1888ஆம் ஆண்டில் சிறுமி ஹெலன், தன்னுடைய உதவியாளர் ஆனி சல்லிவனை மட்டுமே நம்பி, அலபாமாவின் டஸ்கும்பியா என்கிற சிறு நகரத்தில் இருந்து கிளம்பிச்சென்று, ஏறத்தாழ 1,500 மைல்களுக்கு அப்பால் இருந்த மிகப்பெரும் பாஸ்டன் நகரில் இருந்த பெர்கின்ஸ் பார்வையற்றோர் பள்ளியில் அடியெடுத்து வைத்தாள். ஹெலன் கெல்லரின் இந்தப் பள்ளிப் பருவம், அவளுக்கு மட்டுமல்லாமல் அவளது உதவியாளர் ஆனி சல்லிவனுக்கும் பல சோதனைகளை ஏற்படுத்துவதாக இருந்தது.
8 வயதான ஹெலனின் உதவியாளர் ஆனிக்கு அப்போது 22 வயது. ஆனி இதே பெர்கின்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவி என்றாலும், ஹெலனின் ஆசிரியராகவும் உதவியாளராகவும் அங்கு சென்றது அவருக்குப் புதுவித அனுபவத்தைத் தருவதாக இருந்தது. அதேநேரம் அந்நகரும் அப்பள்ளியும் ஹெலனுக்கு முற்றிலும் அந்நியமான இடங்கள். புதிய நபர்கள், புதிய சூழல் எனப் புதுமையான பல விஷயங்களை அவள் எதிர்கொள்ள நேர்ந்தது.
ஹெலன் கெல்லர் என்கிற பெண்மணி இன்றைக்கு உலகம் அறிந்த ஓர் ஆளுமையாக இருப்பதற்குப் பின்னால் இருந்த நபர் ஆனி சல்லிவன். பெர்கின்ஸ் பள்ளியில் ஹெலனுக்கு தேவைப்பட்ட அனைத்துவித உதவிகளையும் செய்து அவளது வளர்ச்சிக்கான பெரும் காரணமாக அவர் இருந்தார். இதற்கும் ஆனி ஒரு சாதாரணப் பெண் அல்ல. அவருக்கும் கண் பார்வையில் பிரச்னை இருந்தது. ஆனிக்கு ஓரளவுக்குக் கண் பார்வை இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல அவருடைய பார்வைத் திறன் பறிபோய்விடும் என்றே மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இந்த விஷயம் தெரிந்த பின்னரே ஆனி சல்லிவன் பெர்கின்ஸ் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். படிப்பை நிறைவு செய்த பின்னர் வாழ்வாதாரத்துக்கான தேவை ஆனிக்கு இருந்தது என்றாலும், தன்னைப்போல் இருக்கும் இளம்பெண்களுக்கு உதவவேண்டும் என்கிற உயரிய லட்சியமும் அவரிடம் இருந்தது.
அன்றைய அமெரிக்காவில் பார்வையற்றோருக்கான ஆகச்சிறந்த கல்வி நிறுவனமாகப் பெர்கின்ஸ் பள்ளி திகழ்ந்தது. அங்கிருந்த மாணவர்கள் விடுதியில் ஹெலனும் ஆனியும் தங்கினார்கள். பள்ளியின் மற்ற பார்வையற்ற குழந்தைகளோடு சைகை மொழியில் (கைகளில் எழுதிக் காட்டுவது) உரையாடிய நிகழ்வு, ஹெலனை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி, புதுவித அனுபவத்தை அளித்தது. இது குறித்து பின்னாளில் தனது சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பள்ளியின் விடுதி அறை ஹெலனுக்கு ஒரு சிறிய சொர்க்கமாக இருந்துள்ளது. அங்கு ஆனி சல்லிவன் இரவு பகலாகப் பல உலக விஷயங்களை வாசித்து, அவற்றைக் கைகளில் எழுதிக்காட்டி ஹெலனுக்கு விளக்கினார்.
ஆரம்பத்தில் இருவரும் அங்கு மகிழ்ச்சியாகவே இருந்தனர். ஆனால் நாளடைவில் பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்காமல் சில கட்டுப்பாடுகளை விதித்தது. பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி காப்பாளர்களின் கடுமையான கண்காணிப்பின் கீழ் ஹெலன் இருந்தாள். ஆனி சல்லிவன் ஹெலனின் கல்வியில் காட்டிய தனிப்பட்ட அக்கறையைப் பள்ளி நிர்வாகம் தேவையற்ற தலையீடாகப் பார்த்தது. இதனாலேயே பலமுறை பள்ளி நிர்வாகத்துடன் ஆனி வாக்குவாதம் செய்ய வேண்டியிருந்தது. ஹெலனை மற்ற குழந்தைகளிடமிருந்து பிரித்து, அவளுக்கு மட்டும் எதனால் தனித்துவமான கவனம் அளிக்கப்படவேண்டும் என்கிற கேள்வியை சிலர் எழுப்பினார்கள். இத்தகைய நெருக்கடியான சூழலை, பள்ளியில் இருவரும் எதிர்கொண்டுவந்த அதே வேளையில், ஹெலனின் குடும்பம் டஸ்கும்பியாவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது.
ஹெலனின் தந்தை ஆர்த்தர் ஓரளவுக்கு வசதியாக இருந்தபோதிலும், அந்த சமயம் அவர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கினார். இதனால் ஹெலனின் கல்விக்கான தொகையையும் ஆனி சல்லிவனுக்கான ஊதியத்தையும் தொடர்ந்து வழங்குவது அவருக்குப் பெரும் சுமையாக மாறியது. இதற்கும் ஆர்தரிடம் இருந்து மிகக் குறைவான அளவு ஊதியமே ஆனி பெற்று வந்தார். இதனால் பல நேரங்களில் தனது சொந்தத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிக்கும் சூழல் ஆனிக்கு ஏற்பட்டது. ஆனாலும் ஹெலனை அங்கு நிர்க்கதியாக விட்டுச் செல்ல அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் ஹெலனுக்கான கல்விச் செலவுகளை ஏற்பதாகப் பெர்கின்ஸ் பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால் அதன் பின்னால் வியாபார நோக்கம் இருந்தது. பள்ளியின் இயக்குநர் மைக்கேல் அனக்னோஸ், ஹெலனின் அபாரமான திறமையைப் பயன்படுத்தி பள்ளிக்கு நன்கொடை திரட்டத் திட்டமிட்டார். ஹெலனை ஓர் அதிசயக் குழந்தை என்று விளம்பரம் செய்த பள்ளி நிர்வாகத்தினர், செல்வந்தர்கள் கூடும் இடங்களுக்கு அவளை அழைத்துச் சென்று, அவள் கற்றுக்கொண்டவற்றைப் பொதுவெளியில் செய்து காட்டச் சொன்னார்கள். ஹெலனை இவ்வாறு ஒரு காட்சிப் பொருளாக அவர்கள் பயன்படுத்துவதை ஆனி சல்லிவன் அறவே வெறுத்தார். தனது மாணவி, பணம் திரட்டும் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனியின் மனம் வேதனையில் சிக்கித் தவித்தது. ஒவ்வொரு முறையும் பொதுவெளியில் ஹெலன் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வைத் தொடர்ந்து, அவளை அணைத்தபடி கண்ணீர் சிந்தினார் ஆனி. ஆனாலும் நிதி நெருக்கடி காரணமாக வேறு வழியில்லாமல் பள்ளி நிர்வாகத்தைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருவருக்குமே இருந்தது. ஆனாலும் இத்தகைய விஷயங்களை ஹெலனை பாதிக்காதவாறு பார்த்துக்கொண்ட ஆனி, ஓர் ஆசிரியராக மட்டுமல்லாமல் அவளது பாதுகாவலராகவும் மாறிப்போனார்.
பார்வையற்றோருக்குத் தேவையான பிரெய்லி புத்தகங்கள் அச்சமயம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தன. இதனால் தனது குறைந்தபட்ச பார்வைத் திறனைப் பயன்படுத்தி பல மணிநேரம் தானே புத்தகங்களைப் படித்து, அவற்றை ஹெலனின் கைகளில் எழுதிக் காண்பித்து விளக்கினார் ஆனி. இத்தகைய செயல் அவரது கண்களை மிக மோசமாகப் பாதித்தது. இதனால் அடிக்கடி ஆனிக்கு தலைவலியும் கண் எரிச்சலும் ஏற்பட்டன. அவற்றுக்கான மருத்துவச் செலவுகளுக்குப் போதிய பணம் இல்லாத நிலையிலும், தன்னுடைய வலிகளைக்கூடப் பொருட்படுத்தாமல் ஹெலனுக்காக அவர் உழைத்தார்.
பாடங்களைப் படித்து அவற்றைக் கையில் எழுதி விளக்குவது எளிமையான காரியமாக இருக்கவில்லை. ஒரு கருத்தை ஹெலன் சரியாகப் புரிந்துகொள்ளும் வரை ஆனி ஓயமாட்டார். உதாரணமாக, புலன்களால் எளிதில் உணர முடியாத ’அன்பு’, ’பாசம்’ போன்ற சொற்களின் அர்த்தத்தை ஹெலனுக்குப் புரியவைக்க ஆனி மிகவும் சிரமப்பட்டார். ஆனாலும் பல முறை கடுமையாக முயற்சி செய்து, அவற்றை ஹெலனுக்கு புரிய வைத்த பிறகே அவர் நிம்மதியடைவார்.
மேலும், பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் விரைவாகப் பாடம் நடத்தும்போது, ஆனி அவற்றை மிக வேகமாக ஹெலனின் கைகளில் எழுதவேண்டிய நிலை இருந்தது. ஏனெனில் அங்கு பயின்ற பார்வைக் குறைபாடுள்ள பிற மாணவர்களால் வகுப்புகளைக் கேட்க முடிந்தது. அதேநேரம் ஒவ்வொரு வரியையும் ஹெலனின் கைகளில் எழுதிக் காட்டினால் மட்டுமே அவளால் அவற்றை உள்வாங்க முடியும். ஆனால் பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஹெலனுக்காக அவற்றை மெதுவாக எடுக்கத் தயாராக இல்லை.
வேகமாகக் கைகளில் எழுதி புரிய வைக்கும் இந்தப் பணி ஆனிக்கு உடல்ரீதியான சோர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஒருவிதமான மன அழுத்தத்தையும் அளித்தது. வகுப்பில் நடத்தப்படும் ஏதேனும் ஒரு தகவலை அவசர கதியில் ஹெலனுக்கு தவறாகப் புரிய வைத்தாலோ அல்லது அதை அவள் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாலோ, அத்தகைய செயல் ஹெலனின் அறிவைப் பாதிக்கக்கூடும் என்கிற பதற்றம் ஆனிக்கு எப்போதும் இருந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் அவர் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டார்.
0
பெர்கின்ஸ் பள்ளியில் ஹெலன் கல்வி கற்ற இந்தக் காலகட்டத்தில், ஆனிக்கும் அவளுக்கும் இடையே இருந்த பரஸ்பர நம்பிக்கையும் அன்பும் அவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தன. ஹெலனுக்கு அனைத்துமாக இருந்த ஆனியை பள்ளி நிர்வாகம் வெறுமனே ஒரு பணியாளராக மட்டுமே நடத்தியது. கண் பார்வை இல்லாத, கேட்கும் பேசும் திறன்களற்ற ஒரு சிறுமி கல்வி கற்றுப் பல விஷயங்களை விவாதிக்கிறாள் என ஹெலனின் பெயர் பொதுவெளியில் புகழ் பெறத் தொடங்கியிருந்தது. இதற்கான முழு பெருமையும் பள்ளிக்கு மட்டுமே சேரவேண்டும் எனப் பள்ளி நிர்வாகி அனக்னோஸ் விரும்பினார். இதனால் ஹெலனின் புகழுக்குப் பெரும் காரணமாக இருந்த ஆனி சல்லிவனின் பங்களிப்பை அவர் அங்கீகரிக்கவில்லை.
இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாகத் தனக்கு நேர்ந்த பிரச்னைகள் குறித்து ஹெலனிடம் ஆனி எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஆனிக்கு அங்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது என்பதை உணர்வின் வழியாக ஹெலன் புரிந்துகொண்டிருந்தாள். பின்னாளில் தனது சுயசரிதையில் இது குறித்து அவர் குறிப்பிட்டார். பெற்றோருக்கு அனுப்பிய கடிதங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக எழுதினாலும், ஆனியின் நிலையை எண்ணி உள்ளுக்குள் ஹெலன் வருந்தினாள். ஆனாலும், கல்வி மீது இருந்த தீராத தாகம் ஹெலனை தொடர்ந்து இயங்கச் செய்தது. பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன் உள்ளிட்ட பல மொழிகளை அங்கு அவள் கற்கத் தொடங்கினாள்.
பெர்கின்ஸ் பள்ளியில் அவர்கள் இருவரும் கழித்த இந்தக் காலகட்டம் ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான போராட்டமாக அமைந்தது. பொருளாதார ரீதியாக ஹெலனும் ஆனியும் பள்ளியைச் சார்ந்து இருந்ததால், பல நேரங்களில் பள்ளி நிர்வாகத்தின் தேவையற்ற உத்தரவுகளுக்கு அவர்கள் இருவரும் கீழ்படிய வேண்டியிருந்தது. ஒருபுறம் உலகத்தரம் வாய்ந்த நூலகமும் அங்கிருந்த அறிவுசார் சூழலும் ஹெலனை உற்சாகமாக வைத்திருந்தன. மறுபுறம் நிதி நெருக்கடி, நிர்வாக அழுத்தங்கள், ஆனியின் உடல்நலப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் அவர்களை வாட்டின. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆனி சல்லிவன் காட்டிய உறுதிதான் பிற்காலத்தில் ஹெலனை ஓர் உலகளாவிய ஆளுமையாக உருவாக்கப் பெரிதும் உதவியது.
அங்கு ஏற்பட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னரே மேலும் ஒரு சோதனை ஹெலனுக்காக காத்திருந்தது!
(தொடரும்)

