Skip to content
Home » ஹெலன் கெல்லர் #22 – மறதியில் மகிழ்ச்சி

ஹெலன் கெல்லர் #22 – மறதியில் மகிழ்ச்சி

ஹெலனுக்கு மர நண்பர்களைப்போலவே பலவகை நாய் நண்பர்கள் இருந்தார்கள். ஜாதி நாய்கள், சாந்த கண்களைக் கொண்ட வேட்டை நாய்கள், காட்டு நாய்கள், புல்டெரியர் ரக நாய்கள் என வகைக்குக் குறைவில்லை. நடந்துசென்றாலும், குதிரைச் சவாரி சென்றாலும், சைக்கிளில் சென்றாலும், கப்பலில் சென்றாலும் தனியே செல்லமாட்டார். ஏதோ ஒரு நாய் நண்பனை அழைத்துச் செல்வார். ஹெலனின் ஒருபடி கூடுதல் அன்பிற்கு உள்ளானது புல்டெரியர் நாய்தான். மனிதர்களைப்போலவே அந்த நண்பர்களும் ஹெலனின் குறைகளைப் புரிந்துகொண்டார்கள். ஹெலனின் பாசச் செயல்களை எல்லாம் தங்கள் வாலை ஆட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

அமைதியாக நடந்துசென்று இயற்கையை அனுபவிப்பார். இதைவிட்டால் சைக்கிளில் சுற்றிச் சுற்றி வட்டமடிப்பார். சைக்கிள் மிதித்துக்கொண்டு காற்றைக் கிழிப்பது ஹெலனுக்குப் பிடித்த செயல். அப்போது முகத்தைத் தொடும் காற்றைச் சுகமாக அனுபவிப்பார். இரும்புக் கவசமணிந்து செல்லும் குதிரைவீரன்போல் சைக்கிளில் செல்வார். அவருடைய வலிமையை அவருக்கே உணர்த்தும் செயல் அது. இதயத்தை மீட்டி நரம்புகளை நாட்டியமாட வைக்கும்.

மழை நாள்களில் வெளியே செல்ல முடியாது. வீட்டில் இருக்கும் வேலைகளில் ஈடுபடுவார். துணி மடிப்பது, ஸ்வெட்டர் பின்னுவது, வாசிப்பது இதெல்லாம் தனியாக இருந்தால் செய்வது. யாராவது மாட்டினால் செஸ் விளையாடுவார்.

ஹெலனுக்காகவே தயாரிக்கப்பட்ட பிரத்யேக செஸ் போர்டு அது. ஒவ்வொரு கட்டமும் பள்ளமாக இருக்கும். கருப்புக் காய்கள் தட்டையாகவும், வெள்ளைக் காய்களின் மேற்பகுதி வளைக்கப்பட்டும் இருக்கும். வெள்ளை, கருப்பைவிடப் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு காயின் மையப்பகுதியிலும் துளை இருக்கும். ராஜாவை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட அந்தத் துளை வழியே பித்தளை குமிழ் பொருத்தப்பட்டிருக்கும்.

செஸ் பலகையின் மீது கையை வைத்தால் எதிரியின் நகர்த்தல்கள் துல்லியமாகப் புரியும். ஒரு பள்ளத்திலிருந்து எந்தப் பள்ளத்திற்கு மாற்றுகிறார் என்று அதிர்வை வைத்துக் கண்டுபிடித்துவிடுவார். தன்னுடைய முறை வந்துவிட்டது என்பதும் தெரிந்துவிடும். அதற்கேற்றவாறு எதை நகர்த்துவது என யோசித்து நகர்த்திவிடுவார்.

படிப்பு, இயற்கை குறித்த சிந்தனைகள் இல்லாமல் இருந்தால் தனியாகவும் செஸ் விளையாடுவார். தானே ராஜா, தானே ராணி. தானே வெற்றியாளர்.

சீட்டு விளையாடுவதும் ஹெலனுக்குப் பிடித்த இன்னொரு விளையாட்டு. அதையும் அவருக்கு ஏற்றார்போல் பிரத்யேகமாக வடிவமைத்திருந்தனர். அதன் வலது மூலையில் என்ன சீட்டு என்று பிரெய்லியில் குறியிட்டிருக்கும். தொட்டுப்பார்த்து விளையாடுவார். எந்த விளையாட்டும் கண் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என அவர் எதையும் விட்டுவைக்கவில்லை.

குழந்தைகள் என்றால் ஹெலனுக்குப் பிடிக்கும். அவர்களுக்கும் ஹெலனைப் பிடிக்கும். தங்களுக்குப் பிடித்ததை அழைத்துச்சென்று காட்டுவார்கள். அவர்களால் எழுதிக்காட்டி புரிய வைக்க முடியாது என்பதால் உதட்டசைவைத் தொட்டுப்பார்த்துப் புரிந்துகொள்வார். சில சமயம் அது தவறாகிவிடும். மாற்றிப் பேசி தன் தவறான புரிதலைக் காட்டிக்கொடுத்துவிடுவார். உடனே குழந்தைகள் வெடித்துச் சிரித்துவிடுவார்கள். மறுபடியும் குழந்தைகள் அபிநயம் பிடித்து நடனமாடுவதைப்போன்ற செய்கையால் புரியவைப்பார்கள்.

அருங்காட்சியகங்களும் கலைக்கூடங்களும் ஹெலனின் உற்சாகத்திற்குத் தீனிபோடும் மற்றோர் இடம். குளிர்ச்சியான பளிங்கு சிலையின் அழகைக் கண்டுகளிக்கக் கண்கள் வேண்டாம். கைகள் மட்டுமே போதும். சிலை பற்றிய விரிந்த கற்பனையைக் கொடுத்துவிடும்.

அது எவ்வளவு பெரிய கலைப்படைப்பாக இருந்தாலும் தன் தொடுதலால் மொத்த மகிழ்ச்சியையும் கிரகித்துக்கொள்வார். சிலையின் கோடுகள், வளைவுகள் என யாவற்றையும் கைகளில் நகலெடுத்துக்கொள்வார். பிறகு அதை உருவாக்கியவரின் திறமையையும் சிந்தனையையும் பொறுமையாகப் படித்துப்பார்ப்பார்.

உயிருள்ள மனிதர்களின் முகத்தைத் தொட்டு அவர்களின் பாவங்களை உணர்ந்தவர். அதனால் கையில் கிடைத்தது கடவுள் சிலையானாலும் சரி, வீரர்களின் சிலையானாலும் சரி, அதில் காணப்படும் சாந்தம், வெறுப்பு, வீர தீரம் என யாவற்றையும் உணர்ந்துவிடுவார்.

வீனஸ் சிலையைத் தொட்டபோது அதன் கருணை மின்னல் அடித்தது அவரை மகிழ்ச்சிகொள்ள வைத்தது. பரே என்பவர் செய்திருந்த நாட்டியப் பெண்ணின் வெண்கலச் சிலையைத் தொட்டபோது காட்டின் ரகசியங்கள் எல்லாம் கட்டவிழ்ந்து கொட்டின.

ஒரு பெரிய பதக்கம் ஹெலனின் கையெட்டும் தூரத்தில் மாட்டியிருக்கும். அதில் ஹோமரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஹெலன் அதைத் தொடும்போதெல்லாம் அன்பு பொங்கும். அவருடைய சோகம் ததும்பும் முகத்திற்குத் தன் தொடுதலால் ஆறுதல் அளிப்பார். நெற்றியிலுள்ள கோடுகள் ஹோமருடைய போராட்ட வாழ்க்கையின் தடயங்களாக உணர்வார். அவர் கண்களில் தெரியும் விரக்தியும் புரியும். உண்மை மட்டுமே பேசும் வாயையும் தெரியும். சிலை வெறும் உருவம்தான் என்றாலும் அதன் உள்ளத்தை ஊடுருவ முயற்சி செய்வார். காதல், யுத்தம், வாழ்க்கை, என ஹோமரின் ஒவ்வொரு முகத்தையும் ரேகைகள் மூலம் ஊடுருவிப்பார்த்தார்.

கிரேக்கத் தெய்வங்களின் ஆண், பெண் பளிங்கு சிலைகளைத் தொடுவதன் மூலம் தொன்மக் கிரேக்கர்களின் குணாதிசயங்களைக்கூட நாடிபிடித்துப் பார்த்துவிட்டார்.

சிலையின் தோற்றத்தை ஹெலன் உணர்ந்துகொள்வது பலருக்கும் வியப்பானது. சிற்பக்கலையின் நுணுக்கங்களைக் கண்களைவிட கைகள் நன்றாக உணர்வதாக ஹெலன் தன் குறையை நிறைவாக நினைப்பார். இந்த இடத்தில்தான் எல்லாப் புலன்களும் வாய்க்கப்பெற்றவர்களுக்கு ஹெலன் சவால் விடுகிறார்.

ஹெலனுக்கான இன்னொரு பொழுதுபோக்கு நாடகங்கள். நாடகத்தை வாசித்துத் தெரிந்துகொள்வதைவிட நேரில் பார்க்க வேண்டும். நடித்துக்காட்டும்போது ஸல்லிவன் எழுதிக்காட்டுவதால் நாடகத்தைத் தத்ரூபமாக உணர்வார். ரசித்து அனுபவிப்பார். தன் இருப்பை மறந்து நாடகத்தில் தன்னையும் ஒரு பாத்திரமாக உணர்ந்துகொள்வார். இன்னொரு உலகத்தில் வாழவைக்கும் சக்தி நாடகத்திற்கு இருப்பதாக நினைத்தார்.

ஹெலன் தன் எட்டாவது வயதில் முதன் முறையாக ஸல்லிவனோடு நாடகம் பார்க்கச் சென்றார். நாடகம் முடிந்து பின்புறமாகச் சென்று அதில் நடித்த குழந்தையைத் தொட்டுப்பார்த்தார். பெருங்கூட்டத்தின் முன் நடித்து முடித்த சோர்வோ, பல ரசிகர்களை எதிர்கொண்ட நாணமோ இல்லாமல் இயல்பாக இருந்தது அக்குழந்தை. அப்போதுதான் பேசக் கற்றுக்கொண்ட நேரம் என்பதால் அக்குழந்தையின் பெயரைப் பலமுறை சொல்லி பயிற்சி எடுத்துக்கொண்டு சென்றார். ஓரிரண்டு வார்த்தைகள் பேசியதும் ஹெலனை அணைத்துக்கொண்டார் அந்த நாடகச் சிறுமி. அதுதான் நாடக நடிகர்களுடன் ஹெலனுக்கு ஏற்பட்ட முதல் அனுபவம்.

அதன் பிறகு எந்த நாடகத்திற்குச் சென்றாலும் நாடக நடிகர், நடிகைகளைச் சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு மகாராணி எப்படி இருப்பார் என அதற்கான இலக்கணத்தோடு நடித்த எலன் டெர்ரியின் உடை, கிரீடம் என அங்கம் முழுவதும் தொட்டுப்பார்த்தார். அவருக்குப் பக்கத்தில் ராஜா வேடம் போட்டவர் ஆபரணங்களோடு நின்றிருந்தார். அவரையும் தொட்டுப்பார்த்தார். முக அசைவின் ஏற்ற இறக்கங்களில் மன்னனின் அடிபணிய வைக்கும் ராஜ களையை உணர்ந்தார். இருவருக்குப் பின்னாலும் துயரம் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார். அவர்கள் உண்மையான ராணியோ ராஜாவோ அல்ல தானே!.

நியூயார்க்கில் ஒரு பள்ளியில் நடந்த நாடகத்தில் ஜெஃபர்சன் என்ற நாடக நடிகர் அறிமுகமானார். ரிப் வன் விங்கில் கதாபாத்திரத்தில் நடித்தார். அக்கதையை ஹெலன் ஏற்கெனவே படித்திருந்தார். ரிப் அதை புதுமையாக அணுகிய விதம் பிடித்திருந்தது. கதையைப் படித்தபோது உணராத பரிதாபத்தை ஜெஃபர்சன் தன் உருக்கமான நடிப்பால் உணர வைத்தார். கலையின் உச்ச மகிழ்ச்சியால் சிறகடித்தவர் ஜெஃபர்சனின் ரசிகையானார்.

நாடகம் முடிந்த பிறகு பின்னால் சென்று சந்தித்தவர், ஜெஃபர்சனின் உடை, தலைமுடி, தாடி என ஒவ்வொன்றாகத் தொட்டுப்பார்த்தார். 20 வருடமாக உறங்கியவர் ரிப். அப்படியானவர் எழுந்து வருவதைப்போல் ஹெலனுக்கு நடித்துக்காட்டினார். ஜெஃபர்சனுடைய அதிகப்படியான நடிப்பை, சில நல்ல பாவனைகளை ஸல்லிவனால் எழுதிக்காட்ட முடியவில்லை. வசனங்களை மட்டும் சொல்லிக்கொடுத்தார். வசனத்திற்கேற்ப நடிப்பு எதுவெனத் தெரியாததால் தனக்கு வந்ததை ஹெலன் நடித்துக்காட்டினார். கலைஞர்கள் எப்படி வசனத்திற்கு உயிர் கொண்டுவருகிறார்கள் என்பதை ஓரளவு கற்றுக்கொண்டார். ஜெஃபர்சன் நாடகம் நடிக்கும் ஊர்களில் ஹெலன் இருக்க நேர்ந்தால் நேரில் சென்று பார்த்துவிட்டு வருவார்.

எத்தனை உயர்வான கலைகளையும் அத்தனை குறைபாடுகளோடு ஹெலனால் அனுபவிக்க முடிந்தது. காரணம் ஒவ்வொன்றையும் அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தனியாத ஆர்வம். எளிதாகப் பார்க்க முடிவதால், கேட்க முடிவதால் நாம் இந்த அளவிற்கு ஊன்றிக் கவனிக்க மாட்டோம். தனக்கான விடை தெரியாத நிசப்த, இருண்ட உலகில் ஒவ்வொன்றையும் அதீத விடையோடு கண்டடைந்துகொண்டார்.

தன் குறைகளை நினைத்து அவ்வப்போது கோபம் வந்தாலும் உதடுவரை எட்டிப்பார்க்கும் கசப்பான வார்த்தைகளை அவர் வெளியே விட்டதில்லை. சிந்தப்படாத கண்ணீரைக் கண்கள் எப்படி மீண்டும் இழுத்துக்கொண்டு ஆற்றிவிடுகின்றனவோ அப்படி வாய்வரை வந்த வார்த்தைகளை மீண்டும் உள்ளே இழுத்துக்கொண்டு மாற்றிவிடுவார். மௌனத்தைக் கைகொள்வார்.

மறதியில்தான் மகிழ்ச்சி மலர்கிறது என்ற நம்பிக்கை உடையவர் ஹெலன். அதனால் வருத்தத்தை அதிக நேரம் நினைவில் நிறுத்தமாட்டார். அதனால்தான் மற்றவர்களின் கண்களில் ஹெலன் பிரகாசித்தார். காதுகளில் ஒலித்தார். உதடுகளில் புன்னகை படர அதன்வழி அனைவருக்குமான நம்பிக்கையானார்.

(தொடரும்)

பகிர:
ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *