Skip to content
Home » ஹெலன் கெல்லர் #6 – அன்பெனப்படுவது

ஹெலன் கெல்லர் #6 – அன்பெனப்படுவது

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பிடுவதில் ஆரம்பித்த கற்றல் பாடமானது படிப்படியாக உயர்ந்தது. ஹெலன் தட்டுத்தடுமாறி வார்த்தைகளைத் தெரிந்துகொண்டார். காது கேட்கும் நாம் எந்தவிதத் தன் முனைப்பும் இல்லாமல் மொழியைக் கற்கிறோம். பிறர் பேசும் உச்சரிப்பை வாய் அசைவில் பார்க்கிறோம். கேட்கிறோம். மகிழ்ச்சியாகக் கற்க முடிகிறது.

ஆனால் காதும் கண்ணும் அற்ற குழந்தை, மொழியைக் கற்பதென்பது கடினம். கோபத்தில் மட்டுமல்ல, கற்பதிலும் ஆவேசம் கொண்டார் ஹெலன். அந்தத் தீவிரத்தன்மைதான் ஹெலனை வெறியோடு கற்கத்தூண்டியது.

ஹெலன் அறிந்து வைத்திருந்த வார்த்தைகள் குறைவு. அதை வைத்துக்கொண்டு ஒரு மொழியில் தன்னிறைவை அடைய முடியாது. போதாது என்ற மனநிலைதான் அவரை மேலும் மேலும் கற்கத் தூண்டியது.

ஸல்லிவன் சொல்லித்தருவதை அதிகம் கேள்வி கேட்காமல் கற்றார் ஹெலன். எப்போதாவது சந்தேகங்களும் கேட்பார். தெளிவு பெறுவார். சந்தேகம் கேட்டு விளக்கிய பின்னர் தெளிவுபெற்ற மகிழ்ச்சி அவரை மேலும் உற்சாகப்படுத்தியது. பல ஐயங்களைக் கேட்டு தெளிவுபெற உதவியது. துருவித் துருவிக் கேட்டு அறிந்துகொண்டதில் ஹெலனின் அறிவுத்தளம் விரிவடைந்தது.

ஒரு விஷயத்தை விளக்க வெளியில் எங்கு சுற்றினாலும் கவனமாக மீண்டும் பழைய இடத்திற்கே இருவரும் திரும்பிவிடுவார்கள். அப்படி வெளியே சென்று வரும்போதெல்லாம் ஹெலன் மனதில் வடித்து வைத்திருந்த வார்த்தைக்கு அர்த்தம் பிடிபட்டுவிடும். அந்தப் புதிய வார்த்தை அவருக்குப் புத்துயிர் அளிக்கும்.

அப்படித்தான் லவ் என்ற வார்த்தையை முதன் முறையாகக் கேட்டார் ஹெலன். லவ் என்றால் என்ன என்று கேட்ட நாளை ஹெலனால் மறக்க முடியாது. ஏனெனில் பொருள் புரியாமல் அவஸ்தைப்பட்ட வார்த்தை அது. அப்போது அதிக வார்த்தைகள் தெரியாத ஆரம்பக் கற்றல் நாள். தோட்டத்தில் மலர்ந்திருந்த சில ஊதா பூக்களைப் பறித்து வந்து ஸல்லிவனிடம் கொடுத்தார்.

ஸல்லிவன் பதிலுக்கு ஹெலனுக்கு முத்தம் கொடுத்தார். ஹெலனுக்கோ அம்மாவைத் தவிர யார் முத்தம் கொடுத்தாலும் பிடிக்காது. உதறினார். மென்மையாக அணைத்துக் கொண்ட ஸல்லிவன், ஹெலன் கைகளில் ‘I Love You’ என்று எழுதினார்.

பூவாகப் பெற்ற அன்பிற்கு, பதில் அன்பு செய்தார் ஸல்லிவன். அவ்வளவுதான் ஹெலன் மனதில் பிரளயம் உருவானது. லவ் என்றால் என்ன என்று கேட்டார் ஹெலன்.

ஸல்லிவன் ஹெலனை இன்னும் கொஞ்சம் அணைத்துக் கொண்டார். கையை ஹெலனின் இதயத்தின் மீது வைத்து இங்கே இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். ஹெலன் தன் இதயத்துடிப்பை அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்தார். அந்தத் துடிப்பைத்தான் அன்பு என நினைத்தார். ஏனெனில் தொட்டுப்பார்க்காத எதையும் ஹெலனால் புரிந்துகொள்ள முடியாது.

பதிலற்றுப் போகவும் அடுத்து ஆசிரியர் கைகளிலிருந்த மலர்களின் மணத்தை முகர்ந்தபடி, இதுதான் அன்பா என்றார். பாதி வார்த்தை, பாதிச் செய்கையால் செய்துகாட்டினார். ஹெலன் எப்படிக் கேள்வி கேட்டாலும் ஸல்லிவனுக்குப் புரிந்துவிடும்.

இதயத் துடிப்பு, மணம் என அன்பிற்கு எங்கெங்கோ சென்று அர்த்தம் தேடும் தன் மாணவியின் திறமையை நினைத்துப் பெருமைப்பட்டார். கூடவே எப்படிப் புரியவைப்பது எனக் குழம்பினார்.

கதகதப்பான சூரிய வெளிச்சம் படரும் அதிகாலை நேரமது. உடனே சூரியனை இழுத்துவைத்துக் கொண்டார். அது உதித்த திசையைக் காட்டி அதுதான் அன்பா என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தார்.

அதுவாகத்தான் இருக்கும் என்பதில் அவ்வளவு நம்பிக்கை. ஏனெனில் சூரியன் தன் வெப்பத்தால் எல்லாவற்றையும் வளர்க்கிறது. அதைவிட அழகானது இவ்வுலகில் வேறில்லை என நம்பினார். அதனால் சூரியன்தான் அன்பு என உறுதியாக நம்பினார். ஸல்லிவனோ மறுத்துத் தலையாட்டினார்.

ஹெலன் பெரிதாகக் குழம்பினார். ஆசிரியரால் அன்பைக் கொடுக்க முடிந்ததே தவிர காட்டிக் கொடுக்க முடியவில்லை. எதையும் விளக்கிவிடும் ஸல்லிவன் அன்பைப் புரியவைக்க முடியாமல் தவித்தார்.

ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய, விளக்க முடியாத சந்தேகங்களை அன்றே விளக்கமாட்டார். அதிகமாகப் பாடம் எடுத்தால் அல்லது கஷ்டப்படுத்திப் புரிய வைக்க முயற்சி செய்தால் ஹெலனுக்குச் சுல்லென ஏறும் கோபத்தை ஸல்லிவன் நன்கறிவார். எனவே அன்பை விளக்க இரண்டு நாள்கள் இடைவெளி விட்டார்.

அதில் ஒருநாள் மணி கோர்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ஹெலன். இரண்டு வெவ்வேறு பாசி மணிகளின் முகமும் ஒரே பக்கத்தில் இருக்குமாறு கோர்த்தார். அதைவிடச் சிறிய மூன்று பாசிமணிகளை அதற்கடுத்துக் கோத்தார். இப்படியாக அந்த மாலை முழுக்கக் கோர்க்க வேண்டும். மாற்றிக் கோர்த்துத் தவறு செய்தார் ஹெலன்.

கனிவாகவும் பொறுமையாகவும் தவறைச் சுட்டிக் காட்டினார் ஸல்லிவன். ஹெலன் தான் அடுக்கிய வரிசையில் தவறு இருப்பதை உணர்ந்தார். எனவே கைக்கு வந்த மணியைக் கோர்க்காமல் கவனத்தைப் பாடத்தில் ஒருமுகப்படுத்தினார். மணிகளை எப்படி அடுக்க வேண்டும் என்று யோசித்தார்.

அந்த நேரம் ஸல்லிவன் ஹெலனின் நெற்றியைத் தொட்டு Think என்று எழுதினார். ஹெலன் யோசித்துக் கொண்டிருக்கவும், ஸல்லிவன் நீயே யோசனை செய் என்று எழுதவும் சரியாக இருந்தது. தன் மண்டைக்குள் செய்துகொண்டிருந்த வேலையின் பெயர்தான் Think என்று ஒரு மின்னல் வெட்டியது. தொடுபொருள் அல்லாத பிற வார்த்தைகளில் முதல் வார்த்தை திங்க். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டார்.

இச்சம்பவம் ஹெலனுக்குப் பயங்கர பரவசத்தைக் கொடுத்தது. நீண்ட நேரம் அசையாமல் இருந்தார். ஊசி மணி பாசி மணி சிந்தனையே இல்லை. இந்த அனுபவத்தின் வழியே இரண்டு நாள்களுக்கு முன் விடைகாணாமல் விட்ட லவ்விற்கு விடை காண நினைத்தார்.

ஹெலனால் சூரியனைத் தாண்டி வெளியே வரமுடியவில்லை. அன்று முழுவதும் சூரியன் மேகத்திற்குள் மறைவதும், லேசாக மழை தூறுவதும், திடீரெனத் தன் கதிர்களைப் பாய்ச்சுவதுமாக இருந்தது. இது லவ் இல்லையா என்று அதே கேள்வியை மீண்டும் கேட்டார் ஹெலன்.

ஹெலன் எதை திங்க் செய்து எங்கு வந்து நிற்கிறார் என ஸல்லிவனுக்குப் புரிந்தது. எனவே அதிலிருந்தே விளக்க முற்பட்டார். சூரியன் வருவதற்கு முன் வானத்தில் திரண்டிருக்கும் மேகங்கள் போன்றது அன்பு. மேகத்தைத் தொட முடியாது. ஆனால் அது தரும் மழையை உணர முடியும். வெய்யில் கொளுத்தும் நாளில் பெய்யக்கூடிய மழை போன்றது. தாகம் கொண்ட பூமியையும், வாடிப்போன மலர்களையும் சந்தோஷப்படுத்தும். அதை எல்லாம் நம்மால் தொட்டுப் பார்க்க முடியாது. ஆனால் அதன் இனிமையை அனுபவிப்போம். அப்படியானது அன்பு. அன்பு இல்லை என்றால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அது ஓர் உணர்வு என்றார்.

ஹெலனுக்கு ஓர் உண்மை புரிந்தது. தனது உணர்விற்கும் மற்றவர் உணர்விற்கும் இடையில் கண்ணிற்குத் தெரியாத கோடு ஒன்று நீண்டு செல்வதை உணர்ந்தார்.

காது கேட்கும் குழந்தைகளுக்குச் சொல்லித்தருவதைப்போல்தான் ஸல்லிவன் ஹெலனுக்கும் சொல்லிக் கொடுத்தார். என்ன ஒரு வித்தியாசம் தான் பேசுவது அனைத்தையும் கையில் எழுதிக்காட்டிவிடுவார். நடைமுறையில் உள்ள பல சொற்றொடர்கள் ஹெலனுக்குத் தெரியாது. அதையும் சொல்லிக் கொடுத்தார்.

ஹெலன் அதற்குப் பதில் எழுதும் சமயத்தில் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவார். அப்போது ஸல்லிவன்தான் உதவுவார். ஹெலன் சொல்ல வருவதை முழுமையாகச் சொல்ல உதவி செய்வார். இந்தக் கற்றல் முறையில்தான் பல ஆண்டுகள் பாடம் படித்தார்.

அன்றாடம் பயன்படுத்தும் வாக்கியங்களைக் காது கேட்காத குழந்தைகள் ஆண்டுக்கணக்கில் காலம் எடுத்தால்தான் படிக்க முடியும். ஆனால் ஹெலன் சில மாதங்களில் கற்றார்.

பொதுவாகக் காதில் வாங்குவதன் மூலம்தான் கற்றல் தொடங்கும். அப்படிக் காதில் விழும் வார்த்தைகள் மனதைக் கிளறும். வெவ்வேறு விஷயங்கள் பற்றிச் சிந்திக்க வைக்கும். குழந்தையும் உடனடியாக அதை வெளிப்படுத்தும். இதை உணர்ந்த ஸல்லிவன், தான் கற்றுத் தர நினைத்தது அனைத்தையும் பேசுவதைப்போல் கையில் எழுதிவிடுவார். ஹெலன் எதில் பின்தங்கி இருக்கிறார் என்று பார்த்து அதற்கேற்றவாறு திருகாணியைச் செலுத்தினார்.

எதிர்க் கேள்வி கேட்பதில், உரையாடுவதில் ஹெலனால் எப்படி எல்லாம் பங்குபெற முடியும் என்று விளக்கினார். நீதிமன்றத்தில் குற்றவாளிக்குத் தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல வாய்ப்பு கொடுப்பது சிறந்த நீதி. ஆனால் எப்படிக் கேள்வி கேட்பது என்பதைச் சொல்லிக் கொடுத்து அதற்குப் பதிலும் சொல்வதென்பது அதைவிடப் பெரிய அற நியதி. ஹெலன் உடனே பதில் சொல்லும் முயற்சியில் இறங்கவில்லை. ஹெலனைத் தூண்டிவிடும் வேலையை ஸல்லிவன் எப்போதும் செய்வார்.

எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் சொல்ல வேண்டும், எந்த வார்த்தையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற சூட்சமம் பிடிபட்டது. எனவே மொழியால் மற்ற குழந்தைகள் அடையும் பலனைவிட ஹெலன் அதிகப் பலனடைந்தார். இதன் மூலம் பிற மொழிகளையும் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்தார். பின்னாளில் பல்கலைக் கழக நுழைவுத் தேர்விற்குத் தேவையான இதர மொழிகளையும் கற்றார் ஹெலன். லவ்வைப் புரிந்துகொள்ளக் கஷ்டப்பட்ட ஹெலன், ஷேக்ஸ்பியரின் வரிகளை அசால்ட்டாக அலசும் அளவிற்குத் தேர்ச்சிபெற்றார்.

(தொடரும்)

பகிர:
ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *