‘தி ஃபிராஸ்ட் கிங்’ கதையை முன்வைத்துப் பேசப்பட்ட அவதூறுகளால் 11 வயது ஹெலன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானாள். அவளுடைய கரங்கள் பேனாவைத் தொடுவதற்கு அஞ்சின. ஆனால் இரும்புபோன்ற மன வலிமையைக் கொண்டிருந்த ஹெலன், வெகுகாலம் முடங்கிக் கிடக்கவில்லை. விழுவதெல்லாம் எழுவதற்கே என்கிற தத்துவத்துக்கு அவள் ஆகச்சிறந்த இலக்கணமாக இருந்தாள்.
ஃபிராஸ்ட் கிங் சர்ச்சை ஹெலனுக்குள் ஏற்படுத்திய வடுக்கள் அசாதாரணமானவை. இதுவே ஒரு சாதாரண மனிதராக இருந்திருந்தால் அத்தகைய அவதூறுகளால் முடங்கிப்போயிருப்பார். ஆனால் இதற்கு ஹெலன் ஒரு விதிவிலக்கு. தன் மீதான அவதூறுகளுக்குத் தன்னுடைய அசாத்திய உழைப்பின் மூலமாக மட்டுமே பதில் கூற முடியுமென அவள் உறுதியாக நம்பினாள்.
அதுவரை மாற்றுத்திறனாளிகள் எவருக்கும், அதிலும் குறிப்பாகப் பார்வையற்ற மற்றும் செவித்திறனற்ற பெண்கள் உயர்கல்வி பயில அனுமதி அளித்திடாத புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற விரும்பினாள் ஹெலன். அவளது இந்த எண்ணமே மாபெரும் புரட்சிக்கு ஒப்பாகும். இன்றைக்கும் அந்தப் பல்கலைக்கழகம் உலகின் முன்னணி இடத்தில் சாமானியர்களால் அணுக முடியாத கல்வி நிறுவனமாக உள்ளது. அப்படியென்றால் அந்தக் காலகட்டத்தில் அதன் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.
1890களின் பிற்பகுதியில், அதாவது தன்னுடைய பதின் பருவத்தில் ஒரு புதிய இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்தாள் ஹெலன். தனக்கு முறையான உயர்கல்வி தேவை என்கிற முடிவுக்கு அவள் வந்திருந்தாள். இந்த முடிவைச் செயல்படுத்துவதில் ஹெலன் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். அதுவரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகப் பள்ளியில் மட்டுமே படித்திருந்த ஹெலன், உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பினாள். அவளது இந்த ஆசையைப் பலரும் கேலி செய்தார்கள். ஆனால் எப்போதும்போல் இந்தப் பின்னடைவும் ஹெலனுக்கு புத்துணர்ச்சியை அளித்தது.
அன்றைய உலகின் ஆகச்சிறந்த அறிவு மையமாகத் திகழ்ந்த ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான உயர்கல்வி நிறுவனமாக ‘ராட்க்ளிஃப் கல்லூரி’ செயல்பட்டது. அந்தக் காலகட்டத்தில், சாதாரணப் பெண்களுக்கே ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நுழைவது கடினமான விஷயம். அப்படியிருக்கையில் பார்வையற்ற, செவித்திறனற்ற, பேசும் சவால்களைக்கொண்ட ஒரு பெண்ணுக்கு, அங்கு இடம் கிடைப்பது எத்தகைய சவாலான காரியமாக இருக்கக்கூடும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதைப் பல்கலைக்கழக நிர்வாகத்தாரால்கூடக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
எதிர்பார்த்ததைப்போல் ராட்க்ளிஃப் கல்லூரியில் சேருவது ஹெலனுக்கு எளிதாக இருக்கவில்லை. அவளுக்கென எந்தவொரு விதிவிலக்கும் இல்லாததால், மற்ற மாணவர்களைப்போலவே கடுமையான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருந்தது. அதேநேரம், நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதில் ஹெலனுக்கு இருந்த சவால் என்பது மற்ற மாணவர்களைவிட ஆயிரம் மடங்கு அதிகம். ஏனென்றால் ராட்க்ளிஃப் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு இன்றைய ஐஐடி நுழைவுத்தேர்வைவிடப் பல மடங்கு கடினமானது. மேலும், ஆங்கிலத்துடன் ஜெர்மன், உள்ளிட்ட பிற அந்நிய மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்காகவே அந்த மொழிகளையும் கணிதத்தையும் ஹெலன் கற்க வேண்டியிருந்தது. அது அவளுக்குப் பெரும் சவாலை அளிக்கும் பணியாக இருந்தது.
அதுநாள் வரையில் கண் பார்வையற்ற யாருமே அப்பல்கலைக்கழகத்தில் சேர முயற்சிகூடச் செய்ததில்லை. இதனால் நுழைவுத் தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் பிரெய்லி வடிவில் கிடைக்கவில்லை. ஹெலனின் நிழலாக இருந்த ஆசிரியர் ஆனி சல்லிவன், ஒவ்வொரு பாடப்புத்தகத்தையும் படித்துப் பார்த்து, அதில் இருப்பவற்றை விளக்கங்களுடன் சேர்த்து ஹெலனின் கைகளில் எழுதிக்காட்டி, கொஞ்சமும் சலிப்பின்றி இடைவிடாது சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார். இத்தகைய செயலால் இருவரும் தினமும் களைப்பாக உணர்ந்தார்கள். ஆனாலும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை.
இறுதியாக நுழைவுத்தேர்வுக்கான நாளும் வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும், ஆர்வத்துடனும், சற்றே படபடப்போடும் ஹெலன் தேர்வு மையத்துக்குள் நுழைந்தாள். ஆனால் அங்கேயும் அவளுக்கான சோதனைகள் காத்திருந்தன. நுழைவுத் தேர்வில், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் பிரெய்லி வடிவில் கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவைகூடப் பரவாயில்லை என்று நினைக்கும் வகையில் கணிதத்தேர்வில் வடிவியல் (Geometry) மற்றும் இயற்கணிதம் (Algebra) போன்றவற்றுக்கான பிரெய்லி முறையில் அமைந்திருந்த கேள்விகள் மிகவும் சிக்கலானதாக இருந்தன.
பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு கேள்விகளைப் புரிந்துகொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியும் தனது நினைவாற்றலைப் பயன்படுத்தி ஆழமாக யோசித்தும் தேர்வெழுதினாள் ஹெலன். நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை ஹெலனிடம் பசி, தாகம் என எந்தவொரு உணர்வும் இருக்கவில்லை. கடைசியில், அவளது மனம் மகிழ்ச்சியாலும் பெருமிதத்தாலும் பூரிக்கும் வகையில் நுழைவுத்தேர்வில் அபார வெற்றி பெற்றிருந்தாள்.
1900ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம். ராட்க்ளிஃப் கல்லூரி வளாகத்திற்குள் முதல்முறையாக ஒரு மாணவியாகக் கால்பதித்தாள் ஹெலன். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மாற்றுத்திறனாளி பெண், மாணவியாக அங்கு அடியெடுத்து வைத்த அந்தத் தருணம், உலகக் கல்வி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிப்பதற்குத் தகுதியானதாக இருந்தது.
ஆனால், கல்லூரி வாழ்க்கை ஹெலனுக்கு ரோஜா இதழ்களைப்போல் மென்மையானதாக இல்லை. ஏனென்றால் கல்லூரி நிர்வாகம் அவளுக்கு எந்தவிதமான சலுகையையும் வழங்கவில்லை. விரிவுரையாளர்கள் வகுப்பறையில் வேகமாகப் பாடம் நடத்திக்கொண்டே இருப்பார்கள். ஹெலனால் அவர்களின் உதட்டசைவுகளைப் பார்க்கவும் குரலைக் கேட்கவும் முடியாது என்பதால், அவளுடைய தொட்டு உணரும் உத்திக்குப் பல்கலைக்கழகம் அனுமதியளிக்கவில்லை.
அங்குதான் ஆனி சல்லிவனின் தியாகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் ஹெலனுக்கு அருகில் அமர்ந்துகொண்டு, பேராசிரியர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நொடிப்பொழுதில் ஹெலனின் உள்ளங்கையில் தட்டச்சாக மாற்றினார் ஆனி. ஒரு மணிநேர விரிவுரை முடிந்ததும், ஆனியின் கைகள் வலியால் மரத்துப்போகும். பேராசிரியர்களின் வேகத்திற்கு இணையாக அவர் தன் கைகளை இயக்க வேண்டியிருந்ததே அதற்குக் காரணம். ஆனால் இத்தகைய வலியெல்லாம் ஆனிக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.
ராட்க்ளிஃப் கல்லூரி வாழ்க்கை ஹெலனுக்குள் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அங்கு அவள் எதிர்கொண்ட முக்கிய சவாலாக தனிமை இருந்தது. சாதாரண மாணவர்களுக்கு ஹெலனுடன் எளிதில் பழகவும் முடியவில்லை, அவளுடன் சைகை மொழியில் பேசவும் தெரியவில்லை. கூட்டத்தில் தனியாள் என்பதுபோல், ‘விரிவுரை அறைகளில் நான் மற்ற மாணவர்களுடன் அமர்ந்திருந்தாலும், என்னை மிகப்பெரிய மௌனமும் தனிமையும்தான் சூழ்ந்திருந்தன’ எனப் பின்னாளில் தன்னுடைய சுயசரிதையில் ஹெலன் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், வகுப்பறையில் கேட்கும் குறிப்புகளை இரவு முழுவதும் பிரெய்லி தட்டச்சுப் பொறியைப் பயன்படுத்தி தாள்களில் வடித்தாள் ஹெலன். இதற்காக விரல்கள் தேயும் அளவுக்கு அவள் உழைக்க வேண்டியிருந்தது. பல பாடப்புத்தகங்கள் பிரெய்லி முறையில் இல்லாததால், ஆனி சல்லிவன் இரவு நேரங்களில் ஹெலனுக்கு புத்தகங்களை வாசித்துக் காட்டினார். இது அவரது கண் பார்வையைப் பெருமளவு பாதித்தது. ஆனாலும், இருவரும் தங்களது முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை.
இவ்வாறு பல்வேறு சிரமங்களுடன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஹெலனின் திறமையைக் கண்ட ‘தி லேடீஸ் ஹோம் ஜர்னல்’ இதழ், அவளது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதக் கோரியது. கல்லூரிப் படிப்பின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும், தன்னுடைய சுயசரிதையை எழுதினாள் ஹெலன்.
அதுதான் 1903ஆம் ஆண்டில் ‘தி ஸ்டோரி ஆப் மை லைஃப்’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. 11 வயதில் ‘தி ஃபிராஸ்ட் கிங்’ சர்ச்சையால் எழுத அஞ்சிய அதே பேனா, 23வது வயதில் உலகமே வியந்து படிக்கும் ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்கியிருந்தது. இப்புத்தகம் ஹெலனுக்கான பெரும் புகழையும் கல்லூரிப் படிப்புக்கான பொருளாதார உதவிகளையும் தேடித் தந்தது.
நான்கு ஆண்டுகால இடைவிடாத போராட்டம், நரம்புகளைத் தளர வைக்கும் உழைப்பு, எதிர்பாராமல் தோன்றும் புதுப்புது சவால்கள் என அனைத்தையும் கடந்து சென்ற ஹெலனுக்கு பெருமையை அளிக்கும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளும் வந்தது.
1904ஆம் ஆண்டு, ஜூன் 28 அன்று ராட்க்ளிஃப் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அரங்கமே அமைதியாகக் காத்திருக்க, ஹெலன் கெல்லர் மேடையை நோக்கி நடந்தார். அவரிடம் ‘பேச்சுலர் ஆஃப் ஆர்ட்ஸ்’ (Bachelor of Arts – B.A.) என்கிற பட்டம் வழங்கப்பட்டது.
உலக வரலாற்றிலேயே, கலைப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற மற்றும் செவித்திறனற்ற மாற்றுத்திறனாளி பெண் என்கிற சாதனையைப் படைத்தார் ஹெலன் கெல்லர். தனக்கான பட்டத்தைப் பெருமிதத்தோடு பெற்றுக்கொண்டார். அதிலும் அவர் பெற்றது சாதாரண மதிப்பெண்கள் அல்ல, ‘கம் லாட்’ (Cum Laude) என்கிற கௌரவ மதிப்பெண்களுடன் (With Honors) அவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அரங்கமே எழுந்து நின்று கைதட்டியதால் எழுந்த அந்த ஓசை ஹெலனின் காதுகளுக்குக் கேட்கவில்லை என்றாலும், அந்த அதிர்வையும் அங்கிருந்த முகங்களில் இருந்த வியப்பையும் அவரது ஆன்மா உணர்ந்துகொண்டது. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பட்டம் என்பது ஹெலன் கெல்லருக்கு வெறுமனே ஒரு கல்விச் சான்றிதழ் மட்டுமல்ல; அது மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல் மீது அன்றைய உலகுக்கு இருந்த அவநம்பிக்கையை உடைத்தெறிந்த ஒரு சுத்தியல்.
‘உன்னால் முடியாது’ என்று பழித்த சமூகத்திடம், ‘மன உறுதி இருந்தால் உலகத்தின் மிக உயரிய கோட்டையையும் தகர்க்கலாம்’ என்பதை ஹெலன் நிரூபித்தார். 11 வயதில் அவதூறுகளால் வெம்பிய அந்தப் பிஞ்சு மனம், 24 வயதில் உலகமே போற்றும் ஒரு பட்டதாரியாக நிமிர்ந்து நின்றது. இங்கிருந்துதான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஹெலன் கெல்லரின் உலகளாவிய சமூகப் பணி அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
(தொடரும்)

