Skip to content
Home » ஹெலன் கெல்லர் #23 – துணை நின்றவர்கள்

ஹெலன் கெல்லர் #23 – துணை நின்றவர்கள்

ஹெலனின் வளர்ச்சிக்குப் பின்னால் நின்றவர்கள் பலர். அதில் புகழ்பெற்ற பிரபலங்கள் முதல் சாதாரணர்கள் வரை இருந்தார்கள். யாரையும் ஹெலன் மறந்தவர் அல்ல. நினைவில் பொதிந்து சிலிர்க்க வைப்பவர்களை அவ்வப்போது வெளியே எடுத்துப்பார்ப்பார்.

உதவியவர்களை நேரில் சந்தித்திருக்கிறார். கவலையால் தவித்த மனத்திற்குச் சாந்தி கொடுப்பார்கள். ஹெலனை ஆக்கிரமித்திருந்த எரிச்சல்கள், குழப்பங்கள், கவலைகள் விலகிவிடும். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நம்பிக்கையைத் தங்கள் பரிவான கைகுலுக்கலால் கொடுத்துவிடுவார்கள். உதவி செய்தவர்களில் யாரைச் சந்தித்தாலும் கண்களும் காதுகளும் முட்டி முட்டி மலரப்பார்க்கும். சந்திப்பு முடிந்து அவர்கள் பிரியும்வரை ஹெலன் மகிழ்ச்சியாக இருப்பார். முன்பும் பார்த்திருக்க மாட்டார். பின்பும் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் பிரிவிற்காக வருந்துவார். அந்த அளவிற்கு அவர்கள் தங்கள் கனிவால் ஹெலனுக்குத் தேவையானதைக் கொடுத்திருப்பார்கள்.

பொதுவாக யார் கேள்வி கேட்டாலும் அது ஹெலனைச் சலிப்படைய வைக்கும். பத்திரிகையாளர்கள் உட்பட பலரிடமிருந்தும் பலவிதமான ஆர்வக்கோளாறு கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார். புரிதல் திறனைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசுவார்கள். இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். ஹெலனின் காலுக்கு ஏற்றார்போல் தங்கள் பாதங்களை அதற்குள் புதைத்துக்கொண்டு நிற்பார்கள். இந்தப் பாசாங்குத்தனமும் ஹெலனுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

எனவே சந்திக்கும் எல்லா மனிதர்களிடமும் கை குலுக்குவார். அது பேசும் மௌனமொழி ஒன்றே ஹெலனுக்குப் போதுமானது. சிலருடைய ஸ்பரிசத்தில் முரட்டுத்தனம் வெளிப்படும். சிலரிடம் திமிர் இருக்கும். இன்னும் சிலர் மகிழ்ச்சியின் சாயலே இல்லாத துயர் படிந்த மனிதர்களாக இருப்பார்கள். தெளிவானவர்கள் கைகளைக் குலுக்கும்போது மகிழ்ச்சியாக உணர்வார். கருணையான பார்வைதான் ஊக்கத்தைக் கடத்தும் என்றில்லை. கைகுலுக்கலே ஹெலனுக்குப் போதுமானது. குழந்தைகள் எனில் கைகுலுக்க வேண்டாம். லேசாகத் தொட்டாலே போதும். முழுமையாக உள்வாங்கிவிடுவார். பனிப்பிரதேசத்தில் உறைந்துபோயிருக்கும் விரல் நுனிகளைப் பற்றிக்கொண்டு உரையாடியிருக்கிறார். அப்போது மட்டும் குளிர்ச்சியைத் தவிர மனித உணர்வுகளை அவரால் கடத்திக்கொள்ள முடியாது.

ஸ்பரிசத்தைப் போல் புரிதல் தரக்கூடிய இன்னொன்று கடிதம். உதவி செய்தவர்களில் பல சந்திக்காத நண்பர்கள் தங்களுடைய அன்பை வார்த்தைகளாக அனுப்புவார்கள். பாலைவனத்தைக் கடந்து பிரமிடுகளைப் பார்க்கச் சென்ற பயணத்தைப் பற்றி கில்டர் ஹெலனுக்கு கடிதம் எழுதினார். அதில் தன் கையெழுத்தைக் குறியீடாக ஹெலனுக்கு உணர வைத்தார். டாக்டர் ஹேல் போன்றவர்கள் பிரெய்லியில் கடிதம் எழுதி அனுப்புவார்கள். கடிதங்கள் ஹெலனுக்கு வேறோர் அன்பு உலகத்தைக் காட்டியது.

பிஷப் புரூக்ஸ் என்பவர் ஹெலன் குழந்தையாக இருக்கும்போது மடியில் அமரவைத்துக்கொள்வார். யார் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் இருவருக்கும் ஒரே விதமான மகிழ்ச்சிதான் கிடைத்தது. அவர் பேசப்பேச ஸல்லிவன் கைகளில் எழுதிக்காட்டுவார். ஹெலன் ஏன் இத்தனை மதங்கள் இருக்கின்றன என்று கேள்வி கேட்டார். ‘அன்பு’ என்ற ஒரு மதம்தான் இருக்கிறது. எல்லாவற்றின்மீதும் அன்பு செலுத்தினால் சொர்க்கத்தின் கதவு திறந்திருக்கும் என்று பதில் சொன்னார். மதக்கோட்பாட்டையோ, கொள்கைகளையோ போதிக்காமல் சகோதரத்துவத்தை மட்டும் போதித்தார். அன்புதான் எல்லா மதத்திற்கும் அடிப்படை என்பதைப் புரியவைத்தார். பிஷப் புரூக்ஸ் மறைந்த பிறகு பைபிளை முழுமையாக வாசித்தார். சமயம் பற்றிய தத்துவ நூல்களையும் படித்தார். ஸ்வீடன்பர்க் எழுதிய ஹெவன் அண்ட் ஹெல்லும் அதில் அடங்கும். படித்த எல்லாவற்றிலும் பிஷப் சொன்ன அன்பு என்ற கோட்பாட்டைத்தான் கண்டடைந்தார்.

ஆலிவர் வெண்டல் என்பவரை சந்தித்தார். யார் வீட்டிற்குச் சென்றாலும் முதலில் அவருடைய நூலகத்தைத்தான் சுற்றிப்பார்ப்பார். கணப்பு அடுப்பின் அருகில் அமர்ந்துகொண்டு உரையாட ஆரம்பித்தார்கள். அங்கு வீசிய அச்சுக் காகிதத்தின் வாசனையை வைத்துப் புத்தக அறைக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருப்பதை உணர்ந்துகொண்டார். அறை மௌனமாக இருந்தபோது நதியின் முணுமுணுப்பைக் கவனித்தார். டென்னிசன் எழுதிய கவிதைப் புத்தகம் ஒன்றை எடுத்து வாசித்தார். அது கண்ணீரைத் துளிர்க்க வைத்ததால் வாசிப்பை நிறுத்திக்கொண்டார். ஆலிவர், ஹெலனின் சிந்தனையை மாற்ற வேறு சில பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தார். ஹெலனோ அந்தக் கவிதையின் தாக்கத்திலிருந்து மீளாமல் இன்னொரு கவிதையை ஒப்பித்தார்.

ஹெலனின் கவிதைப் பற்றை அறிந்துகொண்ட ஆலிவர் அடுத்த சந்திப்பில் பிரைலியில் அச்சடித்த தன்னுடைய கவிதைப் புத்தகம் ஒன்றைக்கொடுத்தார். அதிலுள்ள சில கவிதைகள் ஹெலனுக்கு முன்பே தெரியும் என்பதால் தடையின்றி வாசித்தார். அதில்வரும் குட்டிப் பையன் ஆலிவர்தான் என்பதை அவர் பேசப்பேச உதட்டின்மீது கைவைத்துத் தெரிந்துகொண்டார்.

லாவோஸ் தியா என்பவருடைய கவிதையைப் பேச்சினூடே ஹெலன் ஒப்பித்தார். அக்கவிதையை முடிக்கும் முன் ஓர் அடிமைச்சிலையைக் கொண்டுவந்து ஹெலன் கைகளில் வைத்தார் ஆலிவர். கூன்விழுந்த உருவம், அறுபட்ட சங்கிலிகளோடு இருந்தது. ஸல்லிவனின் பணியைப் பாராட்டிப் பேசியவர், இந்தச் சங்கிலியை உடைத்து உனக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தவர் ஸல்லிவன்தான் என்றார். ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்து வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார். அடுத்த விடுமுறைக்கு வரவேற்காமல் மரணமடைந்துவிட்டார்.

எட்வர்டு எவரெட் ஹேல் என்பவர் ஹெலனின் எட்டாவது வயதிலிருந்து நண்பர். ஆண்டுகள் ஏற ஏற அன்பும் ஏறியது. துயர் மிகுந்த தருணங்களில் பக்கபலமாக இருப்பார். கரடு முரடான பாதையை எட்வர்டின் துணையால் கடந்துவந்தார்கள். நம்பிக்கையை விதைத்து வாழ்க்கையைப் புரியவைத்தார். தேச பக்தி, சகோதர வாஞ்சை, வாழ்வில் உயர நினைப்பவர்களுக்கு வழிகாட்டுவது போன்ற எல்லா நற்செயல்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.

கிரகாம்பெல்தான் ஹெலனின் வாழ்வை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் என்று பார்த்தோம். அவரோடு கேப் பிரெட்டன் தீவிலும், வாஷிங்டனிலும் பல நாள்கள் வாழ்ந்திருக்கிறார். ஆய்வுக்கூடத்திலும் வயல்வெளிகளிலும் அவர் தன் ஆய்வுகள் பற்றி சொல்ல ஹெலன் கேட்டுக்கொள்வார். விமானத்தை இயக்கும் விதிமுறைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பட்டங்கள் பறக்கவிட்டு ஆராய்ச்சி செய்வார். விளையாட்டாகப் பட்டம்விட ஹெலன் உதவி செய்வார். சிக்கலான அறிவியல் கோட்பாடுகளையும் ஹெலனுக்குப் புரியும் வகையில் விளக்கிவிடுவார். இன்னும் சிறிது நேரம் பெல்லுடன் இருந்தால் தானும் விஞ்ஞானி ஆகிவிடலாம் என்ற சிந்தனையில் ஹெலன் மிதப்பார். அந்த அளவிற்கு பெல் சிரிக்கச் சிரிக்கப் பேசி விளக்குவார்.

அவருடைய எல்லாப் பண்பிலும் உயர்ந்தது குழந்தைகள் மீதான அன்புதான். காதுகேட்காத குழந்தையைக் கையில் தூக்கிவைத்திருப்பார். அவர்களுக்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும் பெற்றார். தன் சாதனைகளோடு இப்படியான குழந்தைகளையும் சாதிக்க வைத்தார். அதனால் அத்தனை பேரின் நேசத்தையும் பெற்றார்.

நியூயார்க்கில் இருந்த இரண்டு வருடங்களில் பல நண்பர்களைச் சந்தித்தார். அதில் லாரன்ஸ் ஹட்டன் என்ற நண்பர் முக்கியமானவர். அவருடைய வீட்டிற்குச் சென்றவர் வழக்கம்போல் நூலகத்தை நோட்டமிட்டார். அங்கு எழுதி ஒட்டியிருந்த கருத்துகளால் கவரப்பட்டார். ‘நானறிந்த சிறுவன்’ என்ற புத்தகத்தைப் படித்துதான் ஹட்டனை அறிந்துகொள்ளவேண்டும் என்ற அவசியமின்றித் திறந்த புத்தகமாக நடந்துகொண்டார். ஹட்டனின் தயாள குணமும் இரக்க சிந்தனையும் ஹெலனுக்குப் பிடித்திருந்தது. சக மனிதர்களின் வாழ்க்கையில் அன்பை வாரி இறைத்தார். அவருடைய மனைவியும் ஹெலனின் நம்பிக்கைக்குரிய தோழி. கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாதோ என்று அதைரியம் அடைந்தபோதெல்லாம் ஹட்டன் மனைவி எழுதிய கடிதங்கள் ஹெலனைத் துணிவுகொள்ள வைத்தன. வெற்றியை நெருங்கக் கற்றுக்கொடுத்தவர்களில் அவரும் ஒருவர்.

ஹட்டன் தன் இலக்கிய நண்பர்கள் பலரையும் ஹெலனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களில் முக்கியமானவர்கள் மார்க் ட்வைனும், வில்லியம் டீன் ஹாவல்ஸூம். மார்க் ட்வைனிடம் குறைகளைக் கண்டுபிடிக்கும் துல்லியம் இருந்தாலும், அதை மென்மையாக வெளிப்படுத்தும் விதம் ஹெலனுக்குப் பிடிக்கும். ரிச்சர்டு வாட்சன் கில்டர், எட்மண்ட் கிளாரன்ஸ், ‘செயின்ட் நிகோலஸ்’ என்ற இதழின் ஆசிரியர் மேரி மேப்ஸ், பேட்ஸி என்ற நூலின் ஆசிரியர் ரிக்ஸ் போன்றவர்களையும் சந்திக்க வைத்தார் ஹட்டன்.

அதில் சார்லஸ் டட்லி வார்னர் சிறந்த கதைச் சொல்லி. அவர் ஹெலன் மீது கொண்ட கருணை அளவற்றது. ஹெலனுக்குப் பிடித்த ஜான் பரஹை என்ற கவிஞரை வார்னர் அழைத்து வந்தார். அவருடைய கவிதைகளில் எப்படிக் கூர்மையும் வசீகரமும் இருக்குமோ அதையே ஜான் பரஹை நேரில் சந்தித்தபோதும் அனுபவித்தார். உண்மையில் ஒரு நண்பர் இன்னொரு நண்பரை அறிமுகம் செய்ய அவர் இன்னொரு நண்பரை அறிமுகம் செய்ய இப்படிப் படிப்படியாகப் பல முக்கியச் சந்திப்புகளை நிகழ்த்தினார் ஹெலன்.

பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்த வில்லியம் தாவின் வீட்டிற்கு அடிக்கடி செல்வார். யாரையாவது சந்தோஷப்படுத்தும் நோக்கத்தில் அவர் எதோ ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருப்பார். தன் கதையை எழுதும் ஹெலன், கூடவே சக மனிதர்களின் குணங்களையும் எளிதாக நமக்குக் கடத்திச் செல்கிறார். எப்படியான மனிதர்கள் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்!

அத்தனை பேரும் பொழிந்த பாசத்தால்தான் விரக்தி தோன்றும்போதெல்லாம் உலகம் அன்புமயமானது என்பதை உணர்ந்து சாந்தி அடைவார். இப்படியான மேதைகளின் பழக்கம் அறிவையும் அகலப்படுத்தியது.

இலக்கியக் குழுவினர் ஒன்றுசேரும்போது காரசாரமாக எதையாவது விவாதிப்பார்கள். பொறி பறக்கும் உரையாடல்கள், சிரிப்பொலிகள் அரங்கேறும். எல்லாவற்றையும் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்.

இவர்கள் தங்கள் அன்பின் வெளிப்பாடாக விலைமதிப்புள்ள பரிசுகளையும், சொந்த சிந்தனை பொதிந்த புத்தகங்களையும் பரிசுகளாகக் கொடுப்பார்கள். அன்பின் கடிதங்களையும், மகிழ்ச்சியை விவரிக்கும் புகைப்படங்களையும் பெற்றுத் திரும்புவார்.

ஹெலனின் வாழ்கைக் கதை உருவாகப் பல நண்பர்கள் உதவியிருக்கிறார்கள். ஹெலனின் குறைகளை அழகான நிறைகளாக மாற்றிக்கொடுத்தவர்கள். மகிழ்ச்சியாக முன்னேற வைத்தவர்கள். பறவைகள் பறக்கத் தேவையான சக்தியைத் தன் இறகுக்குள் வைத்திருப்பதைப்போல் ஹெலனும் இவர்களைத் தன் நினைவிற்குள் ஒளித்துவைத்துக்கொண்டார்.

(தொடரும்)

பகிர:
ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *