இலங்கையின் பழங்குடிகளில் ஒருவரைக் கூப்பிட்டு நீங்கள் யார் என்று கேட்டால், அவர் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் தன்னை இப்படி அறிமுகப்படுத்திக்கொள்வார். ‘நாங்கள் யக்ஷ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.’
தங்களை இப்படி அறிமுகப்படுத்திக்கொள்வதில் அவர்களிடையே எந்த வேறுபாடும் இருக்காது. ஆனால் யக்ஷ கோத்திரத்தின்கீழ் பதினான்கு பிரிவுகள் அல்லது வகைகள் உள்ளன.
புராணக்காலத்தில் இலங்கைப் பழங்குடிகள் பதினான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இந்தத் தீவு முழுவதும் பரவி வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் காலப்போக்கில் குறைவடைந்துவிட்டனர், இப்போது சில பிரிவினர் முற்றாக மறைந்துவிட்டனர். 1914இல் ஆய்வு செய்த ஃபெட்ரிக் லீவ்ஸ் (Fedric Liews), 1909இல் ஆய்வை மேற்கொண்டிருந்த செலிங்மேன் போன்றவர்கள் கிபி 19ஆம் நூற்றாண்டளவில் இந்தப் பதினான்கு பிரிவினரும் மறைந்து, இறுதியில் ஆறு பிரிவுகள் மட்டுமே எஞ்சியிருந்தன என்கிறார்கள்.
அந்த ஆறு பிரிவுகள் பின்வருமாறு.
- ஊரு வர்க
- தலா வர்க
- நபு வர்க
- உனாபான வர்க
- மொரான வர்க
- அம்பலவ வர்க
சிங்கள மொழியில் வர்க என்பது பிரிவு என்ற அர்த்தத்தைத் தருகிறது. இந்தப் பிரிவுகளுடன் இலங்கைப் பழங்குடிகள் தொழில் அடிப்படையில் மூன்று வகைப்பாட்டுக்குள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
- கல்வேடர்கள் : இலைக்கொடிகளையும் மரப்பட்டைகளையும் அணிந்து, வேட்டையாடி வாழ்கிற பழங்குடி மக்கள்.
- கரையோர வேடர்கள் : கடற்கரையோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற, கடற்தொழிலை வாழ்க்கை வழியாகக் கொண்டுள்ள வேடர்கள்.
- கராம வேடர்கள் : சேனை விவசாயத்தை வாழ்க்கை முறையாகக் கொண்டு நிரந்தரமான வீடு, வாசல்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிற வேடர்கள்.
பதினான்கு பிரிவு பழங்குடியினருக்கும் பதினான்கு பிறப்புக் கதைகள் உண்டு. அதுவொரு ரம்மியமான வன வாழ்க்கை. அகன்ற வானத்தை எல்லையாகக் கொண்ட பழம்பெரும் காடுகள் அவை. வேடுவ பழங்குடிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பம் என்ற அழகிய முதல் சமூக நிறுவனத்தை உருவாக்கி வாழ்ந்தனர். குகைகளிலும் மரப்பொந்துகளிலும் குடும்பத்தோடு வசித்தனர். ஒரு பக்கம் இயற்கையோடு இயைந்த அழகிய வாழ்வு. இன்னொரு பக்கம் அதே அழகு வனவலங்குகள்மூலம் ஆபத்தையும் வரவழைக்கக்கூடும். இந்த இரண்டுக்கும் இடையில் அமைந்திருந்தது அவர்கள் வாழ்க்கை.
அவர்களுடைய வாழ்க்கைமுறை அப்போது எப்படியிருந்தது என்பதை உணர்த்தும் இளம் தம்பதிகளின் கதையான்று உண்டு. பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மேற்சொன்னதுபோலவே அழகும் ஆபத்தும் நிறைந்த வன வாழ்க்கை. எந்த ஆபத்து வந்தாலும் அதிலிருந்து மீட்க உறவுப் பேய்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களை ரட்சிப்பதாகவும் மக்கள் நம்பி வந்தனர். இளம் தம்பதிக்கும் அந்த நம்பிக்கை வலுவாக இருந்தது.
ஒரு நாள் இருவரும் பழங்களைப் பறிப்பதற்கோ தேன் எடுப்பதற்கோ குகையை விட்டு நீண்ட தூரத்துக்கு வந்திருந்தனர். திடீரென்று ஓரிடத்தில் பெண்ணுக்குப் பிரசவ வேதனை ஆரம்பித்துவிட்டது. பிரசவத்துக்கு ஏற்ற இடம் எதுவும் அங்கே இருப்பதுபோல் தெரியவில்லை. குகைக்கும் திரும்பிச் செல்வது சாத்தியமில்லை. நடுக்காட்டில் என்ன செய்வது? வாகான இடத்தை எப்படித் தேடிக்கொண்டு போகமுடியும்? எந்தக் கணத்திலும் குழந்தை பிறந்துவிடலாம் என்னும் நிலையில் என்ன செய்வதென்று இருவருக்கும் புரியவில்லை.
சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தவன் பன்றி தோண்டிய குழியொன்றைக் கண்டான். மனைவியை அந்தக் குழிக்கு அருகில் தூக்கிச்சென்றான். குழந்தையை அங்கேயே பிரசவிக்கச் செய்தான். பன்றி தோண்டிய ஏற்படுத்தியிருந்த பாதுகாப்பான மறைவில் மனிதக் குழந்தை பிறந்தது.
வேடுவ மொழியில் ஊரா என்றால் பன்றி. பன்றி தோண்டிய குழியில் பிறந்த காரணத்தால் அந்தக் பழங்குடி மக்களை ஊருவர்கே என்று அன்றிலிருந்து அழைக்கத் தொடங்கினார்கள். அதுதான் ஊருவர்கேயின் பிறப்புக்கதை.
(தொடரும்)