Skip to content
Home » ஹெலன் கெல்லர் #3 – மூர்க்கத்தின் வடிகால்

ஹெலன் கெல்லர் #3 – மூர்க்கத்தின் வடிகால்

ஹெலனின் குறும்பில் சிக்காதவர் அவருடைய அப்பா மட்டும்தான். கெல்லர் தன் குடும்பத்தின் மீது உயிரையே வைத்திருப்பவர். ஹெலனின் மீது ஆழமான அன்பு கொண்டவர். குடும்ப நலனில் அக்கறை காட்டுவதுபோலவே வேட்டையாடுவதிலும் விருப்பம் உள்ளவர். குறிபார்த்துச் சுடுவதில் வல்லவர். சிறந்த வேட்டைக்காரர் என மற்றவர்களால் புகழப்பட்டவர். வேட்டையாடும் காலத்தைத் தவிர ஏனைய நேரம் குடும்பத்தைப் பிரிந்ததில்லை.

குடும்பம், வேட்டை போன்றவற்றோடு நாய்கள் மீதும் துப்பாக்கி மீதும் பிரியம் வைத்தவர். விருந்தோம்பும் பண்பில் உயர்ந்தவர். வரம்பு மீறி விருந்தோம்புகிறார் என்று குறை சொல்லும் அளவிற்குச் சிறந்த விருந்தோம்பலர். தினமும் ஒருவரை விருந்திற்கு அழைத்துவராமல் வீட்டிற்கு வரமாட்டார். மனைவிக்கான கஷ்டங்கள் பற்றி எல்லாம் தெரியாது. அவர்களுக்குத் தோட்டத்தைச் சுற்றிக் காட்ட வேண்டும். அதைவிடப் பிடித்த செயல் வேறில்லை.

தன் தோட்டத்தால் அவ்வளவு பெருமிதம் அடைவார். ஏனெனில் அமெரிக்காவிலேயே உயர் ரகப் பழங்களைத் தன் தோட்டத்தில்தான் பயிரிட்டிருந்தார். முதன் முதலில் பழுத்த திராட்சைப் பழங்களையும், ஸ்ராபெர்ரி பழங்களையும் ஹெலனிடம் கொடுப்பார். ஒவ்வொரு மரமாக ஒவ்வொரு கொடியாக மகளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவார். அந்நேரத்தில் தந்தையுடனான ஸ்பரிசம்தான் அவர் வாழ்நாள் முழுவதும் நினைவில் நீங்காதிருந்தது.

ஹெலனின் ஐந்தாவது வயதில் திராட்சைக் கொடி படர்ந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடிபெயர்ந்தனர். அதற்குள் ஹெலனுக்குத் தங்கையும் பிறந்திருந்தார். அவர் பெயர் மில்ட்ரெட். இரண்டு ஒன்றுவிட்ட அண்ணன்கள் என ஆறு பேரும் அந்த வீட்டிற்குச் சென்றனர்.

ஹெலன் தன் தங்கையைத் தேவையில்லாத வரவாக உணர்ந்தார். அதுவரை தனக்கு மட்டுமே சொந்தமாக இருந்த அம்மாவின் அன்பைப் பங்கிட வந்தவர் அல்லவா? தான் அமர்ந்த மடியில் தங்கை எந்நேரமும் அமர்ந்திருந்ததால் இன்னும் மூர்க்கமானார். அம்மாவின் அத்தனை அன்பையும் நேரத்தையும் தான் மட்டுமே அனுபவிக்க முடியாததன் ஏமாற்ற மூர்க்கம் அது.

ஹெலனுக்கு விளையாடிப் பார்க்க உயிருள்ள ஜீவன்களைத் தவிர நான்சி என்ற ஒரு பொம்மையும் இருந்தது. அதன் மீது அளவு கடந்த அன்பு காட்டுவார். அதேபோல் அளவு கடந்த கோபத்தையும் காட்டுவார். அதைக் கொடுமைப்படுத்த ஒருபோதும் தயங்கியதில்லை. எதிர்வினை புரியாத நான்சியின் பாடு படு திண்டாட்டமே.

ஹெலனிடம் எத்தனை பொம்மைகள் இருந்தாலும் ஆவேசமோ அன்போ எது வந்தாலும் வடிகால் நான்சிதான். அதற்காக ஒரு தொட்டில்கட்டி குழந்தையைப்போல் படுக்க வைத்து மணிக்கணக்காக ஆட்டுவார். அப்படியான தொட்டிலில்தான் ஹெலனின் தங்கை உறங்கிக் கொண்டிருந்தார். இதுதான் சரியான நேரம் என ஹெலன் குழந்தையைத் தொட்டிலிலிருந்து கவிழ்த்துவிட்டார். அந்நேரம் சரியாகத் தாய் ஓடிவந்து குழந்தையைக் காப்பாற்றினார். இல்லையெனில் குட்டிக் குழந்தையின் கதை அன்றே முடிந்திருக்கும்.

பாசத்தைப் பொழிய வார்த்தைகள் தெரியாது ஹெலனுக்கு. இவரின் செய்கைகளைப் புரிந்துகொள்ளும் திறனும் அக்குழந்தைக்குக் கிடையாது. எனவே இருவரும் தனித்தனித் தீவில் வாழ்ந்தனர். ஹெலனும் அப்போது குழந்தை தானே! வளர்ந்து பண்பட்ட பிறகுதான் தங்கள் உள்ளத்தில் மாறி மாறி இடம்கொடுத்துக்கொண்டனர். இருவரும் கைகோர்த்தபடி மனம்போன போக்கில் ஊர் சுற்றினர்.

செய்தித்தாளை முகத்திற்கு நேராகப் பிடித்தவாறு கெல்லர் அமர்ந்திருப்பார். தந்தை என்ன செய்கிறார் என்று ஹெலனுக்குப் புரியாது. ஆனாலும் யார் எதைச் செய்தாலும் உடனே செய்பவர் அல்லவா? இவரும் ஒரு பேப்பரை எடுத்து தந்தையைப்போலவே முகத்திற்கு நேராகப் பிடித்துக் கொண்டார். ஏதாவது குறைகிறதா என்று யோசித்தார். அப்பா போட்டிருக்கும் கண்ணாடி நினைவிற்கு வந்தது. அதையும் பிடுங்கிப் போட்டுக் கொண்டார். ஆனாலும் ஒன்றும் புரியாது. அப்பா தினமும் ஏன் அப்படிச் செய்கிறார் என்று மேலும் சில ஆண்டுகள் வரை அந்தக் குழந்தைக்குத் தெரியாது. அப்புதிருக்கு ஒரு நாளிதழின் ஆசிரியர் என்று விடை அவிழ்ந்தபோது ஹெலன் வளர்ந்திருந்தார்.

கெல்லர் கதை சொல்வதில் வல்லவர். ஹெலனுக்கு முதன்முதலில் கதைகளை அறிமுகப்படுத்தியவர் கெல்லர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அவரே சில கதைகளை உருவாக்குவார். அதை ஹெலனின் கைகளில் கிறுக்கிக் காட்டுவார். அப்படி அப்பா கிறுக்கியதையெல்லாம் வேறொரு பொருத்தமான சந்தர்ப்பத்தில் ஹெலன் வெளிப்படுத்திவிடுவார். தான் இன்பம் வைத்த அத்தனையும்விட கெல்லர் அப்படி வெளிப்படுத்தும் நேரம் அதிக மகிழ்ச்சியடைவார். மகளின் பெருமையால் தந்தை குளிர்வார்.

அப்படியான தந்தையைத்தான் ஹெலன் தனது பதினாறாவது வயதில் இழந்தார். அப்போது கல்வி கற்பதற்காக வடஅமெரிக்கா சென்றிருந்தார். அந்த மகிழ்ச்சியான காலத்தில்தான் இந்தத் துயரம் நிகழ்ந்தது. அதுவரை மரணம் என்றால் என்னவென்று தெரியாதவரை இச்சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.

சரி மீண்டும் கைகோர்த்து நடந்த குழந்தைக்கே வருவோம். நாட்கள் செல்லச் செல்ல தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஹெலனுக்கு ஆர்வம் அதிகரித்தது. தான் பயன்படுத்திய ஒரு சில சைகைகள் போதுமானதாக இல்லை. மற்றவர்கள் வெளிப்படுத்துவதையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த ஏமாற்றங்கள் அழுகை, ஆவேசம் என அவரை குணமழிந்தவராக வெளிப்படுத்தியது. ஏதோ ஓர் அழுத்தமான தடை அல்லது எதிரி தன்னைப் பிடித்துவைத்திருப்பதாக உணர்ந்தார். அதிலிருந்து விடுபடுவதற்காகச் செய்த தீவிர முயற்சி போராட்டமானது. அந்தப் போராட்டம் பலன் கொடுத்ததா என்பதைவிட மனோபலத்தை அதிகரிக்க உதவியது. தன்னால் எதையும் எதிர்த்து நிற்க முடியும் என்ற எண்ணத்தை ஊட்டியது அவருக்கு.

ஏமாற்றம் நேரும் போதெல்லாம் அழுது சோர்ந்துவிடுவார். அப்போதெல்லாம் தலை வருடுவது தாயின் கரங்களாகத்தான் இருக்கும். அந்தக் கரங்களைத்தான் கொடிபோல் பற்றிக் கொள்வார். ஆனாலும் ஆத்திரமும் அழுகையும் மணிக்கணக்கில் நீடித்திருக்கும் அல்லவா? அது எப்படித் தன்னால் சரியாகும்? தன் தேவையோ குறையோ வெளிப்படுத்தினால்தானே அழுத்தத்திலிருந்து வெளியேற முடியும்?

அதைப் பகிர்ந்துகொள்ள அவருக்குள் இருக்கும் மொழி போதவில்லை. கூடுதல் மொழியைச் சொல்லித்தர வேண்டும். பெற்றோர் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தனர். மகளின் நிலைமைக்காக வருந்தினர்.

குறைபாடுள்ளவர்களுக்கான பள்ளிக்கூடமோ இவர்கள் வாழும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. இந்த ஒதுக்குப்புறமான பகுதிக்கு ஒரு குழந்தைக்காக எந்த ஆசிரியரும் இவ்வளவு தூரம் வரமாட்டார். அதுவும் மூன்று புலனுமே இல்லாத குழந்தைக்குச் சொல்லித்தர முடியுமா என்று உறவினர்கள் நண்பர்கள் உட்பட அனைவரும் சந்தேகப்பட்டனர்.

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய அமெரிக்கன் நோட்-இல் இடம்பெற்ற செய்திதான் ஹெலனின் தாய்க்கு ஊக்கம் அளித்தது. அந்தப் புத்தகத்தில் டிக்கன்ஸ் லாரா பிரிட்ஜ்மேன் என்ற பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணிற்குக் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது. ஆனாலும் கல்வி பயின்றார் என்ற விஷயம் அதில் இருந்தது. அதிகம் பரவலாகாத கல்வி முறை என்பதால் ஹெலனின் தாய்க்குப் பல சந்தேகங்கள் தோன்றின.

காது கேட்காதவர்கள், பார்வையற்றவர்களுக்கான கல்வி போதிக்கும் வழிமுறையைக் கண்டறிந்தவர் டாக்டர் ஹோவ். அவர் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். எனவே அந்த வழிமுறையும் அவரோடு மறைந்திருக்கும் என நினைத்துப் பயந்தார். அப்படியே அக்கல்விமுறை உயிருடன் இருந்தாலும் அலபாமாவிலுள்ள ஒரு சிற்றூருக்கு எப்படி வருவார்கள் என்று நினைத்தார்.

ஹெலனின் ஆறாவது வயதில் ஒரு கண் மருத்துவரைப் பற்றித் தெரியவந்தது கெல்லருக்கு. தேறாத கேஸ் என்று பலராலும் கைவிடப்பட்டவர்களை வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்துப் பார்வை கொடுத்தார் அந்த மருத்துவர். எனவே நம்பிக்கையோடு ஹெலனை அங்கு அழைத்துச் சென்றார்.

அந்தப் பயணம் ஹெலனுக்கு அளவு கடந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. வீட்டைத் தாண்டிய முதல் பயணம் அல்லவா? ரயில் பெட்டியில் இருந்த அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தார் ஹெலன். அனைவரும் நண்பர்களாயினர். ஓர் அம்மா கிளிஞ்சல்கள் அடங்கிய மூட்டை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அந்தப் பரிசு அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது. கெல்லர் கிளிஞ்சலில் துளையிட்டுக் கொடுத்தார். ஹெலன் அதைக் கோர்த்து விளையாடினார்.

இப்படியாக ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். டிக்கெட் பரிசோதகர் உட்பட அங்கிருந்த அத்தனை பேரும் ஹெலனிடம் அன்பாக நடந்துகொண்டனர். செக்கரின் கோட்டைப் பிடித்துக்கொண்டு பெட்டி முழுவதும் சுற்றினார். அவர் தன் பஞ்சிங் மெஷினை ஹெலனிடம் விளையாடக் கொடுத்தார். ஹெலனுக்கு அது அதி அற்புத விளையாட்டு சாதனமானது. கையில் கிடைத்த அட்டைகளை எல்லாம் துளை போட்டு மகிழ்ந்தார். மணிக்கணக்காக அதோடு விளையாடி தன்னைக் குஷிப்படுத்திக் கொண்டார்.

அந்தப் பயணத்தில் அத்தையும் உடன் வந்தார். அவர் கையில் கிடைத்த துணிகளை வைத்து அடுத்த விளையாட்டிற்கு ஒரு திடீர் பொம்மையைத் தைத்துக் கொடுத்தார். உருவமில்லாத அந்தப் பொம்மைக்கு மூக்கு, வாய், கண், காது என எதுவுமில்லை. மற்ற எந்தக் குறைகளையும்விட அந்தப் பொம்மைக்குக் கண்கள் இல்லாதது ஹெலனைக் கஷ்டப்படுத்தியது. எல்லோரிடமும் உதவி கேட்டுப் பார்த்தார். யாரும் கை (கண்) கொடுக்கும் அளவிற்கு அக்கறை காட்டவில்லை. அதை இழந்தவருக்குத்தானே அதன் வலி தெரியும். அவர் மூளையில் திடீரென ஒரு யோசனை உதித்தது. அதுவே பிரச்சினைக்குத் தீர்வும் ஆனது.

பைக்குள் கையை விட்டு அத்தையின் சட்டை ஒன்றை எடுத்தார். அதிலிருந்த மணிகளில் இரண்டை உருவினார். அதைப் பொம்மையில் வைக்கச் சொல்லி சைகை காட்டினார். சரியான இடத்தில் அந்தக் கண்கள் பொருத்தப்பட்டபோது ஹெலன் அடைந்த கொண்டாட்டத்திற்கு அளவில்லை. ஆனால் கண்கள் பொருத்தப்பட்டதுமே அந்தப் பொம்மை மீதான ஆர்வம் போய்விட்டது. அதுவரை அதை எப்படிச் சரி செய்யலாம் என யோசித்தவர் அது நிவர்த்தியானதும் மகிழ்ச்சியை அனுபவித்துவிட்டு அடுத்த சவாலைத் தேடினார்.

அந்தப் பயணம் முழுவதும் அவர் ஆத்திரத்தையோ ஆவேசத்தையோ வெளிப்படுத்தவே இல்லை. மூளைக்கும் கைக்கும் வேலை கொடுக்க அவரைச் சுற்றி ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. இவ்வளவு மகிழ்ச்சியையும் அள்ளிக் கொண்டு பால்டிமோர் சென்றடைந்தனர். அந்தக் கண் மருத்துவரால் ஹெலனிற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கல்வி கற்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். வாஷிங்டனிலுள்ள அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லைச் சந்திக்க கெல்லருக்கு ஆலோசனை கூறினார். கண், காது குறைபாடு உள்ளவர்களுக்கான பள்ளிகள் பற்றி அவரால் முழுத் தகவலும் தரமுடியும் என்றார்.

வேறென்ன வேண்டும்? எங்கே எந்த நம்பிக்கைக் கீற்று தெரிந்தாலும் அதைப் பிடித்துக்கொண்டு மகளை முன்னேற்ற நினைத்தனர் ஹெலனின் பெற்றோர். உடனே பெல்லைச் சந்திக்க வாஷிங்டன் புறப்பட்டனர். எத்தனையோ கேள்விகளைச் சுமந்துகொண்டிருக்கும் அப்பாவின் வேதனைகளைப் பற்றி ஹெலன் ஏதும் அறிந்திருக்கவில்லை. விளையாட்டும் மகிழ்ச்சியுமாகக் கொண்டாடினார் பயணத்தை.

டெலிஃபோனைக் கண்டறிந்த அதே அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்தான் இவர். மகத்தான சாதனை புரிந்து அத்தனை பேரின் இதயத்திலும் இருப்பவர். தன் நெஞ்சம் முழுக்க அன்பைச் சுமந்து கொண்டிருந்தார். பெல்லின் மென்மையான குணத்தை ஹெலனால் பட்டெனப் புரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில் அவர் ஹெலனை மடியில் தூக்கி வைத்திருந்தார். பெல்லின் கைக்கடிகாரத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே பெல்லின் அன்பை அவருடைய ஸ்பரிசத்தின் மூலம் உணர்ந்துகொண்டார்.

ஹெலனின் சைகையைப் பட்டெனப் புரிந்துகொண்டார் பெல். பதிலுக்கு பெல் பரிந்துகொண்டதை ஹெலன் புரிந்துகொண்டார். அந்தக் கணம் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துவிட்டது.

ஆனால், இருளிலிருந்து வெளிச்சத்திற்குச் செல்லவும், தனிமையிலிருந்து நட்புறவோடு பழகவும், வெளி உலகத்திற்குள் செல்லவும், பலவற்றைக் கற்கவும், அறிவின் திறத்தை வளர்க்கவும் அவர்தான் உதவப்போகிறார் என்று ஹெலனுக்கு அப்போது தெரியாது.

பாஸ்டனில் இருக்கும் பெர்க்கின்ஸ் இன்ஸ்ட்டிட்யூட்டிற்குக் கல்வி கற்பிக்க ஓர் ஆசிரியர் வேண்டும் எனக் கடிதம் எழுதச் சொன்னார் பெல். பார்வை இழந்தவர்களுக்காக டாக்டர் ஹோவ் ஆரம்பித்த கல்வி மையம்தான் அது. பெல்லின் ஆலோசனைப்படி கெல்லர் உடனடியாகக் கடிதம் எழுதினார்.

ஓரிரண்டு வாரத்திற்குள் பதில் கடிதம் வந்தது. ஹெலனுக்காக ஓர் ஆசிரியரைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று. இனி மகளுக்கு விடிவுகாலம் எனக் கெல்லர் உறுதியாக நம்பினார்.

1886இல் ஹெலனின் ஏழாவது வயது முடியும் தறுவாயில் தனது ஆசிரியரைக் கண்டுபிடித்தார். இல்லை, கண்டுபிடித்துத்தரப்பட்டார். அவர்தான் இருண்ட கண்களையும், மூடியிருந்த காதுகளையும் திறந்துவிட்டார். உலகத்தையே கொண்டுவந்து ஹெலனின் காலடியில் கொட்டிய அந்த ஆசிரியரின் பெயர் ஸல்லிவன்.

(தொடரும்)

பகிர:
ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *