ஹெலனின் எட்டாவது வயதில் அடுத்த ரயில் பயணம் நிகழ்ந்தது. இந்த முறை ஹெலன் தன் தாயுடனும், ஆசிரியர் ஸல்லிவனுடனும் சென்றார். அது ஒரு கல்விப் பயணம். புறப்பட்டதிலிருந்து பாஸ்டன் சென்று சேரும் வரை ஏற்பட்ட பயண அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. ஆறுவயதில் செய்த எதையும் இந்தப் பயணத்தில் செய்யவில்லை. குறிப்பாக ரயிலில் உள்ளவர்கள் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்யவில்லை.
ஹெலன் பரவசமாக இருந்தார். பயணம் முடிவானதிலிருந்து பாஸ்டைன் அடையும் வரை நிகழ்ந்த அனைத்தும் முந்தைய அனுபவத்தைப் போன்றதல்ல. அமைதி இன்றி அங்கும் இங்கும் அலைபாய்ந்த சிறுமி இரண்டு வருடத்தில் பெரிய மனுஷியாகிவிட்டார். காரணம் ஆசிரியர் ஸல்லிவன். ரயிலுக்குள் நடப்பதை ஏற்கெனவே அறிந்துகொண்டார். எனவே இந்தப் பயணத்தில் ரயிலுக்கு வெளியே நடப்பதையெல்லாம் விளக்கினார் ஆசிரியர்.
டென்னஸ்ஸி நதி பாய்ந்தோடும் அழகை ஹெலனின் கைகளில் விவரித்தார். வயல்களின் பருத்தி விளைந்திருப்பதைப் படம் வரைந்து பாகம் குறித்தார். காடு, மலை, ரயில் நிலையங்களில் இருக்கும் நீக்ரோக்களைப் பற்றிப் பாடம் எடுத்தார்.
ரயிலில் யார் யார் ஹெலனைப் பார்த்து சந்தோஷமாகக் கையசைக்கிறார்கள், மிட்டாய், பாப்கார்ன் விற்பவர்கள் யார் யார் என உள்ளே நடப்பவற்றையும் சொன்னார். ஹெலன் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டுவந்தார்.
பழைய துணிகளால் உருவாக்கிய நான்சி பொம்மையையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர். கட்டம் போட்ட சட்டையைப் போட்டுக்கொண்டு தலையில் தொப்பியோடு ஹெலனின் எதிரில் அமர்ந்திருந்தது நான்சி. தன் பாசி மணிக் கண்களால் ஹெலனைப் பார்த்துக்கொண்டே இருந்தது. சல்லிவன் எதைப்பற்றியும் விளக்காமல் சிறிது இடைவெளி விடுவார். உடனே ஹெலனுக்கு நான்சி நினைவு வந்துவிடும். அதை எடுத்து வைத்து விளையாடுவார்.
நான்சியைவிடச் சுற்றி நடப்பது முக்கியம். ஸல்லிவன் எதையாவது சொல்ல ஆரம்பித்துவிட்டால் போதும். நான்சி தூங்குவதாக நினைத்து எதிரில் வைத்துவிடுவார். அமைதியாகப் பாடத்தைக் கவனிப்பார். ஆனால் பாதி மனம் நான்சியின் மீதுதான் இருக்கும்.
அப்படியான மனம் நிறைந்த நான்சி, பாஸ்டன் சேர்ந்தவுடன் அதிக நேரம் உயிருடன் இல்லை. நான்சி ஒழுங்காகச் சாப்பிடாது. அதனால் ஹெலன் களிமண் சோற்றை ஊட்டிவிடுவார். நான்சி மீது சேற்றுத் துணுக்குகள் விழுந்து அழுக்காகி இருந்தது. துணி வெளுக்கும் அம்மணி இந்தச் சேற்றுப் பொம்மையைப் பார்த்தார். ஹெலனுக்குத் தெரியாமல் நான்சியைக் குளிப்பாட்ட அழைத்துச் சென்றுவிட்டார்.
பிறகென்ன உருவமற்ற பஞ்சுக்குவியல்தான் ஹெலனுக்குக் கிடைத்தது. அதில் இருந்த அந்தப் பாசி மணி கண்கள்தான் அதை நான்சி என்று காட்டிக்கொடுத்தது. பொம்மை உயிருடன் இல்லை என்ற உண்மையையும் உணர்த்தியது. நான்சிக்கு நேர்ந்த துயரை ஹெலனால் தாங்க முடியவில்லை.
ஹெலனின் கல்விக்காக அவர்கள் வந்து சேர்ந்த இடம் லாரா பிரிட்ஜ்மேனின் பள்ளி. அவர்கள் பெர்கின்ஸ் கல்வி மையத்தில் தங்கினர். ஹெலன் தன்னைப்போல் கண் தெரியாத சிறுவர்களைக் கண்டார். அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் பணியில் ஈடுபட்டார். அதன்பிறகே நான்சியின் நினைவு குறைந்தது.
தனது புதிய நண்பர்களுக்கும் பார்வை இல்லை என்பது முதலில் தெரியாது. அவர்களோடு இரண்டற கலந்தபிறகுதான் தெரிந்தது. ஆனால் அவர்கள் குறைபாடு உள்ளவர்கள் என்பதை ஹெலனால் நம்ப முடியவில்லை. அவர்களும் விரலால் தொட்டுப்பார்த்து எழுத்துக்களை அறிந்துகொள்கிறார்கள் என்பதில் ஹெலனுக்கு மகிழ்ச்சி.
தனக்கான மொழியில் மற்றவர்களுடன் சகஜமாக உரையாடினார். அவர்களும் ஹெலனிடம் பேச வேண்டும் என்றால் கைகளில் எழுதினர். தான் நினைப்பதைப் புரிய வைக்க இன்னொருவர் உதவி தேவைப்படவில்லை ஹெலனுக்கு. அவர்களும் புத்தகங்களை விரல்கள் மூலம் வாசித்தார்கள்.
சுற்றி நடப்பது அனைத்தும் அவரைப்போலவே செய்யும் அவருக்கான உலகமாக இருந்தது. லாரா பிரிஜ்மேனின் அந்தப் பள்ளி ஹெலனுக்குத் தாய் மண் உணர்வைக் கொடுத்தது.
இங்குள்ள குழந்தைகளைப் பற்றி ஸல்லிவன் ஓரளவு சொல்லிவிட்டார். ஆனால் அவர்களால் காது கேட்க முடியும் என்பதைப் பழகிய பின்னரே புரிந்துகொண்டார். அது அவர்களுக்குக் கிடைத்த இரண்டாவது பார்வை என நினைத்து மகிழ்ந்தார் ஹெலன்.
செவிச் செல்வத்தைப் பறிகொடுத்த தன்னைப் போன்ற இன்னொரு குழந்தையை ஹெலன் பார்க்கத் தயாராக இல்லை. ஹெலனின் தோழமை தந்த நெருக்கத்தால் அவர்களின் வேதனை உணர்வுகள் காணாமல் போயின. ஹெலன் மூன்று திறனும் இல்லாமல் போராடியதைப் பார்த்து தங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கை மன நிறைவை அடைந்தார்கள்.
ஒவ்வொரு நாளும் மிக வேகமாக ஓடின. அடுத்த நாள் என்ன இனிமை நடக்குமோ என்ற ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் பொழுதுபோனது. உலகம் பாஸ்டனில் ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிடுகிறது. பாஸ்டன் தவிர வேறு உலகம் இல்லை என நம்பினார் ஹெலன்.
அங்கிருந்து பங்க்கர் மலைக்குச் சென்றனர். அங்குதான் ஹெலனின் முதலாவது சரித்திரப் பாடம் ஆரம்பமானது. அவர்கள் நின்ற இடம் வீரர்கள் நின்று போர்புரிந்த இடம். இந்த நினைவே ஹெலனைச் சிலிர்க்க வைத்தது. வரலாற்றின் படிகளை, போரை நினைத்துக்கொண்டே ஏறினார். உயரத்திலிருந்து கீழே பார்த்தார். எவ்வளவு படிக்கட்டுகள் ஏறிவந்து கீழே இருந்த எதிரிகளை வீழ்த்தியிருக்கிறார்கள். இந்த உண்மை அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அடுத்தநாள் கடல்வழி மார்க்கமாக ப்ளைமவுத்திற்கு பயணம் செய்தனர். கடலில் பயணம் செய்த முதல் அனுபவம் அது. நீராவிப் படகில் சென்றதில் கடலின் உயிரோட்டத்தை உணர்ந்தார். ஆனால் அதன் தடதடத்த இறைச்சல் இடியைப்போல் அதிர்ந்தது. எனவே அழ ஆரம்பித்துவிட்டார். ப்ளைமவுத்தின் மற்ற இடங்களைவிட இவர்கள் சென்ற பாறைக்குத்தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர். அங்கு சந்தித்த ஓர் அன்பர் அந்தப் பாறையின் மாதிரி வடிவத்தைப் பரிசாகக் கொடுத்தார். அதில் எத்தனை வளைவுகள் என்பதை எண்ணினார் ஹெலன். நடுவில் ஒரு பிளவுப் பகுதியில் 1620 என்று மேடான எழுத்துக்களில் பொரிக்கப்பட்டிருந்தது. அத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அப்பகுதியைப் பற்றி அதுவரை என்னென்ன கதைகள் கேட்டிருந்தாரோ அத்தனையும் நினைவிற்கு வந்தன. வீரர்களின் தீரச் சாகசங்களால் கற்பனையில் திளைத்தவருக்கு உண்மையின் பார்வை கிடைத்தது. பழக்கமில்லாத புதிய பகுதியில் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக்கொண்ட துணிச்சல்காரர்கள் அவர்கள். அதுவரை ஹெலனின் கற்பனையில் உதாரணப் புருஷர்களாக இருந்தவர்கள், தங்கள் சுதந்திரத்தோடு சக மனிதர்களின் சுதந்திரத்தையும் தேடினார்கள் என்பதால் உயர்வாக நினைத்திருந்தார். தற்போது அவர்களுடைய கொடூரச் செயல்களை அறிந்து ஏமாற்றமடைந்தார். அழகான தேசத்தை அமைத்துக் கொடுத்த அவர்களுடைய ஆற்றலும் துணிச்சலும் பெருமிதத்தைக் கொடுத்தாலும் அந்தக் கொடூரச் செயல்களை அவமானமாக நினைத்தார்.
ஹெலனுக்கு பாஸ்டனில் பல நண்பர்கள் கிடைத்தார்கள். அதில் முக்கியமானவர்கள் வில்லியம் என்டிகாட்டும் அவருடைய மகளும். மறக்க முடியாத அளவிற்கு அவர்கள் ஹெலன் மீது அன்பு செலுத்தினார்கள்.
அவர்களுடைய பெவர்லி ஃபாம் என்ற அழகான வீட்டிற்கு ஹெலனும், ஸல்லிவனும் சென்றனர். ஹெலன் தன் பால்ய வீட்டில் சுற்றியதைப்போல் அங்குள்ள ரோஜாத் தோட்டத்தில் சுற்றித் திரிந்தார். தன் வீட்டு நாயைப்போலவே அங்கும் லியோ என்ற பெரிய நாய் இருந்தது. இன்னொரு குட்டி நாயும் இருந்தது. நீண்ட காதுகள், சுருண்ட முடியுடன் கூடிய அழகு குட்டியோடு விளையாடினார்.
மின்னல் வேகத்தில் பறக்கும் குதிரையும் அவ்வீட்டில் இருந்தது. அவ்வளவு திறமை வாய்ந்த குதிரை ஹெலனின் கையில் இருந்த வெல்லக்கட்டிக்காகச் சரணடைந்தது. தன் மூக்கை அவர் கைகளில் உரசி நக்கி எடுத்துக்கொண்டது. இந்த இன்பத்தை ஹெலனால் மறக்க முடியாது. குதிரைக்கு வெல்லம் இனித்ததைவிட ஹெலனுக்கு குதிரை அதிகம் இனித்தது.
பிரவுஸ்டர் என்ற கடற்கரையில் விளையாடிய அனுபவத்தை ஹெலனால் மறக்க முடியாது. அந்தக் கடற்கரை மணல் மென்மையாகவும் கெட்டியாகவும் இருந்தது. கால் புதையும் தளர்வான மணலைவிட இக்கடற்கரை வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. அங்கு கடற்பாசிகளும் கிளிஞ்சல்களும் நிறைந்திருந்தன. ஐரோப்பாவிற்குச் செல்லும் பெரிய கப்பல்கள் எல்லாம் இந்தக் கடற்கரைக்குத்தான் வரும் என்று வில்லியம் என்டிகாட் விளக்கியுள்ளார்.
அதன் பிறகும் பலமுறை என்டிகாட்டைச் சந்தித்திருக்கிறார். அவரை மனதில் வைத்தே பாஸ்டன் அன்பான இதயங்கள் நிறைந்த நகரம் என்று குறிப்பிட்டார். கல்வி கற்க பாஸ்டன் சென்றவர் உலக அனுபவங்களைக் கற்றார்.
(தொடரும்)