அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏன் எழுகிறது என்பதை இப்போது பார்க்கலாம். ஒரு நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆட்சி மீது மக்கள் அதிருப்தி கொண்டு புரட்சி செய்கிறார்கள். புரட்சியின் காரணமாக அங்கே மன்னராட்சி நீக்கப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும்? புரட்சி செய்தவர்கள் புதிய அரசை உருவாக்குவார்கள்.
அப்படி, முன்னர் இருந்த ஆட்சிமுறை மாற்றப்பட்டு வேறு ஒரு ஆட்சிமுறை நடைமுறைக்கு வருகிறபோது, அந்த நாட்டின் அரசியல் எப்படிப்பட்ட அமைப்பில் இருக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
மக்கள் தங்களின் அரசாங்கத்தை எப்படி வடிவமைக்கப் போகிறார்கள்? மக்களாட்சி முறையா? மன்னராட்சி முறையா? கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா? புதிய ஆட்சியில் ஒவ்வொரு மக்களின் உரிமைகள் என்னென்ன? கடமைகள் என்னென்ன? அரசாங்கத்தின் அதிகாரங்கள் என்னென்ன? ஆகியவற்றைக் குழப்பங்களின்றி எழுதி வைத்துக்கொள்ளும் தேவை ஏற்படுகிறது.
இதனால் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி வைக்கவேண்டியது இன்றியமையாதது என்பதை உணர முடிகிறது. ஆனால், அனைத்து நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களும் எழுதிவைக்கப்பட்ட ஒன்றா?
அரசியலமைப்புச் சட்டம் எழுதிவைக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம்; எழுதிவைக்கப்படாததாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, பிரிட்டன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் எழுதிவைக்கப்படாத ஒன்று. காலம்காலமாக பின்பற்றிவரும் அரசியல் நடைமுறைகள், அரசியலமைப்புக்கான சில கோட்பாடுகள் ஆகியவற்றை மட்டுமே பின்பற்றுவதன் மூலம் அந்த நாடு இயங்கி வருகிறது.
பிரிட்டன் நாடாளுமன்றம் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சட்டத்தை மாற்றி எழுதலாம். பல காலமாக தாங்கள் பின்பற்றிவரும் அரசியல் அமைப்புக் கோட்பாடுகளைக்கூட, சாதாரணச் சட்டத்தைக் கொண்டுவருவதன்மூலம் பிரிட்டன் நாடாளுமன்றம் மாற்றிவிட முடியும். அந்நாட்டில் நாடாளுமன்றம்தான் எல்லாவற்றுக்கும் மேலானது.
‘நாடாளுமன்றமே சர்வவல்லமை மிக்கது’ எனும் கோட்பாடுதான் பிரிட்டன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதம். பிரிட்டன் நாடாளுமன்றம் நினைத்தால், அது சரியெனக் கருதிய எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும், எதற்காகவும் சட்டம் கொண்டு வர முடியும்.
ஏற்கெனவே சொன்னதுபோல, இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால், அதைச் செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் நம்நாட்டு நீதிமன்றங்களுக்கு உண்டு. ஆனால், பிரிட்டன் நீதிமன்றங்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் இல்லை. பிரிட்டன் நாடாளுமன்றம் கொண்டுவரும் ஒரு சட்டத்தை “செல்லாது” என அந்நாட்டு நீதிமன்றங்கள் அறிவிக்க முடியாது.
அப்போது, அந்நாட்டு நீதிமன்றங்களின் வேலைதான் என்ன?
பிரிட்டன் நாடாளுமன்றம் கொண்டுவரும் சட்டங்களில் எழுதப்பட்டுள்ள சொற்களை எப்படி புரிந்துகொள்வது என்பதை ஆராய்ந்து சொல்வதே அந்நாட்டு நீதிமன்றங்களின் வேலை. அப்படி ஆராய்ந்தறிந்து சொல்லப்பட்ட பொருளை, நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளுக்கு எப்படி பொருத்துவது என்பதை ஆராய்ந்து தீர்ப்பு கொடுப்பதுமே நீதிமன்றங்களின் வேலை.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் எந்த வகையிலும் அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் மூக்கை நுழைக்காது. ஏனென்றால், எந்தவொரு வரையறைக்குள்ளும் அடக்கமுடியாத அளவுக்கான ‘வானளாவிய சட்டம் இயற்றும் அதிகாரத்தை’ அந்நாட்டு நாடாளுமன்றம் பெற்றிருக்கிறது. நாடாளுமன்றம் என்ன இயற்றுகிறதோ அதுதான் சட்டம்.
அவை எந்த நீதிநெறிகளோடும், கோட்பாடுகளுடனும் ஒத்திருக்க வேண்டியதில்லை. அவை எவற்றையும் மீறாமல் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவை செல்லுமா? செல்லாதா? என்று உரசிப்பார்க்கும் உரைகல் ஒன்று இல்லவே இல்லை. பிரிட்டனின் ‘இறைமை’ அந்த நாட்டின் நாடாளுமன்றத்திடம் உள்ளது.
அப்படியே இந்தியாவுக்கு வந்தால், நிலைமை முற்றிலும் வேறு. நம் நாடாளுமன்றம் இஷ்டத்துக்கு எந்தச் சட்டத்தையும் கொண்டு வந்துவிட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள சரத்துகளுக்கு உட்பட்டு மட்டுமே இந்திய நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்ற முடியும் என்பதைச் சரத்து 245(1) சொல்கிறது.
இந்திய அரசியலைமைப்பில் நம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் வகையிலான, எந்தவொரு சட்டத்தையும் நம் நாடாளுமன்றத்தால் கொண்டுவர முடியாது. குறிப்பிட்ட விவகாரங்களுக்கான சட்டத்தை மாநிலச் சட்டமன்றங்கள் மட்டுமே கொண்டுவர முடியும். அவற்றைச் சர்வசாதாரணமாக இந்திய நாடாளுமன்றத்தால் செய்யவே முடியாது.
எனவே, நம் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரம் என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஏனெனில் இந்திய நாடாளுமன்றத்தையே உருவாக்கியது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான். முன்னர் சொன்னதுபோல இந்தியாவின் ‘இறைமை’ மக்களிடம் உள்ளது. எனவே அவர்கள் கொடுத்த அதிகாரம் மூலம் பிறந்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம்தான் இந்தியாவில் எல்லாவற்றிற்கும் மேலானது. இந்தியாவில் மக்கள்தான் சர்வ வல்லமைமிக்கவர்கள்.
மேலும் எழுதிவைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் எளிதாக மாற்றங்கள் கொண்டுவர முடியாது. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரை, நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு என்று நீதிமன்றங்கள் சில பகுதிகளைப் பல்வேறு தீர்ப்புகளில் வரையறுத்துள்ளன. அத்தகு அடிப்படை கட்டமைப்பை, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருந்தாலும்கூட திருத்தி எழுதவே முடியாது.
இப்படியாகச் சட்டத்தின்படி, மக்கள் சர்வ வல்லமைப் பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்றால், அரசியலமைப்புச் சட்டம் எழுதி வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தே ஆகவேண்டும். இதுவே எழுதப்படாத அரசியலமைப்புச் சட்டம் எனில், நாடாளுமன்றம் நினைத்தால் நினைத்த நேரத்தில் ஒரு சாதாரணச் சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும்.
தற்பொழுது இங்கிலாந்தில்கூட அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிவைக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி, மக்களின் அடிப்படை உரிமைகளும் அதில் உறுதி செய்யப்படவேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
இங்கிலாந்தைப் போல நியூசிலாந்து, இஸ்ரேல் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே எழுதிவைக்கப்படாத அரசியலமைப்பு மூலம் செயல்படுகின்றன. பெரும்பாலும், நவீன அரசியலமைப்புச் சட்டங்கள் யாவும் எழுதிவைக்கப்பட்டவை. 1787ல் முதல்முறையாக ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’தான் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிவைக்க ஆரம்பித்தது.
இந்தியாவைப்போலவே அமெரிக்காவிலும் அரசியலமைப்புச் சட்டமே எல்லாவற்றுக்கும் மேலானது. அவர்களின் நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுதான் சட்டத்தை எழுதமுடியும். அமெரிக்காவுக்கு பிறகு கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிவைத்துக்கொள்ள ஆரம்பித்தன. இப்படி உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் அரசியலமைப்புச் சட்டங்களை எழுதிய பின்னரே இந்தியா தனக்கான அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியது.
ஆனால், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம்தான் உலகிலேயே மீக நீண்ட ஒன்று. இயற்றப்பட்டபோது 22 பாகங்களாக பிரிக்கப்பட்டு 395 சரத்துகள் (Articles) மற்றும் 8 பட்டியல்கள் (Schedules) இருந்தன. அதன்பின்னர், 1951 முதல் இந்நாள்வரையில், அரசியலமைப்புச் சட்டத்தில் 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் விளைவாக 20 சரத்துகள் நீக்கப்பட்டுள்ளன, 80க்கும் மேற்பட்ட சரத்துகள், 4 பட்டியல்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 25 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, 448 சரத்துகள் உள்ளன. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சரத்துகளையும் பட்டியல்களையும் எந்தவொரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டமும் கொண்டிருக்கவில்லை.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஒன்றிய அரசு, மாநில அரசு, பஞ்சாயத்துகள், நீதிமன்றங்கள் என அரசின் அனைத்து உறுப்புகளுடைய நிர்வாக அமைப்பும் எப்படி இருக்கவேண்டும் என்பதுவரை, தெள்ளத்தெளிவாக நம் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏனைய நவீன அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டிருக்கும் நாடுகளில், நிர்வாக அமைப்புகள் எப்படியிருக்க வேண்டும் என்று வரையறுக்கும் சட்டங்கள் சாதாரணச் சட்டங்களாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் இந்தியாவில்தான் அரசின் பல்வேறு நிர்வாக அமைப்புகள் பற்றியும் விரிவாக அரசியலமைப்பிலேயே எழுதப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன காரணத்தைத் தாண்டி, வரலாற்றுரீதியில் கவனிக்க வேண்டிய முக்கியமான நிகழ்வொன்றும் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக்குமுன், இந்தியா என்பது நூற்றுக்கும் மேற்பட்ட மன்னராட்சி நாடுகளாகப் பிரிந்துகிடந்த நிலப்பரப்பு.
சுருக்கமாக, இந்தியா பல நாடுகளை உள்ளடக்கிய ஓர் துணைக்கண்டம். ஆட்சி செய்தவற்கு ஏதுவாக, பிரிந்துகிடந்த நாடுகளை ஒரே குடையின்கீழ் அமைத்து பிரிட்டிஷ் ஆட்சி செய்தது. இந்தியாவை ஆள்வதற்கு பல்வேறு சட்டங்களை இயற்றியது பிரிட்டிஷ். காலத்திற்கு ஏற்றார்போல் அந்தச் சட்டங்களை பிரிட்டிஷார் மாற்றிக்கொண்டே வந்தனர்.
பல வரலாற்றுக் காரணங்களால், பிரிட்டிஷ் கொண்டுவந்த இந்திய அரசாங்கச்சட்டம்,1935 மிக விரிவானதாக அமைந்துவிட்டது (அந்த வரலாற்றுக் காரணங்களை விரிவாக பின்னர் காண்போம்). இந்தச் சட்டத்திலிருந்து பல சரத்துகளை அப்படியே நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துவிட்டனர்.
‘மொழிவடிவிலும் சரி சட்டத்தன்மையிலும் சரி இந்திய அரசாங்கச் சட்டம்,1935ல் இருந்து அப்படியே காப்பியடிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார் பேராசிரியர் சீனிவாசன்.
இந்திய அரசாங்கச் சட்டம்,1935 கொண்டுவரப்பட்டபோது பாகிஸ்தான், ஒன்றுபட்ட இந்தியாவின் அங்கமாக இருந்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசால் கொண்டுவரப்பட்ட இந்திய அரசாங்கச்சட்டத்தின் தாக்கம் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் நவீன அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தும் பல்வேறு அம்சங்களை கடன்வாங்கியே நம் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டிருக்கிறது.
மொத்தமாகவே நம் அரசியலமைப்பு கடன்வாங்கி எழுதப்பட்ட ஒன்றா? எந்தெந்த நாடுகளிடமிருந்து என்னென்ன அம்சங்கள் கடன்வாங்கப்பட்டுள்ளன? இவற்றை அடுத்து வரும் பகுதியில் பார்க்க இருக்கிறோம்.
(தொடரும்…)
______________
மேற்கோள் நூல்கள்
1. கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி (2nd ed.2017)
2. முரசொலி மாறன், மாநில சுயாட்சி (3rd ed.2017)
3. M.P.Jain, Indian Constitutional Law (8th ed.2018)
4. V.N.Shukla, Constitution Of India (14th ed.2022)
5. Krishan Keshav, Constitutional Law – I