தலைகீழ் முறையில் உருவாகும் கூட்டாட்சி என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு, முதலில் கூட்டாட்சிக்கு இலக்கணமாகக் கருதப்படும் அமெரிக்காவின் கூட்டாட்சி எப்படி அமைந்தது என்பதைப் பார்க்கலாம்.
நவீன காலத்தில் உருவாகிய முதல் கூட்டாட்சி நாடு என்றால் அது ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’தான். இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளை வெவ்வேறு காலக்கட்டங்களில் கைப்பற்றிய பிரிட்டிஷ் பேரரசு, காலப்போக்கில் நிர்வாக வசதிக்காக ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டத்தையும் ஒரே நாடாக்கி ஆட்சி செய்தது. ஆனால் அமெரிக்காவை, பிரிட்டிஷ் அரசு ஒரே நாடாக வைத்து ஆட்சி செய்யவில்லை.
13 குடியேற்ற நாடுகளை (Colonies) அங்கே உருவாக்கி ஆட்சி செய்தது. இத்தனைக்கும் 13 நாடுகளிலும் வாழும் மக்கள் அனைவரும் ஆங்கில மொழி பேசுபவர்கள்தான். பிரிட்டிஷ் பேரரசு அமல்படுத்தும் வரிச்சுமை அதிகரித்ததால், அதனை எதிர்க்க 13 நாடுகளின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி, ‘துணைக்கண்டத்துப் பிரதிநிதித்துவச் சபை’ என்றொரு அமைப்பை உருவாக்கினார்கள். அவ்வமைப்பு, பிரிட்டிஷ்மீது போர் தொடுக்க முடிவு செய்தது.
‘அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளாகிய நாங்கள், இந்தக் காலனிகள் விடுதலை பெற்ற சுதந்திர அரசுகள் என்றும், அவற்றுக்கு அந்த உரிமை இருப்பதால் சுதந்திர அரசாக ஆகவேண்டும் என்றும் பிரகடனப்படுத்துகிறோம்’ என்கிற உறுதிமொழியை அவர்கள் எடுத்த நாள் ஜூலை 4, 1776. இதன்மூலம் அந்த 13 காலனிகளும் 13 சுதந்திர நாடுகளாயின. அப்போது நடந்த சுதந்திரப்போரில் பிரிட்டிஷ் தோற்கடிக்கப்பட்டதால் அந்த 13 அரசுகளின் சுதந்திரமும் உறுதிசெய்யப்பட்டது.
இந்த 13 அரசுகளுக்கும் பொதுப்பிரச்சனை என்று வருகிறபொழுது, அதுகுறித்து விவாதிக்கத் துணைக்கண்டத்துப் பிரதிநிதித்துவச் சபை கூடியது. அந்த 13 அரசுகளுக்கு இடையே எல்லைப்பிரச்னைகள் போன்ற வேறேதும் பிரச்சனைகள் தோன்றினால் அதனைத் தீர்த்து வைக்க காங்கிரஸ் கூடியது. ஆனால், அது எடுக்கும் முடிவை 13 அரசுகளும் தாங்களாக விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டால் மட்டுமே உண்டு. காங்கிரஸ் தன் முடிவைச் சொல்லலாம். ஆனால் அவற்றை அமலாக்கம் செய்வதற்கான அதிகாரம் அவர்களிடம் இல்லை.
ஏனென்றால் அந்தக் காங்கிரஸ் வெறும் பிரதிநிதிகளின் சபை மட்டுமே. ஒரு மத்திய அரசைப் போன்று மக்களோடு நேரடித்தொடர்பில் இருக்கும் அமைப்பல்ல. 13 அரசுகள் இடையே பிரச்னை என்று வருகிறபொழுது, அதன் பிரதிநிதிகள் ஒன்றுகூடி விவாதித்து முடிவுகளை எடுப்பார்கள். அவ்வளவுதான்!
இதுதவிர, அந்த 13 அரசுகளின் கீழுள்ள மக்களின் மீது வரிவிதிக்கும் அதிகாரமோ, அவர்களுக்கான சட்டம் இயற்றும் அதிகாரமோ காங்கிரஸுக்குக் கிடையாது. இந்த மாதிரியான அதிகாரங்கள் இருந்தால்தான் மக்களோடு நேரடித்தொடர்பில் ஒரு அரசு இருக்கமுடியும். அதுதான் மத்திய அரசாகச் செயல்பட முடியும்.
குடியரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டன் 1786இல் இவ்வாறு கூறினார், ‘மாநில அரசுகளில் அந்தந்த அரசாங்கத்தின் அதிகாரம் எப்படிப் பயனுள்ள வகையில் பிரயோகிக்கப்படுகிறதோ, அதைப்போல நாடு முழுவதும் (பதின்மூன்று அரசுகளிலும்) ஊடுருவிச் செல்லக் கூடிய வகையில் அதிகாரம் எங்காவது ஒரு இடத்தில் வைக்கப்படாவிட்டால் நாம் ஒரு நாடாக வாழமுடியும் என்று நான் நினைக்கவில்லை’ என்றார். இந்தச் சமயத்தில் மீண்டும் பிரிட்டனுடன் போர் நடப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகின.
அதனால், 1787இல் அன்னாபொலிஸ் நகரில், 13 அரசுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, காங்கிரஸ் அமைப்புக்கு அதிகாரங்களைக் கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி, காங்கிரஸ் வரி விதித்து வருவாய் பெறலாம், கடன் வாங்கலாம், வணிகத்தை ஒழுங்குபடுத்தலாம், இராணுவத்தை அமைத்து அதை இயங்கலாம் என
நான்கு விஷயங்கள் தொடர்பாகச் சட்டம் இயற்றும் அதிகாரம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது.
மேற்கூறியவை ஏற்கெனவே 13 அரசுகளிடமும் தனித்தனியே இருந்த அதிகாரங்கள்தான். இந்த நான்கு அதிகாரங்களும் 13 அரசுகளையும் பொதுவாகப் பாதிக்கும் விஷயங்கள் என்பதால், மாநில அரசுகள் இவற்றை மத்திய அரசிடம் ஒப்படைத்தன. அதாவது மாநிலங்கள், தங்களிடம் உள்ள அதிகாரத்தில் சிலவற்றை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்ததன் மூலம், காங்கிரஸ் மத்திய அரசாக உருவெடுத்தது. இவை அன்றி, ஒவ்வொரு மாநிலத்தையும் பாதிக்கும் விஷயங்கள் குறித்தான சட்டங்களை அந்தந்த மாநிலங்களே இயற்றிக்கொள்ளும்.
முன்னர் 1776இல் ‘அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளாகிய நாங்கள்’ என்று தொடங்கிய உறுதிமொழி, 1787ஆம் ஆண்டு நடைபெற்ற அன்னாபொலிஸ் மாநாட்டில், ‘ஐக்கிய நாடுகளின் மக்களாகிய நாங்கள்’ என்று தொடங்கியது.
மத்திய அரசுக்கு உட்பட்ட அதிகாரங்களில் அது சுதந்திரமானதாகவும், மாநில அரசுகளுக்கு உட்பட்ட அதிகாரங்களில் அவை சுதந்திரமானதாகவும் இயங்கும். மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றுக்கொன்று கட்டுப்படாமல் சுதந்திரமாக இயங்குபவை. இதுதான் கூட்டாட்சி.
இதுவே மேற்சொன்ன நான்கு அதிகாரங்களும் இல்லாத நிலையில், காங்கிரஸ் வெறும் ஆலோசனை வழங்கும் சபையாக மட்டுமே இருந்தது. காங்கிரஸ் கூறுவதை 13 அரசுகளும் கேட்கவேண்டுமென்றால் அது அந்தந்த அரசுகளின் கையில் மட்டுமே இருந்தது. பொது அமைப்பான காங்கிரஸ், மாநில அரசுகளை நம்பியே இருக்கவேண்டும். இந்த நடைமுறை ‘கான்ஃபெடரேசன்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், மாநிலங்கள் தங்களிடம் இருந்த அதிகாரங்களை ஒரு பொது அமைப்புக்கு (காங்கிரஸுக்கு) விட்டுக்கொடுப்பதன் மூலம் மத்திய அரசு உருவாக்கப்பட்டு, கூட்டாட்சி அமைகிறது. இதுதான் கூட்டாட்சி அமையும் முறை.
ஆனால், இந்தியாவில் அமைந்த கூட்டாட்சி, இதற்கு நேர்மாறாக ‘தலைகீழ்’ முறையில் அமைந்த ஒன்று. அதாவது, மத்திய அரசு தன்னிடம் உள்ள அதிகாரங்களில் இருந்து சிலவற்றை மாகாணங்களுக்கு விட்டுக்கொடுத்ததன் மூலம் அவை மாநில அரசுகளாக அதிகாரம் பெற்றுக் கூட்டாட்சி அமைப்பு உருவாகிற்று.
இப்படித் தலைகீழாகக் கூட்டாட்சி உருவாக வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏன் ஏற்பட்டது என்பதனைப் புரிந்துகொள்ள நாம் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்குச் செல்லவேண்டியது அவசியம். (இதன் வரலாற்றை அடுத்தடுத்து வரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம்). இப்போதைக்குத் தலைகீழ் கூட்டாட்சி முறையினால்தான் அதிகாரங்கள் பெருமளவு மத்திய அரசிடம் தங்கிவிட்டது என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும்.
1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம், பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்வதற்காகக் கொண்டுவந்த சட்டம் என்று பார்த்தோம். அந்நிய நாட்டை ஆட்சி செய்கையில், அதிகமான அதிகாரங்களை மாநிலங்கள்வசம் கொடுத்தால், பிரிட்டிஷாருக்கு இந்தியாவை ஆட்சி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். ஏனென்றால் பிரிட்டிஷ் மாகாண அளவில் இந்தியர்கள் ஆட்சிப்பொறுப்பில் பங்கேற்க வழிவகை செய்திருந்தது. எனவேதான், தலைகீழ் முறையில் கூட்டாட்சியை உருவாக்கிய பிரிட்டிஷ், தான் ஆளும் மத்திய அரசில் அதிகப்படியான அதிகாரங்களைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டது.
பிரிட்டன், இந்தியாவின் வளங்களைச் சுரண்ட வந்த காலனியாதிக்க நாடு, அவர்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக மத்திய அரசை வலுவாக வைத்துக்கொண்டார்கள். 1935ஆம் இந்திய அரசங்கச் சட்டத்தின்படி, பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவில் கூட்டாட்சி அமைத்தபோதும், மாகாணங்கள் பலமற்றே இருந்தன. எல்லா வகைகளிலும் மத்திய அரசையே அவர்கள் நம்பியிருக்க வேண்டியிருந்தது. பிரிட்டிஷார் நம்நாட்டைச் சுரண்ட பயன்படுத்திய இப்படியான சட்டத்தின் சரத்துகளைக் கடன்வாங்கி, நாம் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துவிட்டதன் மூலம், மத்திய அரசு மாநில அரசுகளைச் சுரண்டுவதற்கும் வஞ்சிப்பதற்குமான இடத்தை அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொடுத்துவிட்டோம்.
ஆனால் இதற்கு அன்றைய காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. கூட்டாட்சி கட்டமைப்புச் சார்ந்த சரத்துகள் 1935ஆம் ஆண்டுச் சட்டத்தில் இருந்து நாம் கடன் வாங்கியவை என்றும், அவை சர்வாதிகாரப்போக்குக் கொண்டவை என்றும், மாநிலங்களைச் சுரண்டி வஞ்சிப்பவை என்றும் போராடியது அன்றைய காங்கிரஸ் கட்சி. அக்கட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்றும் கேட்டது. ஆனால் அதே காங்கிரஸ்தான் அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில், பலம் வாய்ந்த மத்திய அரசு அமைவதற்கு உற்றத் துணையாக நின்றது. அதனால்தான் கே.வி.ராவ், ‘அரசியலமைப்புச் சட்டம் காங்கிரஸ் கட்சியால் இந்தியா மீது திணிக்கப்பட்ட ஒன்று’ எனக் கூறுகிறார். பலம்வாய்ந்த மத்திய அரசு அமைவதை அப்போதே பல குரல்கள் அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் எதிர்த்தன.
உ.பி.யைச் சேர்ந்த தாமோதர் சொரூப் சேட் என்பவர், ‘அதிகபட்ச அதிகாரக் குவிப்பு சர்வாதிகாரத்திலும், பாசிசக் கொள்கைகளை நோக்கியும் கொண்டு போய்விடும் என்று மகாத்மா காந்தி தமது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியதை நாம் மறந்துவிட்டோம். அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான், சர்வாதிகாரத்திற்கும் பாசிசத்திற்கும் எதிராகப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி. ஆனால், சட்டத்தின் வாயிலாக அதிகாரத்தைக் குவித்து வைத்திருப்பதன் விளைவாக என்ன நடக்குமென்றால் இயற்கையாக நம்நாடு படிப்படியாகப் பாசிசத்தை நோக்கிச் சென்றுவிடும்’ என்றார் .
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்ததே இந்த அதிகாரக் குவிப்புதான். ஒன்றுபட்ட இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களிலும், வங்காள மாகாணத்திலும் (முறையே, இன்றைய பாகிஸ்தான், வங்கதேசம்) இஸ்லாமியர்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர். ஒன்றுபட்ட இந்தியாவின் மற்ற மாகாணங்களில் இந்துக்களின் மக்கள்தொகையே அதிகம். இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் நீங்கிய பின்னர், பெரும்பான்மை இந்துக்களின் ஆதிக்கத்தால் இஸ்லாமியர்கள் தங்கள் உரிமைகளை இழந்துவிடுவோமோ என்று பயந்தனர்.
மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தால் மாநிலங்கள் பலமற்று இருக்கும் என்றும், அதனால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் இந்து ஆதிக்கம் கொண்ட மத்திய அரசிடம் பலியாகிவிடும் என்பதே அவர்கள் பயத்துக்கான காரணம். அவர்களின் பயம் நியாயமானதாகத்தான் இருந்ததாக இந்தியாவின் மூத்த சட்ட வல்லுநர் சீர்வை, தன்னுடைய நூலில் எழுதியுள்ளார்.
குறைவான அதிகாரம் கொண்ட மத்திய அரசு, அதிகமான அதிகாரங்கள் கொண்ட மாநில அரசு என்பதாக இந்தியாவின் கூட்டாட்சி முறை இருக்கவேண்டும் என்பதே இஸ்லாமியர்களின் கோரிக்கையாக இருந்தது. மத்திய அரசிடமும், மாநில அரசிடம் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் போக, மீதமுள்ள அதிகாரங்களும் மாநிலங்கள்வசம் இருக்கவேண்டுமென இஸ்லாமியர்கள் விரும்பினர். மேலும், சிறுபான்மையினரான தங்களது உரிமைகளைப் பாதுகாக்க, தனி வாக்காளர் தொகுதி முறையைக் கேட்டனர்.
அதாவது, ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தால், இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாக்களித்துத் தங்களுக்கான இஸ்லாமிய பிரதிநிதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பர். இஸ்லாமியப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் மற்ற மக்கள் வாக்களிக்க முடியாது. இதனால் தங்களது உரிமைகள் இந்துப் பெரும்பான்மை மக்களால் பலியாகாமல் பெருமளவு தடுக்கலாம் என்று அவர்கள் நம்பினர். 1909ஆம் ஆண்டே இப்படிப்பட்ட தனி வாக்காளர் தொகுதிகளை இஸ்லாமியர்களுக்குப் பிரிட்டிஷ் பேரரசு வழங்கியது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு இப்படிப்பட்ட பாதுகாப்பை வழங்க காங்கிரஸ் தயாராகவே இல்லை.
அதனால், இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக நின்று இந்தக் கோரிக்கைகளை விடுத்த ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீகுக்கு, ‘பாகிஸ்தான்’ என்றொரு தனி நாட்டை உருவாக்கிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் ஆகிவிட்டது. ஜின்னாதான் பாகிஸ்தான் உருவாகக் காரணம் என்றால், ஜின்னாவை அந்த இடத்திற்குத் தள்ளியது காங்கிரஸ்தான்.
இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக இருந்து பேசிவந்த முஸ்லிம் லீக்கை புறந்தள்ளி, இஸ்லாமியர்களுக்கான பாதுகாப்பைக் காங்கிரஸ் வழங்காதது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான உடனடிக் காரணமாகிவிட்டது. ஆனால், இதற்கான அடித்தளத்தை இட்டது மதவாதம். இந்துப்பெரும்பான்மையால் தங்கள் உரிமைகள் பாதிக்கப்படும் என்று இஸ்லாமியர்களைத் தீராத பதற்றத்தில் வைத்து அந்தத் தீயை அணையாது எரியவிட்டது பல ஆண்டுகால மதவாதம்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கும் அந்த மதவாதம்தான் வித்திட்டது. இந்தியா கூட்டாட்சி நாடாக இன்றி, கிட்டத்தட்ட ஒற்றையாட்சி நாடாக ஆனதற்கும் அந்த மதவாதம்தான் காரணம். அதனை விரிவாகப் பார்க்கவேண்டியது அவசியம். தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் அதுகுறித்துக் காணலாம். இந்தியா கூட்டாட்சி அமைப்பில் இருக்கக்கூடிய நாடாகினும் மத்திய அரசு அசுர பலத்தோடு இருப்பது, இந்தியாவை ஒற்றையாட்சி நாடு என்று சொல்லக்கூடிய அளவு ஆக்கிவிட்டது.
மத்திய அரசு இப்படியான அசுரப் பலத்தோடு இருப்பதற்குக் காரணம் 1935ஆம் ஆண்டுச் சட்டத்திலிருந்த கூட்டாட்சி சார்ந்த சரத்துகளை நாம் அப்படியே நம் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துவிட்டதுதான். 1935ஆம் ஆண்டுச் சட்டத்தில் மத்திய அரசு பலமானதாக இருந்ததற்குக் காரணம், தலைகீழ் முறையில் அமைந்த கூட்டாட்சி. இந்தப் பகுதியில் தலைகீழ் முறையில் அமைந்த கூட்டாட்சி என்றால் என்னவென்று கண்டோம். வரும்பகுதியில் இந்தியாவில் தலைகீழ் முறையில் கூட்டாட்சி அமையவேண்டியத் தேவை ஏன் ஏற்பட்டது என்பது குறித்துப் பார்க்கலாம்.
(தொடரும்…)
______________
மேற்கோள் நூல்கள்
1. கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி (2nd ed.2017)
2. முரசொலி மாறன், மாநில சுயாட்சி (3rd ed.2017)
3. A.V.Dicey, Introduction To The Law Of Constitution (1885)
4. H.M. Seervai, Partition Of India: Legend And Reality (2nd ed.2014)
5. Constitution Assembly Debates Vol. VII, Part 1
6. K.V.Rao, Parliamentary Democracy Of India (A Critical Commentary),1961