யக்ஷ கோத்திரத்தின் வழிவந்து எஞ்சிய பழங்குடி மக்களின் பிறப்புக்கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இவை வாய் வழியாக ஒரு பழங்குடியினரிடம் இருந்து இன்னொருவருக்குக் கடத்தப்பட்ட கதைகளாகும். அந்தச் சங்கிலிப் பிணைப்பு, சிங்கள மக்களின் ஊடுருவலால் ஒரு கட்டத்தில் இல்லாமல் போனது. அதுமட்டுமில்லாமல் இந்தப் பழங்குடி மக்கள் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்க நேர்ந்தபொழுது, அங்கு வாழ்ந்த இனங்களின் கலப்பினாலும் ஆதிக்கத்தினாலும் இந்தப் பிறப்புக் கதைகள் இளைய தலைமுறையினரைச் சென்றடையாமல் மறைந்தன.
ஆனால், அந்தக் கதைகள் மூத்தப் பழங்குடிகள் யாராலும் மறக்கப்படவில்லை. அவை அவர்களின் உயிரில் கலந்துவிட்டன. அப்படிப்பட்ட ஒரு பழங்குடி முதியவர்தான் திஸாகாமி மொரானுவர்கே. அவர், இந்தக் கதைகள் ஒவ்வொன்றையும் நினைவுப்படுத்திச் சுவைபடச் சொல்கிறார். மூத்தப் பழங்குடிகளில் பதினான்கு வகையினரில் ஆறு வகையினர் மட்டுமே இன்று எஞ்சியுள்ளனர். ஏனையவர்களின் பிறப்புக் கதைகள் கிடைக்கவில்லை. கிரோ வர்கே என்ற பிரிவு குறித்த கதையை இலங்கை வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ எங்களிடம் கூறினார். அவர் சொன்ன கதைகள் அனைத்தும் பொக்கிஷங்கள்.
உனாபான வர்கே
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நெடிய வனம் ஒன்றில் அரசனும் பழங்குடி ஒருவனும் பயணித்துக் கொண்டிருந்தனர். அது கோடைக்காலம். எங்கும் வெயில். ஏனைய காலங்களில் அங்குள்ள நீரூற்றுகள் நிறைந்து, சிறிய ஓடைகளின் சலசலப்பு காடு முழுவதும் எதிரொலிக்கும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. நீருக்கான தடயத்தையே காணவில்லை. காடு பிளக்கும் வெயில் வேறு.
நீண்ட தூரம் நடந்திருந்த மன்னன் களைத்துப் போனான். பருகுவதற்கு நீரும் இல்லாததால் அவன் மயக்க நிலைக்குச் சென்றான். இதைப் பார்த்த ஆதிவாசி, மன்னனை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு, குடிப்பதற்கு நீர் தேடி ஓடினான். நீண்ட நேரம் அலைந்த நிலையில், சிறு ஓடை ஒன்று அவன் கண்ணில் பட்டது.
அதிலிருந்து நீரை எடுத்துச் செல்வதற்குக் குடுவையோ, பாத்திரமோ அவனிடத்தில் இல்லை. உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன், தனது தோளில் இருந்த துண்டை எடுத்து, நன்றாகக் கழுவி, நீரில் நனைத்து எடுத்தான். பின் ஓடிச் சென்று மன்னனின் வாயில் பிழிந்தான். அதைப் பருகிய மன்னன் மயக்கம் தெளிந்தான். அந்தப் பழங்குடி மனிதன் நீரை வழங்கி தனது உயிரை மீட்டதால் அவனது இனத்துக்கு ‘உனாபான வர்கே’ என மன்னன் பெயர் சூட்டினான். அன்றிலிருந்து அந்தக் குழுவை சேர்ந்த ஆதிவாசிகள் உனாபான வகையினர் என அழைக்கப்படுகின்றனர்.
தலாவர்கே
அது ஆதிவாசிகள் காட்டை விட்டு வெளியே வராத காலம். ஆணும் பெண்ணும் சேர்ந்தே காட்டில் உணவு தேடுவது வழக்கம். ஆதிவாசி தம்பதியொன்று காட்டுக்குள் உணவு தேடிச் சென்றது. பெண் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். தாங்கள் வசித்து வந்த குகையில் இருந்து நீண்ட தூரம் வந்திருந்த நிலையில், அந்தப் பெண்ணுக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. அந்தப் பகுதி மரங்களற்ற, புற்கள் நிறைந்த திறந்த வெளியாக இருந்தது. அப்படிப்பட்ட பகுதியை வேடர்களின் மொழியில் தலாமுல்ல, தலாமுட என்பார்கள். அவள் அந்தச் சமவெளியில் குழந்தையைப் பெற்றெடுக்க நேர்ந்ததால் அந்தக் குழந்தையில் இருந்து தோன்றிய இனம் தலாவர்கே என அழைக்கப்பட்டது.
மொரானுவர்கே
காடு பழங்குடிகளுக்கு உணவு வழங்கும் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அது இயற்கையாகவே பலவகை கனிகளும் கிழங்குகளும் நிரம்பியது. அத்தகைய காட்டில் காணப்படும் ஒருவகை பழம்தான் மொர. அந்தப் பழம் பழங்குடிகளுக்கு மிகவும் பிடித்தமான பழமாகக் கருதப்படுகிறது. ஆனால் அது குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே காய்க்கக்கூடியது.
அப்போது அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னருக்குத் திடீரென மொர பழத்தைச் சாப்பிட வேண்டும் என்ற விபரீத ஆசை தோன்றியது. ஆனால் அது, மொர பழம் காய்க்காத பருவம். மன்னன் தனது ஆட்களை அனுப்பி எப்படியாவது அந்தப் பழத்தைக் கொண்டு வருமாறு பணித்தான். மன்னரின் ஆட்கள் எங்குத் தேடியும் பழம் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர்கள் அந்தப் பழங்குடியினரைச் சந்தித்தனர்.
பொதுவாகப் பருவக் காலங்களில் கிடைக்கும் பழங்களைத் தேனில் இட்டுப் பாதுகாப்பது பழங்குடிகளின் வழக்கம். படை ஆட்கள் தாங்கள் வந்த நோக்கத்தைப் பழங்குடியினரிடம் சொன்னபோது, அவர்கள் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த மொர பழத்தை மன்னருக்காகக் கொடுத்தனர். மொர பழத்தைக் கொடுத்து மன்னரின் ஆசையைத் தீர்த்ததால், அந்தப் பழங்குடியினருக்கு மொரானுவர்கே என மன்னன் பெயரிட்டான்.
நபுடன் வர்கே
இந்தப் பழங்குடிகள் வசிந்து வந்த வனம் அபூர்வ மரங்களால் நிரம்பியது. பொதுவாக, காட்டில் உள்ள மரங்கள் எல்லாக் காலங்களிலும் காய்க்காது. மரங்கள் உணவு தராதபோது பஞ்சம் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு உணவுப் பஞ்சம் வந்தபோது மக்கள் உண்பதற்குக் காய், கனிகள் இல்லாமல் அல்லாடினர். அப்போதுதான் அவர்கள் நபுடன மரத்தைக் கண்டனர். அந்த மரம் முழுவதும் பழங்களும் காய்களும் காய்த்துத் தொங்கின. ஆனால், அவர்கள் அதற்குமுன் அந்த மரத்தின் கனிகளையோ காய்களையோ உண்டதில்லை.
என்ன செய்வது? பசி என்றால் பத்தும் மறந்துவிடும் இல்லையா? அவர்கள் அந்த மரத்தின் தன்மை பற்றி எதுவும் அறியாது அதன் பழங்களை வயிறார உண்டனர். சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக மயக்கம்போட்டு இறந்தனர். பிறகுதான் தெரிந்தது அதுவொரு நச்சு மரம் என்று. நபுடன மரத்தின் விஷத்தால் இறந்ததால் அவர்கள் நபுடன் வர்க என அழைக்கப்பட்டனர்.
அம்பலவாண வர்கே (எம்புலோ வர்கே)
மனிதர்கள் வசிக்கும் குடில்களில் கனமே என்ற சிறிய ரகப் பூச்சி ஒன்று காணப்பட்டது. அந்தப் பூச்சியின் அடிபாகம், சௌவரிசி போன்ற உருளை வடிவத்தில் நான்கு பகுதிகளாகப் பிரிந்திருந்தது.
அந்தப் பகாகங்கள் பெனி, மல், கிரி, எம்புல் என அறியப்பட்டன. அந்தப் பாகங்களில் முதலில் உள்ள மூன்று பகுதிகளையும் விலக்கிவிட்டுப் புளிப்புச் சுவையடங்கிய எம்புல் பகுதியை மட்டும் உண்டு வாழும் வேடர்கள் இனம் ஒன்று இருந்தது. அவர்கள் எம்புலு வர்கே என அழைக்கப்பட்டனர். பின்னாட்களில் அவர்களின் பெயர் அம்பலவாண வர்கே என்று மாறியது.
கிரோ வர்கே
மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததைப்போல மரப்பொந்துகளிலும் வாழ்ந்த காலம் அது. ஒருமுறை திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் மகியங்கனைக் காட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வேதனையெடுத்தது. அந்தக் காடு அடிபருத்தக் கிரல மரங்களால் நிரம்பி இருந்தது. அந்த மரத்தின் அடிவாரம் நிலத்தோடு இணையும்போது சுவர் மறைப்புபோல அகன்று இருக்கும். பிரசவ வேதனையெடுத்து துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு அந்த மரத்தடியில் உள்ள மரப்பொந்தில் வைத்துப் பிரசவம் பார்க்கப்பட்டது. அதனால் அந்தப் பெண்ணின் வம்சம் கிரோ வர்கே அழைக்கப்பட்டது.
இவைதான் இலங்கைப் பழங்குடி மக்கள் ஏழு வகையினரின் பிறப்புக் கதைகள்.
(தொடரும்)