500-550 வருடங்களுக்கு முன் ஆங்கில அரசர்களாக இருந்த டியூடர் குடும்பத்தைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன்பு படித்துக் கொண்டிருந்தேன். பில்லிப்பா கிரிகோரி, அலிசன் வெய்ர் போன்றோரின் விறுவிறுப்பான புதினங்கள் அந்தக் காலகட்டத்தைப் பரபரப்பாகப் பதிவு செய்திருந்தன. அப்போதுதான் ஹிலாரி மான்டெல் என் பாதையில் குறுக்கிட்டார். அவரது ‘உல்ஃப் ஹால்’ என்ற புதினம் எட்டாம் ஹென்றியின் மூத்த அமைச்சராக இருந்த தாமஸ் கிராம்வெல் என்பவரின் கதையை மையமாகக் கொண்டுள்ளது.
மான்டெலின் பாணி மற்றவர்களிடமிருந்து பெருமளவில் மாறுபட்டது. கிரிகோரி அல்லது வெய்ர் எழுதிய வரலாற்றுப் புதினங்களும் வரலாற்றை முடிந்தவரை சிதைக்கவில்லை என்றாலும் அவை பரபரப்பான நாவல் வடிவில் இருந்தன. மான்டெல் பரபரப்பைவிடக் கதை சொல்லும் உத்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
நாம் கதையின் ஊடே தாமஸ் கிராம்வெல்லின் பார்வையில் அந்தக் காலகட்டத்தைக் கடக்கிறோம். கிராம்வெல்லும் தன்னை மூன்றாம் மனிதனாகவே பாவித்துப் பல நிகழ்வுகளைக் கூறுவார். (இது பல இடங்களில் சற்றுக் குழப்பமாக இருந்தாலும், எந்தவிதச் சார்பும் இன்றி நிகழ்வுகளை விவரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.) வாசிப்பு மெதுவாக இருந்தாலும், ரசிக்கக்கூடியதாக இருந்ததை மறுக்கமுடியாது.
கிராம்வெல் இடத்தில் எந்தப் பாத்திரத்தைப் பொருத்தினாலும் கதையை அவர் கோணத்திலிருந்து நகர்த்தமுடியும் என்பதுதான் மான்டெலின் எழுத்து பலம். நிகழ்வுகளை விவரிப்பதைத் தன்னுடைய பாத்திரங்களிடமிருந்து பிரிப்பதில் அவர் வெற்றி அடைந்திருந்தார் என்றே சொல்வேண்டும்.
ஆங்கில எழுத்தாளரான ஹிலாரி மான்டெல் கடந்த 22ஆம் தேதி தன்னுடைய 70வது வயதில் மறைந்துவிட்டார். இரண்டு முறை புக்கர் பரிசு வென்றவர். ஒரு எழுத்தாளரின் இறுதிக் குறிப்பை அவரது புத்தகங்களின் வழியே எழுதுவதுதான் சரியாக இருக்கும். மான்டெல்லும் தன்னுடைய புத்தகங்களைத் தன்னிடம் இருந்து பிரித்து வைக்கவில்லை. அவரது வாழ்வின் பல வலிகளையும் மகிழ்ச்சிகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார் அவர்.
அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த ‘உல்ஃப் ஹால்’ நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இந்நாவல் பதிப்பிக்கப்படுவதற்கு முன்பே அவர் 10 புதினங்களை எழுதியிருந்தார். அவரது எழுத்து பரவலாக இல்லையென்றாலும், நிறையவே வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
ஆங்கிலேயர்கள் உலகை முழுவதும் தங்கள் ஆட்சியில் வைத்திருந்ததன் எச்சம், ஆங்கிலேயர்கள் உலகெங்கும் தங்களது முந்தைய காலனிகளில் இன்னமும் வேலைக்காகச் செல்வதுதான். ஹிலாரி மான்டெல்லின் வாழ்வும் இப்படியான பிரயாணங்களாலேயே வடிவமைக்கப்பட்டது. இந்த அனுபவங்களே அவரால் கதைகளாக எழுதப்பட்டன.
1952ஆம் வருடம் இங்கிலாந்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த ஹிலாரி மான்டெல்லின் குழந்தைப் பருவம் அங்கேயே கழிந்தது. பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்ததால் அவர் தன்னுடைய தந்தையை 11 வயது வரை பார்க்கவே இல்லை. தாயின் இரண்டாவது கணவரான ஜாக் மான்டெல் அவருக்குத் தந்தையாக இருந்து வளர்த்து வந்தார். பின்னாளில், அவரது குடும்பப் பெயரையே தன்னுடைய பெயராகவும் வரித்துக்கொண்டார்.
ஆனால் அவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சிகரனமானதாக இருக்கவில்லை. நான்கு வயதில் இருந்தே, தான் ஏதோ தவறு செய்துவிட்டது போன்ற குற்றவுணர்விலேயே இருந்து வந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ‘என் குழந்தைப் பருவம், எப்படி முடிப்பது என்பது தெரியாமல் எழுதி, குழப்பிய சொற்களைப் போல இருக்கிறது. அவற்றை எப்படியாவது கடந்துவிடவே முயல்கிறேன்’ என்று கூறுகிறார்.
பின்னர் சட்டம் படிக்கக் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கே சட்டத்தில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு, முதியோர் மருத்துவமனையில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1972இல் அவர் நிலவியல் ஆய்வாளரான ஜெரால்டு மக்எவனைத் திருமணம் செய்தார். ஒரு முறை விவாகரத்துச் செய்து கொண்டு, மீண்டும் திருமணம் செய்து கொண்டார்கள்.
22ஆவது வயதில் மனநோய்க்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்காகக் கொடுக்கப்பட்ட மருந்துகள் அவரது நோயைக் குறைப்பதற்குப் பதில் அதிகப்படுத்தியது. அதன் பின்னர் தனது கணவரின் பணி தொடர்பாக அவர் போட்ஸ்வானா சென்றார். அங்குப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
போட்ஸ்வானாவில் அவரது வாழ்வைத் திருப்பிப்போட்ட இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு நாள் இரவில் வீடு திரும்பும்போது அவரது பள்ளி மாணவர்கள் சிலர் அவரைத் தாக்குகின்றனர். தாக்கியது அவரது மாணவர்கள் இல்லை என்றாலும், வன்முறை பாலியல் ரீதியாக இல்லையென்றாலும் அவர் வேலையைத் துறந்துவிட்டு எழுத்தை முழு நேரமாகத் தொடர முடிவு செய்தார்.
தன்னுடைய நீண்ட நாள் நோய் என்னவாக இருக்கும் என்பதைத் தானாகவே மருத்துவப் புத்தகங்களை வாசித்ததன்மூலம் அறிந்து கொண்டார். அவரது சினைப் பையின் வெளியே கருமுட்டைகள் உருவாவதாலேயே அவர் தாங்கொண்ணா வலியையும் ரத்தப் போக்கையும் தாங்க வேண்டியிருக்கிறது என்பதை அறிந்துகொண்டார்.
லண்டன் மருத்துவர்கள் அதற்குத் தீர்வாக அவரது சினைப்பையை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றிவிடுகின்றனர். கருத்தரிக்கும் வாய்ப்பை 27 வயதில் முற்றிலுமாக இழந்துவிடுகிறார்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் அவரது எழுத்துகளில் மீண்டும், மீண்டும் வெளிவருகிறது. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், குழந்தைகள் இல்லாத வாழ்வின் பெருந்துயரத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார். இதற்கு முன்பே அவரது முதல் நாவல் எழுதப்பட்டுவிட்டது. ஆனால் பல பதிப்பகங்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டது. 1992இல், எழுதி இருபது வருடங்களுக்குப் பின்பே அந்நாவல் பதிப்பிக்கப்படுகிறது.
அதற்கு முன்பே 1985இல் அவரது வேறொரு நாவல் பதிப்பிக்கப்படுகிறது. அவரது எழுத்து பரவலாகக் கவனிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் இலக்கியப் பரிசுகள் பலவற்றைப் பெற ஆரம்பிக்கிறார்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குத் தன் கணவரோடு செல்கிறார். அது பற்றிப் பின்னாளில் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தாலும், அப்போதைக்கு அது வருத்தத்தையே அவருக்கு அளித்தது. அந்த அனுபவங்களையும் அவர் புதினமாகப் பின்னர் வடித்தார்.
மான்டெலின் நாயகர்கள் சற்று விநோதமானவர்கள். வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவரது முதல் நாவல் பிரெஞ்சுப் புரட்சியாளர்களைப் பற்றியது. வரலாற்றுப் பின்புலம் சார்ந்து எழுதுபவர் என்றாலும் அவரது நாவல்கள் அரசர்களைப் பற்றியோ, அரசக் குடும்பங்களைப் பற்றியோ இருக்காது. அவர் கதாநாயகர்கள் புரட்சியாளர்களாகவும் மக்களாகவும் இருக்கிறார்கள். இது உல்ஃப் ஹாலின் தாமஸ் கிராம்வெல்லுக்கும் பொருந்தும்.
எட்டாம் ஹென்றியின் விருப்பப்படி கத்தோலிக்க மதத்தை உடைத்து, ஆங்கிலிக்கன் சபையை உருவாக்கிய கிராம்வெல்லின் நெறிகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். மான்டெல் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டவர். மதம் பற்றி அவர் என்ன நினைத்தார் என்பதை அவர் படைப்புகள் சொல்லிவிடுகின்றன. தன்னுடைய வீட்டில் ஆவிகள் உலவுவதாக அவர் நம்பினார்.
இள வயதில் சோஷலிஸ்டாக இருந்த அவர், பின்னாட்களில் பெண்ணியவாதியாகப் பரிணமித்தார். அவரது கதைகளின் பெண்கள் மிகவும் உறுதியானவர்களாக, அவரைப் போலவே வலிகளைத் தாங்குபவர்களாக, தங்களுக்குத் தேவையானதைப் பெற்று கொள்பவர்களாக இருந்தது தற்செயலானது அல்ல. ‘உல்ஃப் ஹால்’ கதை ஹென்றியின் மனைவிகளாலேயே நகர்த்தபடுகிறது. பெண்கள் இல்லாத அவர் நாவல் எதுவும் இல்லை.
மெண்டலின் எழுத்து நடை பலவிதமான வடிவங்களைக் கொண்டது. ஒரே புத்தகத்தில் இந்த வடிவங்கள் அனைத்தையும் பார்த்துவிடமுடியும். முன்பே சொன்னதுபோல அவரது கதை சொல்லும் உத்தி வித்தியாசமாக இருக்கும். அத்தோடு உரையாடல்களின் வழியே அவர் கதைகளை நகர்த்திச் செல்வார். உரையாடல்களும் ‘ப்ளாக் ஹுமர்’ என்னும் அவல நகைச்சுவையோடு இருக்கும்.
வரலாற்று நிகழ்வுகளை அவர் எந்த விதத்திலும் மாற்றுவதில்லை என்றாலும், கற்பனைப் பகுதிகளை சாமர்த்தியமாக உள்ளே கொண்டு வந்துவிடுவார். அவரது படைப்புகள் புதினத்திற்கும் அபுதினத்திற்கும் இடையே எங்கோ ஓரிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன.
‘உல்ஃப் ஹாலின்’ மூன்றாம் பாகத்தை எழுதிய பின்னர் அவர் பிரஞ்சுப் புரட்சியின் நாயகனான ரோபஸ்பியர் குறித்து நாடகம் ஒன்றை எழுதிய ஸ்டானிஸ்லாவா பிரிசிபிஸ்வெஸ்கா பற்றி ஒரு நாவல் எழுதப்போவதாகத் தெரிவித்திருந்தார். அந்தக் கதை இனி இன்னொரு நாவலாசிரியருக்காகக் காத்திருக்கவேண்டும்.
ஒரு வரலாற்றுப் புதினம் எழுதுவதற்கு ஒருவர் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்? மான்டெல் அளிக்கும் விடை இது.
‘கடந்த காலத்தைப் பற்றி எழுதுபவர் என்ன மாதிரியான நபராக இருக்க வேண்டும்? வன்முறையைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். ஏனெனில் கடந்த காலம் முழுவதும் வன்முறையால் நிரம்பியிருக்கிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், இப்போது வாழ்பவர்கள் அல்லர் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இறந்தவர்கள் அனைவரும் உண்மையாக இருந்தவர்கள் என்பதையும் அவர்களும் உயிருடன் இருப்பவர்கள் மீது தாக்கம் கொண்டிருந்தார்கள் என்பதையும் அறிந்து வைத்திருக்கவேண்டும். இறந்தவர்களைச் சந்தித்திருந்தால் இன்னமும் நலம். ஆவிகளாக.’
0