ஹெலன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெறக் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்தது. கணக்குப் பிணக்காகப் பல நியாயமான காரணங்கள் இருந்தன. மாற்றுத் திறனாளிகள் எந்தவிதக் குறியீட்டு உபகரணங்களும் இன்றிக் கற்பது கடினம். வகுப்பறை பெரிது. மாணவர்கள் அதிகம். ஆசிரியர்களால் ஹெலன் என்ற சிறப்புச் சிறுமி மீது தனிக் கவனம் செலுத்தமுடியவில்லை.
பிரெய்லி புத்தகங்கள் கிடைக்கவில்லை. அல்ஜீப்ரா, ஜியோமிதி மட்டுமல்ல இயற்பியல் கணக்குகளுக்கும் தீர்வு காண வேண்டும். அதற்கான பிரத்யேக பிரைய்லி எழுத்து இயந்திரம் தேவைப்பட்டது. இதனால் படிப்பு தொடங்கத் தாமதமானது. ஒவ்வொன்றாகக் கிடைக்கப்பெற்றதும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்தது. எதை எப்படிச் செய்யலாம் எனத் திட்டம் வகுத்துக்கொண்டார்.
போர்டில் வரையும் ஜியோமிதிகளைப் புரிந்துகொள்ள முடியாது. நடத்துவது என்ன? அது எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள அந்த இயந்திரம் உதவியது. அதில் வரைய அளவெடுக்க வேண்டும். கண் தெரியாமல் எப்படி முடியும்? எல்லாப் பாடத்திலும் அதற்கே உரிய சவால்களும் தடைகளும் நிறைந்திருந்தன. அல்ஜிப்ராவும் ஜியோமிதியும் பிடி கொடுக்காததற்குக் காரணம் எப்படி விளக்க வேண்டுமோ அப்படி விளக்கவில்லை. ஆசிரியர்களுக்கும் இப்படியான பாடத்தை இப்படியான மாணவிக்கு விளக்குவது சவால் நிறைந்தது. வடிவங்களையும் அவற்றிற்கிடையேயான தொடர்புகளையும் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தார். அந்நேரத்தில் தைரியம் இழந்து மூர்க்கமாகக் கோபப்படுவார். ஹெலனின் கஷ்டங்கள் அனைத்தும் மூர்க்கமாக வெளிப்பட்டது ஸல்லிவனிடம் மட்டுமே. ஆனால் ஸல்லிவனோ ஹெலனின் கோணலை நேராக்கத் தெரிந்த மாயாஜால வித்தைக்காரர். அதிலிருந்து மீண்ட பிறகு ஹெலன் தன் கோபத்தை நினைத்து வருந்தி இருக்கிறார்.
புதிய வெளிச்சமாக ஆசிரியர் கீத் வந்தார். அவர் சொல்லிக்கொடுத்த கணிதம் புரிந்தது. காலமும் பழக்கமும் ஹெலனின் கஷ்டத்தை மெல்லக் குறைத்தது. நம்பிக்கையோடு படிப்பில் மூழ்கினார்.
கேம்பிரிட்ஜ் பள்ளியில் முதலாம் ஆண்டை முடித்ததும் ஹெலன் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றுவிடுவார் என்று அனைவரும் நம்பினர். முதலில் ஐந்து வருடங்கள் படிக்கத்தான் ஒப்பந்தமானது. ஆனால் ஹெலனின் முதல் வருட வெற்றியைப் பார்த்து ஸல்லிவன் உட்படப் பல ஆசிரியர்களும் இரண்டு வருடத்தில் முடித்துவிடுவார் என நம்பினர். அதற்குக் கடுமையாக உழைத்தால் நிறைவேறும். இல்லையேல் கூடுதலாக மூன்றாண்டுகள் பள்ளியில் இருக்க நேரிடும் என்றனர். ஹெலனுக்கு ஐந்தாண்டு யோசனை சற்றும் பிடிக்கவில்லை. சகத் தோழிகளுடன் கல்லூரிபோக விரும்பினார். அதற்காக உழைத்தார்.
ஒருநாள் உடல்நலமின்றிப் பள்ளிக்குச் செல்லவில்லை. அது சாதாரண நலக்குறைவு என்று ஸல்லிவன் நம்பினார். ஆனால் பள்ளியின் முதல்வர் கில்மன் ஹெலன் உடலளவிலும், மனதளவிலும் பாதித்திருப்பதாகச் சொன்னார். ஹெலன் படிப்பிற்காக அதிகம் சிரமப்படுவதும், கடுமையாக உழைப்பதும் கில்மனுக்கு உடன்பாடில்லை. ஸல்லிவனிடம் ஆட்சேபம் தெரிவித்தார். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொன்னார். ஒருநாள் உடல்நலத்தைக் காரணம் காட்டிச் சக மாணவிகளோடு இறுதித் தேர்வை எழுதமுடியாதபடி ஹெலனுக்கான பாடத்திட்டத்தைத் தனியாக அமைத்தார்.
இதனால் கில்மனுக்கும் ஸல்லிவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஸல்லிவன் இல்லாமல் ஹெலனால் எப்படிப் படிக்க முடியும்? இனிப் படிப்பை அங்கு தொடர வேண்டாம் என ஹெலனின் தாயார் ஹெலனையும் மில்ட்ரெட்டையும் வீட்டிற்கு அழைத்துக்கொண்டார்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு அதே பள்ளி, மீண்டும் அங்கு படிப்பைத் தொடர ஏற்பாடு செய்தது. அதற்குள் கோடை விடுமுறையைக் கழிக்க ஹெலனும் ஸல்லிவனும் ரென்தாம் சென்றிருந்தனர். அங்கு சாம்பர்லின்ஸ் என்ற நண்பரின் வீட்டில் தங்கினார்கள். கீத் வாரம் இருமுறை ரென்தாம் சென்று அல்ஜிப்ரா, ஜியோமிதி பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்.
அவர் சொல்வதை எல்லாம் ஹெலன் புரிந்துகொள்ள ஸல்லிவனும் உடன் இருந்து விளக்கினார். ஹெலனுக்கு மட்டுமான வகுப்பு என்பதால் புரியாததை மீண்டும் விளக்கிக் கூற ஆசிரியருக்கு நேரம் இருந்தது. தனித்தச் சூழல் என்பதால் ஹெலனும் தன் இயல்புநிலையிலிருந்து பாடத்தைக் கவனித்தார்.
மொழிப்பாடங்கள், இலக்கியங்கள்போல் கணிதம் சுலபமாக இருக்கக் கூடாதா என்று நினைப்பார். அப்படிப் பெருமூச்சு விடவைத்த கணிதத்தைத்தான் கீத் எளிமையாக மாற்றிக்கொடுத்தார். ஹெலனின் மூளைக்குள் அமரும் அளவிற்குச் சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து வைத்தார். அதில் வெற்றியும் பெற்றார்.
கீத் தேர்விற்குத் தேவையான பிற மொழிப்பாடங்களையும் எடுத்தார். பாடம் மட்டும் அல்ல, சுறுசுறுப்பாகச் செயல்படவும், ஆர்வத்தோடு கற்கவும் ஹெலனுக்குப் பயிற்சி கொடுத்தார். அவசரமாகச் செய்து தீர்வு கிடைக்காமல் போவதைவிட நிதானமாக யோசித்து முடிவெடுக்கச் சொன்னார்.
ஸல்லிவனிடம் காட்டுவதைப்போல் கீத்திடமும் ஹெலன் எதிர்வினை ஆற்றுவார். அதைப் பொருட்படுத்தாமல் இதமாகவும் பொறுமையாகவும் நடந்துகொண்டார் கீத். யார் கற்றுக்கொடுக்க வந்தாலும் ஹெலன் அவர்களுக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுத்துவிடுவார். கல்லூரியில் சேர்வதற்காக கீத்திடம் படித்த ஒரு வருடம் ஹெலன் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டானது.
தேர்வறைக்கு ஸல்லிவனை அனுமதிக்க முடியாது என்பதால் பார்வை அற்றோருக்கான பெர்க்கின்ஸ் கல்வி நிலையத்திலிருந்து வைலிங் என்பவரை அமர்த்தினார்கள். பிரெய்லியில் எழுதிக்காட்டுவார். ஸல்லிவன்போல் கையில் எழுதிக்காட்ட மாட்டார். ப்ரோக்டர் என்ற பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த ஒழுங்கு நிர்வாக அதிகாரியும் அந்நியர். தேர்வறையின் மொத்தச் சூழலும் ஹெலனை அச்சுறுத்தியது. மொழிப்பாடங்களுக்கு மட்டும்தான் பிரெய்லி பொருத்தமாக இருக்கும்.
ஜியோமிதியும் அல்ஜிப்ராவும் வரும்போதுதான் சிக்கல். ஹெலனின் பெரும்பான்மை நேரத்தை அவை சாப்பிட்டு ஏப்பம்விட்டிருந்தன. ஆனாலும் தேர்வு திருப்திகரமாக இல்லை. ஹெலன் தனது அல்ஜிப்ராவை இங்கிலாந்தின் பிரெய்லி இயந்திர முறையில் கற்றிருந்தார். தேர்வு நடந்ததோ பரிச்சயமில்லாத அமெரிக்க பிரெய்லி இயந்திரத்தில். அதன் அடையாளக் குறிகள் மாறுபட்டிருந்தன.
தேர்வு ஆரம்பிப்பதற்கு இரண்டு நாள் முன்பு அல்ஜிப்ராவிற்கான ஹார்டுவேர்டின் பிரெய்லி கேள்வித்தாள் ஒன்றை வைனிங் அனுப்பியிருந்தார். கேள்வியைப் படித்துப் பார்த்துக் கலங்கிப்போனார் ஹெலன். அதில் ஒன்றும் புரியவில்லை. உடனடியாக வைனிங்கிற்கு ஒரு கடிதம் எழுதி விளக்கம் கேட்டார். வைனிங் குறியீடுகளை விளக்கும் அட்டவணையோடு இன்னொரு கேள்வித்தாளை அனுப்பிவைத்தார்.
வேறு வழியில்லை. உடனடியாகப் புதிய குறியீடுகளைக் கற்கும் வேலையில் இறங்கினார். கணிதத்தேர்விற்கு முதல்நாள் குறியீடு புரியாத கணக்குகளுடன் போராடிக்கொண்டிருந்தார். பிராக்கெட், ராடிகல் போன்றவற்றின் சேர்க்கை தெரியவில்லை. இத்தனைக்கும் கீத் உடன் இருந்தார். தேர்வுத் துயரின் சாயல் முதல்நாளே படர்ந்தது. மறுநாள் நேரமிருக்கச் சென்றார். அந்த இடைவெளியில் வைனிங் அமெரிக்க இயந்திரத்தின் அடையாளக் குறியீடுகளை விளக்கினார்.
வரிவரியாக அச்சடித்த முறைதான் ஹெலனுக்குப் பழக்கம். ஆனாலும் குறியீட்டுச் சிரமத்தை எதிர்கொள்ள இயந்திரத்தின் முன் அமர்ந்தார். பழைய இயந்திரமும் புதிய இயந்திரமும் சேர்ந்து குழப்பியதில் மனம் ஒன்றவில்லை. ஜியோமிதியைவிட அல்ஜிப்ராவைக் கஷ்டமாக உணர்ந்தார். கடைசி நேரத்தில் கற்றுக்கொண்ட குறியீடுகளும் தெளிவாக நினைவில் இல்லை.
தட்டச்சுப் பொறியில் எழுதியது என்ன என்று மீள வாசித்துக்காட்டவில்லை. கணக்கிற்கான விடை மனதிற்குள் கிடைக்கும்படி கீத் பயிற்சி அளித்திருந்தார். விடைத்தாளில் எழுதும் பயிற்சி போதவில்லை. வழிமுறைகளை யோசித்து ஒரு முடிவிற்கு வருவதற்குள் வினாத்தாளை அடிக்கடித் தொட்டுப்பார்த்தார். நிதானம் அவசியம் என்று கீத் சொன்னதை வைத்து மெதுவாக எழுதினார்.
ஹெலனின் நுழைவுத் தேர்வு சவால்கள் நிறைந்தது. ஆனால் ரேட்கிளிஃப் நிர்வாகக்குழு அதை உணரவில்லை. ஹெலன் எதிர்கொள்ளப்போகும் கஷ்டங்கள் பற்றிச் சிந்திக்கவில்லை. அவர்களுக்குக் கஷ்டப்படுத்தும் உள்நோக்கம் இல்லை. ஆனால் அவர் பாதையில் முட்கள் போடப்பட்டிருந்தன. புறச் சூழலே தெரிந்துகொள்ள முடியாத மாணவிக்குச் சூழலைச் சற்று எளிமையாக்கி இருக்கலாம். ஆனாலும் அது அழகல்லவே. சிறப்புத் திறன் வாய்ந்தவர் பொதுப்பந்தயத்தில் ஓடி வென்றார். இன்றுவரை பிறருக்கு முன்னோடியாக இருக்கிறார்.
ஒரு ரோமானியக் கூற்றை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வார். ‘ரோமிலிருந்து நாடு கடத்தப்படுவதென்பது, ரோம் நாட்டிற்கு வெளியே வாழ்வதைத் தவிர வேறொன்றும் இல்லை’ என்று எளிதாக நம்பினார். எல்லா விஷயத்திலும் இக்கூற்றைப் பொருத்திப் பார்த்தார். பலமான சக்தி கொண்ட மனம் பாதையின் தடங்கல்களைத் தகர்த்தெரிந்து முன்னேறியது.
(தொடரும்)