ஹெலனும் ஸல்லிவனும் மீண்டும் காது கேட்காதவர்கள் பேசுவதற்கான பயிற்சிப் பள்ளிக்குச் சென்றனர். நல்ல குரல் வளத்தைப் பெற வேண்டும். குறிப்பாக உதட்டசைவைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நியூயார்க்கில் ஒரு பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர்.
அங்கு பேச்சுப் பயிற்சியோடு கணிதம், புவியியல் பாடங்களையும் ஹெலன் சேர்த்துப் படித்தார். பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைக் கற்றுக்கொண்டார். இரண்டு வருடங்கள் அங்கு தங்கிப் படித்தார்.
ஜெர்மன் மொழியை ஆசிரியர் ரீமி விரலால் எழுதிக்காட்டிச் சொல்லிக்கொடுத்தார். எனவே ஹெலனால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. கொஞ்சம் கற்றுக்கொண்டதும் ஆசிரியரோடு ஜெர்மன் மொழியில் பேச ஆரம்பித்தார். அப்படிப் பேசிப் பழகியதால் மொழி இன்னும் எளிதாக வசமானது. ஆசிரியர் சொல்வதனைத்தும் புரிந்தது. ஒரு வருடத்திற்குள் ஜெர்மன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டார். அங்கு படித்த எல்லாப் பாடத்தையும்விட ஜெர்மன் மொழிப்பாடத்தில் அதிகத் தேர்ச்சி பெற்றார்.
பிரெஞ்சுப் பாடத்தைச் சற்றுக் கடினமாக உணர்ந்தார். ஏனெனில் ஆலிவர் என்ற ஃபிரெஞ்ச் ஆசிரியருக்கு எழுதிக்காட்டத் தெரியாது. வாய்மொழி மூலமாகக் கற்றுக்கொடுத்தார். வெறும் உதட்டசைவை வைத்துக்கொண்டு ஹெலனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் ஜெர்மன் மொழியைவிட ஃபிரெஞ்சு பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனாலும் ஒரு புத்தகத்தைப் படிக்கும் அளவிற்கு அந்த மொழியிலும் தேறினார்.
உதட்டசைவைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை ஹெலன் நிறைவு செய்யவில்லை. இது ஹெலனுக்கு வருத்தமளித்தது. எட்டமுடியாத இலக்கிற்கு ஆசைப்பட்டதாக வருந்தினார். கணிதமும் அப்படித்தான். உருவமற்ற பேய்போல் பயங்காட்டியது. கணிதத்திற்கு உருகொடுக்க முடியாததால் ஆபத்தான படமாக உணர்ந்தார். யூகத்தின் விளிம்பில் நின்று கணித ஊசலில் ஆடிக்கொண்டிருந்தார். இத்தகைய குறைபாடுகளால் அடிக்கடிச் சோர்வு ஏற்படும். கஷ்டங்களைத் தானே வலிந்து அதிகரித்ததாக நினைத்தார்.
சில பாடங்கள் ஏமாற்றினாலும் புவியியல் கைகொடுத்தது. ஆர்வமாகப் படித்தார். இயற்கையின் ரகசியங்கள் அனைத்தும் புலப்பட்டதில் அளவில்லா மகிழ்ச்சி. வானத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் வீசும் குளிர்ந்த காற்று, பூமியிலிருந்து மேலெழும்பிச் செல்லும் நீர்த்திவலைகள், பாறையைப் பிளந்துகொண்டு பெருக்கெடுக்கும் நதிகள் என மனிதனுக்கும் மேலான இயற்கையின் சக்திகளைப் புரிந்துகொண்டார்.
காதுகேட்கிறவர்களுக்குக் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் இந்தக் குழந்தைகளுக்கும் எப்படிக் கொடுக்க முடியும் என்பதைப் பற்றித்தான் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் எப்போதும் சிந்திப்பார்கள். சோகத்தில் மூழ்கியிருக்கும் அக்குழந்தைகளின் வாழ்வை மீட்பதற்கான வழிகளை ஆராய்வார்கள்.
நியூயார்க்கில் கழித்த இரண்டு ஆண்டுகளில் பல பாடங்களை வசமாக்கிக்கொண்டார். வெளி அனுபவம் எனில் தினமும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி அவருக்குப் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் பூங்காவிற்குள் நுழையும்போதும் யாரோ ஒருவர் பூங்காவைப் பற்றிச் சொல்வார்கள். அவர்கள் விவரித்துச் சொல்வதைக் கேட்கும்போதெல்லாம் வியப்பில் விரிவார். தினமும் பூக்கும் புதுமலர்போல் பூங்காவும் தினமும் புத்தம்புது அழகில் பூப்பதாக நினைத்தார். மரத்தையே வேலியாக வைத்திருந்த அந்தப் பூங்காவின் தோற்றம் அவரை வெகுவாகக் கவர்ந்தது.
நியூயார்க் வாசத்தின்போது கோடை விடுமுறைக்காகச் சுற்றுலாச் சென்றனர். அப்போது ஹட்சன் நதியில் பயணம் செய்தனர். பிரபல கவிஞர்கள் பலரையும் பாட வைத்த அந்நதிக்கரையில் அவர்களை நினைத்துக்கொண்டே சுற்றித் திரிந்தனர். இன்னும் பல பிரபல ஊர்களைச் சுற்றிப்பார்த்தார்கள்.
நியூயார்க்கிலிருந்து புறப்படும் முன் துயரச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டார் ஹெலன். தந்தையின் மரணத்தைத் தவிர வேறு மரணச் செய்தி அறியாதவர். பாஸ்டன் நகரில் இருந்தபோது ஜான் ஸ்பல்டிங் நண்பரானார். அவருடைய மரணம் அது. அவரைப் பற்றித் தெரிந்தவர்களால் மட்டுமே அவருடைய இழப்பை உணர முடியும். எல்லோரையும் தன் ஆத்மார்த்தமான அணுகுமுறையால் மகிழ்ச்சியடைய வைப்பார். அன்பாலும் கனிவாலும் அபிஷேகம் செய்வார். அந்த அன்பென்ற மழையில் அகிலம் நனைந்ததோ இல்லையோ ஸல்லிவனும் ஹெலனும் நனைந்திருக்கிறார்கள்.
அவருக்கு எத்தனை சிரமங்கள் இருந்தபோதிலும், ஸல்லிவனும் ஹெலனும் செய்யும் முயற்சிகளுக்காக இவர்களுக்கு உதவி செய்ய ஓடிவருவார். ஹெலன் ஊக்கம் இழந்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தியவர். ஆர்வமும் அக்கறையும் எப்போதும் பொங்கி வழியும். அவருடைய மறைவு ஹெலனுக்கு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியது. படிப்பு தலையில் ஏறியிருக்க, மனதில் அப்பெரிய வெற்றிடத்தைச் சுமந்துகொண்டு ஊர் திரும்பினர்.
இப்படி ஊர் ஊராகத் தேடுவதும் படிப்பதும் கல்லூரியில் சேரும் கனவிற்காக. ஹெலன் தன் பால்யத்தில் ஒருமுறை வெல்லஸ்லி சென்றிருந்தார். அப்போது தன் சக நண்பர்களிடம் ‘நான் ஒருநாள் கல்லூரிக்குச் செல்வேன். அது நிச்சயம் ஹார்வர்டு பல்கலைக்கழகமாகத்தான் இருக்கும்’ என்று கூறினார். ஹெலன் சொன்னது நண்பர்களை ஆச்சரியப்படுத்தியது. வெல்லஸ்லியில் படித்தால் என்ன என்று கேட்டுள்ளனர். இங்கு ஆண்கள் படிக்கவில்லை என்றாராம். சிறப்புப் பள்ளியை விட்டொழித்துப் புலன்கள் பெற்ற மாணவிகளோடு சேர்ந்து படிக்க நினைப்பதே பெரிய சவால். இதில் மாணவர்களோடும் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது. ஏனெனில் அவர் படித்ததனைத்தும் பெண்கள் பள்ளியில்தான்.
ஆக, கல்லூரி கனவென்பது சிறு வயதிலேயே பற்றிக்கொண்ட தீ. வளர்ந்த பிறகு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ரேட்கிளிஃப் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக் கனவு கண்டார். வெறும் கனவு மட்டும் போதாது. அதில் சேர்வதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்லூரி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு ஆயத்தமாக கேம்பிரிட்ஜ் பள்ளியில் சேர்ந்தார். அது பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி. கல்லூரிக் கனவில் தீவிரம் இருந்ததால் அனைத்துப் புலன்களும் வேலை செய்யும் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்ந்தார்.
ஹெலனின் இந்த முயற்சி பலருக்கும் பிடிக்கவில்லை. உன்னால் முடியாது என்று அறிவுரை சொன்னார்கள். ஸல்லிவன் இருக்கப் பயமேது? கேம்பிரிட்ஜ் பள்ளிக்குச் சென்றார். ஹெலனோடு ஸல்லிவனும் சேர்ந்து அமர்ந்துகொண்டார்.
ஆசிரியரின் வாயசைவைத் தொட்டுப்பார்த்து உணரும் அளவிற்கு ஹெலனுக்கு மட்டுமான வகுப்பல்ல அது. பொது மாணவர்களோடு அமர்ந்திருந்தார். ஆசிரியர் நடத்த நடத்த ஹெலன் கையில் ஸல்லிவன் எழுதினார். அங்குள்ள எந்த ஆசிரியரும் சிறப்புக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கும் அனுபவம் இல்லாதவர்கள். அந்த ஆசிரியர்களின் உதட்டசைவைப் புரிந்துகொள்வது மட்டுமே அவர்களுடன் உரையாடுவதற்கான ஒரே வழி.
முதலாம் ஆண்டில் வரலாறு, கணிதம், ஆங்கில இலக்கியம், ஜெர்மன், லத்தீன், லத்தீனில் கட்டுரை எழுதும் கலை ஆகிய பாடங்கள் இருந்தன. சில மொழிகள் அறிமுகம்தான் என்றாலும், கல்லூரியில் சேர்வதற்கான எந்தப் பாடத்தையும் ஹெலன் படித்ததில்லை. ஆங்கிலத்திற்கு ஸல்லிவனே போதும். அவர் ஆங்கிலத்தின் முன் யாரும் நிற்க முடியாது. அதன் நுணுக்கத்தை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனவே அப்பாடத்தில் அவ்வளவு சிறப்பான பயிற்சி தேவையில்லை என்பதை ஆசிரியர்களே புரிந்துகொண்டார்கள்.
கல்லூரியின் பாடத்திட்டத்திலுள்ள பாடங்களைக் கற்றுத்தருவதுதான் அப்பள்ளியின் வேலை. ஜெர்மன், லத்தீன் தெரியும். பிரெஞ்சுப் பாடத்தில் ஆர்வம் இருக்கிறது. இத்தனை சாதகங்கள் இருந்தும் படிப்பு பெருஞ்சவாலாக இருந்தது.
படிக்க வேண்டிய அத்தனை பாடங்களையும் கையில் எழுதிக்காட்டிப் படிக்க வைப்பது ஸல்லிவனுக்கு பெருஞ்சவாலானது. மேடாக அச்சடித்த பாடப்புத்தகங்கள் இருந்தால் ஹெலன் தானாகப் படிப்பார். அதற்கு லண்டன், ஃபிலடெல்ஃபியாவில் உள்ள நண்பர்கள் மூலம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவை கிடைக்கும்வரை லத்தீன் பாடங்களை பிரெய்லியில் நகலெடுத்துப் படித்தார்.
சக மாணவிகள் உதவி செய்தார்கள். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து மனப்பாடம் செய்து ஹெலனும் ஒப்பிப்பார். இதன் மூலம் தெளிவில்லாமல் குளறிப் பேசுவதை ஆசிரியர்களும் தோழிகளும் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ஹெலனின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். தவறுகளைத் திருத்தினார்கள்.
வகுப்பு நடக்கும்போது குறிப்புகள் எடுக்க முடியாது. பயிற்சிக்காகக் கொடுக்கும் பாடங்களையும் எழுதிக்காட்ட முடியாது. வீட்டிற்குச் சென்று தட்டச்சு இயந்திரம் மூலம்தான் எல்லாவற்றையும் செய்வார். இப்படிச் செய்வது இரட்டிப்பு வேலை என்றாலும் வேறு வழியில்லை.
ஆனால் சாதாரணப் பிள்ளைகளோடு சேர்ந்து படிப்பது ஹெலனுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. அத்தோழமைகளை நெருக்கமாக நினைத்தார்.
ஏனெனில் பள்ளிக்கூடத்தின் அருகிலேயே சில மாணவிகளுடன் சேர்ந்து வீடெடுத்துத் தங்கினார்கள். அழகான வீட்டில் சிறிய குடும்பம்போல் இருந்தனர்.
அவர்களோடு சேர்ந்து விளையாடுவது, பனியில் ஆட்டம் போடுவது, நீண்ட தூரம் சேர்ந்து நடப்பது, கண்ணாமூச்சி ஆட்டம் என வாழ்க்கை ஒருபுறம் குதூகலமாக இருந்தது. மறுபுறம் பாடங்களின் பொறுப்பாகவும் இருந்தது.
அதிக ஆர்வமிருந்த பாடங்களைப் பற்றித் தோழிகளிடம் விவாதித்தார். அவர்களும் ஹெலனின் மொழியைப் புரிந்துகொண்டார்கள். இதனால் ஸல்லிவனுக்கு அவர்களின் உரையாடலை எடுத்துச் சொல்லும் வேலை மிச்சமானது.
அதேபள்ளியில் படிக்கத் தங்கை மில்ட்ரெட்டும் வந்து சேர்ந்தார். அக்காவும் தங்கையும் ஒருவரையொருவர் பிரியாமல் இருந்தனர். ஹெலன் படிப்பதற்குத் தங்கையும் உதவினார்.
மாணவியைப்போல் வகுப்பிற்குச் செல்லும் ஸல்லிவன் ஆசிரியர் சொல்வதை எழுதிக்காட்டுவார். ஆனால் அதில் பல புதிய வார்த்தைகள் இருக்கும். அதற்கெல்லாம் அர்த்தம் தேடும் கூடுதல் வேலையும் இருந்தது. சிரமப்பட்டாலும் ஹெலன் தன் சொல்வளத்தை அதிகப்படுத்திக்கொண்டார்.
மேடாக அச்சடிக்காத புத்தகங்களை ஸல்லிவன் படித்துக்காட்டுவார். மீண்டும் மீண்டும் அளவுக்கதிகமான ஒரே வேலையை யார் செய்தாலும் மனச்சோர்வு ஏற்படும். ஆனால் ஸல்லிவன் அப்படி அல்ல. ஹெலனுக்கு ஏற்படும் மனச்சோர்வையும் சேர்த்து அவர்தான் போக்குவார். அந்த அளவிற்கு மாறா அன்பு மனம் கொண்டவர்.
ஜெர்மன் மொழியின் சிறந்த இலக்கியப் படைப்புகள் அனைத்தையும் படித்து முடித்தார். பாதி பிரெய்லியிலும், மீதியை ஸல்லிவன் உதவியாலும் படித்தார். அதில் ஹெலனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அலாதியானது. ஷில்லரின் பாடல்கள், ஃபிரடெரிக்கின் வரலாற்றுச் சாதனைகள் எனச் சில புத்தகங்கள் மேலோங்கி நின்றன. டை ஹர்சிரெய்சியைப் படித்து முடித்ததற்காக வருத்தப்பட்டார். ஏனெனில் புத்தகம் முடிந்துவிட்டதாம்.
அப்புத்தகத்தில் மலைகள் பற்றிய வர்ணனை, அது சூரிய ஒளியில் தகதகப்பது, இசையெழுப்பும் நீரோடை, வனத்தின் அழகு, காடு, மலை, அருவி என இயற்கை அழகுகள் மட்டும் இடம்பெறவில்லை. நகைச்சுவை, பாரம்பரியத்தின் புனிதம், கடந்தகாலக் கற்பனை வெளி போன்றனவும் இருந்தன. இயற்கையை நேசிக்கும் படைப்பாளிகளால் மட்டுமே இப்படி எழுத முடியும் என நினைத்தார்.
ஆங்கில இலக்கியத்தை கில்மன் கற்றுக்கொடுத்தார். அமெரிக்காவை மையப்படுத்திய சில முக்கிய இலக்கியப் புத்தகங்களை கில்மனுடன் சேர்ந்து படித்தார். கில்மனுக்கு இருந்த பரந்துபட்ட அறிவை ஹெலனால் உணர முடிந்தது. அவருடைய எளிதாகப் புரிய வைக்கும் திறன் ஹெலனுக்குப் பிடித்திருந்தது. வகுப்பில் கொடுத்த குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு படித்திருந்தால் இயந்திரம்போல் இருந்திருப்பார். கில்மனுடன் சேர்ந்து படித்த அனுபவம் அலாதியானது.
அரசியலைப் பொருத்தவரை பர்க்கினுடைய புத்தகங்கள் ஹெலனுக்குப் பேரறிவைப் புகட்டின. அமெரிக்கா, இங்கிலாந்து என இரண்டு எதிரெதிர் நாடுகளின் அச்சாணியாக விளங்கும் கதாபாத்திரங்களை அவர் புத்தகத்தில் உலவவிட்டார். பர்க்கினின் நடை புத்தகத்திற்குள் மூழ்கடித்தது. அமெரிக்காவின் வெற்றியையும், இங்கிலாந்தின் தோல்வியையும் அது அடையப்போகும் அவமானத்தையும் பறைசாற்றியிருந்தது. இந்த எச்சரிக்கை மணி ஜார்ஜ் மன்னரின் அமைச்சரவைக்கு ஏறவில்லை. அப்படியே நடந்துமுடிந்தபோது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். கூடவே வருத்தமும் பட்டார்கள். நம்பிக்கை கொண்ட மக்களைக் காப்பாற்ற நடவடிக்க எடுக்கவில்லை என்று.
சாமுவேல் ஜான்சனின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகமும் அவரைக் கவர்ந்தது. வேதனையை மட்டுமே உணவாக உண்டு நிற்கும் தனிமர வாழ்க்கை அது. எவ்வளவு துயரங்களுக்கு ஆளானாலும் அவர் ஏழைகளுக்கு உதவி செய்தார். ஆறுதலாக நின்றார். ஹெலன் மனதிற்குப் பல திறப்புகளைக் கொடுத்த புத்தகம் அது.
ஏற்கெனவே படித்த லத்தீன் இலக்கணத்தை மறுபடியும் புதுப்பித்துக் கொண்டார். படிப்புத் திட்டத்தில் இருந்த கிரேக்க அத்தியாயங்களைப் படித்து முடித்தார்.
எட்டாக்கனியான கணிதத்தையும் தேர்ச்சிபெறும் அளவில் கற்றுவந்தார்.
எதிர்பார்த்த நாள் வந்தது. ரேட்கிளிஃபில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் ஜூன் 29, 1897 முதல் ஜூலை 3 வரை நடந்தது. ஜெர்மன் மொழியின் ஆரம்பநிலை, சிறப்பு நிலை, பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம், ரோம் என்று ஒவ்வொன்றும் தனித்தேர்வு. 16 மணி நேரத்திற்குள் தேர்வு எழுதி முடித்தால்தான் தேர்ச்சி பெற முடியும். ஆரம்ப நிலைத் தேர்வுகளுக்கு 12 மணி நேரம். சிறப்பு நிலைத் தேர்வுகளுக்கு 4 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் ஒரே சமயத்தில் தொடர்ச்சியாக 5 மணி நேரம் தேர்வெழுத வேண்டும்.
விடைத்தாள்களை ரேட்கிளிஃபிற்குப் பாதுகாப்பாகச் சென்று சேர்ப்பர். பெயரை எழுதாமல் எண்ணைக் குறிப்பிட்டு எழுதும் வழக்கம் ஹெலன் காலத்திலேயே கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய எண் 233. ஆனால் மற்ற மாணவர்களைப்போல் கையால் தேர்வெழுதவில்லை. தட்டச்சு செய்தார். எனவே எந்த எண்ணும் அவர் அடையாளத்தை மறைக்கவில்லை.
தட்டச்சுப் பொறியின் சத்தம் மற்ற மாணவர்களுக்கு இடையூராகும் என்று தனி அறையில் அமர வைத்துத் தேர்வெழுத வைத்தனர். ஸல்லிவனுக்குத் தேர்வறைக்குள் அனுமதி இல்லை. விடையையும் சேர்த்துச் சொல்லிக்கொடுத்துவிடுவார் என்பதால். வினாத்தாளை வாசித்துக்காட்ட கில்மன் வந்தார். மற்ற யாரும் உள்ளே வராதபடி இருக்க வாசலில் ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார்.
முதல்நாள் ஜெர்மன் மொழித்தேர்வை எழுதினார். கில்மன் ஒவ்வொரு வினாவையும் இரண்டு முறை சொன்னார். பயமாக இருந்ததால் வினாத்தாள் சற்றுக் கடினமாக இருந்தது. இப்படியான கட்டுப்பாடுகளுடன் கூடிய தேர்வை அதற்குமுன் அவர் எழுதியதில்லை. எல்லாத் தேர்விலும் எழுதி முடித்தபிறகு விடையை வாசித்துக் காட்டுவார்கள். இந்தத்தேர்வில் அப்படிச் செய்யவில்லை. எனவே நினைவில் இருந்த தவறுகளை மட்டும் கில்மன் மூலம் திருத்திக்கொண்டார். அந்தத் திருத்தங்கள் பற்றிய குறிப்புகளையும் விடைத்தாளின் இறுதியில் எழுதிவைத்தார்.
முதல்நாள் தேர்வைத்தான் கடினமாக உணர்ந்தார். அடுத்தடுத்த தேர்வுகளை எளிதாக எதிர்கொண்டார். ஏனெனில் ஹார்டுவேர்டின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களைக் கொண்டு கில்மன் ஏற்கெனவே மாதிரி தேர்வுகள் நடத்தியிருக்கிறார். அதில் ஹெலனும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஜெர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஹானர்ஸ் பட்டத்துடன் தேர்ச்சிபெற்றார். ஹெலனின் கடின உழைப்பாலும் முயற்சியாலும் நுழைவுத்தேர்வில் வெற்றி கிடைத்தது. ஹார்வேர்டிற்குள் செல்லும் சோதனைகள் நிறைந்த பயணத்தின் பாதை முடிவுக்கு வந்தது.
(தொடரும்)