1947ஆம் ஆண்டு, 15 ஆகஸ்ட், நள்ளிரவு 12 மணி!
பிரிட்டிஷ் இந்தியக்கொடி நிரந்தரமாகத் தரையிறங்கவிருக்கும் நேரத்தை எண்ணிக்கொண்டிருந்தது. டில்லி செங்கோட்டையில் நிரந்தரமாகப் பறக்கும் தருணத்தை எதிர்நோக்கி இந்திய மூவர்ணக்கொடி காத்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் அமைப்பை எழுதுவதற்காக அமர்ந்த அரசியல் நிர்ணய சபையின் நள்ளிரவு அமர்வில், இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்கவிருந்த ஜவாஹர்லால் நேரு ‘விதியுடன் ஓர் ஒப்பந்தம்’ (Tryst with Destiny) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆற்றினார்.
இந்தியப் பிரதமராக ஜவாஹர்லால் நேரு, சட்ட அமைச்சராக டாக்டர் அம்பேத்கர், உள்துறை அமைச்சராக சர்தார் வல்லபபாய் பட்டேல் உட்பட பிற இந்திய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா, அன்று மாலை 6 மணிக்கு டில்லியில் உள்ள இந்தியா கேட் (India Gate) எனும் இடத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபுவும் அவரது மனைவி எட்வினா மற்றும் மகள் பமீலா மவுண்ட்பேட்டன் அவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இருந்தனர். அவ்விழாவில் ‘யூனியன் ஜாக்’ எனப்படும் பிரிட்டிஷ் இந்தியக்கொடியை கீழே இறக்கிவிட்டு, அதைத்தொடர்ந்து இந்தியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜூலை 18, 1947ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பேரரசின் மன்னரான ஆறாம் ஜார்ஜ் அவர்களின் இசைவை ‘இந்திய விடுதலைச் சட்டம், 1947’ (Indian Independence Act, 1947) பெற்றதன் மூலம் இந்திய துணைக்கண்டத்தில் இரு நாடுகள் உருவாகின. ஒன்று, ஆகஸ்ட் 14, 1947 தனது விடுதலை தினத்தைக் கொண்டாடிய ‘பாகிஸ்தான்’. மற்றொன்று, ஆகஸ்ட் 15, 1947 தனது விடுதலை தினத்தைக் கொண்டாடிய ‘இந்தியா’. உண்மையில் அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் அடைந்தது முழுச் சுதந்திரமா?
உண்மை என்னவென்றால், ஆகஸ்ட் 15க்குப் பின்னரும் இந்தியா பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாகத்தான் தொடர்ந்தது. பாகிஸ்தானும் கூட. இந்திய விடுதலைச்சட்டம் அமலானதன் விளைவாக இந்தியாவும் பாகிஸ்தானும் அடைந்தது ‘டொமினியன் அந்தஸ்து’ (Dominion Status) மட்டுமே. பிரிட்டிஷ் பேரரசிடமிருந்த தொடர்புகளை அறுத்தெறிய அந்த அந்தஸ்து போதுமானதாக இல்லை.
ஒரு நாடு டொமினியன் அந்தஸ்தை அடைந்தால்,
i) அந்நாட்டு மக்கள் அந்த நாட்டு அரசாங்கத்தை நடத்தலாம்.
ii) பிரிட்டிஷ் பேரரசுக்கு உட்பட்ட மற்ற நாடுகளுக்கு இணையான பலம் கொண்ட நாடாகக் கருதப்படும்.
iii) அந்த நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது.
ஆனால், அந்த நாடு பிரிட்டிஷ் மன்னருக்கு விசுவாசமான நாடாகவே இருக்கும். அதாவது அந்நாட்டின் மன்னராக பிரிட்டிஷ் பேரரசரே நீடிப்பார்.
இந்தியாவின் மன்னராக ஆறாம் ஜார்ஜ் அவர்களே தொடர்ந்து நீடித்தார். பிரிட்டிஷ் மன்னரின் இந்தியாவுக்கான பிரதிநிதியாக (Governor General Of India) மவுண்ட்பேட்டன் பிரபு பதவியேற்றார். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு உட்பட மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும், மன்னரின் பிரதிநிதியான மவுண்ட்பேட்டன் பிரபுதான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவிப் பிரமாணத்தில் ‘பிரிட்டிஷ் பேரரசருக்கு விசுவாசமாக இருப்போம்’ என்ற வாசகங்களை வாசித்துதான் நேரு உட்பட அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல், இந்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில், பிரிட்டிஷ் இந்தியக்கொடியை (யூனியன் ஜாக் கொடி) இறக்கிவிட்டு இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றுவதாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனம் சங்கடப்படும் என்பதால் ‘யூனியன் ஜாக்’ கொடியை இறக்கவேண்டாம் என மவுண்ட்பேட்டன் நேருவிடம் கேட்டுக்கொண்டார். நேருவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். இதனால் 15 ஆகஸ்ட் 1947க்குப் பிறகும் யூனியன் ஜாக் கொடி சில நாட்கள் பறந்துகொண்டுதான் இருந்தது. இந்த அரிய தகவல், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மகளான பமீலா மவுண்ட்பேட்டன் அவர்கள் எழுதிய ‘India Remembered’ எனும் நூலில் இருந்து கிடைத்த ஒன்று.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ‘டொமினியன் அந்தஸ்து’ வழங்கும் ‘இந்திய விடுதலைச்சட்ட மசோதா, 1947’ மன்னர் இசைவைப் பெறுவதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முன் வழங்கப்பட்டது. ஜூலை 4, 1947 அன்று அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லீ அதனை நாடாளுமன்றத்தின் முன் வைத்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் கிளமெண்ட் அட்லீ அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
இந்திய மசோதாவுக்கு நீங்கள் ‘இந்திய விடுதலைச்சட்ட மசோதா’ என்று பெயர் வைத்திருப்பது கவலை அளிக்கிறது. (இந்தியாவுக்கு) டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்று சொன்ன காரணத்தினால்தான் மவுண்ட்பேட்டனுடன் நீங்கள் போட்ட திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தேன். டொமினியன் அந்தஸ்து விடுதலைக்கு வழிவகுத்தாலும், டொமினியன் அந்தஸ்தும் விடுதலையும் ஒன்றல்ல. ஒரு சமூகத்தின் அமைச்சர்கள் (பிரிட்டிஷ்) பேரரசருக்கு விசுவாசமாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அது விடுதலையடைந்த சமூகமாகாது. இது மிகவும் முக்கியமான விவகாரம். சரியான செயல்முறைகளும் சரியான பெயரும் பயன்படுத்தப்படவேண்டும். என்னைப் பொறுத்தவரை ‘இந்திய டொமினியன்கள் மசோதா’ அல்லது ‘இந்திய மசோதா,1947’ அல்லது ‘இந்திய தன்னாட்சி மசோதா’ என்று பெயரிடப்படுவதே சரியானதாக இருக்கும்.
மேற்கண்ட கடிதத்திலிருந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி 1947, அன்று இந்தியா விடுதலையடையவில்லை என்பதும், மாறாக, பிரிட்டிஷ் பேரரசுக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட நாடாகவே ஆனது என்பது புரிகிறது. பிரிட்டிஷ் பேரரசர்தான் இந்தியாவின் மன்னர். பிரிட்டிஷ் தளபதிதான் இந்திய ராணுவத்தின் தலைவர்.
‘இந்திய விடுதலைச்சட்டம்’ (Indian Independence Act, 1947) என்று பெயரிடப்பட்ட சட்டம் நமக்கு விடுதலையை அளிக்கவில்லை என்றால் முற்றுமுழுதான விடுதலையை எது அளித்தது?
பிரிட்டிஷ் மன்னராட்சியில் இருந்து விடுவித்து, மக்களால் ஆளப்படும் இறைமைகொண்ட (Sovereignty) ஜனநாயக நாடாக, இந்தியாவை மாற்றியது, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட ‘அரசியலமைப்புச் சட்டம்’ (Constitution of India).
அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டின் நாடாளுமன்றத்தையும் (Parliament) மாநிலச் சட்டமன்றங்களையும் (State Assemblies) உருவாக்கியது. அவற்றுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கொடுத்ததும் அரசியலமைப்புச் சட்டம்தான். அதாவது சுருக்கமாக, இந்தியா என்ற நாட்டையே உருவாக்கியதும் அரசியலமைப்புச் சட்டம்தான் (The Constitution of India, 1950).
1956ஆம் ஆண்டு தனக்கான அரசியலமைப்பை வகுத்ததன்மூலம் முழு விடுதலையடைந்து இஸ்லாமியக் குடியரசு நாடானது பாகிஸ்தான் (Islamic Republic of Pakistan). அதுவரை பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாகவே அது இருந்துவந்தது.
உண்மை இவ்வாறாக இருக்க, இன்றுவரை ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று விடுதலைக் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அதே நேரத்தில் 20ஆம் நூற்றாண்டின் மிகக்கொடூரமான சம்பவம் அரங்கேறிக்கொண்டிருந்தது. அதுதான் இந்தியப் பிரிவினை. ஒன்றுபட்ட இந்தியா பிளவுபட்டு இரு நாடுகளான சம்பவம். கடைசிவரை நாட்டுப்பிரிவினை நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சில வழிமுறைகள் கைக்கூடி வருவதுபோல் இருந்தன. நாட்டுப்பிரிவினை தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது. ஆனால் கடைசியில் அனைத்து முயற்சிகளும் வீணாகின. ஜூலை 1947, ‘இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை எந்தவொரு மனமகிழ்ச்சியுமின்றி ஏற்றுக்கொள்கிறோம்’ என்று நேரு அறிவித்தார்.
அடுத்து, இந்தியா எது? பாகிஸ்தான் எது? என்ற எல்லையைக் கிழிக்கும் சிக்கலான வேலை. ‘எல்லையை வகுக்க இருக்கும் அதிகாரிக்கு நல்ல சட்ட அறிவு இருக்க வேண்டும். ஆனால் இந்தியா பற்றி எதுவும் அறியாதவராக அவர் இருக்கவேண்டும்’, என முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் இந்தியாவை நன்கு அறிந்தவர்கள், ஏதாவது ஒரு நாட்டின் பக்கம் சாய்வதற்கான வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தனர். எனவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான எல்லையை பிரிக்கும் வேலை சர் சிரில் ராட்கிளிஃப் (Sir Cyril Radcliffe) என்ற பிரிட்டிஷ் அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. ராட்கிளிஃப் மிகச்சிறந்த சட்டவல்லுநர். ஆனால் 8 ஜூலை 1947வரை அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததில்லை.
முதன்முதலில் இந்திய துணைக்கண்டத்தின் வரைபடம் ராட்கிளிஃபிடம் காட்டப்பட்டபோது, அவர் மவுண்ட்பேட்டன், நேரு, ஜின்னா ஆகியோரிடம் கேட்ட கேள்வி, ‘ஆகஸ்ட் 15க்குள் இதனை முடித்தே ஆகவேண்டுமா?’
‘என்னவாகினும் ஆகஸ்ட் 15க்குள் பிரித்துக் கொடுத்துவிடவேண்டும்’ என்பதே அனைவரின் பதிலாக இருந்தது. ‘அவ்வளவு அவரசம் ஏன்?’ என்பது ஒரு வரலாற்றுக்கேள்வி.
இந்தியப்பிரிவினைக்கு காரணம் ‘முஸ்லீம் லீக்’ தலைவர் ‘ஜின்னா’ மட்டுமேதான் என்றும், காங்கிரஸ் ஒன்றுபட்ட இந்தியாவுக்குதான் ஆசைப்பட்டது என்பதே பொதுவான பார்வையாக உள்ளது. பாகிஸ்தான் உருவாக வேண்டும் என ஜின்னா விடாப்பிடியாக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஒருசில பாதுகாப்புகள் வழங்கப்பட்டால், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை கைவிட அவர் தயாராகவே இருந்தார். ஆனால் காங்கிரஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவேயில்லை.
ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக்கின் மிக முக்கியமான நிபந்தனையாக இருந்தது என்னவென்றால், அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசு வைத்துக்கொள்ளும்படியான அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. வெளியுறவுத்துறை, தொலைத்தொடர்புத்துறை, பாதுகாப்புத்துறை போன்ற மிக அடிப்படையான அதிகாரங்கள் தவிர மற்ற அதிகாரங்கள் மாகாணங்களின் கையில் இருக்கவேண்டும் என்றனர். வடமேற்கு மாகாணங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். அதிகார வலிமைமிக்கதாக மாகாணங்கள் இருந்தால்தான் இஸ்லாமியர்களின் உரிமைகள், பெரும்பான்மை இந்துக்களால் பறிபோகாது என்று நம்பினர். அவர்களின் பயத்திலும், கோரிக்கையிலும் நியாயங்கள் இருக்கவே செய்தன.
பாகிஸ்தான் பிரியாமல் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்திருந்தால், இப்போது உள்ளதுபோல் அனைத்து அதிகாரத்தையும் மத்திய அரசிடம் கொடுத்து வைத்திருக்கும் கூட்டாட்சி நாடாக இந்தியா இருந்திருக்காது. அதிகாரங்கள் அதிக அளவில் மாநிலங்களுக்கு பரவலாக்கப்பட்ட ஒரு கூட்டாட்சி நாடாக இந்தியா இருந்திருக்கும்.
ஏன் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்? இப்போது இருக்கும் கூட்டாட்சி முறையில் என்ன மாதிரியான பிரச்சனைகள் இருக்கின்றன? இந்தியாவின் அரசியல் அமைப்பு இன்று ஏன் இந்த நிலையை அடைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அதற்கு இந்தியா, பாகிஸ்தான் பிரிவு எதனால் ஏற்பட்டது? இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இடையறாத பதட்டத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் மதவாதத்தின் மூலம் எது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.
இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை எளிய முறையில் விளக்குவதே இந்தத் தொடரின் நோக்கம். விரிவான வரலாற்றுப் பாதையை நோக்கி நாம் பயணிக்கும்முன்னர், பொதுவாக அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன என்பதை நாம் பார்க்கவேண்டும். அடுத்த பகுதியில் காண்போம்.
(தொடரும்)
______________
மேற்கோள் நூல்கள்
1. H.M. Seervai, Constitutional Law of India, (4th ed. 2021)
2. Larry Collins and Dominique Lapierre, Freedom at Midnight, Harparcollins
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
1. Rohit De, Between Midnight and Republic: Theory and practice of India’s Dominion Status, International Journal of Constitutional Law, Volume 17, Issue 4, October 2019, Pages 1213–1234
இணையம்
1. Hilal Ahmed, No, Nehru didn’t hoist India’s first tricolour at Red Fort. And British flag wasn’t lowered, ThePrint (Aug 14 2019), https://theprint.in/opinion/no-nehru-didnt-hoist-indias-first-tricolour-at-red-fort-and-british-flag-wasnt-lowered/276641/?amp
2. Sahil M Beg, For dominion India, real independence did not come in 1947, The IndianEXPRESS (Aug 13 2022, 11: 45 IST), https://indianexpress.com/article/research/independence-day-dominion-status-august-15-1947-6555454/
3. Nirmal Jovial, A brief history of non-Independent period of Independent India, THEWEEK (Aug 14 2022, 18:13 IST), https://www.theweek.in/news/india/2022/08/14/a-brief-history-of-non-independent-period-of-independent-india.html
4. Satyen Mohapatra, Ceremonial lowering of Union Jack never took place?, Hindustan Times (Aug 14 2009, 23:40 IST), https://www.hindustantimes.com/india/ceremonial-lowering-of-union-jack-never-took-place/story-2kWsoFPNiPimStRTANmSLI.html
இந்திய சுதந்திர நிகழ்வின் தொடக்கம் குறித்து இளையோர் அறிந்து அதை தங்கள் பார்வையில் அளிப்பது, அதற்காக பல்வேறு தரவுகளை மேற்கோள் காட்டி கட்டுரை எழுதுவது என்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். த. சீனிவாசன். நந்திவரம்- கூடுவாஞ்சேரி. நகராட்சி.
வாஞ்சியின் சிறந்த ஆராய்ச்சி கட்டுரை. வாழ்க….. வளர்க….