ஹெலனுக்கு 2 வயது பூர்த்தியான சில மாதங்களிலேயே நோய் பாதிப்பிலிருந்து மீண்டு பூரணமாகக் குணமடைந்தாள். தன்னுடைய அரவணைப்பை வழங்கி தாயார் கேட் அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார். சொல்லப்போனால், ஹெலனுக்கு 5 வயதாகும் வரை அவளை வெளியில் எங்கும் விடாமல் தன் முழுப் பாதுகாப்பில் கேட் வைத்திருந்தார். ஹெலனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தாயும் மகளும் நேரத்தைச் செலவழித்தார்கள்.
ஆனால் அறைக்குள்ளேயே முழு நேரமும் அடைந்து கிடப்பது குழந்தை ஹெலனுக்குப் பெரும் சுமையாக இருந்தது. ஹெலனின் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல்போகும் சமயங்களில் மட்டும் அவளை அறையிலிருந்து வெளியே அழைத்து வருவார் கேட். வெளியில் என்றால் அதிகபட்சம் தோட்டப்பகுதிக்குதான் அழைத்துச் செல்வார். திறந்தவெளியில் வீசும் காற்றைத் தவிர வேறு எதையும் ஹெலனால் உணர முடியாது.
வெளிப்படுத்த முடியாத ஏதேதோ உணர்ச்சியால் அக்குழந்தையின் மனம் எந்நேரமும் கனத்துக் கிடந்தது. நம்மிடம் ஏதோ பிரச்னை உள்ளது என்பது ஓரளவுக்குப் புரிந்ததுபோல் இருந்தாலும், அது என்னவென்று ஹெலனால் அறிய முடியவில்லை. எதுவும் கேட்க முடியாத நிலையில், சில சமயங்களில் குழறலான ஆனால் மிகவும் பலத்த சத்தத்தை எழுப்பி தோட்டத்தில் ஓடுவாராம் ஹெலன். அவளுடைய உணர்வுகள் வெளிப்படும் அந்தக் காட்சி சிலருக்குப் பரிதாபத்தை வரவழைத்தது. வேறு சிலருக்கு அது பயமளிப்பதாக இருந்தது.
இந்தக் காரணத்தினாலேயே மற்றவர்கள் ஏதேனும் நினைப்பார்கள் எனக் கருதி, யாரும் இல்லாத சமயம் பார்த்துதான் ஹெலனை வெளியில் அழைத்துச் செல்வார் கேட். ஆனால் அவளைத் தினமும் வெளியே அழைத்துச் செல்ல முடியாத வகையில் தாயார் கேட்டுக்கு வீட்டு வேலைகள் இருந்தன. ஹெலனின் சகோதரர்கள் பள்ளிக்குச் சென்றுவிடும் நிலையில், அவளது தந்தை அலுவலக வேலையில் மூழ்கியிருப்பார். இந்தச் சூழலில் ஹெலனுக்கு ஏற்பட்ட குழப்பமும் பயமும் அந்தப் பிஞ்சு மனதை அலைக்கழித்தன.
எங்கேனும் தடுக்கி விழுந்து காயம்பட்டுக்கொள்வாளோ என்கிற அக்கறையில் தன்னுடைய நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய கேட் மீது ஹெலனுக்கு கோபம் வந்தது. பேச்சாலும் கண்களாலும் வெளிப்படுத்த முடியாத கோபம் சைகைகளின் வழியாக வெளிப்படும். எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் வீட்டுத் தோட்டத்தில் அங்கும் இங்கும் ஓடி விழுந்து எழுந்து, கைக்குக் கிடைத்த செடிகளைப் பிடுங்கியும் அவற்றைக் கடித்தும் அடித்தும் தன்னுடைய கோபத்தை ஹெலன் வெளிப்படுத்தினாள்.
அன்பு மகளின் நிலையைப் பார்த்து அவளது பெற்றோர் மனம் வருந்தாத நாளில்லை. தங்கள் குடும்பத்தின் முதல் பெண் வாரிசுக்கு இப்படி ஆகிவிட்டதை எண்ணி ஆர்த்தர் மனமொடிந்துபோனார். எந்நேரமும் ஹெலனுடன் இருப்பது சாத்தியமில்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தாலும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தன் மகளுடன் அவர் நேரத்தைச் செலவிட்டார். கடுமையாக உழைத்த கேட், ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரத்தில்கூட ஹெலனுக்கு அருகிலேயே இருந்தார்.
இத்தனை அக்கறை எடுத்து ஹெலனை அவர்கள் கவனித்துக்கொண்டாலும், தனக்கு என்ன குறை என்பதை அறியவே முடியாத நிலையில் அவள் இருந்தாள். குழந்தையிடம் அவளது உண்மை நிலையைச் சொல்வதே நல்லது என்று ஆர்த்தர் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் கேட் அதற்குச் சம்மதிக்கவில்லை. பார்க்க முடியாது, பேச முடியாது என்கிற உண்மையைச் சொன்னதும், ஒருவேளை அதிர்ச்சியில் மீண்டும் காய்ச்சல் வந்து ஹெலன் இறந்துவிடுவாளோ என்கிற எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால் அவளிடம் உண்மையை வெளிப்படுத்த மிகவும் தயங்கினார். இந்த விஷயத்தில் ஆர்த்தருக்கும் கேட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
தன்னிடம் என்ன குறை உள்ளது என்பது புரியாமல், உணர்வுகளை வெளிப்படுத்தவும் முடியாத நிலையில், கோபத்தின் மூலமாகவும் வன்முறையின் வழியாகவும் அவற்றுக்கு வடிகால் தேடினாள் ஹெலன். அத்தகைய சமயங்களில் மற்றவர்கள் அவளைப் பார்க்கவே பயப்படும் நிலை இருந்தது.
ஹெலனின் உறவினர்களும், அவளது பெற்றோரின் நண்பர்களும் வீட்டுக்கு வரும் சமயங்களில் குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தனர். அவர்களில் பலரும், ‘உங்கள் மகளுக்கு மனநோய் இருக்கிறது. அவளை இப்படியே விட்டால் ஆபத்து! மனநலக் காப்பகத்தில் சேர்த்துவிடுங்கள்’ என்றெல்லாம் யோசனை கூறினார்கள். இத்தகைய ஆலோசனைகளைக் கேட்டு ஹெலனின் பெற்றோர் அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
‘என் மகள் பைத்தியமல்ல. மிகுந்த புத்திசாலித்தனமும் கற்பனை வளமும் கொண்டவள். இருண்ட மனநலக் காப்பகத்தில் தன் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டியவள் அல்ல அவள்!’ என்று கேட் ஆணித்தரமாக நம்பினார். உறவினர்கள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் நண்பர்கள் வற்புறுத்திக் கூறியும், ஹெலனை மனநலக் காப்பகத்தில் சேர்க்க அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் ஆர்த்தர் தன் மனைவிக்குத் துணையாக இருந்தார். ஆனால் தன் மகளின் எதிர்காலம் குறித்த கவலை அவரிடம் இருந்தது.
பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அமெரிக்கா வளர்ந்து வந்த காலகட்டம் அது. அதிபர் ஆபிரஹாம் லிங்கனால் அடிமைமுறை அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டிருந்தது. வெள்ளையின மக்களோடு சமூகத்தில் இணைந்து வாழக் கறுப்பின மக்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட இந்த விவகாரத்தால் ஏற்பட்ட மனக்கசப்புகளும் கருத்து வேறுபாடுகளும் அமெரிக்காவில் மிகப் பரவலாகக் காணப்பட்டன. மேலும், அமெரிக்க சமூகத்தில் பெண்களின் நிலை சற்று பின்தங்கி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தங்கள் ஊனமுற்ற மகளின் எதிர்காலம் எப்படி இருக்குமென கேட் – ஆர்த்தர் தம்பதியினர் கவலைப்பட்டதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.
ஹெலனுக்கு எப்படியாவது கல்வி கற்பிக்கவேண்டும் என்று கேட் எண்ணினார். ஆனால் அப்படிக் கல்வி கற்பிக்க வேண்டுமென்றால் முதலில் மகளிடம் அவளது குறைகளை எடுத்துக் கூறவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட மனநிலைகொண்ட குழந்தையால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாவிட்டால் என்ன செய்வதென்ற கவலை கேட்டுக்கு இருந்ததை மறுப்பதற்கில்லை. ஒருபுறம் வீட்டு வேலைகளுடன் ஹெலனை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, மறுபுறம் ஹெலன் குறித்து வீட்டுக்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கருத்துக்கள். மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானார் கேட். ‘ஹெலன் சாதாரண குழந்தை இல்லை. அவளுக்கு மனநோய் தீவிரமாக உள்ளது. இப்படிப்பட்ட குழந்தையை வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கும் தீங்கு அந்தக் குழந்தைக்கும் தீங்கு’ என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொன்னார்கள்.
தன் மகளுக்கு மனநோய் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் அவளது குறைகளை அவளிடம் எடுத்துக் கூறவேண்டும் என்கிற நிலைப்பாட்டை நோக்கி கேட் மெல்ல மெல்ல நகர்ந்தார். வேறு யாராவது இதுபோல் கண் தெரியாமலும் காது கேளாமலும் இருந்திருக்கிறார்களா என்பது குறித்துக் கேட்டும் ஆர்த்தரும் தேடத் தொடங்கினார்கள். பல நூலகங்களுக்குச் சென்று விசாரித்தார்கள். அப்போதுதான் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்கிற விஞ்ஞானி குறித்து அவர்கள் கேள்விப்பட்டனர்.
பின்னாளில் தொலைபேசியைக் கண்டுபிடித்த அதே கிரஹாம்பெல்தான் இவர். சராசரி மனிதர்களைப்போல் கிரஹாம்பெல்லுக்கு கேட்கும் திறன் இருந்தாலும் அவரது தாயும் மனைவியும் காது கேளாதவர்கள். இதனால் காது கேளாத மற்றும் வேறு சில குறைபாடுகளைக்கொண்ட குழந்தைகளுக்கான உபகரணங்களை உருவாக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஹெலனின் பெற்றோர் அவரைச் சந்தித்தார்கள்.
மாற்றுத்திறனாளி என்கிற விஷயத்தைச் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு முதலில் தெரியப்படுத்தவேண்டும் என்றும் அதன்பிறகே அந்தத் தடையை ஒரு படிக்கல்லாகப் பாவித்து குழந்தைகள் தாண்டி வருவார்கள் என்றும் கிரஹாம்பெல் அறிவுரை கூறினார். அச்சமயம் பெர்கின்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிலைண்ட் (பெர்கின்ஸ் பார்வையற்றோர் பள்ளி) என்கிற மிகப் பிரபலமான கல்வி நிறுவனம் அமெரிக்காவில் இயங்கி வந்தது. அது குறித்த தகவல்களை அவர்களிடம் கிரஹாம்பெல் பகிர்ந்துகொண்டார். அங்கு ஆண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் படித்து வரும் தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. இதனால் ஏமாற்றத்துடன் கேட் வீடு திரும்பினார். அதன்பிறகு ஹெலனை அங்குச் சேர்ப்பதற்காக ஆர்த்தர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நாட்கள் ஓடின. ஆனால் ஹெலனின் சுபாவத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ‘உலகம் எப்படி இருக்கும்? அதில் வாழும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? விலங்குகள், தாவரங்கள் போன்றவை எப்படிப்பட்டவை? அனைத்தும் எப்படி இயங்குகின்றன?’ என்பதெல்லாம் எதுவுமே தெரியாத நிலையில், வெளியுலகத்துடன் முற்றிலுமாகத் தொடர்பில்லாமல் இருந்தாள் ஹெலன். பயமும் குழப்பமும் அவளது மனதை ஆக்கிரமித்திருந்ததால் நாளாக நாளாக அவளிடம் கோபமும் வன்முறையும் அதிகரித்த வண்ணம் இருந்தன.
கிட்டத்தட்ட 2 வயது வரை கண்களால் பார்த்து, காதுகளால் கேட்ட நினைவுகள் மூளையின் அடுக்குகளில் பதிந்திருந்தன. ஆனால் தற்போது அதற்கு நேரெதிராக எதையும் பார்க்கவும் முடியாது, எதுவும் கேட்கவில்லை. ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு அது எப்பேர்ப்பட்ட கொடுமையான நிலையாக இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப் பார்த்தால் நம்மால் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்ட நிலையில் ஹெலன் இருந்த வேளையில் கேட் மீண்டும் கர்ப்பமானார். அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு ஹெலனை கவனித்துக்கொள்ள அவரது உடல்நிலை போதிய ஒத்துழைப்பைக்கொடுக்கவில்லை. விரைவாகக் களைப்படைந்தார். ஆனாலும் ஹெலனுக்கான அரவணைப்பையும் பாதுகாப்பையும் வழங்குவதை கேட் ஒருநாளும் நிறுத்தவில்லை.
தன்னுடைய செல்ல மகளிடம் அவளது குறைபாட்டைக் கூற அவருக்கு மனம் வரவில்லை. பல புத்தகங்களைப் படித்தார். இந்தப் பிரச்னை குறித்துப் பலரிடமும் பேசினார். ஆனாலும் கண்ணுக்கு எட்டியவரை எந்தத் தீர்வும் தட்டுப்படவில்லை. மகளுக்கு இருக்கும் குறையைப் பக்குவமாக அவளிடம் எடுத்துக் கூறி, அந்தத் தடையைத் தாண்டச் செய்வோம் என்று ஆர்த்தரும் வேறு சிலரும் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளில் கேட்டிடம் பேசிப் பார்த்தார்கள்.
ஆனால் கேட் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தான் இருக்கும்போது தன்னுடைய மகளுக்கு எந்தப் பாதுகாப்புக் குறைபாடும் வராது என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஆனால் அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை ஒரு நிகழ்வு அசைத்துப் பார்த்தது. வெறுமனே அது அசைத்துப் பார்க்கவில்லை, வேரோடு பிடுங்கிச் சாய்த்தது.
(தொடரும்)

