Skip to content
Home » இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)

இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)

கேரளத்தின் திருவிதாங்கூர் ஒரு புகழ்பெற்ற சமஸ்தானம். அந்தச் சமஸ்தானத்தின் கடைசி அரசியாக 1924 முதல் 1931 வரை ஏழு ஆண்டுகள் பதவி வகித்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் அனைத்துச் சமஸ்தானங்கள் உட்பட்ட ஒன்றுபட்ட இந்தியா, பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற இந்தியாவில் மன்னர் ஆட்சி மறைந்து மன்னர்களும் இராணிக்களும் சாதாரணக் குடிமக்களாகினர். எனவே திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி அரசியாக அவர் இருந்தார்.

விடுதலை பெற்ற மக்களாட்சியில் மக்களில் ஒருவராக இருக்க வாய்ப்பு பெற்ற அரசி அவர். அவர் தன்னை அத்தனை இயல்புடனும் பெருந்தன்மையுடனும் பொதுச் சமூகத்தில் பொருத்திக் கொண்டார். இதற்கான வாய்ப்பு ஒருவேளை அவரது வாழ்வின் அமைப்பிலிருந்து வந்திருக்கலாம். ஏனெனில் அவர் இயல்பான உரிமையில் வந்த அரசி அல்ல. முன்னர் தத்து மூலம் அரச வழிக்கு வந்ததும், பின்னர் அவரது வாரிசுக்கு வயது வரவில்லையாதலால் பிரதி அரசி என்ற வாய்ப்பாலும் அவருக்கு வந்தது அரசி உரிமை. எனவே இயல்பு வாழ்விலும் அரச வாழ்விலும் அவரால் தன்னை இயல்பாகப் பொருத்திக்கொள்ள முடிந்தது.

மக்களுக்கும் அவர் மீது அத்தனை அன்பிருந்தது. அவரைப் போற்றி மரியாதை செய்தார்கள் திருவாங்கூர் மக்கள். எனவே வரலாற்றில் அவருக்குள்ள இடத்தை அவரால் தேடிப் பெற்றுக் கொள்ள இயன்றது. வண்ணம் நிறைந்த அவரது வாழ்வைப் பலர் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்கான பல செய்திகளை மனு ச.பிள்ளை எழுதிய நூல் அளித்திருக்கிறது என்ற வகையில் நூலாசிரியருக்கு நன்றியுடன் திருவாங்கூரின் சேது அரசிகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

திருவாங்கூரின் கடைசி அரசியும், புகழ்பெற்ற ஓவியரான இராச இரவிவர்மாவின் பேத்திகளில் ஒருவருமான ‘பூராடம் திருநாள் சேது இலக்குமி பாயி’ என்ற அரசியே இந்தக் கட்டுரையின் நாயகி.

1924இல் திருவாங்கூர் மன்னராக இருந்த அரசர் மூலம் திருநாள் மறைந்தபோது அரச உரிமையுள்ள அடுத்த மன்னரான திருமிகு சித்திரைத் திருநாளுக்குப் பன்னிரண்டு வயதுதான் ஆகியிருந்தது. எனவே அவரது பிரதி அரசியாக வேண்டிய பொறுப்பு முத்தத் தாயான இலக்குமி பாயிக்கு வந்தது. பிரித்தானிய ஆட்சியில் திருவாங்கூரில் மட்டும் பிரதி அரசிகளுக்கு முழுஉரிமை கொடுக்கப்பட்டது. பிரித்தானியர்களின் பிரதி அரச உரிமை விதிகளின்படி, பிரதி அரச உரிமை கொண்டவர்கள் (regents) முழு அரசர்கள் அல்லர். Regent Council என்று பிரித்தானிய அரசு வைத்திருந்த குழுவே பிரதி அரசர்கள் ஆண்ட பகுதிகளின் முழு உரிமையைக் கொண்டிருக்கும். ஆனால் திருவாங்கூருக்கு மட்டும் சிறப்பு உரிமையாகப் பிரதி அரசுக்கும், அரசருக்கும் முழு உரிமை இருந்தது. எனவே முழு உரிமை பெற்ற அரசியாக அமைந்தவர் இலக்குமி பாயி. கேரளத்தின் திருவாங்கூர் அரசில் மட்டும் பெண்ணின் கொடி வழி அரச உரிமை வந்ததால் மகளின் வாரிசுகள் (மகனின் வாரிசுக்குப் பதிலாக) அரச உரிமையைப் பெற்றார்கள்.

பிறப்பும், வளர்ப்பு, வாய்ப்பு

சேது இலக்குமி பாயி பிறந்தது 1895ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில். அவரது தந்தை கேரள வர்மாவின் மாவேலிக்கரை ஆயில்யம் நாள் மகாபிரபா. அவரது தாய் கொளத்துநாடு அரசகுலத்தின் கிளையைச் சேர்ந்த கொச்சுகுஞ்சி. அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருவாங்கூரில் வந்து தங்கியவர்கள். கொச்சுகுஞ்சியின் தந்தை உலகப்புகழ் பெற்ற இன்னொரு கேரளத்தவர். ஓவியர் இராச இரவிவர்மாதான் அவர். நமது நாயகியான சேது இலக்குமி பாயியும், சேது பார்வதி பாயியும் இராசா இரவிவர்மாவின் பேத்திகள்.

திருவாங்கூர் அரசகுலத்தில் மருமக்கதாயம் என்ற மகள்வழி அரசுரிமை இருந்தது. அதாவது நாம் கேள்விப்பட்ட மகனின் மகன் என்பதற்குப் பதிலாக மகளின் மகன். பின் அவரது மகளின் மகன் இவ்வாறுதான் அரசுரிமை போகும். இலக்குமி பாயின் மூத்த அத்தையான இராணி இலக்குமிபாய் (ஒன்று) அவ்வாறு தத்துக்குப் போனவர்தான். முற்காலத்தில் 1858இல் இலக்குமி பாயின் அத்தைகளான இலக்குமி பாயையும், பார்வதி பாயி சகோதரிகளையும் திருவாங்கூர் அரசகுலத்தில் தத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தச் சகோதரிகளில் இலக்குமி பாயி் கேரளவர்மா வலியகோயில் தம்புரானுக்கு மனைவியானார். ஆனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை. இளைய இராணியாக தத்தில் வந்த பார்வதி பாயிக்கு மூன்று ஆண்மக்கள் மட்டுமே பிறந்தனர். அதனால் மீண்டும் அரசுக்குப் பெண்வாரிசு இல்லை. எனவே அரசி மூத்த இலக்குமி பாயி தனது சகோதரன் மகள்களான சேது இலக்குமி பாயியையும், சேது பார்வதி பாயியையும் அரசுக்குத் தத்து எடுத்தார்.

1895, 1896களில் மகாபிரபா, கொச்சுகுஞ்சி தம்பதியருக்குப் பிறந்த இலக்குமி பாயி, பார்வதி பாயி சகோதரிகள் இவ்வாறு திருவாங்கூர் அரசகுலத்துக்கு இராணியாகத் தத்து வழி வந்தார்கள். திருவாங்கூர் அரசுக்குத் தத்து வழி வந்த ஆறாவது முறை பெண்கள் என்று இவர்களைச் சொல்கிறது வரலாறு. இந்தத் தத்தை, முறையாக மகாராணி மூத்த இலக்குமி பாயி 1900இல் அரசர் மூலம் திருநாளிடம் வைத்து, தனது மருமகள்களான சிறுமிகளை திருவாங்கூர் அரச வாரிசாக்கினார். மற்ற கிளை அரசு குடும்பங்களிடம் இந்தத் தத்துக்கு எதிர்ப்பு இருந்தபோதும், மூத்த மகாராணி இலக்குமி பாயியின் எண்ணத்தின்படி சேது இலக்குமிபாயியும், சேது பார்வதி பாயியும் அரச வாரிசுகளானார்கள். சேது இலக்குமி பாயி ‘சிரீ பத்மநாபகாசேவினி பூராடம் திருநாள் சேது இலக்குமி பாயி’ என்ற பட்டப் பெயருடன் அரசுரிமைக்கு முதல் வாரிசாக வரிக்கப்பட்டார்.

1901இல் அப்போதைய அரசியாக இருந்த இராணி பார்வதி பாயும் (ஒன்று), அவரது மகன்களான சதயம் திருநாள், அசுவதி திருநாள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மூன்றாண்டுகளில் இறந்து போனார்கள். எனவே ஆறு வயதில் சேது இலக்குமி பாயி மூத்த அரசியாகத் திருவாங்கூரின் அட்டிங்கல் அரண்மனையில் பதவிக்கு வந்தார். மூத்த அரசியாக இருந்து மறைந்துபோன மூத்த இலக்குமிபாயியின் கணவரான கேரளவர்மா வலியகோயில் தம்புரான் இரண்டு அரசிகளுக்கும் காப்பாளராவும் பொறுப்பு அரசராகவும் நியமனம் பெற்றார்.

அரசிகளுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். சேது இலக்குமி பாயி அவரது பத்து வயதில், காப்பாளர் தம்புரானின் பெயரனான சிரீ இராம வர்மாவுக்கு மணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு முதல் குழந்தை தங்கவில்லை. 1912இல் அவருக்கு உரிய வயது வந்ததால் முழுப் பொறுப்புடன் (திருவாங்கூரில் அதனை சிரீபாத அதிகாரம் என்பார்கள்; ஏனெனில் அரசர்கள் பத்மநாதபுர சுவாமியின் பிரதிநிதியாகவே அரசராக ஆள்வதாக ஒரு காலவழமை-ஐதீகம் இருந்தது) அரசியானார். அதேநேரம் இளைய மகாராணியான சேது பார்வதி பாயிக்கு மூத்த மகனாக சித்திரைத் திருநாள் பால இராம வர்மா, மகள் கிருத்திகைத் திருநாள் இலக்குமி பாயி, இன்னொரு மகன் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்த அரசியான இலக்குமிபாயிக்கு 1923இல் முதல் மகளான உத்தரம் திருநாள் இலலிதாம்பா பாயியும், 1926இல் இரண்டாவது மகளான இந்திரா பாயியும் பிறந்தனர்.

1924இல் அரசர் மூலம் திருநாள் இறந்தபோது அவரது மகனான சித்திரைத் திருநாள் பால இராம வர்மாவுக்கு 12 வயதுதான் ஆகியிருந்தது. எனவே பிரதி அரசியாக இராணி இலக்குமி பாயி பட்டமேற்றுக் கொண்டார். இவ்வாறுதான் அடுத்த ஏழு ஆண்டுகள் ஆளப் போகும் இலக்குமி பாயியின் தனி அரசுப் பொறுப்பு தொடங்கியது.

செயல்களால் சிறப்புற்ற ஆட்சி

இராணி இலக்குமி பாயியின் ஆட்சிக் காலம் மிகுந்த செறிவுடையது. 1924இல் பொறுப்புக்கு வந்த இராணி இலக்குமி பாயி 1925இல் வைக்கம் போராட்டத்தைச் சந்தித்தார். திருவாங்கூருக்கு அப்போது வருகை தந்த மகாத்மா காந்தி இராணி இலக்குமி பாயைச் சந்தித்தார். அதன் விளைவாக மாற்றங்கள் நடைபெற்றன. அதுவரை குறிப்பிட்ட வீதிகளில் குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே நடக்கலாம் என்பது போலிருந்த விதிமுறைகள் அரச உத்தரவினால் நீக்கப்பட்டன. அரண்மனையின் கிழக்கு வீதியைத் தவிர மற்ற அனைத்துச் சாலைகளும் அனைத்து இனத்தவர்களுக்கும் நடமாட அனுமதி அளிக்கப்பட்டது. காந்தி தனது யங் இந்தியா இதழில் ‘விடுதலைக்கும் சமத்துவத்துக்குமான அடித்தளம்’ என்ற தலைப்பிட்டுத் தலையங்கம் எழுதும் அளவுக்கு இந்த மாற்றம் பெரியதாக அப்போது பேசப்படுகிறது.

இராணி இலக்குமி பாயைச் சந்தித்த காந்தி, தனது யங் இந்தியா கட்டுரையில் இராணி இலக்குமி பாயின் எளிமைப் பாங்கையும், இயல்பையும் குறிப்பிட்டுச் சிறப்பாக எழுதுகிறார். தான் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இராணி இலக்குமி பாயி முகத்திலறையத்தக்க எளிமையுடன் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அதோடு நில்லாமல் அப்போதைய சமஸ்தான அரச குலத்தவர்கள், இலக்குமி பாயின் வாழ்க்கை முறை போன்ற எளிமையைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தனது கருத்தையும் பதிவு செய்கிறார். வாழ்வு முறை மட்டுமல்லாமல், தன்னை நடத்திக்கொண்ட விதத்திலும் இராணி இலக்குமி பாய் எளிமையும் மேன்மையும் மிளிர நடந்து கொண்டார் என்று குறிப்பிடுகிறார் காந்தி. பின்னாட்களில் இராணி இலக்குமி பாயைப் பற்றிக் கருத்துரைத்த மௌண்டபேட்டன் பிரபுகூட, அவரது சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுப் பதிவு செய்வதை மறக்கவில்லை. பெண்மைச் சிறப்பியல்பின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார் என்கிறார் அவர்.

இராணி இலக்குமி பாயின் அரச ஆட்சிக் காலம், அக்காலச் சூழலை எண்ணினால் பெரும் பாய்ச்சல் என்று கருதத்தக்கப் பல சமூக மாற்றங்களினால் வரலாற்றில் தனித்து ஒளிர்கிறது. 1925இல் விலங்குகளைப் பலியிடும் வழக்கத்தை அரசாணையின் மூலம் நிறுத்தினார் இலக்குமி பாயி. 1926இல் தேவதாசி முறை திருவாங்கூரில் ஒழிக்கப்படுகிறது என்ற அரசாணை வருகிறது. 1925இல் பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு சுயாட்சியையும் சுயநிர்ணய முறையையும் வலியுறுத்தும் வழிகாட்டுதல்கள் வருகின்றன. 1928இல் முதல் பெண் மருத்துவர் சமஸ்தானத்து அரசவைக்கு அமைக்கப்பட்டு அவரது சேவை பொதுமக்கள் மருத்துவத்துறைக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

அதே ஆண்டில் சாலைப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்பட்டு திருவாங்கூர் முழுதும் தேவையான இடங்களில் சாலைகளைப் பழுதுபார்க்கும் அல்லது புதிதாக அமைக்கும் வேலைகள் தொடங்கின. பல புதிய விரைவுச்சாலைகள் திருவாங்கூரில் அமைக்கப்படுகின்றன. கொச்சி திருவாங்கூர் (கொய்லான் விரைவுவண்டி) இருப்பூர்திப் பாதை நிறைவு செய்யப்படுகிறது. தொலைபேசி வசதிகள் பொது மக்களுக்கு விரிவு படுத்தப்படுகின்றன. 1931இல் இலக்குமி பாயியின் பிரதி அரசு நிறைவு பெற்றபோது சமஸ்தான வருவாயில் 22 சதவிகிதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 1931இன் மத்தியில் சிரீ சித்திரைத் திருநாள் மன்னர் பட்டத்துக்கு வருவது நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஏழு ஆண்டுகளாகப் பிரதி அரசியாக இருந்த இலக்குமிபாயியின் ஆட்சியில் சமஸ்தானத்து வருமானம் 25 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.

1929இல் பிரித்தானிய விக்டோரியா அரசி வழங்கிய ஆர்டர் ஆஃப் த கிரவுன் என்ற அரச பதக்கம் இராணி இலக்குமி பாயிக்கு வழங்கப்பட்டது. பிரித்தானிய அரச குடும்பப் பெண்களுக்கும், இந்திய அரச குலப் பெண்களுக்கும் வழங்கப்பட்ட சிறப்புப் பதக்கம் இது. 1935, 1937 ஆண்டுகளில் பிரித்தானிய அரசின் விருதுகளான மாட்சிமைபொருந்திய மன்னரின் பொன்விழாப் பதக்கமும், மாட்சிமை பொருந்திய மன்னரின் முடிசூட்டுப் பதக்கமும் (King George V Silver Jubilee Medal & King George VI Coronation Medal) இராணி இலக்குமி பாயிக்கு பிரித்தானிய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்திய இராணிகள் பலர் பிரித்தானிய ஆட்சியுடனும், ஆளுனர்களுடனும் ஏற்பட்ட போராட்டங்களினால் பெயர் பெற்ற சூழலைக் கேள்விப்பட்டிருக்கும் நமக்கு, சமுதாய அளவில், பிரித்தானிய அரசு ஏறத்தாழ நீங்கப் போகின்ற இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அரசப் பொறுப்பிலிருந்து பல்வேறு சமூக நல நோக்கிலான திட்டங்களை நிறைவேற்றிய இராணி இலக்குமி பாயின் வரலாறும் தெரிந்துகொள்ளப் படவேண்டியதே.

புன்னகைக்க வைக்கும் விதமாக, தான் திருவிதாங்கூர் அரசியாக அமைய நேர்ந்ததற்கு வழிகோலியதும், திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு மட்டுமாக இருந்திருந்த மருமக்கதாயம் என்ற பெண்வழி சிறப்பு வாரிசு அரச உரிமையை திருவிதாங்கூர் சமத்தான அரசில் தனக்குப் பின்னர் மாற்றி நிறுத்தியவர் அவர் என்பதும் ஒரு விநோதமான கூறு.

இராணி இலக்குமி பாயியின் மீது விமர்சனங்களும் உண்டு. செய்தித்தாள் ஒழுங்காற்று ஆணை என்ற பத்திரிகைக்கான அரச வழிகாட்டு விதிமுறைகளை அவர் 1928இல் அறிவித்ததைப் பலர் அவர் மீதான விமர்சனமாக முன் வைக்கிறார்கள். அதோடு வைக்கப் போராட்டத்தில் கேட்கப்பட்ட தலித்துகள் கோயிலுக்குள் நுழைவதையும் அவர் உடனே அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனை ஒட்டி யங் இந்தியாவில் காந்தி எழுதியபோது, ‘மாற்றங்கள் புயல்வேகத்தில் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது. அனைத்துத் தெருக்களும் அனைவரும் நடமாட அனுமதிக்கப்பட்டதுபோல நல்லவை நடக்க (கோயில் நுழைவு அனுமதி) இது ஒரு தொடக்கம்’ என்று குறிப்பிட்டு எழுதினார்.

இயல்பான குடிமக்கள் வாழ்வு

இராணி இலக்குமி பாயிக்கு இரண்டு மகள்கள். அவரது இரண்டு மகள்களும் கிளிமன்னூர் கேரளவர்மா குலத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தில் மணம் செய்து கொண்டார்கள். இளைய மகளான இந்திரா பாயி வேறு இடத்தில் மணம் செய்து, அவரது கணவர் காலமான பிறகு, தனது சகோதரியின் கணவனின் சகோதரனை மணம் செய்து கொண்டார். மகள்கள் இருவரும் பெங்களூருவிலும், சென்னையிலுமாக இந்திய விடுதலைக்குப் பின்னர் வாழத் தொடங்கினார்கள். ஆனால் இராணி இலக்குமி பாயி திருவாங்கூரிலேயே தனியாகத் தொடர்ந்து வாழ்ந்தார்.

அரசின் பல சொத்துகள், அரண்மனைகள் போன்றவற்றைச் சிறிது சிறிதாக விலக்கிக் கொண்டே வந்த இராணி இலக்குமி பாயிக்கு 1958இல் சிறிய இதயத் தாக்குநோய் ஏற்பட்டது. அதே ஆண்டில் அரண்மனையின் பணியாளர்கள் இணைந்து தொழிலாளர் சங்கம் – யூனியன் அமைத்துச் சில போராட்டங்களை அறிவித்தார்கள். இதனால் பெங்களூருக்குச் சென்று தனது மகளின் வீட்டுக்கு அருகில் ஒரு புதிய வீட்டைக் கட்டிக் கொண்டு அங்கு வாழ்ந்தார் இராணி இலக்குமி பாயி. 1971இல் இந்திய அரசு சமஸ்தான அரசர்களுக்குக் கொடுத்து வந்த மானியத் தொகைகளை நிறுத்தியது. அதனை மீண்டும் வழக்குத் தொடுத்துப் பெற்ற இராணி இலக்குமிபாயி தனது கடைசி பல ஆண்டுகளை நோயில் துவண்டு படுக்கையில் கழித்தார். பின் 1985இல் அமைதியாகக் காலமும் ஆனார். பிரித்தானிய விக்டோரிய அரசின் ஆர்டர் ஆஃப் த கிரவுன் விருதைப் பெற்றிருந்த கடைசி நபராக அவர் உயிர்நீத்தார். இந்திய இராணிகளின் வரலாற்றில் சமூகச் சீர்திருத்த நோக்கில் தானிருந்த சூழலில் பெரிய மாறுபாடுகளைச் செய்த அரசியாக அவர் இன்றும் நினைவுக்கூரப்படுகிறார்.

(தொடரும்)

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *