Skip to content
Home » இலங்கைப் பழங்குடிகள் #2 – உறவுப்பேய்கள்

இலங்கைப் பழங்குடிகள் #2 – உறவுப்பேய்கள்

ராவணன்

கடவுள்களின் உலகத்தில் ஒரு சிற்பி இருந்தார். அவர்தான் இந்த உலகத்தையும் அதில் அழகு, வலிமையென நாம் வியக்கின்ற விஷயங்களையும் உருவாக்கிய தேவச் சிற்பி. சிவன், பார்வதி திருமணத்திற்காக அவர் ஒரு வனப்பு மிகுந்த சொர்க்கத் தீவை உருவாக்கினார். அதுதான் இலங்கைத் தீவு. கிருஷ்ணனுக்குத் துவாரகை நகரை அமைத்துக் கொடுத்ததும் அவர்தான். இந்திரனுக்கு அமராவதி நகரைப் புதுப்பித்துக்கொடுத்ததும் அவரே. சேது பாலத்தை அமைக்க ராமருக்கு அவரே உதவினார்.

இது மட்டுமா? இந்துக் கடவுள்களின் கைகளில் எல்லாம் காட்சி தருகிற வலிமைப் பொருந்திய திரிசூலம், சக்ராயுதம், வேல், சிவிகை, பிங்கல வில், சாரங்க வில், வஜ்ராயுதம் போன்ற ஆயுதங்களையும் செய்தது அந்தத் தேவச் சிற்பிதான். அவர் பெயர் விஸ்வகர்மா.

வங்காளத்தில், வட இந்தியாவில் விஸ்வகர்மாவுக்கென்றே பிரத்தியேகமாக பூஜைகளும் விழாக்களும் இருக்கின்றன. ஆயுத வேலைகளில் ஈடுபடுவோரும் இயந்திர, கட்டட வேலைகள் செய்வோரும் தொழில் நுட்பப் பணியாளர்களும் தங்களது தொழில் சிறக்கவும், பணியில் பாதுகாப்புப் பெறவும், அறிவு மேன்மையடையவும் இவரையே மனமுருகி வேண்டிக்கொள்வார்கள். இந்த வழிபாடு பெரும் விழாவாகக் கொண்டாடப்படும்.

இயக்கும் தொழிலில் வல்லவரான விஸ்வகர்மாவுக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். மனு, மாய, துவட்டா, விஸ்வங்கிய, சிற்பி என்கிற அந்த ஐந்து பிள்ளைகளுமே ஐந்து வகையான கலை, தொழில்நுட்பத் திறன்களில் சிறந்தவர்களாக வளர்ந்தார்கள். இவர்களையும் தெய்வீகக் கம்மாளர்கள் என்றே அழைக்கின்றனர்.

மன்னர் மனுவுக்குச் சமன், சமுன்னை என்கிற இரண்டு குழந்தைகள். இருவருக்கும் நாடாள்கிற தகுதி வந்ததும் மனு தனக்குக் கீழ் இருந்த ராஜ்யத்தைச் சமமாகப் பிரித்து வடக்குப் பகுதியை மகன் சமனுக்கும், தெற்கை மகள் சமுன்னைக்கும் கொடுத்தார். இளம் குமரியான சமுன்னையின் நாடு இளநாடு என்று அழைக்கப்பட்டு பின்பு ஈழநாடு என்றானது. இந்த அரசியின் காலத்தில் இலங்கைத் தீவு பதினான்கு கடற்கோள்களுக்கு ஆளாகியிருக்கிறது. சமனுக்கும் சமுன்னைக்கும் பிற்பட்ட சந்ததிகள்தான் நக்கர், நாகர், இயக்கர் ஆகியோர். இவர்களின் வழி வந்தவர்கள்தான் இலங்கையின் ஆதிவாசிகள் உறவுப்பேய்கள் என்று வணங்குகிற ராவணனும் மகாபலியும்.

இயக்கர்களும் நாகர்களும் தங்களுடைய மூதாதையர்கள் இறந்த பிறகும், அவர்கள் வாழ்ந்த இந்தக் காடுகளில் உறவுப் பேய்களாகச் சுற்றித் திரிந்து தங்களைக் காத்து வருவதாக நம்புகிறார்கள். உறவுப் பேய்கள்தான் தங்களுக்குக் கிடைக்கிற அனைத்து வேட்டை உணவுகளுக்கும் இயற்கையில் கிடைக்கிற தேன், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றுக்கும் காரணமாக இருப்பதாகச் சொல்கின்றனர். காட்டில் விலங்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக நம்புகின்றனர். அதனால் ஒவ்வொரு ஆதிக்குடியும் தங்களது உறவுப்பேய்களை நினைத்துப் பூஜைகளைச் செய்துவிட்டுதான் மற்ற வேலைகளைப் பார்ப்பார்கள்.

ராவணன் விஸ்ரவ முனிவருக்கும் அசுர குலத் தலைவர் சுமாலியின் மகளான கேகசிக்கும் பிறந்தவன். ராவணனின் அண்ணன் குபேரன் என்றும் (ஒன்றுவிட்ட அண்ணன்), அவருக்காக விஸ்வகர்மா அமைத்த நாடே இலங்கையென்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதையும், புஷ்பக விமானத்தையும் கைப்பற்றி ராவணன் ஆட்சி செய்தான் என நம்பப்படுகிறது.

படைத்தல் கடவுளான விஸ்வகர்மாவே இலங்கையை வடிவமைத்திருக்கிறார். ஆனால் தவ வலிமை பொருந்திய ராவணன் சிவனை நோக்கித் தவமிருந்து, இலங்கைத் தீவைப் பார்வதியிடம் இருந்து எடுத்துக்கொண்டான் என்ற ஒரு கதையும் உண்டு. இருக்கலாம், இலங்கையின் மன்னன் ராவணன் என்றுதான் இலங்கையின் பூர்வக்குடிகள் நம்புகிறார்கள். அந்த வகையில் இயக்க வம்சத்தைச் சேர்ந்த ராவணன் தங்களுக்கு நன்மை செய்கிற உறவுப்பேய் என்று ஆதிவாசிகள் உறுதியாக நம்புகின்றனர்.

அடுத்த உறவுப்பேய் மகாபலி மன்னன். மகாபலி மக்களைப் பேரன்போடு ஆட்சி செய்த அசுர அரசன். அவன்மீது மக்கள் பேரன்பு வைத்திருந்தனர். அவனும்கூட தேவர்களின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். அசுர அரசர்களிலேயே மிகப்பெரிய, மிக அதிக வலிமை வாய்ந்த அரசர் என அழைக்கப்படுகிறான். இலங்கை ஆதிவாசிகள் தங்களது உறவுப்பேய் எனச் சொல்வதில் மிக முக்கியமானவராக மகாபலி காணப்படுகின்றார்.

கௌதம புத்தர் இலங்கைக்கு முதன் முதலில் வந்தபோது வந்திறங்கிய இடம் மகியங்கனை. அவர் வந்திறங்கியபோது மகியங்கனையில் இலங்கையின் பூர்வகுடிகளான இயக்கரும், நாகர் என்கிற பழங்குடிகளும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களை இதிகாசம் அரக்கர்களாக விவரிக்கிறது. மிகவும் கொடூரமானவர்களாகவும், மனிதர்களைக் கொன்று உண்பவர்களாகவும், நாகரிகமற்றவர்களாகவும் அவர்களைக் குறிப்பிடுகிறது.

இலங்கை வந்திறங்கிய புத்தப் பெருமான் இவர்களுக்குப் புத்தத் தர்மத்தினைப் போதித்ததாகவும், அந்த அரக்கத் தலைவர்களான சமனும் சோவனும் புத்தரின் ஞான உபதேசத்தைக் கேட்டு புத்த மதத்துக்கு மாறியதாகவும், அதனைத் தொடர்ந்து அனைவருமே தங்களது பேய், இறந்த ஆவி வழிபாடு, நம்பிக்கைகள், கொடூரத்தன்மைகள் அனைத்தையும் விடுத்து பௌத்த மதத்தைப் பின்பற்றி நடந்ததாக சொல்லப்படுகிறது. மனம் மாறி பௌத்தர்களாக மாறிய சமனும் சோவனும் புத்தரை வழிபட விரும்பியதாகவும், கௌதம புத்தர் அதற்காகத் தனது தலையில் உள்ள முடியைப் பிடுங்கிக் கொடுத்ததாகவும், அந்த முடியை வைத்துக் கட்டிய விகாரைதான் மகியங்கனை விகாரை என்றும் நம்பப்படுகிறது. பிற்பட்ட காலத்தில் வந்த பல மன்னர்கள் இந்தத் தூபியைப் புனர் நிர்மாணம் செய்திருக்கிறார்கள். இந்த மகியங்கனை விஜயத்தின் எட்டு மாதங்களுக்குப் பிறகே புத்தப் பெருமான் ஞானமடைந்தார் எனச் சொல்லப்படுகிறது.

புத்தப் பெருமானின் இலங்கை வருகைக்குப் பின்னரே இலங்கை ஆதிவாசிகள் புத்தத் தம்மத்தைப் பின்பற்றி மனிதர்களாக மாறினார்கள், நாகரிகமடைந்தனர் என்றும் சொல்கின்றனர். இந்தக் கதைகள் மிகப்பெரிய முரணைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் இயக்கரிடமும் நாகர்களிடமும் மிக உயர்ந்த ஆக்கத்திறனும், அறிவும் பண்பாடும் இருந்தன என்பதுதான் உண்மை. ஆதிவாசிகளின் உறவுப்பேய்கள் என்று சொல்லப்படுகிற ராவணன், மகாபலி போன்றோர் எல்லாக் கலைகளிலும், யோக, ஞான வழிபாடுகளிலும் கைத்தேர்ந்தவர்களாக இருந்தவர்கள். தமது மக்களுக்குச் சிறந்த ஆட்சியை வழங்கியவர்கள். அதனால்தான் மக்கள் அவர்களை இன்றும் தமக்கு நன்மை செய்கிற கடவுளாக நினைக்கிறார்கள்.

இன்னும் விரிவாக இந்த நக்கர், நாகர், இயக்கர் பற்றித் தெரிந்துகொள்ளலாம். நக்கர்கள் வாழ்ந்த இடம் தனிச்சோலைகளாக இருந்திருக்கின்றன. இவர்கள் நக்கவர் தீவில் வாழ்ந்தார்கள். இவர்கள் தீவிர சிவ பக்தர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த தீவே நிக்கோபார் தீவு என அழைக்கப்பட்டிருக்கிறது.

நாகர்கள் மலையும் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் உலக நாகரிகங்களின் முன்னோடிகள் எனப்படுகிறார்கள். கௌதம புத்தர்கூட நாகர் இனத்தைச் சேர்ந்தவரெனச் சொல்லப்படுகிறது. இவர்கள் நாகத்தை வழிப்பட்டு வந்திருக்கிறார்கள்.

இயக்கர்கள் சிறந்த பொறியியலாளராக, நிலம், நீர், வானம் ஆகியவற்றில் வானவூர்தி, கப்பல் கொண்டு பயணிக்கின்ற தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சிறந்த சிற்பிகளாகவும் ஓவியர்களாகவும் மோகர்களாகவும், சிறந்த கொல்லர்களாகவும், கலைகள் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.

ராவணன், மகாபலி பற்றிய கதையாடல்கள் பாரதம் எங்கும் பரவியிருக்கிறது. எப்படி இலங்கை ஆதிக்குடிகள் அவர்களை வணங்கி வழிபாடு நிகழ்த்தி வருகிறார்களோ, அவ்வாறே கேரள மாநிலத்தில் மகாபலி மன்னனை நினைவுப்படுத்தியே ஓணம் கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தியாக இருந்த காலத்தில் இந்தியாவில் அனைத்துப் பழங்குடி மக்களும் ராஜசூய யாகத்தில் மகிழ்விப்பதற்காக அவர் வருகை தந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில், வசிக்கிற கோண்ட் இன ஆதிவாசிகள் ராவணனை வணங்குகிறார்கள். ராவணன் பிஸ்ராக் எனும் இடத்திலும், அவனது மனைவி மண்டோதரி விதிஷாவிலும் பிறந்ததாக நினைக்கிறார்கள். ராவணனை அவர்கள் தங்கள் வழிவந்த மன்னனாகப் பார்க்கிறார்கள். இந்தப் பழங்குடிகள் அவர்கள் வாழ்கிற இடத்தில் ராவணனுக்குச் சிலையெழுப்பி, தசராவின் இறுதி நாளில் துக்கம் அனுஷ்டித்துப் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

இப்படிப்பட்ட மாபெரும் மன்னர்களின் வழி வந்தவர்கள்தான் இலங்கை ஆதிவாசிகள்.

(தொடரும்)

படம்: ராவணன், அங்கோர்-வாட் 

பகிர:
nv-author-image

நர்மி

மதுரையில் பிறந்தவர். இலங்கையில் வாழ்ந்து வருகிறார். பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். ‘பனிப்பூ’ எனும் கவிதை நூலும் ‘கல்கத்தா நாட்கள்‘ எனும் பயண நூலும் உயிர்மையில் வெளிவந்துள்ளன. கலை, பண்பாடு, அரசியல் சார்ந்து எழுதிவருகிறார். மெட்ராஸ் பேப்பரில் இவருடைய இலங்கை பற்றிய பயணத்தொடர் வெளிவருகிறது. விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் அரசியல் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிகிறார். இலங்கையின் பழங்குடி மக்களுடன் பணியாற்றி வருகிறார். தொடர்புக்கு : rajanarmi0@gmail.comView Author posts

1 thought on “இலங்கைப் பழங்குடிகள் #2 – உறவுப்பேய்கள்”

  1. அசுரர்கள் என்றாலே மோசமானவர்கள் என்று தேவர்களால் கதைகட்டப்பட்டு விட்டது.. வலிமை மிக்க ஒரு அரசு அரசன் இருந்தால் தேவர்களுக்கு மூக்கு வேர்த்து விடும்.. உடனே பொறாமையால் பொசுங்குவார்கள்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *