Skip to content
Home » இலங்கைப் பழங்குடிகள் #1 – யாருடைய தீவு?

இலங்கைப் பழங்குடிகள் #1 – யாருடைய தீவு?

இலங்கைப் பழங்குடிகள்

‘கதையென்று நினைத்தால் இவையெல்லாம் வெறும் கதைகள்.
நம்பிக்கையென்று நினைத்தால் இவையெல்லாம் வெறும் நம்பிக்கைகள்.
சத்தியமென நினைத்தால் இந்தக் கதைகளுக்கு உயிரோட்டம் இருப்பதை உணர்வீர்கள்.’

0

அது ஒரு காலம். ஓர் அரசன் நீதி வழுவாமல் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். தனது மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்கி வந்தான். அந்த நாட்டைக் கலிங்கத் தேசம் என்கிறார்கள். கிழக்கு இந்தியாவின் வங்காளப் பிரதேசத்தில் உள்ள லாலாதான் அந்நாடு என்பது சிலருடைய வாதம். கலிங்கம் என்பது தற்போதைய ஒரிசா மாநிலம். ஒரிசாவுக்கு அருகில்தான் வங்காள மாநிலம் அமைந்துள்ளது. இன்றைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றுள்ளதைப் போன்ற பிரிவினைக் கோடுகள் எல்லாம் இல்லை அல்லவா?

அது பிரச்சினையில்லை. ஆனால், இப்படிப்பட்ட அரசனுக்கு ஒரு தறுதலை மகன் இருந்தான் என வரலாறு சொல்கிறது. அந்த இளவரசனின் பெயர் விஜயன். அவன் அவனுடைய தந்தையைப்போல மக்களை ஆதரிப்பவனாக இல்லை. அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்காது, அங்குள்ள மக்களையும் கடுமையாகத் துன்புறுத்துபவனாக இருந்தான். பாதிக்கப்பட்ட மக்கள் ஓடோடிச் சென்று மன்னனிடம் முறையிட்டனர்.

மக்கள் வழி என்றும் நிற்கும் மன்னன், அன்றும் மக்கள் பக்கமே நின்று, அட்டூழியங்கள் செய்த மகனையும் அவனது எழுநூறு நண்பர்களையும் அழைத்து, நாட்டின் நடுவீதியில் வைத்து, எழுநூறு மண்டைகளுடன் எழுநூற்றியொன்றாகத் தனது மகனின் மண்டையையும் சேர்த்து மொட்டையடித்தான். பின் கப்பல் ஒன்றைத் தயார்ப்படுத்தி எல்லோரையும் அதில் ஏற்றி நாடு கடத்தினான். பல நாட்கள் காற்றாலும், கடலலைகளாளும் அவதிப்பட்ட அந்தக் கப்பல் கடைசியாக ஒரு தீவில் கரையொதுங்கியது. அந்தக் கடற்கரையின் ஓரத்தில் விஜயன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள்தான் இயக்கர்களின் அரசி குவேனி.

மங்கிய நிறமும் வசீகரிக்கும் அழகும் கொண்ட அந்த அரசி, கடற்கரையோரமாக உள்ள மரநிழலின் கீழே அமர்ந்தபடி நூல் நூற்றுக்கொண்டு இருந்தாள். அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் விஜய இளவரசன் குவேனியைக் காண்கிறான். கண்டதும் காதல் வயப்பட்டார்களா எனத் தெரியாது. ஆனால், புதிய தீவில் அவனுக்குப் பரிச்சயமானவளாக குவேனி மாறுகிறாள். காளிசேனன் எனும் மன்னனின் உதவியோடு குவேனியைத் திருமணம் முடித்துக்கொண்ட விஜயன், இயக்க அரசி குவேனியின் சிற்றரசுக்கு அரசனாகிறான்.

பின்னர் சில ஆண்டுகளில் தனது நண்பன் காளிசேனனைக் கொன்று அவனது ஆட்சியையும் பிடிக்கச் சதி செய்கிறான் விஜயன். குவேனியின் உதவியோடு ஒரு சதியாலோசனை நடைபெறுகிறது. எல்லாம் நினைத்ததுபோல நடந்தால் நானும் நீயும் இந்தத் தீவிற்கே அரசனும் அரசியும் ஆகிவிடலாம் என்றெல்லாம் கனவுகளோடு சொல்கிறான். அதுவொரு மிகப்பெரிய விருந்து. அத்தனை விதமான உணவுகளையும் கொண்ட இராஜபோக விருந்து. இல்லாத உணவு இல்லை. எல்லாம் மன்னனுக்குப் பிடித்த உணவுகள்.

எல்லாப் பதார்த்தங்களையும் சுவைப்படச் சமைத்து, அதில் கொஞ்சம் கொடிய விஷத்தையும் கலக்கிறார்கள் விஜயனும் குவேனியும். அவர்கள் நினைத்ததுபோலவே காளிசேனனைத் தீர்த்துக்கட்டுகிறார்கள். இனியெல்லாம் சுபமென நினைத்த குவேனி, பட்டத்து இளவரசியாகக் கனவு கண்டு கொண்டிருந்தாள். சற்றும் எதிர்பாராத திருப்பம் ஒன்று அரங்கேறுகிறது.

காளிசேனனைக் கொலை செய்த பின், அவனது அரசையும் தன்னுடன் இணைத்துக்கொண்ட விஜயன், அடுத்ததாக குவேனியின் பக்கம் திரும்புகிறான். ஆகவேண்டிய காரியமெல்லாம் நிகழ்ந்துவிட்டதே. இனி இவள் எதற்கு என நினைத்த விஜயன், இயக்கர்களின் அரசியைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். அப்போது அவர்களுக்கு அழகான ஆண் பிள்ளையொன்றும், பெண் பிள்ளையொன்றும் பிறந்திருந்தனர். குவேனியோடு சேர்த்து குழந்தைகளையும் காட்டுக்கு விரட்டியடிக்கும் விஜயன், தான் அதிகாரபூர்வமாக முடிசூடுவதற்கு வாகாக பாண்டிய இளவரசியை அழைத்து வந்து தனக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும் திருமணம் முடிக்கிறான்.

தமது அரசுரிமையை இழக்கக் காரணமான குவேனியை இயக்கர்கள் அடித்தே கொலை செய்கின்றனர். பிள்ளைகள் இருவரும் தப்பித்துக் காட்டுக்கு ஓடிவிடுகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து பெருகிய இனமே இலங்கையின் பழங்குடிகன் என்கின்றன பழங்கதைகள்.

0

உண்மையில் அப்படியிருக்க வாய்ப்பில்லை. வரலாற்றை அதன் போக்கில் நிகழவிடாத துர்பாக்கிய நிலை காலமெங்கும் நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. அல்லது, ஒன்றைப் பிறிதொன்றாக வலுக்கட்டாயமாகத் திரிபடையச் செய்கிறது. இலங்கைத் தீவின் பூர்வகுடிகள் யார் என்பது மிக முக்கியமான அரசியல் வினா. வரலாற்றை இங்குள்ள நில அரசியல் பொய்யாக்கம் செய்ய முனைந்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், இயக்கரும் நாகருமே இந்தத் தீவின் பூர்வகுடிகள். இலங்கை வரலாற்று நூல் மகாவம்சம் சொல்வதுபோல விஜயன் குவேனி கதையுடன் உருவானதல்ல இலங்கையின் வேடுவ இனம்.

இலங்கைப் பூர்வகுடிகளின் வரலாற்றை வெறும் 2600 வருடங்களுடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவர்களுடைய நம்பிக்கையின்படி 2,50,000 வருடங்களாக இந்தத் தீவில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக இலங்கைத் தீவில் வாழ்ந்த பூர்வகுடிகள் தங்கள் உடல்களையே இந்த மண்ணில் கலந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அது இடைக்கற்கால யுகம். பூர்வகுடிகள் நுணுக்கமான ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். கல்லாயுதங்களைக் கொண்டு வேட்டையாடிய பழைய கற்காலத்தில் இருந்து வெளியே வருகிறார்கள். அம்பும் வில்லையும் கண்டுபிடித்தான் ஒருவன். இனி, காட்டைச் சுற்றி முன்புபோல ஓடத்தேவையில்லை. நின்ற இடத்தில் குறி பார்த்து வேட்டையாடி உண்ண வேண்டியதுதான். காடுகளில் வாழ்கிற விலங்குகளையும் பட்சிகளையும் வேட்டையாடிய அவர்கள், இப்பொழுது அலைந்து திரிந்த வாழ்வில் இருந்து விலகி சற்று ஓய்வெடுத்துக் கொண்டனர். காடுகளில் ஓரே இடத்தில் நீண்ட நாட்கள் வாழத் தொடங்கினர்.

வேட்டையாடிச் சாப்பிடுகிற இறைச்சிக்குச் சற்றும் சளைக்காத காட்டுக் கனிகளை, இலைகளை, கிழங்குகளைக் கண்டடைகிறார்கள். அவற்றை ஆசைத் தீர உண்கிறார்கள். அவர்களுக்கெனத் தனித்த இருப்பிடம் தேவைப்படுகிறது. காடுகளில் கிடைத்த மரங்கள், இலைகள், கொடிகளைக் கொண்டு அழகான குடில் ஒன்றை பெல்லன் பெதிபலஸ்ஸ, யாபகுவையில் அமைத்து வாழ்கிறார்கள் .

இது குழு வாழ்க்கையல்ல. அவனுக்கென அழகான குடும்பம் ஒன்று இருந்திருக்கிறது. வேட்டையாட ஆண்கள் செல்வார்கள். பெண்களும் குழந்தைகளும் குடில்களில் இருந்தார்கள். அந்தத் திறந்த வனத்தின் நடுவே தமது ஆசைக் காதலிகளைப் புணர்ந்து, நாலாபக்கம் ஆபத்துச் சூழ்ந்த காட்டில் தங்களது தெய்வங்களையும் உறவுப் பேய்களையும் கோபமடைய விடாது வாழ்ந்தான் பூர்வகுடி மனிதன்.

ஆதியில், பழைய கற்கால யுகம்போலக் குழுவாக, கூட்டமாக வாழவேண்டிய தேவை இடைக்கற்கால மனிதனுக்கு இல்லை. அவன் தன்னுடைய மனைவி, பிள்ளைகளோடு, தனது தாய், தந்தையோடு, சகோதரர்களோடு இந்தத் தீவின் பரந்த தேசத்தில் எங்கெல்லாம் தனக்கு இடம் கிடைத்ததோ அங்கெல்லாம் சென்றான். அடர்ந்த வனங்களின் திறந்த புகலிடங்களில் சிலர் வாழ்ந்தனர் என்றால் வேறு சிலர் வனங்களுக்குள் இருந்த குகைகளுக்குள் சரணடைந்தனர்.

குளிர்ச்சி தருகிற அந்தக் கற்குகைகள் பழங்காடுகளுக்குள் இருந்தன. தேவையானபோது விலங்குகளை வேட்டையாடி கனிகளையும் கிழங்குகளையும் சாப்பிட்ட அவர்களுக்குக் குகைக்குள் ரம்மியமான தனிமையும், நீண்ட அவஸ்தையற்ற ஓய்வும் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் வர்ணக் கற்கள் அவன் கைக்கு வந்து சேர்த்திருந்தது. உலகில் தோன்றிய பூர்வகுடியின் முதல் பேனாவும் பேப்பரும் இந்த வர்ண கல்லும் குகைச் சுவர்களும்தான். அதைக் கொண்டு அவன் வரைய ஆரம்பித்தான். தனது வாழ்வை வரைந்தான். தன் மனைவி, தன் கடவுள், தனது ஆயுதங்கள், விலங்குகள், சூரியன், சந்திரன், இன்னும் ஏதேதோ… எல்லாம் குறியீடுகள்தான். ஆனால் அவன் தனது வாழ்க்கை வரலாற்றை அச்சொட்டாக எழுதிச் சென்றிருக்கிறான்.

இடைக்கற்காலத்தில் ஆதிவாசிகள் புந்தலை, பல்லெமளவலை ஆகிய கடற்கரைவரை தீவு முழுவதும் பரவி வாழ்ந்தார்கள். அங்குக் கிடைத்த ஆதி மனிதனின் உடல் எச்சங்கள் இலங்கைத் தீவின் ஆதிவாசிகள்தான் இந்தத் தீவின் பூர்வக்குடிகளென்று உணர்த்துகின்றன.

புலத்சிங்கள பாகியன் குகையில் தொல்பொருளியலாளர்கள் ஓர் ஆய்வைச் செய்தார்கள். அங்குக் கண்டெடுத்த உடலெச்சங்களின் காலம் சுமார் 40,000 வருடங்கள். குருவிட்ட, பட்டதொம்பக் குகையில் மேற்கொண்ட ஆய்வில் கண்டெடுத்த உடலெச்சங்களின் காலம் சுமார் 35,000 வருடங்கள். கித்துல்கலை, பெலிலெனக் குகையில் ஓர் ஆய்வு நடக்கிறது. அங்குக் கண்டெடுக்கப்பட்ட உடலெச்சங்களின் காலம் சுமார் 19,000 வருடங்கள். பலாங்கொடை, பெல்லன்பதிப் பலஸ்ஸயில் மீண்டும் ஓர் ஆய்வு. அங்குக் கண்டெடுக்கப்பட்ட உடலெச்சங்களின் காலம் சுமார் 11,100 வருடங்கள். சீகிரியாவுக்கு அருகில் உள்ள பொத்தானக் கற்குகையில் சில உடலெச்சங்களைக் கண்டெடுக்கிறார்கள். அதன் காலம் சுமார் 6000 வருடங்கள். கம்பஹா மாவட்டத்தில் அலவலையில் சில உடலெச்சங்கள் கிடைத்தன. அவற்றின் காலம் 18,000 வருடங்கள்.

இலங்கையின் தொல்குடிகள் பற்றிய ஆய்வுகள் ஒன்றைத் தெளிவாகச் சொல்கின்றன. இலங்கையில் இயக்கர், நாகர் இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் 45,000 வருடக் காலத்தில் இருந்தே கி. மு 1500 வரையான காலம் வரை இந்தத் தீவின் பலப்பகுதிகளிலும் பரவி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட இந்தத் தொல்குடிகள் பலாங்கொடை மனிதர்கள் என்றழைக்கப்பட்டிருக்கின்றார்கள். விஜயனின் வருகையுடன் உருவான சிங்கள மக்களுடன் இவர்கள் ஒன்றாக வாழ நேர்ந்தபொழுது, திருமண உறவின் காரணமாகக் கலப்பினமாக மாறியிருந்தாலும் இவர்களே இலங்கையின் பூர்வகுடிகளென உறுதியாகக் கூறமுடியும்.

நாங்கள் விஜயனின் வழி வந்தவர்களல்லர். நாங்கள் யக்ஷ கோத்திரத்தைச் சார்ந்தவர்கள். மகாபலி, ராவணன், தாரகப் பேரசர்களின் வழி வந்தவர்கள். அவர்கள்தான் மரணத்துக்குப் பிறகு உறவுப் பேய்களாக பிறந்து இந்த வனாந்தரத்தில் எங்களோடு உலாத்துவதோடு, எங்களுக்குக் கிடைக்கிற அனைத்தையும் கொடுப்பவர்கள். அவர்கள் வழி வந்த ஆசிவாசிகளான நாங்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகள் என்று இலங்கையின் பழங்குடிகள் நம்புகிறார்கள். அதுதான் உண்மையும்கூட.

(தொடரும்)

பகிர:
நர்மி

நர்மி

மதுரையில் பிறந்தவர். இலங்கையில் வாழ்ந்து வருகிறார். பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். ‘பனிப்பூ’ எனும் கவிதை நூலும் ‘கல்கத்தா நாட்கள்‘ எனும் பயண நூலும் உயிர்மையில் வெளிவந்துள்ளன. கலை, பண்பாடு, அரசியல் சார்ந்து எழுதிவருகிறார். மெட்ராஸ் பேப்பரில் இவருடைய இலங்கை பற்றிய பயணத்தொடர் வெளிவருகிறது. விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் அரசியல் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிகிறார். இலங்கையின் பழங்குடி மக்களுடன் பணியாற்றி வருகிறார். தொடர்புக்கு : rajanarmi0@gmail.comView Author posts

2 thoughts on “இலங்கைப் பழங்குடிகள் #1 – யாருடைய தீவு?”

  1. ஆம் நாங்கள் இராவணன் மகாபலி வழி வந்தவர்கள்…

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *