இருந்தாலும் ஒரு சிலர் மாறுபட்ட திறனுடையவர்களைக் கேலி செய்யவும் அவர்களை ஒதுக்கி வைக்கவும் தயங்குவதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி உலகை ஒரு சிறு கிராமமாக மாற்றிய பிறகும்கூட இத்தகைய நிலை இருக்கிறது.

அப்படியென்றால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது நவீன தொழில்நட்பம் உருவாகத் தொடங்கியிருந்த நேரத்தில், கண் பார்வையும் கேட்கும் திறனும் இல்லாத நபர், அதிலும் ஒரு பெண் எத்தகைய சூழல்களை எதிர்கொண்டிருப்பார்? எத்தனை போராட்டங்களைக் கடந்திருப்பார்? நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பூட்டும் அத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தவர் ஹெலன் கெல்லர்.

குடும்பத்தாரோடும், சமூகத்தினரோடும், ஆணாதிக்கவாதிகளோடும் போராடி வென்று தனக்கென வரலாற்றில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தவர். உத்வேகத்தையும் மன எழுச்சியையும் அளிக்கும் வாழ்க்கை ஹெலன் கெல்லருடையது.

0

1880ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தின் டஸ்கும்பியா என்கிற இடத்தில், கேட் ஆடம்ஸ் கெல்லர் என்ற தாய்க்கும் ஆர்த்தர் ஹெச். கெல்லர் என்ற தந்தைக்கும் பூரண ஆரோக்கியத்துடன் பிறந்தார் ஹெலன் கெல்லர். ஆர்த்தரின் இரண்டாவது மனைவியாவார் கேட். இருவருக்கும் இடையே 20 ஆண்டுகள் வித்தியாசம் இருந்தபோதும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர்.

அமெரிக்க ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆர்த்தர், மிக உயரிய ‘மார்ஷல்’ பதவியையும் வகித்தார். தோட்டங்களைப் பராமரித்தல், புதிய ரக துப்பாக்கிகளைச் சேகரித்தல் போன்றவற்றில் அவருக்கு ஆர்வம் அதிகம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதும் டஸ்கும்பியா நார்த் அலபாமியன் என்கிற செய்தித்தாளின் ஆசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றினார். முதல் திருமணத்தின் மூலம் ஆர்த்தருக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்தார்கள். முதல் மனைவி இறந்து பல வருடங்கள் கழித்தே அவர் கேட் ஆடம்ஸை திருமணம் செய்துகொண்டார்.

கேட் ஆடம்ஸ் செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது உறவினர்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கனோடு ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்குச் செல்வாக்குடன் இருந்தார்கள். தன்னைவிட 20 வயது மூத்த ஆர்த்தரை திருமணம் செய்துகொண்டதும் கேட்டின் வாழ்க்கை தடாலடியாக மாறியது.

பணக்காரக் குடும்பத்தின் செல்ல மகள் என்கிற நிலை மாறி கடுமையாக உழைத்து சிக்கனமாகச் செலவு செய்யவேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். ஆர்த்தர் ராணுவத்தில் பணிபுரிந்திருந்தாலும் அன்றைய அமெரிக்காவில் நிலவிய பொருளாதாரச் சூழலால் வருமானத்துக்காக வயலையும் கோழிப்பண்ணையையும் நம்பியிருக்க வேண்டியதானது. வயல் வேலைகளைச் செய்தும் கோழிப்பண்ணையைப் பராமரித்தும் காலை முதல் மாலை வரை கடுமையாக உழைத்தார் கேட்.

நாட்கள் செல்லச் செல்ல அமெரிக்க பொருளாதாரம் சீரடைய தொடங்கியதால், அக்குடும்பத்துக்கு நிலையான வருமானம் கிடைக்கத் தொடங்கியது. அப்படி இருந்தும் தனது கடின உழைப்பை ஆர்த்தர் குறைத்துக்கொள்ளவில்லை. பெரிய செல்வந்தர் என்று சொல்ல முடியாவிட்டாலும் பணம் என்பது அவருக்குப் பிரச்னையாக இருக்கவில்லை. ஐவி கிரீன் என்று அழைக்கப்பட்ட அவர்களது வீடு அன்பு நிறைந்ததாக விளங்கியது.

தங்கள் குடும்பத்தின் முதல் பெண் குழந்தை என்பதால் ஹெலனின் பிறப்பைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொண்டாடினார்கள். குழந்தை ஹெலனை தாயார் கேட் நன்றாகக் கவனித்துக்கொண்டார். பெற்றோர் இருவரும் அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தனர். அரவணைப்பும் அன்பும் நிறைந்த சூழலில் ஹெலன் வளர்ந்தாள்.

ஆர்த்தரின் தோட்டத்தில் ஹெலனின் பாதம் படாத இடம் என்பதே கிடையாது. துறுதுறுவென எங்கும் ஓடுவதும் ஏதேதோ மழலையில் பேசுவதும் எனப் பெற்றோருடைய மகிழ்ச்சிக்கான இருப்பிடமாக அக்குழந்தை விளங்கியது. ஒரு வயது முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு ஹெலனின் வாழ்க்கையில் பெரும் சூறாவளி வீசியது. சிறு குழந்தை என்றும் பாராமல் அந்தச் சூறாவளி அவரை வெகுவாகப் பதம் பார்த்தது.

0

திடீரென ஒரு நாள் ஹெலன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். குழந்தையால் கண்களைக்கூட திறக்கமுடியவில்லை. மெல்லிய முனகல் அல்லது சிறிய உடலசைவுகள் மட்டுமே இருந்தன. நாட்கள் பல கடந்து சென்றதே தவிர ஹெலனின் நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவளது பெற்றோரும் அவர்களது நண்பர்களும் வேதனைப்பட்டனர். அன்றைய அமெரிக்காவில் மருத்துவ வசதிகள் பெரிதும் முன்னேறாத நிலை இருந்தது. குழந்தை பிழைப்பதே அரிது என்று மருத்துவர்கள் கைவிட்டார்கள்.

அனைவரும் மனமொடிந்து போயிருந்த நிலையில், விடாமல் தன் மகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார் கேட். ஒரு கட்டத்தில் சிறிது சிறிதாகக் காய்ச்சல் குறைந்தது. ஆனால் குழந்தை பிழைத்ததற்காக மகிழ்ச்சிகொள்ள முடியாத அளவுக்குப் பேரிடி இறங்கியது.

ஆம்! காய்ச்சலால் ஹெலனின் கண் பார்வையும் செவித்திறனும் பறிபோயிருந்தது. மூளை, நரம்பு, நுரையீரல் என்று உடலின் எந்தப் பாகத்தையும் அந்தக் காய்ச்சல் விட்டுவைக்கவில்லை. இனி ஹெலனால் இந்த உலகத்தைப் பார்க்கவோ எந்த ஓசையையும் கேட்கவோ முடியாது என்கிற உண்மை அந்தக் குடும்பத்தை நிலை குலையச் செய்தது. தன்னுடைய ஆசை மகளால் எப்போதும் பார்க்கவும் கேட்கவும் முடியாது என்பதை அவளது தாயாரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதேநேரம் இதில் மற்றொரு பிரச்னையும் இருந்தது.

காது கேட்கவில்லை என்றால் பேசவும் முடியாது என்பது அறிவியல் உண்மை. அந்த வகையில் இனி ஹெலன் கண் பார்வையற்ற, காது கேளாத, பேச முடியாத குழந்தை. இதை நினைக்க நினைக்க அவளது தாய் கேட்டின் மனம் கொதித்தது. உண்மையைப் புரிந்துகொண்ட அவரது நிலையே இப்படியென்றால், எதுவுமே அறியாத பிஞ்சுக் குழந்தையான ஹெலனின் நிலை அதைவிடப் பரிதாபம். நோய் பாதிப்பால் தனக்கு என்ன நேர்ந்தது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையெல்லாம் அக்குழந்தையால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நோய் பாதிப்பால் அக்குழந்தையின் சின்னஞ்சிறு உலகம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகியிருந்தது. கண்முன் எப்போதும் இருள் சூழ்ந்திருந்தது. சுற்றிலும் கனத்த அமைதி நிலவியது. ஏன் தன்னால் எதையும் பார்க்க முடியவில்லை, எதனால் தனக்கு எதுவும் கேட்கவில்லை என்பதெல்லாம் ஹெலனுக்கு அப்போது விளங்கவில்லை. மேலும், இந்த பாதிப்புகளின் தாக்கத்தால் அக்குழந்தையால் நடக்கவும் முடியவில்லை. காய்ச்சலால் ஏற்பட்ட உடல்சோர்வும் இத்துடன் இணைந்துகொண்டது. பசிக்கும் உணர்வைக்கூட அக்குழந்தையால் சரிவர வெளிப்படுத்த முடியவில்லை. அம்மாவும் அப்பாவும் கூறும் ஆறுதல் வார்த்தைகள் கேட்காது, அன்பு நிறைந்த அவர்களது உருவங்களைக் காணவும் முடியாது.

0

ஓடியாடி சுற்றிக்கொண்டிருந்த தங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தைவிடவும் அந்தப் பெற்றோருக்கு வேறென்ன கொடுமை நேர்ந்துவிட முடியும்? இனி உன்னால் பார்க்கவோ கேட்கவோ முடியாது என்பதைக் குழந்தை ஹெலனுக்கு புரிய வைக்க முடியாத கையறு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

அன்பும் சிரிப்புமாக இருந்த குடும்பம் கனத்த அமைதிக்குள் சென்றது. எந்நேரமும் ஹெலனுக்கு அருகிலேயே கேட் இருந்தார். தன் தேவைகளை அக்குழந்தை உணரும் முன்பே அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றினார். தன்னுடைய குறைபாட்டை ஹெலன் உணரக்கூடாது என்னும் அளவுக்கு அவளை அரவணைத்தார் கேட். ஆனால் என்றாவது ஒரு நாள் தன் நிலையை ஹெலன் உணரவேண்டும், அப்போதுதான் அவளால் இந்த உலகத்தில் வாழத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறினார்கள். ஆனால் இந்த அறிவுரைக்குக் கேட் மதிப்பளிக்கவில்லை.

தன்னுடைய குறை தெரிந்துவிட்டால் குழந்தை மனமுடைந்துவிடும் என்ற எண்ணத்தில் தேவைக்கு அதிகமாகவே அவளுக்கு பாதுகாப்பையும் அன்பையும் அளித்தார் கேட். இதனால் ஹெலனின் உடல்நலம் நன்றாகத் தேறியது என்றாலும் வயதுக்கேற்ற முதிர்ச்சியை அவளது மனம் அடையவில்லை. 1882இல் நோய்வாய்ப்பட்ட ஹெலன் 5 வயது வரை தன் குறையை உணரவே இல்லை. இதைத் தன் மகளுக்குச் செய்யும் நன்மையாக என்று கேட் கருதினாலும், அது ஹெலனை மேலும் குழப்பத்தில் தள்ளி ஆத்திரத்துக்கு ஆளாக்கியது.

நோய் பாதிப்புக்கு முன்பு கேட்கும் திறனுடன் இருந்துகொண்டு இவ்வுலகைப் பார்த்திருந்தாலும், அந்தத் துயர சம்பவத்துக்குப் பிறகு தன்னைப் போன்ற மனிதர்களால் பேசவும் பார்க்கவும் முடியும் என்பதே ஹெலனுக்கு மறந்துபோனது. இந்த உலகத்திலுள்ள அனைத்துக்கும் பெயர்கள் உள்ளன, அவை உச்சரிக்கப்படுகின்றன, மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பது போன்ற உண்மைகளை அவள் அறிந்திருக்கவில்லை.

தன் வாழ்வில் 2 வயது முதல் 5 வயது வரையிலான காலகட்டம் இருண்ட காலமாக இருந்ததாகப் பின்னாளில் தனது சுயசரிதையில் ஹெலன் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் அவளது மனதுக்கும் உடலுக்கும் ஆபத்து நிறைந்த சூழல் இருந்தது. தற்போது இருப்பதைப்போல் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லைகளைத் தருபவர்கள் அப்போது இல்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

‘தன்னால் காலம் முழுவதும் உடனிருக்க முடியாது என்பதால், கண் தெரியாத, காது கேளாத தன் குழந்தை தன்னுடைய தேவைகளைப் பிறருக்கு எப்படிப் புரிய வைக்கும்? எப்படி மற்றவர்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்?’ என்றெல்லாம் எண்ணி கேட் வேதனைப்படாத நாளில்லை. இருந்தாலும் தன் ஆசை மகள் எப்போதும் இப்படியே குறை தெரியாமல் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று அந்தத் தாயின் உள்ளம் விரும்பியது.

ஆனால் மகளின் வருங்காலத்தைப் பெரும் பிரச்னை சூழ்ந்துள்ளதை ஹெலனின் தந்தை ஆர்த்தர் உணர்ந்திருந்தார். அதைத் தாயும் உணரும் சந்தர்ப்பமும் வந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *