Skip to content
Home » இலங்கைப் பழங்குடிகள் #5 – தலைவர்கள் உருவான கதை

இலங்கைப் பழங்குடிகள் #5 – தலைவர்கள் உருவான கதை

இலங்கைப் பழங்குடிகள் - தலைவர்கள் உருவான கதை

இளவரசன் விஜயனின் வருகைக்கு முன்பே இலங்கைத் தீவில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் நாரிகமடைந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்கான தடயங்கள் அந்தத் தீவு முழுவதும் விரவிக் கிடைக்கின்றன. சிறந்த வகையில் நிர்மாணிக்கப்பட்ட நகரங்கள், வீடுகள், சடங்குகள் எல்லாம் அங்கு நிலவி இருந்த உயர்ந்த நாகரிகப் பாரம்பரியங்களை நமக்கு எடுத்துரைக்கின்றன. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அந்த ஒழுங்கமைந்த பழங்குடி மக்களை வழிநடத்த தலைவர்களும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? ஆம், தலைவர்களும் இருந்தார்கள்.

சுதந்திரமாக வனங்களில் சுற்றித் திரிந்த ஆதி மனிதனுக்கு, தனித்துத் திரிந்த வாழ்வு அயர்ச்சியை ஏற்படுத்தியதால் தன்னை ஈர்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, குழந்தையையும் பெற்றுக்கொண்டு குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கினான். மனிதர்கள் உருவானபோதும், பல இடங்களில் வாழ நேரிட்டபோதும் அவர்களுக்கிடையே கிராமத் தலைவர்களோ இனத்தலைவர்களோ உருவாகவில்லை. ஏனென்றால் தலைவன் என்ற ஒரு பொறுப்பு அவர்களுக்குத் தேவைப்படவில்லை. குடும்பக் கனவுகள் வந்தபோதுதான், குடும்பம் என்கிற முதல் நிறுவனத்தை உருவாக்கிய பிறகுதான் குடும்பத் தலைவன் என்ற தலைமைப் பொறுப்பு வரலாற்றில் முதன் முதலில் உருவானது.

கி. மு 900 வாக்கில் இந்தத் தீவில் வாழ்ந்த ஆதிவாசி மக்கள், கிராமங்களாக உலர் பிரதேசங்களில் ஒழுங்கமைந்து வாழ்ந்திருக்கின்றனர். இந்தக் கிராமங்களில் பல குடும்பங்கள் இருந்திருக்கின்றன. அவர்களின் எண்ணிக்கை நூறையும் ஆயிரங்களையும் கூடத் தாண்டியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.

புனித பூமியெனப் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கைத் தீவில் அநுராதபுரம் என்றொரு இடம் காணப்படுகிறது. அங்கு புளியங்குளம் என்ற இடத்தில் சில கல்வெட்டுகள் கிடைத்தன. அதில், ‘சுமணவின் குடும்பத்தைச் சேர்ந்த உலோகக் கைத்தொழில் மேற்கொண்டிருந்த இல்லத் தலைவனொருவன், பிக்குமாரின் சேமநலன் கருதிக் கற்குகை ஒன்றைச் சுத்தம் செய்து தானமளித்தான்’ என்ற செய்தி காணக்கிடைக்கிறது.

இந்தக் கல்வெட்டு பொஆமு 250ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் குடும்பம் குலமெனவும், குடும்பத் தலைவன் கிருகபதியெனவும் அழைக்கப்பட்டிருக்கிறான்.

குடும்பத்தை நிர்வகித்த வீட்டுத் தலைவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் நிறைவேற்றுவதற்கான சில பொதுக்கடமைகள் இருந்தன. கிராமம் என்றொன்று உருவானபோது கூடவே பிரச்சினைகளும் உருவாகியிருந்தன. திருமண விஷயங்கள், விவசாயம், பண்டப் பரிமாற்றம் தொடர்பான பிணக்குகள், சட்டம், நீதி சார்ந்த விடயங்கள் எனப் பல பிரச்சினைகள் எழுந்தன. அவற்றையெல்லாம் தீர்ப்பதற்குச் சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற, பழங்குடி மக்களின் பொதுவிருப்பைப் பெற்ற தலைவனொருவன் தேவைப்பட்டான். அந்தத் தலைவன் மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவனாக, ஒழுக்க விழுமியம் பேணுபவனாக, தனது குலம், கிராமம் மீது பற்றுள்ளவனாக, பணம் படைத்தவனாக, ஆளுமை மிக்கவனாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

அந்தக் காலங்களில் ஆதிவாசிகள் வாழ்ந்த கிராமங்கள் பல இருந்தன. அந்தக் கிராமங்களைப் பிரிக்கும் எல்லைகளாகக் காடுகள் இருந்தன. இரு கிராமங்களுக்கு இடையில் பிணக்குகள் வந்தபோது, அவற்றைத் தடுக்க தலைவன் ஒருவனின் தேவை இருந்தது. அப்படிப்பட்ட ஒருவனை மக்கள் அந்தந்தக் கிராமத்தில் இருந்த வீட்டுத் தலைவர்களில் இருந்து தெரிவு செய்துகொண்டார்கள்.

கிராமத் தலைவன் செல்வம் படைத்தவனாக இருக்க வேண்டும் என்பதற்கும் காரணம் இருந்தது. ஆதியில் மனிதர்கள் குடிபெயர்ந்து கிராமம் அமைத்து வாழ்ந்த இடம் உலர் வலயம். பிரதான ஜீவனோபாயம் விவசாயம். அவர்கள் மழைநீரை நம்பியே விவசாயம் செய்தனர். மக்கள்தொகை பெருகப் பெருக நீர்ப்பற்றாக்குறை வாட்டத் தொடங்கியது. இதைக் களைவதற்கான திறன் கிராமத் தலைவனுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஓர் ஆதிவாசி கிராமத் தலைவன், பிரச்சினையென வரும் மக்களுக்கு உடலாலும் உள்ளத்தாலும் பணத்தாலும் உதவுகிற நிலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட குடும்பத் தலைவன் ஒருவனை மக்கள் விரும்பும்பட்சத்தில் அவன்தான் கிராமத் தலைவனாகத் தேர்வு செய்யப்பட்டான். கிராமத் தலைவன் அந்தக் காலத்தில் கமிக என அழைக்கப்பட்டான்.

இந்தக் கிராமத் தலைவர்கள், தங்கள் கிராமத்து மக்களுடன் மட்டுமல்லாது ஏனைய மக்களோடும் நல்ல உறவினைப் பேணவேண்டிய தேவையிருந்தது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சித்துல்பவ என்ற இடத்தில் ஒரு புராதன விகாரை அமைந்திருந்தது. அங்கு கொரவக்கல எனுமிடத்தில் கற்குகையொன்று இருந்தது. அந்தக் குகையை கமிக சிவ, கமிக சுமண, கமிக சதன என்கிற மூன்று தலைவர்கள் சுத்தம் செய்து பிக்குகளுக்குத் தானமளித்ததாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

அந்தக் காலகட்டத்தில் விவசாயம் எதிர்பார்த்த விளைச்சலைத் தராமல்போகும் நிலையும் இருந்தது. அப்படியொரு சம்பவமும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. புராதன கிராமம் ஒன்றில் வாழும் ஏழைக் குடியானவன் அடுத்த போகத்தில் தருவதாகக் கூறிய வாக்குறுதியின் பெயரில் கமிகவிடம் நெல் மூட்டை ஒன்றைக் கடனாகப் பெற்றுக்கொண்ட செய்தி, ஜாதக அட்டக்கதையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

குடும்பத் தலைவன் (கிரக பதி), கிராமத்தலைவன் (கமிக) ஆகிய தலைவர்களுக்கு அடுத்ததாகப் பருமக என்றொரு பிரபுக்கள் குழுவும் இலங்கையில் உருவானது. இவர்கள்தான் இலங்கையின் அரசியல் ரீதியான வளர்ச்சிக்குக் காரணமான மிக முக்கியத் தலைவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

பருமகர்கள் தோன்றுவதற்குச் சில வலுவான காரணங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமான காரணம் குளங்கள் பராமரிப்பு. பொஆமு 900களில் உலர் வலயத்தில் காணப்படுகிற சிறு குளங்களுக்கு அருகிலேயே மக்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டார்கள். இந்தச் சிறிய குளங்கள் எல்லாம் மழை நீரைச் சேமித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவை. அக்காலத்தில் கிராமம் ஒன்றில் 10 முதல் 15 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்களுக்கு இந்த நீர் சொற்ப காலத்துக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. ஜனத்தொகை பெருகும்போது நீர்பற்றாக்குறை ஏற்பட்டது.

அதனால் மக்களுக்கும் தலைவர்களுக்கும் எழுந்த மிகப்பெரிய பொறுப்பு ஜனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்றவாறு நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது. மழையற்ற காலகங்களிலும் விவசாயம் மேற்கொள்வதற்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு வழிவகை செய்வது. இதற்கு அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் பல சிறிய குளங்களை ஒன்றிணைத்து, குளத்தொகுதி என்ற ஒன்றை உருவாக்குவது. குளத்தொகுதியை ‘வெவ்பிரபாதனய’ எனவும், ‘எல்லாங்காவ’ எனவும் அக்கால மக்கள் அழைத்தார்கள். குளத்தொகுதியை உருவாக்க அவர்களுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

1.மேட்டுப்பாங்கான நிலத்தில் அமைந்துள்ள குளம் மழை நீரால் நிரம்பும்போது வெளியேறும் மேலதிக நீரை, தாழ்நிலப் பகுதியில் அமைந்த குளம் ஒன்றுக்குத் திருப்பி நீரைப் பாதுகாக்க வேண்டும்.

2. இரு குளங்களுக்கு இடையில் உள்ள கால்வாயில் எந்நேரமும் நீரைப் பாயவிடுவதன் மூலமாக அதன் இருபக்க நிலங்களிலும் ஈரத்தன்மையைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

உலர் வலயங்களில் இப்படியான செயல்முறை நிலத்தை ஈரலிப்பாக வைக்க உதவியது. ஈரலிப்பான நிலங்களில் பயிர்கள் இலகுவாக வளர ஆரம்பித்தன. அக்காலத்தில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு குளமேனும் இருந்தது. இந்தக் குளங்களை ஒன்றிணைத்து, குளத்தொகுதி ஒன்றை உருவாக்கக் கிராமத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடிக் கதைக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். கதைத்திருக்கிறார்கள். இவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே பருமகர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு குளத்தொகுதியைச் சேர்ந்த அனைத்துக் கிராமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற தலைவராகத்தான் பருமகர் இருந்திருக்கிரார். குளத்தொகுதியோடு தொடர்புபடுகிற அனைத்துப் பிரச்சினைகளையும் கையாள்கிற அதிகாரம் படைத்தவராகவே பருமகர் காணப்பட்டார்.

கல்வெட்டுச் சான்றுகள், தொல்பொருள் சான்றுகள்படி இலங்கைத் தீவில் உலர் வலயப் பிரதேசங்களில் இவ்வாறான குளத்தொகுதிகளின் இடிப்பாட்டை நூற்றுக்கணக்கில் காணமுடிகிறது. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட பருமகர்களின் பெயர்கள் மிகத்தெளிவாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆண் பருமகர் மட்டும் இல்லை, பெண் பருமகரும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பருமகலுவென அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அரசர், அரசியென்கிற பெயர்களில்கூட மக்கள் அழைத்திருக்கிறார்கள். இந்தப் பருமகர்கள்தான் இலங்கையில் பிற்பட்ட காலத்தில் அரசப் பரம்பரை ஒன்று உருவாகக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

(தொடரும்)

பகிர:
நர்மி

நர்மி

மதுரையில் பிறந்தவர். இலங்கையில் வாழ்ந்து வருகிறார். பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். ‘பனிப்பூ’ எனும் கவிதை நூலும் ‘கல்கத்தா நாட்கள்‘ எனும் பயண நூலும் உயிர்மையில் வெளிவந்துள்ளன. கலை, பண்பாடு, அரசியல் சார்ந்து எழுதிவருகிறார். மெட்ராஸ் பேப்பரில் இவருடைய இலங்கை பற்றிய பயணத்தொடர் வெளிவருகிறது. விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் அரசியல் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிகிறார். இலங்கையின் பழங்குடி மக்களுடன் பணியாற்றி வருகிறார். தொடர்புக்கு : rajanarmi0@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *