அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டில் எல்லாவற்றுக்கும் தலையாயது என்பதைச் சென்ற பகுதியில் கண்டோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு அத்தகைய தலையாய அதிகாரம் எங்கிருந்து பிறக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, ஜேம்ஸ் ப்ரைஸ் என்கிற ஆங்கிலேய சட்ட வல்லுநர் ஒருவர் எழுதிய கற்பனையான உரையாடல் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தற்போதைய இந்திய நிலைமைக்கு ஏற்றவாறு அந்த எடுத்துக்காட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, இங்கே மாநில நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த மாநில அரசு சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கவரியை வசூலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வாகன ஒட்டி ஒருவருக்கும் அந்தச் சுங்கச்சாவடிகளில் சுங்கவரி வசூலிப்பவருக்கும் கற்பனையாக ஒரு விவாதம் நடக்கிறது.
வாகன ஓட்டி: ஏன் இங்கு ஒவ்வொரு வாகன ஓட்டிகளிடமும் பணம் வாங்குகிறீர்கள்?
சுங்கவரி வசூலிப்பவர்: ஐயா, இது ஒரு மாநில நெடுஞ்சாலை. மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனைச் சரிவர பராமரிப்பதற்காகச் சுங்கச்சாவடி அமைத்து நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோரிடம் சுங்கவரி வசூலிக்கப்படுகிறது.
வாகன ஓட்டி: சரி, இங்கே சுங்கச்சாவடி அமைத்துச் சுங்கவரியை வசூலிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?
சுங்கவரி வசூலிப்பவர்: இந்தச் சாலையின் குறிப்பிட்ட 60 கிலோமீட்டர் தூரம்வரை பராமரிப்பதற்கு மாநில அரசாங்கம் ஏலம் நடத்தியது. அதன் மூலம் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுச் சாலையின் இந்த 60 கிலோமீட்டர் தூரத்தைப் பராமரிக்கும் பொறுப்பு எங்களிடம் கொடுக்கப்பட்டது. ஆகவே, மாநில அரசுதான் அந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கிறது.
வாகன ஓட்டி: மாநில அரசு உங்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்ததாகச் சொல்கிறீர்கள். மாநில அரசாங்கத்துக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?
சுங்கவரி வசூலிப்பவர்: ஐயா, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலச் சட்டப்பேரவை தேர்தல் வருகிறதல்லவா? அதில் நாம் வாக்களிப்பதன் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறோமல்லவா? அவர்கள்தான் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றுகிறார்கள். அந்தச் சட்டத்தின் மூலம்தான் இந்த அதிகாரம் வருகிறது.
வாகன ஓட்டி: அப்படிச் சட்டம் கொண்டுவரும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது?
சுங்கவரி வசூலிப்பவர்: ஐயா, அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதல்லவா? அதில்தான் மாநில அரசுக்கு இத்தகைய அதிகாரங்கள் இருக்கிறது என வரையறுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டி: இப்படியாக ஒரு மாநிலத்துக்கு அதிகாரங்களை வரையறுத்துக் கொடுக்கிற அந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
சுங்கவரி வசூலிப்பவர்: பிரிட்டிஷ் அரசு இந்த நாட்டை விட்டு வெளியேறியதல்லவா? அதற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் வகுத்த சட்டத்தின்படி, மாகாணச் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதில், மக்கள் நாம் வாக்களித்ததன்மூலம் பலரை அரசியலமைப்புச்சட்ட நிர்ணய சபைக்கு அனுப்பிவைத்தோம். தற்போது, நம்மை ஆளும் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியது அவர்கள்தான். எனவே அதை, மக்கள் தாங்களே உருவாக்கித் தங்களுக்கு அளித்துக்கொண்டதாகத்தான் பொருள். எனவே, மக்களிடமிருந்துதான் இந்த அதிகாரம் பிறக்கிறது.
மேற்கண்ட உரையாடலில் பார்த்ததுபோல அரசியலமைப்புச் சட்டம் என்பது மக்கள் உருவாக்கி, மக்களுக்கே வழங்கிய ஒன்று. அரசியலமைப்பின் முகவுரையிலும் அரசியலமைப்புச் சட்டத்தை நாமே உருவாக்கி, நமக்கே வழங்கிக்கொண்டதாகத்தான் எழுதப்பட்டுள்ளது. அப்படி நாம் வழங்கிக்கொண்ட நாள்தான் குடியரசுத் தினமாக கொண்டாடப்படுகிறது.
அரசியலமைப்புச்சட்ட நிர்ணய சபை எப்படி உருவாக வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையினர் நாட்டின் அரசியல் அமைப்பையே தீர்மானிக்கப்போகிறார்கள் என்றால், அவர்களுடைய முடிவு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் நாட்டு மக்களுடைய வாழ்வில் நிரந்தரமான ஓர் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்றால், நம்மைக் கேட்டு நம் ஒப்புதலுடன்தானே அந்த முடிவை எடுக்க வேண்டும்? அதனால் அரசியல் அமைப்பை முடிவு செய்யும் முன்னர் அனைத்து மக்களின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என்பது அவசியம்.
அதாவது ‘இறைமை’யைப் பெறவேண்டும். ‘இறைமை’ என்பது ஆட்சி அதிகாரத்தில், வேறு எந்த நாட்டிற்கும் அடிபணியாமல் இருப்பது. நம் நாட்டு விவகாரங்களில் நாம் மட்டுமே ஈடுபடுவது. குடியரசு நாட்டில் இந்த இறைமை எங்கிருந்து வருகிறதென்றால், மக்களிடமிருந்துதான் வருகிறது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து. குடியரசு நாடு மக்களுக்கு மட்டுமே அடிபணிந்த ஒன்று. (குடியரசு நாடு என்பது அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகளை அந்நாட்டு மக்களே தேர்வு செய்வது, மன்னராட்சிப் போலல்லாமல் நாட்டின் முதல் குடிமகனையும் மக்களே தேர்ந்தெடுப்பர்.)
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முதலில் அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபை ஒன்றை அமைக்க வேண்டும். அந்தச் சபையில் உள்ளவர்கள் மக்களின் பிரதிநிதிகள். எனவே, அவர்கள் அந்நாட்டு மக்கள் அனைவருடைய அங்கீகாரத்தையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த அங்கீகாரம் நேரடியானதாகவும் இருக்கலாம், மறைமுகமானதாகவும் இருக்கலாம்.
அது என்ன நேரடி அங்கீகாரம், மறைமுக அங்கீகாரம்? மக்கள், தாம் அளிக்கும் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை அ.நி. சபைக்கு அனுப்பினால் அது நேரடியான அங்கீகாரம். இதுவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வாக்கெடுப்பு நடத்தி, அதில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் அ.நி. சபைக்கு அனுப்பப்பட்டால் அது மறைமுகமான அங்கீகாரம்.
இப்படி மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் சபையாக ஒன்றுகூடி, வரைவுக்குழு ஒன்றை அமைப்பார்கள். சட்டம் படித்தவர்கள் இந்தக்குழுவில் இடம்பெறுவர். மாதிரி அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை இவர்கள் இயற்றி, அதனை அரசியலமைப்புச்சட்ட நிர்ணய சபையின்முன் விவாதத்திற்கு அளிப்பார்கள்.
அதன்பின்னர், மாதிரி அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒவ்வொரு சரத்துகளையும் விவாதிப்பார்கள். மக்கள் பிரதிநிதிகள், எழுதப்பட்ட சரத்துகள் மீது அதிருப்தி கொண்டால் அந்தச் சரத்தில் மாற்றம்கோரி திருத்தங்கள் கொண்டு வரலாம். பெருவாரியான நபர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே சரத்தில் மாற்றங்கள் செய்யப்படும். இல்லையெனில் எவ்வித மாற்றமும் அல்லாமல் மாதிரி அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த சரத்து, அப்படியே அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறும்.
இவ்வாறாக மக்களின் பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சட்டத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர், மீண்டும் பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் பெறவேண்டும். இதுதான் சரியாகக் கடைபிடிக்கவேண்டிய நடைமுறை.
இப்போது அன்றைய இந்திய அரசியலமைப்புச்சட்ட நிர்ணய சபையில் இருந்த உறுப்பினர்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்று பார்க்கலாம். 1946ஆம் ஆண்டு ஜூலை மாதம் அ.நி. சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. ஆனால், அந்தச் சபையின் உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கவில்லை.
அசாம், பீகார், பாம்பாய், மத்திய மாகாணம், ஒரிசா, வங்காளம், மெட்ராஸ், ஐக்கிய மாகாணம், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப் என இந்தியாவில் பதினொரு மாகாணங்கள் அப்போது இருந்தன. 1946ஆம் ஆண்டின் துவக்கத்தில், இந்தப் பதினொரு மாகாணங்களின் சட்டப்பேரவைக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. 1935ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி இந்தத் தேர்தல்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள் அந்தந்த மாகாணங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்தச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் கூடி வாக்களித்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள்தான் அ.நி. சபையில் பங்கெடுத்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள். இதன்மூலம் மக்கள் நேரடியாக அச்சபையின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவில்லை, மறைமுகமாகத்தான் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தெளிவாகிறது.
இருப்பினும், அ.நி.சபையின் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் அரசியலமைப்புச் சட்டத்தை மக்கள் தாமே எழுதி தமக்கு வழங்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அ.நி. சபையில் இடம்பெற்ற உறுப்பினர்கள், அனைத்து இந்திய மக்களின் அங்கீகாரத்தையும் பெற்ற பிரதிநிதிகளாக இருக்கவில்லை. காரணம், மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்தல்கள், 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி நடைபெற்றவை. அப்போதிருந்த இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை இருக்கவில்லை.
சொத்துரிமை படைத்த, வெறும் 14 சதவிகித மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. ஆகவே அ.நி.சபை ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கவில்லை. சொத்துரிமை படைத்தவர்களின் பிரதிநிதியாக மட்டுமே இருந்து அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியிருக்கிறது.
இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம், சொத்துரிமைக்கொண்ட மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் அ.நி.சபைக்கு அனுப்பப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 292. இதுபோக, மேலும் 93 உறுப்பினர்கள் அச்சபையில் இடம்பெற்றிருந்தனர். அவர்களை அச்சபைக்கு அனுப்பியவர்கள் யார் தெரியுமா?
அப்போது இந்தியாவில் பதினொரு மாகாணங்கள் மட்டுமின்றி, மன்னராட்சியின்கீழ் இயங்கிவந்த பல பிரதேசங்களும் இருந்தன. அவற்றை சமஸ்தானம் என்பார்கள். அவர்களும் பிரிட்டிஷ் அரசுக்குக் கட்டுப்பட்டவர்களாக, வரி செலுத்துபவர்களாக இருந்தனர்.
அப்படி, இந்தியாவின் பல்வேறு சமஸ்தானங்களிலிருந்து மன்னர்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டவர்கள்தான் மீதமுள்ள 93 உறுப்பினர்கள். இவர்கள் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற உறுப்பினர்கள் அல்ல. அந்த சமஸ்தானங்களில் பெருவாரியாக நிலத்தை வைத்திருக்கும் ஜமீன்தாரர்கள்தான் மன்னர்களின் பிரதிநிதிகளாக அ.நி.சபைக்கு அனுப்பப்பட்டனர்.
இதனால்தான், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்த அ.நி.சபை, இந்திய மக்கள்தொகையின் ஒரு சிறுபான்மை கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதியாகவே இருந்தது. மேலும், அச்சபையின் கால்பங்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்கூட இல்லை. நிலப்பிரபுத்துவம் காரணமாக அந்த இடத்திற்கு உரிமையாளர்களாக ஆனார்கள்.’ என்று சார்லஸ் பெட்டெல்ஹெய்ம் என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர், தன்னுடைய ‘இன்டிபென்டென்ட் இந்தியா’ எனும் நூலில் எழுதியுள்ளார்.
ஒரு குடியரசு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் அ.நி.சபை, அந்நாட்டு மக்கள் அனைவரின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒன்றாக இருக்கவேண்டும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிர்ணயித்த அ.நி.சபையின் அதிகாரம், சொத்துரிமை படைத்த நபர்களிடமிருந்தும், நிலம் வைத்திருக்கும் ஜமீன்தாரர்களிடமிருந்தும் பிறந்த ஒன்று. அது மக்கள் அனைவரின் அங்கீகாரத்தால் பிறந்த அதிகாரம் அல்ல என்பது தெளிவாகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரம் எங்கிருந்து பிறந்தது என்பதை இந்தப் பகுதியில் பார்த்தோம். அரசியலமைப்புச் சட்டம் என்றொன்று உருவாகவேண்டிய தேவை எதனால் எழுகிறது என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.
(தொடரும்)
______________
மேற்கோள் நூல்கள்
1. C.F Strong, Modern Political Constitutions
2. முரசொலி மாறன், மாநில சுயாட்சி (3rd ed.2017)
3. M.P.Jain, Indian Constitutional Law (8th ed.2018)
4. V.N.Shukla, Constitution of India (14th ed.2022)
5. கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி (2nd ed.2017)
6. Krishan Keshav, Constitutional Law – I