Skip to content
Home » இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

போர்ச்சுகீசியர்கள் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்த வழக்கத்தை பிரித்தானியர்கள் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சுத்தபத்தமாகக் கைக்கொண்டு காலனி நாடுகளைப் பிடித்தார்கள். போர்ச்சுகீசியர்கள் நுழைந்தபோது வணிகம் என்ற அளவில்தான் அந்த நாட்களின் அரபுக் கடற்கரையோர இந்தியப் பிரதேச நாடுகளில் நுழைந்தார்கள். இன்றைய கோவாவிலிருந்து குமரி வரையிலான பகுதிகளில் பல அரசுகள் அப்போது அரசாண்டு வந்தன. இந்த அரசுகளால் போர்ச்சுகீசியர்கள் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தபோது, வணிகம் நிலைத்தால் போதும் என்று சிற்சில சமரசங்களுக்கு இசைந்தனர். ஆனால் 1600களின் தொடக்கத்தில் இந்தியப் பகுதிகளுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி, 1757இன் பிளாசிப் போருக்குப் பின்னர் இந்திய அரசுகளைக் கபளீகரம் செய்வதில் அழுத்தந்திருத்தமாகத் தனது செயல்பாடுகளை வரையறுத்தது.

இந்தியா என்ற பெருநிலப்பகுதி அன்றைக்கு ஐநூற்றுக்கும் அதிகமான அரசுகளைக் கொண்ட பகுதியாக இருந்தது. பேரரசர்கள் மறைந்துபோய், அந்தந்த நிலப்பகுதிகளை ஆங்காங்கே நிலைபெற்றிருந்த சிறு அரசக் குடும்பங்கள் ஆண்டுகொண்டிருந்தனர். அப்போதே கம்பேனிக்கு ‘ஒன்றுபட்ட இந்தியாவை ஆள்வது’ என்ற பெருநிலத்தின் சாத்தியங்கள் தெளிவாகப் புலப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரே இடர், அனைத்து அரசுகளையும் எப்படிப் பிடித்து, தமது ஆளுகைக்குள் கொண்டுவருவது என்பது. இதற்கு கம்பெனி இரண்டு உத்திகளை வரையறுத்து வைத்திருந்தது.

முதலாவது உத்தி, ஒரு குறிப்பிட்ட அரசைச் சுவாதீனமான அரசாக அங்கீகரித்து, உங்களது அரசை நாங்கள் பாதுகாக்கிறோம், அண்டை அயலார்களோடு சண்டை வந்தால் எங்களது நவீனத் துப்பாக்கிகள், பீரங்கிகள்கொண்ட படையை உதவிக்கு வழங்குகிறோம், ஆனால் நீங்கள் வருடத்திற்கு இத்தனை ரூபாய் கம்பேனிக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று உடன்படிக்கை செய்துகொள்ளும். உங்களது நாட்டுப் பிரதேசத்தின் வரி வசூல், நிர்வாக விசயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம், உங்களுக்கு உதவியாக நாங்கள் அனுப்பி வைக்கும் படையை நிர்வகிக்க மட்டும் இடமும் வசதிகளும் தந்தால்போதும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கும். இந்த உடன்படிக்கை ‘அரசநிலையை அங்கீகரித்தல்’ என்ற விதமான பிரின்சிலி இசுடேட் உடன்படிக்கை எனப்பட்டது.

ஆனால் இவற்றிலும், வெளித்தொடர்பு, போர் போன்றவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கம்பேனி வைத்திருந்தது. அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ‘நீ அரிசிப்பொறி கொடு, நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலப்போம். பின்னர் கலந்ததைப் பங்கிட்டு, இருவரும் ஊதி ஊதித் தின்போம்’ என்ற உடன்படிக்கை. கம்பேனியின் நவீன ஆயுதங்கள் கொண்ட படை பெரும்பாலான இந்திய அரசர்களைப் பயப்படுத்தியது. எனவே இந்த உடன்பாட்டுக்குப் பெருவாரியான அரசப் பகுதிகளின் அரசர்கள் ஒத்துக்கொண்டவர்களாகவே இருந்தார்கள். விடுபட்டு நின்ற வேலு நாச்சியார், கட்டபொம்மு போன்ற பாளையக்காரர்கள்தான் தாம் வீழ்ந்தாலும், வரலாற்றில் நின்றார்கள்.

இன்னொரு உத்தி, வாரிசுகளற்ற, மன்னர்களுக்கு ஆண் குழந்தைகள் இல்லாத அரசப் பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது. இதற்கு அப்பகுதிகளை நேரடியாகவே மிரட்டித் தனது கைக்குள் போட்டுக்கொள்ளும் உத்தி கம்பெனியிடம் இருந்தது. இரண்டில் எது பலிக்குமோ அந்த உத்தியைக் கம்பெனி கைக்கொண்டது.

நோக்கம் ஒன்றுதான். இந்திய நிலப்பகுதியின் பெருவாரியான அரசுகளைக் கபளீகரம் செய்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அவற்றின் வளங்களைக் கொள்ளையடித்து பிரித்தானியா கொண்டுசேர்க்க வேண்டும். மீண்டும் இந்தியப் பகுதிகளின் அந்தப் பிரதேசத்தின் மக்களிடமே தனது உற்பத்திப் பொருட்களைத் கொண்டு வந்து விற்று காசு பார்க்க வேண்டும். இவ்வாறு நல்ல வளமான மாட்டை இரத்தம் வரை உறிஞ்சுவது என்ற முறையைக் கம்பெனி கையாண்டு வந்தது.

இன்று நாம் பார்க்கப்போகும் கிட்டூர் இராணி சென்னம்மாவின் வரலாறு மேலே குறிப்பிட்ட கம்பெனி அராஜகத்தை அவர் எதிர்த்ததால்தான் முக்கியத்துவம் பெறுகிறது.

முன்கதைச் சுருக்கம்

இராணி சென்னம்மா பிறந்தது கர்நாடகத்தின் பெளகாவி மாவட்டத்தில் அமைந்துள்ள கக்கடி என்ற ஒரு சிற்றூரில். கர்நாடகத்தின் உயர்குடிச்சாதிகளில் ஒன்றான லிங்காயத்து சமூகத்தில் அக்டோபர் 23, 1778இல் பிறந்த அவர், இளவயதிலேயே குதிரையேற்றம், வாட்போர் போன்றவற்றில் பயிற்சி பெற்றிருந்தார். பிறகு தனது பதினைந்தாவது வயதில் தேசாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிட்டூர் அரசரான மல்லசர்சாவுக்கு மணம் செய்விக்கப்பட்டார். சென்னம்மாவின் பதினைந்து வயதில் அவரை மணந்த அரசர், சென்னம்மாவுக்கு 37 வயதானபோது, 1816ஆம் ஆண்டு இறந்து போனார். சென்னம்மாவுக்கு ஒரு மகன் இருந்தான். அரசரை இழந்த நாட்டில், இளம் இராணியும், சிறுவனான இளவரசனும் மட்டும் நிலைத்திருக்க நாட்டில் குழப்பங்கள் தோன்றின. இதன் விளைவாக அடுத்த எட்டு ஆண்டுகளில் இளவரசனான சென்னம்மாவின் மகனும் இறந்து போனான். அவன் இறப்பு சதிகளால்கூட ஏற்பட்டிருக்கக் கூடும் என்று வரலாறு தெளிவற்று தெரிவிக்கிறது.

இவ்வாறு குழப்பங்களுக்காகக் காத்திருந்த கம்பெனி என்னும் ஒட்டகம், கிட்டூர் என்னும் கூடாரத்துக்குள் தனது மூக்கை நுழைத்தது. காரணம் ஏற்கெனவே நாம் பார்த்ததுதான். நாட்டில் அரசர் இல்லை. ஆண் வாரிசு இல்லை. பிரதேசத்தில் குழப்பத்தை அனுமதிக்க முடியாது. இதுதான் கம்பெனியின் சித்தாந்தம்.

இப்படி ஒரு சூழல் வரும்போது பிரித்தானியர்கள் வழக்கமாக வட்டாரத்தின் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆட்சிக்கு குறிப்பிட்ட சுயாதீன-பிரின்சிலி இசுடேட்டைக் கொண்டு வந்துவிடுவார்கள். பின்னாளில் இந்தியத் தலைமை ஆளுனராக இருந்த டல்ஹவுசி பிரபு, இதனை வாரிசற்ற நிலையின் கொள்கை (Doctrine of Lapse) என்று அரசக் கொள்கையாகவே அறிவித்து, ஏகப்பட்ட சமத்தான அரசப் பகுதிகளை பிரித்தானிய அரசுக்காகக் கபளீகரம் செய்தார். இந்த முறையின் தொடக்கநிலைப் படித்தரத்தில்தான் இராணி சென்னம்மாவின் கிட்டூரிலும் கம்பெனியார் ஊடுருவினார்கள்.

உன்னடிமை நானில்லை

கம்பெனியின் நாட்டுக்கொள்ளை முறைகளை அறிந்திருந்த இராணி சென்னம்மா, தனது மகன் இறந்த சில நாட்களுக்குள் 1824இல் சிவலிங்கப்பா என்ற ஓர் ஆண்பிள்ளையைத் தனது வாரிசாகத் தத்தெடுத்து அவனைக் கிட்டூரின் அரசத் தலைமையாக அறிவித்தார். மேலும், அரசத்தலைமையின் பிரதிநிதியாகத் தான் ஆளப்போவதாகவும் பிரகடனம் செய்தார். இதைக்கேட்டவுடன் கம்பெனிக்குக் கும்பியில் தீப்பற்றியது. எளிதாகச் சுருட்டலாம் என்று நினைத்திருந்த கிட்டூர் மீது கிடுக்கிப்பிடி போட்ட இராணி சென்னம்மாவின் மேல் கோபம் பொங்கியது கம்பெனிக்கு. சிவலிங்கப்பாவின் தத்து செல்லாது என்றும், சிவலிங்கப்பா கிட்டூரை விட்டுவெளியேற வேண்டும் என்றும் தார்வார் மாவட்ட ஆட்சித்தலைவரான சர் ழான் தாக்கரே மூலம் அறிக்கைவிட்டு, கிட்டூரை கம்பெனியிடம் ஒப்படைக்கும்படிக் கோரியது. அப்போது வட்டாரத்தின் கண்காணிப்பாளராக கம்பெனியின் சார்பில் சாப்ளின் என்ற அதிகாரி இருந்தார். அவரிடம் இராணி சென்னம்மா மறுப்பு தெரிவிக்கவே போர் மூண்டது.

கிட்டூர்ப் புரட்சி, கொள்ளை முயற்சி, வென்று நின்ற இராணி

வரலாற்றில் இந்தப் போர் கிட்டூர்ப் புரட்சி என்று பதிவு செய்யப்படுகிறது. கிட்டூர் அரச குடும்பத்தின் கருவூலத்தில் அக்கால மதிப்பில் பதினைந்து லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், வைரங்கள் இருந்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது. நாட்டில் குழப்பம் நேர்ந்திருப்பதாகவும், அரசத் தலைமை இல்லாததால் அரசக் கருவூலத்தைப் பாதுகாப்பதற்காக படையெடுப்பதாகவும் முகமை சொல்லிக் கொண்டு 20,000 பிரித்தானிய வீரர்கள் கிட்டூருக்குக் களமிறக்கப்பட்டார்கள். சர் ழான் தாக்கரேயின் தலைமையில் வந்த அந்தப் படையை இராணி சென்னம்மா தவிடுபொடியாக்கினார். கம்பெனி அதிகாரியான தாக்கரே போரில் கொல்லப்பட்டார். வால்டர் எலியட், ஸ்டீவன்ஸன் எனும் இரு அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதையடுத்து கம்பெனி சார்பாக சாப்ளின் பேச்சு வார்த்தைக்கு வந்தார். பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, கம்பெனி கிட்டூரை எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது என்ற உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு பிடிபட்ட கம்பெனி அதிகாரிகளை இராணி சென்னம்மா விடுவித்தார்.

துரோகம் எனது தாய்மொழி

தனது அதிகாரிகளை விடுவித்துக்கொண்ட கம்பெனி, சென்னைப் பிரிவிலிருந்து மேலும் படைகளைத் திரட்டி தார்வார், கிட்டூர் பகுதிக்கு மீண்டும் அனுப்பியது. உடன்படிக்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இம்முறை இராணி சென்னம்மாவுக்கு உதவியாக சங்கோளி இராயண்ணா என்பவர் படைத்தலைவராக இருந்தார். எப்பாடு பட்டும் சிவலிங்கப்பாவைக் காத்து அரசை அவருக்கு அளிக்க வேண்டும் என்று இராயண்ணாவிடம் பணித்திருந்தார் இராணி சென்னம்மா. இரண்டாவது போரும் உக்கிரமாக நடந்தது. இம்முறையும் மாவட்ட உதவி ஆளுனராக இருந்த தாமசு மர்ரோ என்ற அதிகாரியைப் போரில் கொன்றார் இராணி சென்னம்மா.

இராணியின் படையில் சில ஊடுருவிகளைப் பணம் கொடுத்து அனுப்பிய கம்பெனி, திருட்டுத்தனமாகப் போருக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மருந்துப் பொடியில் சாணத்தூளைக் கலந்து, போர்க்கருவிகளைப் பயனற்றதாக்கியது. இதனால் உக்கிரமாகப் போர் புரிந்தும் வெற்றிபெற முடியாத இராணி சென்னம்மா கடைசியாகச் சிறைப்பிடிக்கப்பட்டார். அவரை பெயிலிகோங்கை கோட்டையில், வசதிக் குறைவான இல்லக் காவலில் வைத்தனர் கம்பெனி அதிகாரிகள். அங்கு உடல்நலக் குறைவால், எந்த மருத்துவ உதவியுமின்றி பிப்ரவரி 29, 1829ஆம் அன்று இராணி சென்னம்மா உயிரிழந்தார். இந்திய அரசப் பகுதிகளாக இருந்த 500க்கும் மேற்பட்ட சமத்தானங்களை இப்படிப்பட்ட முறைகளைக் கொண்டுதான் கம்பெனி கையகப்படுத்தியது. இருக்க இடம் கொடுத்தால், இடத்தையே கொள்ளைகொள்ளும் முறைதான் கம்பெனியின் ஆட்சி முறை. இந்தியா அடிமைப்பட்ட வரலாறு எல்லாப் பிரதேசங்களிலும் கிட்டத்தட்ட இதே விதமாகவே இருந்திருக்கிறது.

இன்றும் அக்டோபர் மாதத்தின் 23-24ஆம் தேதிகளில் கிட்டூர் பகுதியில் நடைபெறும் கிட்டூர் உற்சவத்தில் இராணி சென்னம்மா நினைவுகூரப்படுகிறார். பெய்லிகோங்கைக் கோட்டையில் இராணி சென்னம்மாவின் சமாதி இப்போதும் இருக்கிறது. அங்கு செல்பவர்கள் இன்றும் இராணி சென்னம்மாவின் வீரச்சுடரைத் தரிசித்து உணரலாம். இந்தியப் பிரதமரான மன்மோகன்சிங் காலத்தில் 2007ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இராணி சென்னம்மாவின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சிலை நிறுவப்பட்டது.

இராணி சென்னம்மா போன்றவர்கள் இவ்விதக் கொள்ளைகளை எதிர்த்து நின்ற வீரம் விளைந்த சுடர்களாக வரலாற்றில் நிலைக்கிறார்கள். கர்நாடகப் பகுதிகளின் வீரச் சுடர் இராணிகளாக விளங்கிய அபக்கா சௌதா, இராணி சென்ன பைர தேவி, இவர்களோடு கிட்டூர் இராணி சென்னம்மாவுக்கும் ஓர் அருமையான இடம் வரலாற்றில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இராணி சென்னம்மாவுக்கு இப்போதும் பண்பாட்டுக் கதைச்சரப் பாட்டுகளிலும், இலாவணிகளிலும் (வில்லுப்பாட்டு போன்ற ஒருவித கதைப்பாட்டு) முக்கியமான ஓர் இடம் நிலவுகிறது. தொடக்ககாலத்திலேயே, வீரத்தின் சுடர்ச்சரமாக எழுந்து நின்ற பெண்ணரசிகளில் ஒருவராக இராணி சென்னம்மா என்றும் நிலைக்கிறார்.

(தொடரும்)

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *