அந்த அரசி வாழ்ந்த காலம் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரது வரலாறு 350 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய விடுதலைப் போர்ப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் காலந்தோறும் எழுதப்படும் ஒன்று. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசிகள் என்று ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் சட்டென்று நினைவில் வரும் சில பெயர்களில் அவரது பெயரும் ஒன்று.
இறுதிவரை போராடி போரில் வெற்றி அல்லது வீரமரணம் என்ற இலக்கை ஏற்றுக் கொண்டு வரலாற்றில் நிறைந்தவர். மராட்டியத்தின் ஜான்சியை ஆண்ட அரசியான இலக்குமி பாய்தான் அவர். வரலாற்றின் சில நூல்களில் அவரது பிறப்பு 1835 இல் நிகழ்ந்தாகச் சொல்லப்படுகிறது. எனில், இன்னும் இளமையிலேயே தனது வாழ்வை, கொண்ட கொள்கைக்காகத் தத்தம் செய்தவர் என்றும் கொள்ளலாம்.
இந்தியாவைப் பற்றியும், பிரித்தானிய ஆக்கிரமிப்பைப் பற்றியும் சிறிது அறிந்தவர்களுக்குக்கூட அவரது வீரமிக்க வாழ்வும் வரலாறும் போராட்டமும் தெரிந்திருக்காமல் இருக்காது என்பதுதான் அவரது சிறப்பு. அவர் ஒரு பார்ப்பணர் குடும்பத்தில் பிறந்த பெண். கர்கேடக பார்ப்பணர் என்று அவரது குலம் அழைக்கப்பட்டது. மகாராட்டிரத்தில் உள்ள வாரணாசிப் பகுதியில் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள தம்பே என்ற ஊர்தான் அவரது ஊர். அவரது தந்தையார் மராட்டிய பேஷ்வா பாஜி ராவ் என்ற மராட்டியத் தளபதியிடம் பணி செய்தவர்.
பிறப்பு, இளமை
குழந்தையில் இலக்குமி பாய்க்கு வைக்கப்பட்ட பெயர் மணிகர்ணிகா. மரோபண்ட தம்பே, பாகீரதி பாய் சப்ரே இருவரும் மணிகர்ணிகாவின் பெற்றோர். மராட்டியத்தின் புகழ்பெற்ற தளபதிகளான தாந்தியா தொபே, நானா சாகிப் போன்றவர்கள் எல்லாம் மணிகர்ணிகாவுக்குக் குழந்தைப் பருவத்தில் அறிந்த நண்பர்கள்தான். நான்கு வயதில் தனது தாயை இழந்த மணிகர்ணிகாவுக்கு வீட்டிலேயே கல்வி அளிக்க அவரது தந்தை ஏற்பாடு செய்தார். அப்போதைய பேஷ்வா பாஜிராவ், மணிகர்ணிகாவை சப்ளி என்றே அழைப்பாராம். இந்தச் சொல்லுக்குக் கலகலப்பாக இருக்கும் மகி்ழ்ச்சியான குழந்தை என்ற பொருள். ஆங்கிலத்தில்கூட அந்தச் சொல்லுக்குப் பொருள் அதுதான். பெண்கள் குழந்தைகள் ஆர்வம் காட்டாத குதிரையேற்றம், வாள்வீச்சு, மல்லக்கம்பம் என்ற நட்டு வைத்த கம்பத்தை வைத்து செய்யும் ஓக விளையாட்டு போன்ற வீர விளையாட்டுகளில் மணிகர்ணிகாவுக்குக் குழந்தையாக இருக்கும்போதே ஆர்வம் இருந்தது. விளையாட்டைப்போல எழுதுவது, படிப்பது போன்ற கல்விப்பயிற்சியிலும் சிறுமி மணிகர்ணிகா சிறந்து தேர்ச்சி பெற்றாள். சமூகத்தில் பெண்குழந்தைகள் செய்யக் கூடாதவை என்று அறிவுறுத்தப்பட்ட வீரவிளையாட்டுகள் எல்லாம் சிறுமி மணிகர்ணிகாவுக்குப் பிடித்திருந்தன.
திருமணம்
பதினான்கு வயது பருவமடைந்த மணிகர்ணிகாவை அப்போதைய ஜான்சியின் அரசராக இருந்த கங்காதரராவ் நெவால்கர் மணந்துகொண்டார். மே 1842இல் நடைபெற்ற இந்தத் திருமணத்துக்குப் பின் மராட்டிய அரச குல வழக்கப்படி மணிகர்ணிகாவுக்கு தேவி இலக்குமியின் பெயரை நினைவூட்டும் விதமாக இலக்குமி பாய் என்ற அரசப் பெயர் சூட்டப்பட்டது. இராணிகளுக்குத் திருமணத்தின்போது வேறு பெயர் சூட்டுவது மராட்டிய அரச குலத்தினரின் வழக்கம். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1851ஆம் ஆண்டு தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாமோதர ராவ் என்று பெயரிட்டனர் பெற்றோர். ஆனால் குழந்தை நான்கு மாதங்களில் தொடர்ந்த உடல்நலமின்மையால் இறந்துபோனது.
நவம்பர் 1853 வாக்கில் மன்னர் கங்காதரராவுக்கு உடல் நலம் குன்றியது. ஜான்சி அரசுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கணக்கிட்ட கங்காதர ராவ், அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியின் வட்டார அரசியல் அதிகாரியாக இருந்தவர் முன்னிலையில் தனது ஒன்றுவிட்ட சகோதரனின் மகனான சிறுவனைத் தத்து எடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தை ஜான்சிக்கு அரசியல் வாரிசாக இருக்கும் என்றும், அவன் பருவத்துக்கு வரும் வரை இலக்குமிபாய்க்கு முழு அரசாட்சி உரிமை உண்டு என்றும் பிரித்தானிய அதிகாரி முன்னிலையில் எழுதிச் சான்றிட்டார் மன்னர் கங்காதர ராவ். அந்த மாத இறுதியிலேயே மன்னர் காலமானார்.
அந்தக் காலகட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் டல்கௌசிப் பிரபு மேற்கொண்ட செயல்களாலும், வாரிசில்லா அரசுகளைக் கம்பேனி கைக்கொள்ளும் என்று அவர் மேற்கொண்ட அறிவிப்புக் கொள்கையாலும் (டாக்ட்ரைன் ஆஃப் லாப்சு) ஜான்சி அரசு கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் வர வேண்டும் என்று இலக்குமி பாய்க்குத் தாக்கீது அனுப்பப்பட்டது. இலக்குமி பாய்க்கு வருடாந்திர அரசியல் உதவித்தொகையாக அறுபதாயிரம் ரூபாய் தரப்படும் என்றும், இலக்குமி பாய் ஜான்சி பிரதேசத்தையும், கோட்டையையும் விட்டு வெளியேற வேண்டும் என்றும் கிழக்கிந்தியக் கம்பெனி அரசு சொன்னது. அரசி இலக்குமி பாய் ‘ஜான்சியின் உரிமையை என்னிடமிருந்து எவர் எடுக்க முடியும்?’ என்று வெகுண்டெழுந்தார். சிறுவன் கங்காதர்ராவுக்கு முடிசூட்டப்பட்டது. அவனது அரசியல் காப்பாளராகவும், காப்பு இராணியாவும் இலக்குமி பாய் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
வரலாற்றுத் தருணத்துக்குள் நுழைந்த இலக்குமி பாய்
இந்திய விடுதலைப் போர் வரலாற்றை அறிந்தவர்களுக்கும் படித்தவர்களுக்கும் 1857இன் சிப்பாய்க்கலகம் மறக்க இயலாதது. கலகம் என்ற பெயரைப் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி அதற்கு வைத்தாலும், முழு வல்லமை பெற்ற சர்வாதிகார ஆட்சியாக விளங்கிய கம்பெனி ஆட்சிக்கு எதிராக, வலுவாக முன்னெடுக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போர் அந்தச் சிப்பாய்க்கலகம். எனவேதான் இந்திய விடுதலை வரலாற்றில் அது முதல் சுதந்திரப்போர் என்று நிலைபெற்றிருக்கிறது. வட இந்தியப் புலமெங்கும் விரைந்து பரவிய இந்தப் போர், கம்பெனிப் படையின் வலுவான, விரைவான எதிர்வினை காரணமாகவும், இந்தியத் தரப்பு வீரர்களை ஒருங்கிணைக்கச் சரியான நபர் இல்லாததாலும், ஆங்காங்கே குழுத்தலைமை ஒருங்கிணைப்பு இல்லாததாலும், வட்டார அளவில் ஆங்காங்கே அடக்கப்பட்டது. மேலும் பர்மாவில் இருந்த தங்களது நிலைப்படையை கம்பெனி விரைந்து வரவழைத்துக் கொண்டதால் அந்த விடுதலைப்போர் விரைவில் ஒடுக்கப்பட்டது.
சிப்பாய்க்கலகம் என்ற முதல் விடுதலைப் போர் நடந்த வரலாற்றுத் தருணத்தில் இணைந்து கொண்ட ஒரு முன்னணிப் போராட்ட அரசிதான் ஜான்சி இராணி இலக்குமி பாய். 1857இல் சிப்பாய்க்கலகம் மீரட்டில் தொடங்கியபோது கிழக்கிந்தியக் கம்பேனியின் ஒரு படை ஜான்சி கோட்டையையும் முற்றுகையிட்டது. காப்பாளராகப் பொறுப்பு ஆட்சி செய்து கொண்டிருந்த அரசி இலக்குமி பாயை அகற்றி விட்டு, ஜான்சி கோட்டையைக் கைப்பற்ற முயன்றது கம்பெனி அரசு. ஹக் ரோஸ் என்ற தளபதியின் தலைமையில் ஜான்சி கோட்டையைச் சுற்றி வளைத்த கம்பெனி அரசு, இலக்குமி பாய் அரசைவிட்டும், கோட்டையைவிட்டும் ஓடி விட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கோட்டை, ஊர் இரண்டையும் எரித்துவிடுவோம் என்றும் எச்சரித்தது. ‘நாங்கள் விடுதலைக்காகப் போராடுகிறோம், நாங்கள் எங்களது நிலத்தையும் உரிமையையும் அரசையும் பாதுகாப்போம். ஒருவேளை போர்க்களத்தில் மரணம் அடைய நேரிட்டால், நாட்டைப் பாதுகாக்க எங்களது உயிரையும் தத்தம் செய்து வரலாற்றில் நிற்போம். நாளைய வரலாறு எங்களது வீரத்தால் எழுதப்படும். நாளைய நாடு எங்களை நினைவு கொள்ளும்’ என்று மறுசெய்தி இலக்குமி பாய் அனுப்பினார்.
ஜான்சிப் போர்
ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நீடித்த ஜான்சிப் போரில், ஜான்சியின் வீரர்களையும் பெண்களையும்கூட முன்னிறுத்தி தனது படையை நடத்திச்சென்று போரிட்டார் இலக்குமி பாய். போரின் முதல் சில நாட்களில் இலக்குமி பாயின் வீரப்போரைக் கண்ட பிரித்தானிய தளபதி,மேலும் படைகளை வரவழைத்தான். இரண்டு வாரங்களில் போர் முடிவுக்கு வந்தது. மிகவும் வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டாலும் கம்பெனிப் படைகளின் நேர்மையற்ற போர்முறைகளால் ஜான்சிப் படை தோற்றது.
தனது மழலைக் குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு போரைச் சந்தித்த ஜான்சி இராணி இலக்குமிபாயின் வரைபடங்கள் உலகப் புகழ் பெற்றவை. தனது சிறு தத்துக் குழந்தையைக்காக்கும் பொருட்டுப் போர்க்களத்திலிருந்து வெளியேறினார் இலக்குமி பாய். கல்பி என்ற இடத்துக்குத் தப்பிச் சென்ற இலக்குமி பாய், தாந்தியா தோபேயுடனும், மற்ற தோழமைப் படைகளுடனும் சேர்ந்து குவாலியர் கோட்டையை மீண்டும் கைப்பற்றினார்.
இறுதிப் போரும் வீரமரணமும்
மொராரையும் குவாலியர் கோட்டையையும் திரும்பக் கைப்பற்ற மேலும் துணைப்படைகளுடன் வந்த கம்பெனி படை, கொடும்போரை மேற்கொண்டது. இந்தப் போரில் வீரத்துடன் போரிட்ட இலக்குமி பாய், போர்க்காயமடைந்து வீரமரணமடைந்தார். குவாலியரில் உள்ள கொடாக்-இ-செராய் என்ற இடத்தில் இந்த இறுதிப் போர் நடந்தது. 1858ஆம் ஆண்டின் ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போரின்போது இலக்குமி பாய்க்கு வயது முப்பதுகூட நிறைவடைந்திருக்கவில்லை. உயிர்நீத்த அவரது உடல் போர்வீரனுக்குடைய உடையுடனே கண்டறியப்பட்டது. சில வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவதுபோல இலக்குமி பாயின் பிறப்பு 1835 என்று கொண்டால் இருபத்து மூன்று வயது நிறையும்போது அவரது வாழ்வு அமரத்துவம் அடைந்துவிட்டது. இந்திய அரசிகளில் ஒரு சுடர்ச்சரமாய் இலக்குமி பாய் நிலைத்தார்.
இந்திய வரலாற்றின் பெண்மைத்துவ அடையாளம்
இலக்குமி பாய் வீழ்ந்த 1858இலிருந்து இந்தியா விடுதலை பெற மேலும் தொண்ணூறாண்டுகள் தேவைப்பட்டன. இந்தத் தொண்ணுறாண்டுகளில் இலக்குமி பாய் வீரத்தின் விளைநில அடையாளமாக இந்தியர்களாலும், மாபெரும் சக்தி படைத்த ஒரு சூனியப் பெண் என்ற அளவில் பிரித்தானியர்களாலும் இருவிதமாகவும் பேசப்பட்டார். எப்படிப் பேசப்பட்டாலும் இந்தியப் பெண்களின் தலைமைத்துவம், ஆட்சித்திறன், கட்டமைப்பு ஆகியவற்றின் உருவகமாக ஜான்சி இராணி இலக்குமி பாய் என்ற பெயர் வலுவாக நிலைத்திருக்கிறது என்பது அசைக்கமுடியாத உண்மை.
பிரித்தானியப் படையின் தளபதியான ஹக் ரோஸ் பின்வரும் சொற்களில் இலக்குமி பாயை வருணிப்பதைக் கொண்டு, அரசி இலக்குமி பாயைப் பற்றிய ஒரு சித்திரத்தை நாம் பெறலாம். ‘Remarkable for her beauty, cleverness and perseverance, she had been the most dangerous of all rebel leaders. The best and bravest of all.’
தனது எதிரியைப் பற்றிய ஒரு இத்தகைய உயர்வான மதிப்பீட்டைக் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரி வழங்கியிருக்க வேண்டும் என்றால், இதிலிருந்தே ஜான்சி இராணி இலக்குமி பாயின் அறிவையும் தீரத்தையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
நெடுகிய பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் அமைந்த இந்தியப் பிரதேச அரசுகளில் மிகுந்த நுண்ணறிவு, தீரம், ஆட்சித் திறன், தலைமைத்துவம், உணர்வுப் பூர்வமாக எதிலும் ஈடுபடும் நுண்மைத்துவம், மக்கள் ஆதரவு ஆகியவற்றைப் பெற்ற அரசத் தலைமைகள் கொண்டிருந்த அரசப் பகுதிகள் மிகச் சில மட்டுமே. அவற்றில் ஜான்சியும், அதன் இராணியான இலக்குமி பாய் என்ற பெயரும் குறிப்பிடத் தக்கவை.
இந்தியாவில் பிரித்தானியர்களின் ஆதிக்கம் ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகள் நீடித்தது. பிரித்தானிய ஆதிக்கம் தொடங்கிய காலத்திலேயே அந்த ஆதிக்கத்துக்கு எதிரான வலுவான குரலாக எழுந்தது ஒரு பெண்ணரசியின் குரல். அது தென்தமிழகத்தின் சிவகங்கைச் சீமையிலிருந்து எழுந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் குரல். பிரித்தானிய ஆதிக்கம் ஏறத்தாழ நன்றாக வேரூன்றிய, அவர்கள் ஆதிக்கம் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த காலத்தில் எழுந்த இன்னொரு வலுவான இந்தியப் பெண்ணரசியின் குரல் இலக்குமி பாயின் குரல். இந்த இரண்டு இராணிகளுமே இந்திய விடுதலைப் போரின் வலுவான, காத்திரமான அத்தியாயங்களாக வரலாற்றில் நிறைகிறார்கள்.
(தொடரும்)