கிட்டத்தட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம்.
இதில், பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவை ஆள்வதற்காகக் கொண்டுவந்த 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்திலிருந்தும் பல்வேறு சரத்துகள் கடன் வாங்கப்பட்டிருந்தன. அதில் மிகப் பெரும்பான்மையானவை, கூட்டாட்சிக் குறித்த சரத்துகள். பிற அரசியலமைப்புச் சட்டங்களிலுருந்து கடன் வாங்கப்பட்ட பகுதிகளைக் காட்டிலும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது கூட்டாட்சிக் குறித்து 1935ஆம் ஆண்டுச் சட்டத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட சரத்துகள்தான்.
கூட்டாட்சி குறித்தான சரத்துகள் ஏன் அவ்வளவு முக்கியமானவை என்பதைப் புரிந்துகொள்ள, கூட்டாட்சி என்றால் என்ன என்பது குறித்துத் தெளிவுபெற வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் ஒற்றையாட்சிக்கும் கூட்டாட்சிக்குமான வேறுபாட்டையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆட்சி அமைப்புகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஒற்றையாட்சி முறை. மற்றொன்று, கூட்டாட்சி முறை.
ஒன்று + ஆட்சி = ‘ஒற்றையாட்சி’. ஒரு நாட்டில் ஒற்றையாட்சி நடக்கிறதென்றால், ஒரே ஓர் அரசு அந்த நாட்டை முழுவதாக ஆட்சிசெய்கிறதென்று பொருள். அந்நாட்டு மக்களை ஆட்சி செய்வது ஒரே ஓர் அரசு. அதுதான் மத்திய அரசு. அந்த ஒரே ஒரு மத்திய அரசிடம்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். மத்திய அரசுக்குக் கீழே இருப்பவை ஊராட்சிகளும், நகராட்சிகளும் மட்டும்தான். இவை மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டவை. ஏனென்றால், அவற்றை உருவாக்கியதே மத்திய அரசுதான்.
எடுத்துக்காட்டாக பிரிட்டன், இலங்கை ஆகிய நாடுகளைச் சொல்லலாம்.
அடுத்தாக, கூட்டாட்சி பற்றிப் பார்ப்போம். கூட்டு + ஆட்சி = ‘கூட்டாட்சி’. ஒரு நாட்டில் கூட்டாட்சி நடக்கிறதென்றால், அங்கு இருவேறு விதமான அரசுகள் உண்டு என்று அர்த்தம். ஒன்று, மத்திய அரசு. மற்றொன்று, மாநில அரசு. அந்நாட்டு மக்களை ஒரே நேரத்தில் இருவேறு அரசுகளும் ஆட்சி செய்யும்.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில், தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை மாநில அளவில் ஆட்சி செய்வது தமிழ்நாடு மாநில அரசு. அதே நேரத்தில் இந்திய அளவில் தமிழ்நாட்டு மக்களை ஆள்வது இந்திய மத்திய அரசு.
மகாராஷ்டிராவில் இருக்கும் மக்களை மாநில அளவில் ஆட்சி செய்வது மகாராஷ்டிரா மாநில அரசு. இந்திய அளவில் மகாராஷ்டிரா மக்களை ஆள்வது இந்திய மத்திய அரசு.
அதாவது, ஒவ்வொரு மாநிலத்தையும் ஆள்வதற்கு அந்த மாநில மக்கள் மாநிலச் சட்டமன்ற தேர்தல் மூலம் ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பார்கள். அதுதான் மாநில அரசு. அதே மக்கள், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆள்வதற்கு ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பார்கள். அதுதான் மத்திய அரசு.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களிலும் 28 மாநில அரசுகள் இருக்கின்றன. ஆகவே, 28 மாநிலச் சட்டமன்றங்கள் உள்ளன. மாநில அரசு, அந்தந்த மாநில மக்களை மட்டுமே ஆளும். அது இயற்றும் சட்டங்கள் அந்தந்த மாநில மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற மாநில மக்களுக்கு அவைப் பொருந்தாது. ஆனால், மத்திய அரசு, ஒரு சட்டம் இயற்றினால் அது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பொருந்தும்.
மாநில அரசுக்கு என்ன அதிகாரம், மத்திய அரசுக்கு என்ன அதிகாரம், எந்தெந்த விவகாரங்களில் அவை சட்டம் இயற்றலாம் போன்றவை அரசியலமைப்புச் சட்டத்திலேயே எழுதிவைக்கப்பட்டிருக்கும்.
ஒற்றையாட்சி முறையிலும் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளன. ஆனால், அவை மத்திய அரசுக்குக் கட்டப்பட்டவை. கூட்டாட்சி முறையில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள், மத்திய அரசுக்குக் கட்டப்பட்ட ஒன்று அல்ல. இந்த அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டோமானால், ஒற்றையாட்சிக்கும், கூட்டாட்சிக்குமான வேறுபாட்டை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.
ஒற்றையாட்சியைப் பொறுத்தவரை நகராட்சிகளையும் ஊராட்சிகளையும் உருவாக்குவது அந்த நாட்டின் மத்திய அரசு. நிர்வாகம் செய்வதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தன்னிடம் உள்ள அதிகாரங்களை அவற்றுக்கு மத்திய அரசு வெறும் ஒரு செயலாக்க ஆணை மூலம் கொடுக்கிறது.
மத்திய அரசு நினைத்தால் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் கொடுத்திருக்கும் அதிகாரத்தை அதே செயலாக்க ஆணை மூலம் அதிகரிக்கவும் செய்யலாம், குறைக்கவும் செய்யலாம். அவ்வளவு ஏன், நகராட்சிகளும் வேண்டாம், ஊராட்சிகளும் வேண்டாம் என அவற்றை ஒழித்துவிட்டு மத்திய அரசே அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்சி செய்துகொள்ளலாம்.
நடைமுறையில் அது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும், ஒற்றையாட்சியில் உள்ள மத்திய அரசு நினைத்தால் அதனையும் செய்யலாம். ஏனென்றால் அந்நகராட்சிகளும் ஊராட்சிகளும் மத்திய அரசின் செயலாக்க ஆணை மூலம் பிறந்தவை.
இதுவே கூட்டாட்சி என்று வருகிறபோது, மத்திய அரசுக்கு அடுத்தபடியாக உள்ள மாநில அரசுகள், செயலாக்க ஆணை மூலம் பிறந்தவை அல்ல. மத்திய அரசை உருவாக்கிய அதே அரசியலமைப்புச் சட்டம்தான் மாநில அரசையும் உருவாக்கியது. எனவே அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் பிறந்த மாநில அரசுகளை, மத்திய அரசால் ஒழித்துக்கட்ட முடியாது.
மாநில அரசின் அதிகாரங்களை, தன் இஷ்டம்போல் மத்திய அரசு கூட்டவோ குறைக்கவோ முடியாது. அப்படி மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்கவேண்டுமெனில், அரசியலமைப்புச் சட்டத்தையே திருத்தி எழுதவேண்டும்.
ஆகவே, அரசியலமைப்பில் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளதுபோல, மத்திய அரசும், 28 மாநில அரசுகளும் கூட்டாக ஆட்சி செய்வது கூட்டாட்சி. இதன்படி ஒரு மாநிலத்தில் வசிப்பவர் ஒரே நேரத்தில் இரு அரசுகளுக்கும் கட்டுப்பட்டவராகிறார்.
ஆனால், பல்வேறு அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்கள் இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடு என்று சொல்லவே மாட்டார்கள். அரைகுறைக் கூட்டாட்சி நாடு என்றே சட்ட வல்லுநர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஏன்?
இதற்கு, கூட்டாட்சி நாட்டுக்கான சரியான வரையறையாகச் சட்ட வல்லுநர்கள் எதனைக் கருதுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தியாவை ஏன் ‘அரைக்குறைக் கூட்டாட்சி நாடு’ என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது புரியும்.
ஒரு கூட்டாட்சி நாடு உருவாகவேண்டுமென்றால்,
i) இரு அரசுகள் இருக்கவேண்டும். அதாவது, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில அரசு. தேசிய அளவில் பொதுவான ஒரு மத்திய அரசு.
ii) அரசியலமைப்புச் சட்டத்தில், மத்திய அரசுக்கு மட்டுமே உரிய அதிகாரங்கள் என்னென்ன என்றும், மாநில அரசுகளுக்கு மட்டுமே உரிய அதிகாரங்கள் என்னென்ன என்பதையும் தனித்தனியே எழுதிவைத்திருத்தல் வேண்டும்.
முறையான கூட்டாட்சியாக அந்நாடு இருக்கவேண்டுமெனில்,
i) மாநில அரசு தனக்கு உட்பட்ட அதிகாரங்களைப் பொறுத்தவரை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும்படி இருத்தல் வேண்டும்.
ii) அனைத்து மாநில அரசுகளுக்கும் பொதுவாக உள்ள விவகாரங்களுக்கான அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கவேண்டும். தனக்கு உட்பட்ட இந்த அதிகாரங்களில் எந்தவொரு மாநில அரசுகளின் தலையீடுகளும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும்படியான மத்திய அரசு இருக்கவேண்டும்.
iii) மத்திய அரசு, மாநில அரசு என அதிகாரங்கள் இரு பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டதுபோக, மீதமுள்ள அதிகாரங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை மாநிலங்கள் கையில் கொடுத்துவிடவேண்டும்.
ஆனால் இந்தியா இப்படிப்பட்ட கூட்டாட்சி நாடாக இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், மாநிலங்களின் அதிகாரங்களில் ஊடுறுவுவதற்கு மத்திய அரசுக்கு இடமளிக்கிறது.
மேலும் இந்தியாவில், எந்த அரசியலமைப்புச் சட்டத்திலும் இல்லாத வகையில் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் என்பன மட்டுமின்றி பொதுப்பட்டியல் என்றொன்று உண்டு. பொதுப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்களில் மாநில அரசும் சட்டம் இயற்றலாம், மத்திய அரசும் சட்டம் இயற்றலாம். ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் ஒரே விவகாரம் குறித்து நேரெதிரான இரு சட்டங்கள் இயற்றினால், மத்திய அரசு இயற்றிய சட்டம்தான் செல்லும். மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லாதது ஆகிவிடும்.
மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் ஆகியவற்றில் குறிப்பிட்டதுபோக மீதமுள்ள அதிகாரங்கள் இந்தியாவில் மத்திய அரசிடம்தான் உள்ளன. அவ்வளவு ஏன், மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும்பட்சத்தில், அது ஒரு மாநிலத்தையே இல்லாமல் ஆக்கி, அதனை வேறு ஒரு மாநிலத்துடன் இணைத்துவிடலாம்.
இதுவே அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அங்கே மீதமுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகள் வசம்தான் உள்ளன. அமெரிக்காவில் உள்ள மாநிலங்களின் சம்மதம் இல்லாமல் அவர்களின் எல்லைகளைக் குறைக்கவோ, கூட்டவோ முடியாது. ஏனென்றால், அமெரிக்காவில் ஒரு மாநிலத்தின் குடிமகன் என்றொரு அந்தஸ்து உண்டு. ஆனால் இந்தியாவில், இந்தியக் குடிமகன் என்கிற ஒரே ஒரு அந்தஸ்து மட்டுமே உண்டு.
இப்படி இந்தியா பல்வேறு வகைகளில், ஒற்றையாட்சிக்கான அம்சங்களை அதிகமாக வைத்திருக்கிறது. இதனால்தான் கே.சி.வியர் என்கிற சட்ட வல்லுநர், இந்தியாவை ‘Quasi Federal State’ என்று அழைக்கிறார். தோற்றத்தில் ஒன்றைப்போலக் காட்சியளிப்பினும் உண்மையில் அப்படி இல்லாத ஒன்றைத்தான் ஆங்கிலத்தில் ‘Quasi’ என்பர்.
இந்தியாவை ‘Quasi Federal’ என்று சொல்வதன்மூலம், பார்ப்பதற்குக் கூட்டாட்சிபோல் இந்தியா காட்சியளிக்கிறது, ஆனால், உண்மையில் கூட்டாட்சியாகச் செயல்படாத நாடாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல என்று சொல்லும் கே.சி.வியர், இந்தியாவைச் சில கூட்டாட்சி அம்சங்கள் கொண்ட ஒற்றையாட்சி நாடு என்றே அழைக்கிறார்.
இந்தியச் சட்டமேதை துர்காதாஸ் பாசு, ‘இந்தியா முழுமையாக ஒரு கூட்டாட்சி நாடுமல்ல, ஒற்றையாட்சி நாடுமல்ல; அது இரண்டும் கலந்த கலவை’ என்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர், கூட்டாட்சி முறைக் குறித்துக் கூறுவது, ‘சூழ்நிலைக்கும் நேரத்துக்கும் ஏற்றவாறு இந்தியா கூட்டாட்சி நாடாகவும் ஒற்றையாட்சி நாடாகவும் இருக்கும். சாதாரண நேரங்களில் கூட்டாட்சி நாடாகவும் போர் சமயங்களில் ஒற்றையாட்சி நாடாகவும் செயல்படும்’ என்றார்.
பலம்வாய்ந்த மத்திய அரசுக் கொண்ட கூட்டாட்சி நாடாக இருக்கிறது இந்தியா. ஒரு ஒற்றையாட்சி நாட்டில் மத்திய அரசுக்கு எப்பேர்ப்பட்ட அசுர பலம் இருக்குமோ, அப்படிப்பட்ட பல அம்சங்களை இந்தியா கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதுதான் 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச்சட்டம்.
சென்ற பகுதியில் பார்த்ததுபோல, இந்தியாவைக் கூட்டாட்சி நாடாக ஆக்கும் அரசியலமைப்புச்சட்ட சரத்துகள், 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச்சட்டத்திலிருந்து கடன் பெற்றவை. ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி குறித்தான சரத்துகள்தான் அவற்றின் ஜீவநாடி.
கூட்டாட்சி குறித்தான சரத்துகளை, பிரிட்டிஷ் பேரரசுக் கொண்டுவந்த சட்டத்திலிருந்து அப்படியே சொல்மாறாமல் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துவிட்டதுதான் மிகப்பெரிய பிரச்னை.
இந்தியாவைச் சுரண்டுவதற்காகப் பிரிட்டன் கொண்டுவந்த 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம், இந்தியாவில் தலைகீழ் முறையில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கியது.
தலைகீழ் முறையில் கூட்டாட்சியை உருவாக்குவது என்றால் என்ன? அப்படி உருவாக்க வேண்டிய நிலைமை ஏன் வந்தது? என்பதை அடுத்தப் பகுதியில் காண்போம்.
(தொடரும்…)
______________
மேற்கோள் நூல்கள்
1. Granville Austin, The Indian Constitution: Cornerstone Of A Nation (27th ed.2016)
2. கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி (2nd ed.2017)
3. Krishan Keshav, Constitutional Law – I
4. A.V.Dicey, Introduction To The Law Of Constitution (1885)
5. முரசொலி மாறன், மாநில சுயாட்சி (3rd ed.2017)
6. R.C. Agarwal, Dr. Mahesh Bhatnagar, Constitutional Development And National Movement Of India (1st ed.1994)
7. H.M. Seervai, Constitutional Law Of India (4th ed.2021)
8. V.N.Shukla, Constitution Of India (14th ed.2022)