கல்லூரியில் சேரும் போராட்டம் முடிவுற்றது. 1900இல் கல்லூரிக் கனவு நிறைவேறியது. கல்லூரிக்குச் செல்லும் முதல் நாளுக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தார்? ரேட்கிளிஃபிற்குச் சென்ற முதல்நாள் கனவுக் கோட்டையோடு நுழைந்தார். புத்தம் புது பரவசம் தந்த நாள் அது. கல்லூரியில் கால் வைத்த அகத்தின் மகிழ்ச்சி கன்னத்தில் மினுமினுப்பாக வெளிப்பட்டது. வெற்றியின் மேடையில் ஏறிய நாள் அது. கற்பனை செய்துவைத்திருந்த ஒளிமய உலகிற்குள் நுழைந்தார்.
கல்லூரியில் தன்னொத்த மாணவிகளோடு கைகோர்க்கலாம், பக்கபலத்தோடு தன் பயணத்தை மேற்கொள்ளலாம் என நினைத்தார். ஆர்வத்துடன் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தார். எதையும் அறிந்துகொள்ளும் திறன் தனக்குள் இருப்பதை உணர்ந்தார். மற்றவர்களைப்போலவே சுதந்திரமாக இருக்க நினைத்தார்.
மகிழ்ச்சியோ, துன்பமோ இரண்டையும் உயிர்ப்புடன் அனுபவிக்க வேண்டும். அது தொட்டுணரக்கூடியதாக இருக்க வேண்டும் என நினைத்தார். சக மாணவர்களும் ஆசிரியர்களும் புத்திசாலிகளாக இருந்தார்கள். இனி பழைய முறைப்படி கல்வி கற்க வேண்டாம். எல்லோருக்கும் பொதுவான புதிய முறைக்குள் ஐக்கியமாக வேண்டும் என நினைத்தார்.
கல்லூரி என்பது பரவசம் பொங்கும் பேரூரைகள், விளக்க உரையின் அருவி என்றெல்லாம் கற்பனை செய்துவைத்திருந்தார். ஆனால் உண்மை அப்படி இல்லை. கற்பனை செய்து வைத்திருந்த இளமைக் காலக் கனவுகள் சட்டெனப் பொலிவிழந்தன. கல்லூரியின் பாதகங்கள் ஒவ்வொன்றாக முளைவிட்டன. அதில் முக்கியமானது நேரப்பற்றாக்குறை.
தன்னைப் பற்றிச் சிந்திப்பதற்கும், தன்போக்கில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும் நேரம் இல்லாமல்போனது. ஓய்வாக இருந்தால்தான் அடிமனதின் வீணையை மீட்டி அதன் இசைக்குச் செவி கொடுக்க முடியும். மாலைப்பொழுதில் ஒன்றாக அமர்ந்து கதைக்கலாம். அதையெல்லாம் இழந்தார். சக தோழியர்களின் சிந்தனைகளுடன் உரையாட முடியவில்லை. சின்னச் சின்னக் கனவுகள்கூட நிறைவேறாத ஏமாற்றத்தைக் கொடுத்தன.
அதனால் என்ன? கல்லூரிக்குச் சென்றது கற்றுக்கொள்ளத்தான். பிறருடன் உறவாட அல்ல என்று தேற்றிக்கொண்டு முன்னேறினார். வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பே தனக்குப் பிடித்த தனிமை, கற்பனை, புத்தகங்கள் என யாவற்றையும் வெளியில் உள்ள பைன் மரத்தில் கட்டிவைத்துவிட்டு உள்ளே செல்வார். அதை எதிர்கால மகிழ்ச்சிக்கான தியாகமாக நினைப்பார். மறுபுறம் எதிர்காலத் தேவையைவிட நிகழ்காலக் கொண்டாட்டத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கும்.
கல்லூரியிலும் அதே பழைய சூழல்களை எதிர்கொண்டார். வகுப்பில் தனியாக அமர்ந்தார். ஆசிரியர்களின் விரிவுரைகளை முடிந்த அளவிற்கு வேகமாகக் கைகளில் எழுதிக்காட்டப்பட்டன. முயலைத் துரத்தும் வேட்டை நாய்போல் வார்த்தைகள் வேகமாகப் பாயும். சில சமயம் கோட்டை விடுவார். காதால் கேட்டுக் குறிப்பெடுப்பவர்களின் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை. இயந்திரத்தனமாக எழுதிக்கொண்டார்கள்.
ஹெலன் அதுவரை அறியாத வேகம் என்பதால் ஆசிரியர்களோடு ஓடமுடியவில்லை. அவர்களின் தனித்தன்மையை உணரமுடியவில்லை. பாய்ந்து வரும் வார்த்தைகளின் வேகத்தை மட்டுமே கவனித்தார். வழக்கம்போல் குறிப்பெடுக்க மாட்டார். வீட்டிற்குச்சென்று நினைவில் இருந்ததை மட்டும் தட்டச்சு செய்துகொள்வார்.
இப்படிச் செய்ததில் ஹெலனுக்கு எது புரியவில்லை என்பதை ஆசிரியர்களால் அடையாளம் காண முடிந்தது.
அளவுக்கதிக வேகம் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தின. சின்ன விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இல்லையேல் சிக்கல். கல்லூரியின் எல்லாப் புத்தகங்களும் பார்வை இல்லாதவர்களுக்கானதல்ல. எல்லாவற்றையும் கைகளில் எழுதிக்காட்டிப் புரிய வைக்க அதிக நேரம் எடுத்தது ஸல்லிவனுக்கு. ஒன்றிரண்டு பாடங்களைச் செய்வதற்குள் மற்ற மாணவிகள் பாடத்தை முடித்துவிட்டு ஆட்டம் போடுவார்கள். ஹெலனுக்கு ஆத்திரமாக வரும். ஆனால் விரைவில் அதிலிருந்து வெளிவந்துவிடுவார். ஏனெனில் பார்வையிழந்தவர்களுக்கான பென்சில்வேனியா கல்வி மையத்திலிருந்து வில்லியம் மேட், ஆலன் இருவரும் பிரெய்லியில் அச்சடித்த புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். அது மிகப்பெரிய உதவியாக இருந்தது. யார் யாரோ தன் கல்விக்காக உதவுவது ஊக்கமாக இருந்தது.
ஞானத்தை அடையக் கடினப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர், அதில் மெல்ல முன்னேறினார். அது ராஜபாட்டை அல்ல. பாதை இல்லாத வழி. முதல் ஆளாகப் பாதை போட்டுக்கொண்டு மலை உச்சியை அடைய வேண்டும். பலதடவை வழுக்கி விழுந்தார். மீண்டும் எழுந்தார். சிரமப்பட்டு தடைக்கற்களின் மீது அடியடியாக முன்னேறினார். முடிவில் முடிவின்றி விரியும் வானம் இருக்கும். இப்போது எட்டிவிடும் தூரத்தில்தான் மேகங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கையோடு ஏறினார்.
ஆனால் கல்லூரியோ அனைத்தையும் உருவாக்கும் ஏதென்ஸாக இல்லை. பெரிய இலக்கியப் படைப்பு எனில் ஹெலனுக்குப் படைப்பைவிடப் படைப்பாளி மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும். இங்கோ மேதைகளையும் அறிவாளிகளையும் நினைவுகூரவில்லை. அவர்கள் எழுத்தால் உயிர்வாழ்கிறார்கள் என்பதன் அறிகுறிகளைக்கூடக் காட்டவில்லை. மம்மிகளாகப் புதைத்துவிட்டதாக நினைத்தார்.
ஆசிரியர்கள் பாடத்தைக் கசக்கிப் பிழிந்து ஊற்றினாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். கனிந்த பழங்களை மரங்கள் உதிர்த்துவிடுவதைப்போல் ஏற்றுக்கொள்ள முடியாத சில விளக்கங்களை, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஹெலனால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு தளிர் துளிர்விடுவதைப்போல் அதன் படிநிலை வளர்ச்சியை அறிந்துகொள்ள நினைத்தார். ஆசிரியர்களின் விளக்கங்களும் யூகங்களும் புரியாதபோது பொறுமை இழப்பார். வெறும் இறக்கைகள் பறக்க முடியாமல் காற்றில் அலைவதைப்போல் சிந்தனையில் இருக்கும் விஷயங்கள் அலைபாயும். புகழ்பெற்ற படைப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. சலிப்பு தட்டாமலும், குழப்பத்தில் ஆழ்த்தாமலும் பாடங்களைப் புரியவைக்க வேண்டும் என நினைத்தார்.
சில பேராசிரியர்கள் தரும் விளக்கங்கள் ஹெலனுக்குப் பிடிக்கும். பார்வை கிடைத்ததைப்போல் பிரகாசம் அடைவார். அந்த வகையில் பேராசிரியர் கிட்ரெட்ஜ், ஷேக்ஸ்பியரை அப்படியே கண் முன் நடமாடவிடுவார்.
ஹெலனைக் கவர்ந்த இன்னொரு ஆசிரியர் சார்லஸ் டவுன்சென் கோப்லண்டு. இலக்கியத்தை அதற்கே உரிய வசீகரத்துடன் நடத்தினார். இலக்கிய மேதைகளின் சாரத்தைப் பிழிந்து கொடுப்பார். அவர் வகுப்பு நேரத்தில் ஆனந்தத் தாண்டவமாடலாம். அவருடைய குரல் ஆன்மா முழுவதும் நிறையும். பட்ட மரம் பசுந்தளிர் விடும் அளவிற்கு நடத்திவிடுவார். மாணவர்கள் நிறைவாய் வீடு திரும்பினார்கள்.
ஹெலன் தான் கற்க நினைத்த பாடங்களில் பாதியை அகற்ற நினைத்தார். அளவுக்கு மீறி சுமை ஏற்றினால் விலை கொடுத்து வாங்கிய பொக்கிஷங்களை அனுபவிக்க முடியாது. புரியாமல் நடத்தும் பாடங்களைப் படிக்கவில்லை. வெவ்வேறு மொழிகளில் இருக்கும் ஐந்து புத்தகங்களை ஒரு நேரத்தில் படிப்பது சாத்தியமில்லை. எதற்காகப் படிக்கிறோமோ அதை இழந்துவிடக்கூடாது என நினைத்தார்.
முதல் ஆண்டில் ஃபிரெஞ்ச், ஜெர்மன் மொழிகள், ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுதல், ஆங்கில இலக்கியம், வரலாறு போன்ற பாடங்கள் இருந்தன. ஃபிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளில் சில பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்தார். ரோம் சாம்ராஜ்ஜிய வீழ்ச்சியிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை வேகமாக வாசித்து முடித்தார். ஆங்கில இலக்கியத்தில் மில்டனின் கவிதைகளை ஆராய்ந்து படித்தார்.
பயிற்சிப் பாடங்கள், Hours Test, ஆண்டின் இரண்டு சமஸ்டர்கள் என அனைத்தையும் தட்டச்சு இயந்திரத்தில்தான் எழுதுவார். லத்தீன் யாப்பிலக்கணத்தைப் படிக்கத் தொடங்கினார். அதன் அளவீடுகளைக் குறிக்க ஒரு குறியீட்டு முறையை வகுத்துக் கொண்டார். அதைப் பல தட்டச்சு இயந்திரங்களில் முயற்சி செய்து பார்த்தார். ஹாமண்டு டைப்ரைட்டர் மட்டுமே பொருத்தமாக இருந்தது. ஹெலனின் வித்தியாசமான தேவைகளுக்கெல்லாம் அது ஈடுகொடுத்தது. ஒரு அடுக்கில் கிரேக்க எழுத்து அச்சு வடிவங்களும், அடுத்த அடுக்கில் ஃபிரெஞ்சு, கணிதக் குறியீடுகள் அடங்கிய எழுத்துகளும் இருந்தன. தேவைக்கேற்ப மேலும் சில அடுக்குகளைப் பொருத்திக்கொண்டார். எந்த மொழியைத் தட்டச்சு செய்ய வேண்டுமோ அதை மேலே கொண்டுவந்து செய்வார். ஹாமண்டால்தான் ஹெலன் தன் கல்லூரிப் படிப்பை எளிதாகப் படித்தார்.
இரண்டாவது வருடம் பைபிள், அமெரிக்க ஐரோப்பிய அரசுகள், ஹோரசின் என்பவருடைய கிரேக்கக் கவிதைகள், லத்தீன் நகைச்சுவை நாடகங்கள் ஆகிய பாடங்களைப் படித்தார். கிரேக்கக் கவிதைகள் ஐம்பதடி முதல் இருநூறு அடிவரை இருந்தாலும் ஆர்வம் குறையாவது படிப்பார். ஆங்கிலக் கட்டுரை எழுதும் வகுப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
எலிசபெத் கால இலக்கியம், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், தத்துவம், பொருளாதாரம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். தத்துவத்தின் வாயிலாகப் பல ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியத்தின் சிந்தனைப் போக்குகள் புரிந்தன. அதுவரை அந்நியமாக, அர்த்தமற்றவையாகத் தோன்றியவற்றிற்கெல்லாம் புது அர்த்தம் பிடிபட்டன.
தேர்வுகளை மனதில் வைத்து அவசரமாகப் படிக்கும்போது எண்ணற்ற செய்திகளின் சுமைதாங்கியாக மூளை மாற்றியது. படிப்பதை எல்லாம் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர முடியாதா என நினைப்பார். அவர் படித்துக் கட்டிய வெண்கலக் கடைக்குள் யானைகள் புகுந்து உருட்டின. திடீரென வானத்திலிருந்து ஆலங்கட்டிகள் தலையில் விழும். தப்பித்து ஓட நினைப்பார். தேர்வைக் கண்டுபிடித்தவர் மட்டும் ஹெலன் கைகளில் கிடைத்திருந்தால் தன் மூர்க்கத்தால் துவம்சம் செய்திருப்பார். அந்த அளவிற்கு அதிகம் பயமுறுத்தியது தேர்வுகள்தான்.
ஹெலனின் விரல் நுனிக்கு வீரம் வரும்வரை அதைக் கண்டு மிரண்டார்.
எந்நேரமும் அவற்றோடு மல்லுக்கு நிற்பார். தேர்வை மண்ணைக் கவ்வ வைப்பார். அதுவோ மீண்டும் எழுந்துவந்து கோபத்தோடு நிற்கும். தேர்விற்கு முன் புரிந்துகொள்ள முடியாத சூத்திரத்தையும், ஜீரணிக்க முடியாத தேதிகளையும் மனப்பாட மூட்டைக்குள் அடைத்து வைத்தார். அப்படியான புத்தகங்களைக் கடலின் ஆழத்தில் புதைத்து வைக்கலாம் என்றும் தோன்றும்.
கல்லூரி முடியும் வரை தேர்வுத் தொல்லைகளுக்குப் பஞ்சமே இருக்காது. எந்நேரமும் புலி வருகிற பயம்தான். ஒரு நாள் புலியும் வந்தது. ஹெலன் அதிர்ஷ்டசாலி எனில் படித்தது நினைவிற்கு வரும். மூளை உடனே உதவிக்கு ஓடிவரும். பல நேரம் அது காதில் விழாததைப்போல் அமைதியாகத் திரும்பிக்கொள்ளும். ஹெலன் அலைபாய்ந்துகொண்டிருப்பார். இரக்கப்பட்டால் எட்டிப் பார்க்கும். இல்லையேல் இறக்கை முளைத்துப் பறந்துபோய்விடும்.
ஒருமுறை ஹஸ் பற்றியும் அவருடைய படைப்புகள் குறித்தும் சுருக்கமாக எழுதச் சொல்லிக் கேள்வி இருந்தது. உண்மையில் ஹெலன் அவரைப் பற்றிப் படித்திருந்தார். ஆனால் அப்போது நினைவிற்கு வரவில்லை. யார் இவர்? ஏதோ எழுதினாரே என்று குழம்பினார். கந்தல் துணிகள் அடைத்த நினைவுப் பையிலிருந்து ஒரு பட்டுத்துணியை மட்டும் தேட வேண்டும். தலைக்குள் ஏதோ ஓரிடத்தில் அது முட்டிக்கொண்டிருந்தது.
16ஆம் நூற்றாண்டில் ரோமன் கிறித்தவச் சபையின் குறைகளைக் களைவதற்குச் சீர்திருத்தக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அவற்றைப் படிக்கும்போது ஹஸ்ஸை படித்திருக்கிறார். உரிய நேரத்தில் நினைவிற்கு வரவில்லை. அறிவின் தேடலில் திரட்டி வைத்த பல விஷயங்கள் இப்படி மாயமாய் மறைந்தன.
திருச்சபையின் உட்பிரிவுகள், அரசாட்சி முறை, படுகொலை என எல்லாம் நினைவிற்கு வந்தன. உரியது நினைவிற்கு வராமல் வேறெது நினைவில் இருந்தாலும் பாராட்ட முடியாதே! மூளையைப் பிடுங்கி வெளியே வீசலாம். தேங்காயைப்போல் சிதறவிட்டுத் தேவையானதைப் பொறுக்கி எடுக்கலாம் என நினைப்பார்.
கேள்வி கேட்கும் உரிமையை யார் அவர்களுக்குக் கொடுத்தது என்று கோபப்படுவார். தன் உரிமைக்காகப் புரட்சி செய்யக்கூடத் திட்டம் வகுத்தார். நாள்கள் செல்லச்செல்லக் கல்லூரி பற்றிய அவருடைய கருத்துகள் மாறின. பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அதில் முக்கியமானது பொறுமை.
பொறுமையைப் பிறருக்கு மட்டுமே கற்றுக்கொடுத்தவர். கல்லூரியில் தனக்கும் கற்றுக்கொடுத்தார். தன்னைச் சுயபரிசோதனை செய்தார். அதன் பலனாகப் பொறுமையைப் பெற்றார். இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தில் சாவதானமாக நடப்பதைப்போல் கல்வியைச் சகஜமாக எடுக்க வேண்டும். இந்தப் பெருஞானத்தைப் போதித்தது அந்தப் பொறுமைதான்.
அதேபோல் கற்றுக்கொண்ட அறிவியலும் விலை மதிக்க முடியாதது. எனவே எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்துக்கொண்டார். அறிவின் வருகைக்காகக் காத்திருந்தார். அகன்ற அறிவு பொய்யிலிருந்து உண்மையைப் பிரித்துக் காட்டியது. சத்தமில்லாத அலையை எழுப்பி கவனிக்க வைத்தது. உண்மையை மட்டுமே மனம் தேடியது. புது அறிவு புது சக்தியை அளித்தது.
மனிதக் குளத்தின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்தார். ஆதியிலிருந்து அது எவ்வளவு தூரத்தைக் கடந்துவந்திருக்கிறது. முன்னோர்களின் இதயத்துடிப்பை உணர முடியாதவர்கள் தன்னைப்போன்ற செவிடர்கள் என நினைத்தார். அந்த அளவிற்குக் கல்லூரிப் பாடத்தில் ஒன்றினார். கல்லூரிப் படிப்பை விரும்பிப் படித்தார்.
தடை என்று வந்தால் அது பாறையானாலும், வழிபடத் தகுந்த சிலையானாலும் தகர்த்தெறியத் தயங்கியதில்லை ஹெலன்.
(தொடரும்)