Skip to content
Home » இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

அவர் அரசியாக நேரடிப் பொறுப்பில் இருந்தது பதினைந்து ஆண்டுகள்தான். ஆனால் அவரது பெயரைத் தாங்கிய சாலைகளும் சத்திரங்களும் அரண்மனைகளும் மதுரையிலும், திரிசிரபுரம் என்கிற திருச்சிப் பகுதிகளிலும் இன்றுவரை புகழ்பெற்றவையாக இருக்கின்றன. திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் என்ற விண்ணவத் தலத்தில் உள்ள அம்மா மண்டபம் என்ற காவிரிக் கரையோர மண்டபம் பெரும் புகழ் பெற்ற ஒன்று. அதுவும் கிட்டத்தட்ட முன்னூறாண்டுகள் கடந்தும் இன்று வரை புகழ்பெற்று விளங்குகிறது. அதனைக் கட்டியவர் இந்த அரசிதான்.

அவர் அரசாண்டது திருச்சியில் என்பது இன்றும் இன்றும் வியப்பூட்டும் செய்தியாக இருக்கும். ஏனெனில் எப்போதும் அவர் அடையாளப்படுத்தப்படுவது மதுரை நாயக்கர் வரலாற்றோடு. இவரது வரலாற்றைப் படிக்கும்போது படிக்க நேரும் ஒரு சம்பவம் சுவையானது. இவரது கணவரான அரசர் இருபதாண்டுகள் ஆட்சி செய்த பிறகு மறைந்துபோகிறார். அப்போது மகனுக்கு வயது மூன்று மாதங்கள்தான். தானே பொறுப்பை ஏற்கிறார் அரசி. ஏறத்தாழப் பதினைந்தாண்டுகள் அரசப் பொறுப்பை ஏற்றதோடு, மகனையும் வளர்த்தெடுத்து நல்ல அரசனாகும் தகுதியோடு அவனை உருவாக்குகிறார். அந்த ஒரே மகன் தனது பதினைந்தாவது வயதில் பதவி ஏற்றார் .

அப்போது இந்தியாவில் டெல்லிப் பிரதேசத்தில் ஒளரங்கசீபின் முகலாயர்களின் ஆட்சி நடந்தது. இன்று போலவே அன்றைக்கும் டெல்லியே அதிகாரத் தலைமையிடமாக இருந்தது. நாடெங்கும் இருந்த அரசுகள் சிற்றரசுகளாகவே இருந்தன. ஔரங்கசீபுக்கு யார் சொன்ன யோசனையோ, மன்னர் தன் பாதுகையையும், கூடவே ஒரு படையையும் அனுப்பி நாடெங்கும் சிற்றரசுகளிடம் திறை (கப்பம்) வசூலிக்க அனுப்பி வைத்தார்.

அதிகாரத்தின் அகம்பாவமும் அந்தப் பாதுகையுடன் (செருப்போடு) போனது. பாதுகையை வணங்கி, திறையைச் செலுத்த வேண்டும் என்பது ஏற்பாடு. அந்த அகம்பாவத்தைச் சிதறடிக்கும் கனல் ஒன்று திருச்சியில் இருந்தது. செருப்புப்படை தென்னாட்டில் ஒவ்வொரு அரசிடமும் ஊர்வலம்போனது. அதிகாரத்துக்கு அஞ்சிய சிற்றரசுகள் செருப்பை வணங்கித் திறையையும் செலுத்தி பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.

இப்படி ஒவ்வொரு இடமாகச் சென்று திருச்சிக்கும் வந்தது முகலாய மன்னனின் செருப்புப் படை. தந்தை இறந்த பிறகு சில காலத்துக்கு முன்னர்தான் அரசனாயிருந்த அரசனுக்குச் செய்திபோனது. தேவையற்ற முரணைத் தவிர்க்க எண்ணிய அரசன், அரசத் தந்திரத்தோடு ஒரு காரியம் செய்தான். மன்னனுக்கு உடல்நலம் சரியில்லை, சிறிது காலம் கழித்து திறை அனுப்பி வைக்கப்படும் என்று செய்தியை முகலாயப் படைக்கு அனுப்பி வைத்தார். சிறிது காலம் தங்கிப் பார்த்தது செருப்புப் படை. பின்னர் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து, திருச்சி அரண்மனையின் வாசலுக்குப்போய் தங்கத் தட்டில் இட்ட பட்டுப்போர்த்திய செருப்போடு நின்றது.

இனிப்பொறுமை உதவாது என்று கண்ட அரசன் வெளிவந்தான். தங்கத் தட்டில் ஏந்திக் கொண்டு வரப்பட்ட செருப்பைப் பார்த்த மன்னனின் கண்கள் கனலைக் கக்கின. தனது வாளை உருவிய அரசன், ஒரு வீச்சில் தங்கத் தட்டைமூடியிருந்த பட்டுத்துணியை நீக்கினான். வாள் மூலமே கவ்வப்பட்ட செருப்பு, அரசன் காலடியில் தஞ்சமடைந்தது.

‘அடேய் கேளுங்கள், திறை செலுத்த வேண்டும் என்பதுதான் ஏற்பாடு. செருப்பை மதிக்க வேண்டும் என்பதல்ல. அரங்கனின் பாதுகையைத் தவிர வேறெவரின் பாதுகைக்கும் இந்த அரசின் எல்லைக்குள் மரியாதையில்லை. திறை வேண்டுமென்றால் தரப்படும். வாங்கிக் கொண்டு கிளம்புங்கள்’ என்று உறுமினான். திகைத்து நின்றது முகலாய மன்னனின் செருப்புப் படை. தென்னாட்டின் அரசுகள் எல்லாம் பணிந்து வணங்கிய செருப்பு, அதற்குரிய சரியான இடத்தில் வைக்கப்பட்டது. இந்தத் தீரத்தை அந்த இளைஞனுக்கு வழங்கியது ஒரு பெண்ணரசி. அப்போது மன்னனாக இருந்த இளைஞன் அரங்க கிருட்டிண முத்து வீரப்ப நாயக்கன். அவனது பெரும் புகழ்பெற்ற அன்னை இராணி மங்கம்மாள். அந்தப் பெண்ணரசியே நமது இக்கட்டுரையின் நாயகி.

ஆட்சியைக் காத்த அரசி

மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக இருந்தவர் தப்பகுளநாயக்கர். அவரது மகள்தான் மங்கம்மாள். சொக்கநாத நாயக்கர் மங்கம்மாளை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தது ஒரே மகன். அரங்க கிருட்டிண முத்து வீரப்ப நாயக்கன். அவனது உறுமலைத்தான் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்டோம். இருபத்து மூன்றாண்டுகள் ஆண்ட அரசர் மறைந்துபோது, குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. ஆண்டு 1682. தனது மகனை ஆளாக்கி அரசனாக்க உறுதி பூண்ட இராணி மங்கம்மாள், அக்கால வழமையான உடன்கட்டை ஏறும் வழக்கத்தை உடைத்து, தானே ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

முத்து வீரப்பன் ஆளாகும் வரை நாட்டின் இராணியாகப் பொறுப்பை வகிப்பது அவரது திட்டம். மகனுடைய பதினைந்து வயதில் அவனுக்கு முடிசூட்டினார். முத்தம்மாள் என்ற அழகியப் பெண்ணை மகனுக்கு மணமுடித்தார். மற்ற அரசர்கள் போலல்லாது ஒரு மனைவியை மட்டும் ஏற்று வாழ்ந்தான் முத்து வீரப்பன். தாயின் ஆலோசனையை ஏற்றுத் திறமையாக ஆட்சி செய்த முத்து வீரப்பன், தந்தை இழந்த சில பகுதிகளை மீண்டும் போரிட்டு மீட்டான். ஏழாண்டு காலம் நல்லாட்சி புரிந்த முத்து வீரப்பன், 1688ஆம் ஆண்டு பெரியம்மை நோய் கண்டு மாண்டுபோனான். கணவன் இறந்துபோது கருவாண்டு கொண்டிருந்த முத்தம்மாள், சிறிது நாளில் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அன்பும் ஆசையும், அதற்கு மேல் மிகுந்த மரியாதையையும் அளித்திருந்த காதல் கணவனின் பிரிவைத் தாளாத முத்தம்மாள், குளிக்கப் பயன்படுத்தும் பன்னீர் கலந்த நீரை வேண்டுமென்றே அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு சன்னி நோய் கண்டு மாண்டுபோனாள்.

இப்போது இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்க சொக்கநாதனுக்கும் பெயரளவில் முடிசூட்டப்பட்டது. ஆட்சிப் பொறுப்பை இராணி மங்கம்மாளே ஏற்க வேண்டியிருந்தது. காப்பாட்சியாளராக 1706 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார் இராணி மங்கம்மாள்.

திறம் பெற்ற ஆட்சி

பெண்களைச் சமுதாயம் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. பெண்ணரசி, தாய், தெய்வம் என்றெல்லாம் கொண்டாடும் சமூகம், தலைமைப் பொறுப்பைப் பெண்ணிடம் தராது. பெண் தலைமையின் கீழ் அடிபணிந்து நிற்கக் கூடாது என்ற தேவையற்ற ஒவ்வாமை. இராணி மங்கம்மாளுக்கும் இது நடந்தது. ஆயினும் சிறிது நாட்களிலேயே இராணி மங்கம்மாளின் ஆட்சித் திறம், நிர்வாகத் திறமை முதலியவற்றை மக்கள் நேரடியாக உணர்ந்தார்கள். அந்த உணர்வு வந்தபின் மக்கள் இராணி மங்கம்மாளைக் கொண்டாடினார்கள்.

இப்போது காந்தி அருங்காட்சியகம் என்ற பெயரில் நிலவும் கட்டடமே இராணி மங்கம்மாளின் அரண்மனை இருந்த இடம். நாடெங்கும் ஏரி, குளங்களைத் தூர் வாருதல், வழிப்போக்கர்களுக்கான சத்திரங்கள் அமைத்தல், இராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளின் வறட்சியை நீக்க ஏரிகள் அமைத்தல், வரி வசூலிப்புகளை முறைசெய்து நியாயமான வசூலிப்பை உறுதிப்படுத்தல், மத நல்லிணக்கத்தை உறுதி செய்தல், அண்டை நாடுகளுடன் தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்த்தல் என்று அவரது ஆட்சி அமைதியும், வளமையும் கொண்டிருந்தது.

சத்திரங்களில் உணவு, தங்கும் வசதிகள் இருக்குமாறு வசதிகள் செய்யப்பட்டன. இன்றுவரைகூட மதுரை, திருச்சிப் பகுதிகளில் இயங்கும் மங்கம்மா சத்திரங்கள் உள்ளன. இன்றைய மதுரை இருப்பூர்தி நிலையத்துக்கு எதிர்புறம் அமைந்த ஒரு மங்கம்மாள் சத்திரத்தில் கட்டுரை ஆசிரியர் தங்கிய அனுபவம் உண்டு. அவை அகில இந்தியச் சர்வோதய நிறுவனங்களின் பொறுப்பில் செயல்படுகின்றன. திருடர்களைக்கூடத் திருத்தி நல்வாழ்வு வாழவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது ஆட்சிக் காலத்தில் கிறித்துவ மத நூல்கள் பல வெளிவந்தன. அனைத்து மதத்தினரும் அவரவர் நம்பிக்கையைப் பின்பற்றும் உரிமையை வழங்கியிருந்தார். பேரழகியாகவும், நிர்வாகத்திறமை கொண்டவராகவும் இருந்த இராணி மங்கம்மாள், அரச தந்திரம் உடையவராகவும் விளங்கினார். அவரது அரச தந்திரத் திறன்கள் பின்வரும் பகுதியின் மூலம் தெளிவுற விளங்கும்.

அரசதந்திரம்

ஔரங்கசீப் அப்போது டெல்லியின் சுல்தானாக ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவரது படை தெற்கே மேலும் அரசை விரிவு படுத்த எண்ணி வந்தபோது, அவர்களோடு முரண்படாமல், உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டார். முகலாயர்களின் உதவியைப் பெற்று, தஞ்சை மராட்டியர்கள் கைப்பற்றிய நாயக்க ஆட்சியின் பகுதிகளை மீட்டுக் கொண்டார். திருவாங்கூர் அப்போது மதுரையின் ஆட்சியின் கீழ் இருந்தது. நாயக்கர்களுக்கு திருவாங்கூர் அரசர்கள் திறை செலுத்தினார்கள். அப்போது திருவாங்கூர் மன்னராக இருந்த இரவிவர்மா திறைப் பொருளைச் செலுத்தாததோடு, அப்போது கல்குளம் பகுதியில் தங்கியிருந்த நாயக்கப்படைகளைத் தாக்கி அழித்தார். தனது தளபதி நரசய்யாவைப் படைகளோடு அனுப்பி, திருவாங்கூரோடு போரிட்டு, இரவிவர்மாவை வென்று திருவாங்கூர்ப் படைகளைச் சிதறடித்தது இராணி மங்கம்மாளின் அரசு. திறைப்பொருட்கள், பரிசுப் பொருட்களோடு திரும்பியது நரசய்யாவின் தலைமையிலான இராணி மங்கம்மாளின் படை.

போலவே மைசூர் மன்னன் சிக்கதேவராயன் மதுரை அரசின் மீது படையடுத்து சேலம், கோவைப் பகுதிகளைப் பிடித்ததோடு, திரிசிரபுரம் அரண்மனையையும் முற்றுகையிட்டான். ஆனால் தளவாய் நரசய்யாவின் தலைமையிலான படை, அந்த முற்றுகையை உடைத்து, சிக்கதேவனின் படைகளைச் சிதறடித்துத் தோற்கடித்தது.

வாரிசால் முடிவுற்ற வாழ்வும்

நாயக்க அரசகுலம் நீடிக்க வேண்டும் என்பதற்காகத் தனது திறம், காலம் அனைத்தையும் அளித்து தனது மகனை ஆளாக்கிய இராணி மங்கம்மாள், அதே அளவு நேரத்தையும், அக்கறையையும் தனது பெயரன் விசயரங்க சொக்கநாதன் மீது வைக்க இயலவில்லை. வயதும், அரசப் பொறுப்புகளும் அவரை அழுத்தியிருக்கலாம். அதோடு இராமநாத அரசோடு மதுரை அரசுக்குப் போர் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. 1702இல் மீண்டும் ஏற்பட்ட போரில் அதுவரை இராணி மங்கம்மாளின் வலது கரமாக இருந்து வந்த தளவாய நரசய்யா வீரமரணம் அடைந்தார்; அதனால் இராணி மங்கம்மாள் அந்தப் போரில் தோற்க நேரிட்டது. அதனால் ஏற்பட்ட மனச்சோர்வு அவரைப் பாதித்தது. அந்த நேரத்தில் அவரது பெயரன் அவரது விருப்பங்களுக்கு மாறாக நடந்து இராணி மங்கம்மாளை எதிர்த்து அவரைச் சிறையில் இட்டான். தனது இறுதி நாட்களைச் சிறையில் கழித்த இராணி மங்கம்மாள் பெரும் மன நலிவுற்று 1706இல் மறைந்தார்.

தென்னாட்டு அரசிகளில் வீரமங்கை வேலு நாச்சியாரைப்போலவே பெரும் புகழுடனும், சமூகப் பொறுப்புடனும் இன்றளவும் பெயர் விளங்குமளவும் ஓர் ஆட்சியைத் தந்தவர் இராணி மங்கம்மாள். தன்னைச் சுற்றியிருந்த அரசுகள் டெல்லியில் அரசாண்ட சுல்தான் ஔரங்கசீப், தனது குடிமக்கள், அரசவையினர் என்று அனைவரையும் அருமையாகக் கையாண்ட இராணி மங்கம்மாள், தனது பெயரனைக் கையாள்வதில் அடைந்த தோல்வி அவரது நெடுநிறை வாழ்வில் ஒரு சிறு கரும்புள்ளியாக அமைந்து வரலாற்றில் நின்றுபோனதுதான் அவரது கேடூழ். எனினும் தென்புலத்தின் இந்திய அரசிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியிருந்தால் விரமங்கை வேலுநாச்சியாரைப்போல இராணி மங்கம்மாளின் பெயரும் எந்தப்பட்டியலிலும் தவறவிடக் கூடாத ஒன்று.

(தொடரும்)

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *