Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!

இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!

அடிப்படை உரிமைகள்

அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழு (மாதிரி அரசியலமைப்புச் சட்டத்தை எழுத நியமிக்கப்பட்டக் குழு) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு மூன்று முக்கிய மூலங்களை அடிப்படையாக எடுத்துக்கொண்டது. அவை,

i) இந்திய அரசாங்கச் சட்டம்,1935.
ii) உலகில் உள்ள பிற அரசியலமைப்புச் சட்டங்களில் உள்ள பல்வேறு சிறந்த அம்சங்கள்.
iii) அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபை நிறைவேற்றிய குறிக்கோள் தீர்மானங்கள்

இவற்றில் இருந்துதான் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு சரத்துகள், பகுதிகள் வடிவமைக்கப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, சோவியத் ஒன்றியம், ஜெர்மனி, ஃபிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் உள்ள மிக முக்கியமான அம்சங்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து, அவற்றை நம் அரசியலமைப்புச் சட்டத்தில் வரைவுக் குழுவினர் சேர்த்துள்ளனர்.

இது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இதனால், அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர், மற்ற நாட்டு அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து கடன் வாங்குவது குறித்துக் கூறியது என்ன என்பதைப் பார்ப்பது அவசியம். அவர் கூறியதாவது:

‘உலக வரலாற்றில் இந்த நொடியில் இயற்றப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் புதிதாக ஏதேனும் இருக்க முடியுமா என்று நான் கேட்க விரும்புகிறேன். உலகின் முதல் அரசியலமைப்புச் சட்டம் எழுதிவைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தங்களது அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிவைக்க ஆரம்பித்துவிட்டன. இவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால், இதுவரை எழுதிவைக்கப்பட்ட அனைத்து அரசியலமைப்புச் சட்டங்களிலும் முக்கியமான சட்டப்பிரிவுகளெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இப்பொழுது எழுதப்படும் அரசியலமைப்புச் சட்டம் ஒன்றில், அந்தந்த நாட்டுக்கு ஏற்றாற்போல சில மாற்றங்கள் செய்வது, ஏற்கனவே இருக்கும் குறைபாடுகளை நீக்குவது போன்றவற்றை மட்டுமே நாம் புதிதாக செய்துவிடமுடியும்.’

அடிப்படை உரிமைகள் என்பவை, நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியாக வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கான அடிப்படை உரிமைகள், மனிதன் பிறக்கும்போதே அவனுடன் பிறந்த ஒன்று என்பதாக, சட்டம் சார்ந்து பல தத்துவங்களை முன்மொழிந்த வல்லுநர்கள் கூறுவார்கள்.

எனவே, அடிப்படை உரிமைகள் என்பவை அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டதால் பிறந்தவை அல்ல, மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தால் கொடுக்கப்பட்ட கொடை போன்றதல்ல. அவை ஒவ்வோரு மனிதனுடனேயே பிறந்த ஒன்று. அடிப்படை உரிமைகளை அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதுவதன் மூலம் அவை மக்களுக்குச் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படுகின்றன.

எடுத்துக்காட்டு: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 19(1)(a), மக்களுக்கான பேச்சுச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும், அவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது. இவற்றைப் பறிக்கும் விதமாக மாநில அரசும், மத்திய அரசும் எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவர இயலாது. அப்படிக் கொண்டு வரப்பட்டால், அவற்றைச் செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. நம் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 13 மூலம் நீதிமன்றத்தின் இப்படியான அதிகாரம் உறுதி செய்யப்படுகிறது. இது அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் பொருந்தும்.

இப்படி, அடிப்படை உரிமைகளை அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதிவைக்கும் முறையை, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து கடன் வாங்கிக் கொண்டோம். ஆனால், அவற்றை அப்படியே நாம் தழுவிக்கொள்ளவில்லை. நம் நாட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அடிப்படை உரிமைகளை மாற்றி வடிவமைத்த பின்பே, அவற்றை நாம் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துக்கொண்டோம்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்புச் சட்டம், ஆயுதங்கள் வைத்திருப்பது மக்களின் அடிப்படை உரிமை என அங்கீகரித்து, அவ்வுரிமையை உறுதி செய்கிறது. ஆனால், இந்தியா அதனை நம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை என அங்கீகரிக்கவில்லை.

மற்றொரு அம்சம், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவற்றுக்கான கட்டுப்பாடுகளும் எல்லைகளும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு: மக்களுக்கான பேச்சுரிமை, கருத்துரிமை, அவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றைச் சரத்து 19(1)(a) உறுதி செய்கிறது. ஆனால், அடுத்ததாக வரும் சரத்து 19(2)ல் கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றைக்கொண்டு மக்கள் செய்யும் செயல்கள், நம் நாட்டின் பொது அமைதியைக் கெடுக்கும் விதமாக அமைந்து விடக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் 7 கட்டுப்பாடுகளைச் சரத்து 19(2) விதிக்கிறது.

அந்த விதிகளை மீறி நாம் நம் பேச்சுரிமையையும் கருத்துரிமையையும் பயன்படுத்த முடியாது. அப்படி நாம் மீறினால், அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய காரணத்துக்காக நீதிமன்றம் நம்மைத் தண்டிக்கும்.

ஆனால், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் என்பனவற்றுக்கு எந்த எல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டம் விதிக்கவில்லை. அவர்களின் அடிப்படை உரிமைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் வேலையை நீதிமன்றங்களிடம் விட்டுவிடுகிறது. இப்படியாக, ஐக்கிய அமெரிக்க நாடுகளிடமிருந்து நாம் அடிப்படை உரிமைகள் என்ற பகுதியைத் தழுவிக்கொண்டாலும், இந்திய நடைமுறைக்கு ஏற்றவாறு அதனை மாற்றியமைத்தே நம் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துள்ளோம்.

அடுத்ததாக, அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்பவை நம் அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக வழங்கப்பட்டுள்ளது. அரசு ஒரு சட்டத்தை எழுதினால் அது மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதை இந்தப் பகுதி வலியுறுத்துகிறது. என்னென்ன வகையில் அது மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதை இந்தப் பகுதியில் உள்ள சரத்துகள் விளக்குகின்றன. அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் நலனுக்காக சட்டம் இயற்றப்பட வேண்டும். இது அரசின் கடமை என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஸ்பெயின் நாடுதான் முதலில் இப்படிப்பட்ட பகுதியை (அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்) அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதிவைக்க ஆரம்பித்தது. அவர்களிடமிருந்து அயர்லாந்து கடன் வாங்கியது. அயர்லாந்து நாட்டிடமிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் கடன் வாங்கிக் கொண்டது. ஆனால், அவற்றையும் நாம் அப்படியே பயன்படுத்தவில்லை. இந்திய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றி, இன்னும் சில வழிகாட்டு நெறிமுறைகளை இயற்றி, அவற்றையும் சேர்த்துள்ளோம்.

வழிகாட்டு நெறிமுறைகள் என்பன ஓர் இலக்கு. அவை ஓர் அறிவுரை. இவ்வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பின்பற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது அந்தந்த அரசுகளின் விருப்பம். அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, அரசு பின்பற்றாமல் விட்டுவிட்டால், நீதிமன்றம் எந்தக் கேள்வியும் கேட்காது. ஆனால் இந்திய குடிமகனுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமையை அரசு மீறமுடியாது. அப்படி மீறினால் நீதிமன்றம் குறுக்கே வந்து உரிய நிவாரணத்தைக் குடிமகனுக்கு வழங்கும்.

இப்படியான உயரிய பண்புகள் கொண்ட தத்துவம் சார்ந்த பகுதிகளை வெளிநாட்டு அரசியலமைப்புகளில் இருந்து கடன் வாங்கியது நம் இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு. ஆனால், இவற்றை வெளிநாட்டு அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து கடன் வாங்கியதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் விமர்சிக்கப்படவில்லை. இந்திய அரசாங்கச் சட்டம்,1935ல் இருந்து பெரும் பகுதியைக் கடன் வாங்கியற்காகவே கடும் விமர்சனத்துக்கு ஆளாகியது வரைவுக்குழு.

இதுகுறித்து சட்ட வல்லுநர் சர் ஐவர் ஜென்னிங்ஸ், ‘இந்திய அரசாங்கச் சட்டம்,1935ல் இருந்து வரிக்கு வரி வார்த்தை மாறாமல் அப்படியே கடன் வாங்கப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெரும்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மாதிரியை, அதற்கான நிர்ணய சபையில் முன்வைத்தபோதே, இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மிகக்கடுமையாக விமர்சித்தவர் பஞ்சாப்ராவ் தேஷ்முக். இவர் 1952ஆம் ஆண்டு பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர்.

அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையிலேயே தனது விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளார். அவர், ‘வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அம்சத்தை மட்டும் ‘இந்திய அரசாங்கச் சட்டம்,1935’ல் சேர்த்துவிட்டு, அதை அப்படியே இந்திய அரசியலமைப்புச் சட்டமாக நமக்கு வழங்கியிருக்கிறார்கள்’ என்றார்.

இந்திய அரசாங்கச் சட்டம்,1935இல் இருந்து பெரும் பகுதியைக் கடன் வாங்கியதில் இரண்டு பிரச்சனைகள் முக்கியமானவை. அவை என்ன என்பதைப் பார்த்தால்தான் மேற்குறிப்பிட்ட கடுமையான விமர்சனங்கள் ஏன் எழுந்தன என்பது நமக்குப் புரியும்.

1935ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்து அவர்கள் கடன் வாங்கியது என்னவென்றால், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த சட்டப் பிரிவுகள்.

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் என்னென்ன? அதில், மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது? மாநில அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது? மாநில அரசு எந்தெந்த விவகாரங்களில் சட்டம் இயற்றலாம்? மத்திய அரசு எந்தெந்த விவகாரங்களில் சட்டம் இயற்றலாம்? ஒரே விவகாரத்துக்கு மாநில அரசும் மத்திய அரசும் சட்டம் கொண்டு வந்தால், எது நிலைக்கும்? இப்படி இரு அரசுகளுக்கும் என்னென்ன பொறுப்புகள், என்னென்ன அதிகாரங்கள், என்னென்ன வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதுதான் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் பற்றிய சட்டம். அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தப் பகுதியைப் பற்றி 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் என்ன இருந்ததோ, அதனை அப்படியே நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துவிட்டனர்.

‘மேற்கு வங்காள அரசு vs இந்திய ஒன்றியம்’ என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1935ஆம் ஆண்டுச் சட்டத்தை அஸ்திவாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. பல முக்கிய விவகாரங்களில் அடிப்படை மாற்றப்படவேயில்லை. ஏராளமான விதிகள் இதற்குமுன் உள்ள சட்டத்திலிருந்து வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இடம் மாற்றி நம் அரசியலமைப்புச் சட்டத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன’ என்று குறிப்பிட்டது.

மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்த சட்டப்பிரிவுகளை, 1935ஆம் ஆண்டுச் சட்டத்திலிருந்து கடன்வாங்கியதில் என்ன பிரச்சனை என்பதைப் புரிந்துகொள்ள, கூட்டாட்சி என்றால் என்னவென்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாக இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்துப் பல்வேறு அரசியலமைப்பு நிபுணர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் அடுத்து வரும் பகுதியில் காண்போம்.

(தொடரும்…)

 

______________

மேற்கோள் நூல்கள்
1. Granville Austin, The Indian Constitution: Cornerstone Of A Nation (27th Ed.2016)
2. Krishan Keshav, Constitutional Law – I
3. Constitutional Assembly Debates, Vol. Vii
4. முரசொலி மாறன், மாநில சுயாட்சி (3rd ed.2017)
5. R.C. Agarwal, DR. Mahesh Bhatnagar, Constitutional Development And National Movement Of India (1ST ED.1994)
6. M.V.Pylee, India’s Constitution (16th ed.2016)
7. Ireland’s Constitution Of 1937
8. V.N.Shukla, Constitution Of India (14th ed.2022)

பகிர:
வாஞ்சிநாதன் சித்ரா

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *