Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #10 – வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழ்ந்ததா?

இந்திய மக்களாகிய நாம் #10 – வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழ்ந்ததா?

இந்திய மக்களாகிய நாம்

தேசிய இனஉணர்ச்சி எழுவதற்கு அடிப்படைக்கூறுகளில் ஒன்று மதம். இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவான மதம் என்ற ஒன்று இருந்ததில்லை என்பதையும், ‘ஹிந்து’ எனப்படுவது மதமே அல்ல என்பதனையும் கடந்த பகுதியில் பார்த்தோம். இதனோடு முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் வெகுமக்கள் போராட்டம் எழாமல் போனதற்கான காரணங்களையும் கண்டோம். அவற்றில் மிகமுக்கியமான ஒன்று இஸ்லாமிய மதமாற்றம்.

முகலாயர்களும் அவர்களுக்கு முன்பு இந்தியத்துணைக்கண்டத்துக்குப் படையெடுத்து வந்து ஆட்சி செய்த சுல்தான்களும் இங்குள்ள ‘ஹிந்து’ மக்களின் கழுத்தில் கத்தி வைத்து அவர்களை மதம்மாற்றினார்கள் என்பது வரலாறாக வெகுமக்களிடம் புகுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை என்னவோ இதற்கு மாறாக இருப்பதாகச் சான்றுகள் கூறுகின்றன.

சுல்தான்களும் முகலாயர்களும் தங்கள் அரசின் கொள்கையாகக் கட்டாய இஸ்லாமிய மதமாற்றத்தை முன்னிறுத்தியதில்லை. இதுகுறித்து நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்புவரை இருந்திடாத ஹிந்து மதமும், இந்தியத் தேசிய உணர்ச்சியும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டமைக்கப்பட்டதற்கும், கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் என்கிற சான்றில்லா வரலாறுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மன்னர்கள், இந்தியத் துணைக்கண்டத்துக்குப் படையெடுத்து வந்து இங்குள்ள பொதுமக்களின் கழுத்தில் கத்தி வைத்து மதமாற்றம் செய்துவிட்டார்கள் என்ற பொய்யான வரலாறு இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றது. திடுதிப்பென்று படையெடுத்து வந்து திடீரென நுழைந்த மதம் ‘இஸ்லாம்’ என்கிற பிம்பம் நம்மிடையே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாம் அந்நிய மதம் கிடையாது எனப் பல்வேறு வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமிய மன்னர்கள் நுழைவதற்கு முன்னரே இந்தியத் துணைக் கண்டத்துக்குள் இஸ்லாமிய மதம் வந்துவிட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரபு வணிகர்களுக்கும் தென்னிந்தியாவுக்கும் வணிக உறவுகள் இருந்துள்ளன. 7ஆம் நூற்றாண்டில், அரேபியாவில் இஸ்லாம் பிறப்பதற்கும் முந்தைய காலத்தில் இருந்தே இத்தகைய தொடர்பு இருந்துவருகிறது.

ஹெச்.ஜி. ராலின்சன் என்கிற வரலாற்றாய்வாளர் தன்னுடைய ‘Ancient and Medieval History of India’ நூலில், ‘7ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக அரபு இஸ்லாமியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் கரையோர நகரங்களில் நிரந்தரமாகக் குடியேற ஆரம்பித்தனர்’ என்று எழுதியுள்ளார். 629ஆம் ஆண்டு இன்றைய கேரளாவின் கொடுங்களூர் எனும் ஊரில், அரபு வணிகர் ஒருவரால் கட்டப்பட்ட மசூதிதான் இந்தியத்துணைக்கண்டத்தில் முதன்முதலாகக் கட்டப்பட்ட மசூதி. இதில் மேலும் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், நபிகள் நாயகம் உயிரோடிருந்த காலத்திலேயே இஸ்லாம் இந்தியத் துணைக்கண்டத்துக்குள் பரவ ஆரம்பித்துவிட்டது.

மேலும், ரவி.கே.மிஸ்ரா எனும் வரலாற்று ஆய்வாளர் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது குறித்துத் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதியவற்றைப் பார்ப்போம். ‘அரேபிய வணிகர்கள் சமூகம் பெருந்திரளாக, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளான குஜராத், மலபார் (இன்றைய கேரளா) ஆகிய இடங்களில் குடியேறினார்கள். இவர்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் காலத்திலேயே இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள். இன்றுவரை இந்தியாவில் வாழ்ந்துவரும் மாப்ளா, இஸ்மாயிலிஸ், கோஜி, போராஸ் ஆகிய இஸ்லாமியச் சமூகத்தினர் நேரடியாக அரேபிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். காலப்போக்கில் இவர்கள் இந்திய-அரேபியக் கலப்பினத்தவர்களாகினர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய டெல்லி சுல்தான்களின் ஆட்சியும், முகலாயர்களின் ஆட்சியும் இன்றைய தமிழ்நாடு வரை நீண்டதே இல்லை என்பதைப் பல்வேறு தருணங்களில் பார்த்திருக்கிறோம். இன்றைய தமிழ்நாடு, கேரளப் பகுதிகளை இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்புகள் மூலம் நெருங்குவதற்கு முன்னரே அங்குப் பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர்.

துருக்கிப் பேரரசைக்காட்டிலும் அதிகளவு இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று பேராசிரியர் சீலி சொல்லியிருந்ததைக் கடந்த பகுதியில் பார்த்தோம். இந்தியத் துணைக்கண்டத்தின் கணிசமான மக்கள்தொகையினர் இஸ்லாம் மதத்தை எப்படி ஏற்றனர் என்பதைப் பல்வேறு வரலாற்றாய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். பொதுவாகப் பலரும் சொல்லும் காரணங்கள் நான்கு உள்ளன.

i) அரேபியா முதலான இஸ்லாம் தோன்றிய நாடுகளில் இருந்து பெருந்திரளான மக்கள் குடியேறினர்.

ii) அரசு பதவிகளில் அங்கம் வகிக்கவும், பிற அரசுச் சலுகைகளைப் பெறவும் மதம் மாறியவர்கள்.

iii) இஸ்லாமிய மன்னர்கள் பொதுமக்களைக் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி இஸ்லாம் மதத்துக்கு மாற்றினர்.

iv) பிராமணிய வர்ணக் கட்டமைப்பில் கீழே வைக்கப்பட்டிருந்த ஜாதியைச் சேர்ந்த மக்கள், ஜாதியக்கொடுமைகளில் இருந்து விடுபட இஸ்லாம் மதத்தைத் தழுவினர்.

ரிச்சர்ட் ஈட்டன் என்கிற அமெரிக்க வரலாற்றாய்வாளர், இந்தியத் துணைக்கண்டத்தில் பெருந்திரளான மக்கள் இஸ்லாம் மதத்தை எப்படி ஏற்றனர் என்று ஆய்வு செய்தார். அவர் மேற்சொன்ன காரணங்கள் நான்கையும் நிராகரிக்கிறார்.

குறிப்பாக, இஸ்லாமிய மன்னர்கள் கட்டாய மதமாற்றத்தைத் தங்கள் கொள்கையாக வைத்திருக்கவில்லை என்கிறார் ரிச்சர்ட் ஈட்டன். இவற்றுள் முகலாயர்கள் மட்டுமல்ல சுல்தான்களும் அடக்கம்.

இவர் சொல்வதற்கு ஏற்ப, ‘அலாவுதின் கில்ஜி’ என்கிற சுல்தான் இஸ்லாமியராக இருந்தபோதிலும், அவர்தன் மதக்கோட்பாடுகள்படி என்றுமே நடந்துகொண்டதில்லை. ஏனெனில், வெள்ளிக்கிழமைத் தொழுகை, ஷரியாச் சட்டம் முதலிய பெரும்பாலான இஸ்லாமியப் பழக்கவழக்கங்களைப் பற்றி அறியாதவராகவே அவர் இருந்தார்’ என்கிறார் வரலாற்றாய்வாளர் ஹர்பன்ஸ் முகியா.

சுல்தான்களும் முகலாயர்களும் இந்தியாவைப் படையெடுத்து வந்தபோது, மிகப்பெரும் படைபலத்தோடு வந்திருக்கவில்லை. தோராயமாக 10,000 முதல் 15,000 எனச் சொற்ப ஆயிரங்களிலேயே அவர்களின் படைபலம் இருந்துள்ளது. பொதுமக்களின் பழக்க வழக்கங்கள், மதம் முதலான தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டால், ஆட்சிபுரிவதில் சிக்கல் ஏற்படும் என அவர்கள் புரிந்துவைத்திருந்தனர். மக்கள் போராட்டம் வெகுண்டெழுந்தால், அதை எதிர்க்கத் தங்கள் படைபலம் போதுமானதாக இருக்காது என்பதால் சுல்தான்களும் மதரீதியான கொள்கைகளை முன்நிலைப்படுத்தியதில்லை எனத் தெரிகிறது.

சுல்தான்கள் ஆட்சிக்காலத்தின் முடிவில்கூட இஸ்லாமிய மக்களின் மக்கள்தொகை என்பது 10 சதவிகிதத்துக்கும் குறைவானதாகவே இருந்துள்ளது என இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் தொகை வளர்ச்சி குறித்து கே.எஸ்.லால் எழுதுகிறார். பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதன்முதலாகத் துல்லியமான விவரங்களைத் தந்தன எனக்கூறும் ரிச்சர்ட் ஈட்டன், முகலாயர்களின் ஆட்சிக்காலம் முடிந்த பின்னரும் மேற்சொன்ன நிலையே தொடருவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

டெல்லியும் கங்கைச் சமவெளிப் பகுதிகளும் (பாகிஸ்தான், பங்களாதேஷ் தவிர்த்த வட இந்தியா) இஸ்லாமிய மன்னர்களின் பலம்பொருந்திய ஆட்சியிடமாக இருந்தது. அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்காகத் தங்கள் படைபலத்தைப் பயன்படுத்திக் கத்தியைத் தூக்கியது உண்மையாக இருந்திருந்தால், அங்கிருக்கும் பெரும்பாலான மக்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாறியிருக்க வேண்டும். ஆனால், நமக்குக் கிடைக்கிற முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதற்கு மாறான தகவலைத் தருகிறது. முகலாயர்கள் ஆட்சிக்காலத்தின் முடிவிலும், இஸ்லாமிய மக்கள்தொகை டெல்லி, கங்கைச் சமவெளிப் பகுதிகளில் 10-15 சதவிகிதமாகவே இருந்துள்ளது என்கிறார் ரிச்சர்ட் ஈட்டன்.

ஆனால், இதுவே இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி மிகவும் பலவீனமாக இருந்த இன்றைய பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இடங்களில் அப்போதைய இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 70-90 சதவிகிதம் இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். இந்த இடங்கள் அம்மன்னர்களின் ஆட்சியில் எல்லைப்பகுதியில் இருந்த இடங்கள், எனவே கங்கைநதிப் படுகையை ஒப்பிட்டுப் பார்க்கையில் அவை இஸ்லாமிய மன்னர்களின் பலம்பொருந்திய ஆட்சிப்பகுதியாக இருந்ததில்லை என்றும் ரிச்சர்ட் ஈட்டன் கூறுகிறார்.

இஸ்லாமிய மன்னர்கள் தங்கள் படைபலத்தைக்கொண்டு மக்கள் கழுத்தில் கத்தி வைத்துக் கட்டாய மதமாற்றத்தை மேற்கொண்டதினாலேயே பெருந்திரளான மக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள் என்ற சான்றில்லா வரலாறு, மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் தரும் தர்க்கங்களுக்கு மாறாக உள்ளதைப் பார்க்க முடிகிறது.

‘முகலாயர்களின் ஆட்சிக்காலத்தின் முடிவில் ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தில் (இன்றைய பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியன உட்பட) இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 12-13 சதவிகிதமாகவே இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கமான 1820 காலகட்டத்தில், இந்தியாவில் ஆறில் ஒருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று பதிவு செய்திருக்கிறார் பிஷப் ஹீபர். அதாவது 16 சதவிகிதம் இஸ்லாமியர்கள். அதுவே,1941ஆம் ஆண்டு, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் எடுக்கப்பட்ட கடைசி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இஸ்லாமிய மக்கள் தொகை 25 சதவிகிதம் என்கிறது.

எனவே, முகலாயர்கள் ஆட்சிக்கால முடிவுக்கும், இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கும் இடைப்பட்ட காலத்தில், அதாவது பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில்தான் இஸ்லாமிய மக்கள் தொகை இரு மடங்காகப் பெருகியுள்ளது. இஸ்லாமிய மக்கள் தொகையில் இத்தகைய ஏற்றம் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியில்கூட இருந்ததில்லை’ என்கிறார் ஹர்பன்ஸ் முகியா.

ஏனெனில், இஸ்லாம் என்கிற மதம், சுல்தான்களும் முகலாய அரசர்களும் பின்பற்றியதாக இருந்ததே தவிர, அது ஓர் அரசு மதமாக இருந்ததில்லை.

அடுத்ததாக, பிராமணிய வர்ணக் கட்டமைப்பில் கீழே வைக்கப்பட்டிருந்த ஜாதிகளைச் சேர்ந்த மக்கள், அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிக்க இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள். இதுவே பெருந்திரளான இஸ்லாமிய மதமாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூற்றை ஆராய்கையில், இது முற்றிலும் தவறான ஒன்றும் அல்ல, சரியானதும் அல்ல என்று தெரியவருகிறது. ஏனெனில், இன்றைய பீகார், ராஜஸ்தான், முதலான இடங்களில் ஜாதியக் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்கு ஒட்டுமொத்த சமூகமும் இஸ்லாம் மதத்தைத் தழுவிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

ஆனால், அவை பெருந்திரளான இஸ்லாமிய மதமாற்றத்துக்குக் காரணமா என்றால் இல்லை. மேற்சொன்னது போலவே, இஸ்லாமிய மன்னர்களின் இருதயமாக இருந்த டெல்லி, கங்கை சமவெளிப்பகுதிகளில்தான் பிராமணிய வர்ணக் கட்டமைப்பும் இறுக்கமாக இருந்துள்ளது. ஆனால், இந்தப் பிராமணிய வர்ணக் கட்டமைப்பு இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலும் பெங்கால் பகுதிலும் சரிவர ஊடுருவியிருக்கவில்லை. ஆனால், அங்கேதான் இஸ்லாமிய மக்கள்தொகை பெருந்திரளாக இருப்பதைப் பார்த்தோம்.

இதேபோன்று, அரசுச் சலுகைகளுக்காகப் பலர் இஸ்லாம் மதத்தை ஏற்றது உண்மை என்றபோதிலும், இதுவும் பெருந்திரள் மக்கள்தொகைக்கான காரணமாக இருக்கவில்லை. அரேபியா போன்ற பகுதிகளில் இருந்து பல சமூகங்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் அதுவும் இன்றைய பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இடங்களில் இருக்கும் பெருந்திரள் இஸ்லாமிய மக்கள்தொகைக்குக் காரணம் அல்ல.

ஆக, பொதுவாக வைக்கப்படும் இந்த நான்குமே காரணம் அல்ல என்றால், வேறெப்படி இது நிகழ்ந்திருக்க முடியும்? ஆங்கிலத்தில் ‘Accretion’ என்றொரு சொல் உண்டு. சிறுசிறு அளவில் திரண்டு, ஒன்றுசேர்ந்து நாளைடைவில் பெரும் அளவாக எது மாறினாலும், அந்தச் செயல்முறையை ‘Accretion’ என்பார்கள்.

இந்த ‘Accretion’ செயல்முறையும் அதன்பின்னர் எழுந்த சீர்திருத்தச் செயல்பாடுகளும்தான் பெருந்திரள் இஸ்லாமிய மக்கள் தொகைக்குக் காரணம் என்கிறார் ரிச்சர்ட் ஈட்டன். இவற்றை விரிவாகக் காணுவோம்.

கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்த வர்ணக் கட்டமைப்பு, அங்கிருந்த சமூகங்களிடையே மிகவும் ஆழமாக ஊடுருவியிருந்தது. ஆனால், அதே இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லைப்புற பகுதியிலும் (இன்றைய பாகிஸ்தான்) வடகிழக்கிலும் (இன்றைய பங்களாதேஷ்) பிராமணிய வர்ணக் கட்டமைப்பு பலவீனமானதாகவே இருந்துள்ளது. ஏற்கெனவே, அங்கிருந்த மக்கள் வழிப்பட்டுக்கொண்டிருந்த கடவுள்களின் பட்டியலில் அல்லாவையும் இணைத்து வழிபட்டனர்.

இறந்தவர்களைப் புதைப்பது, ஆண்கள் விருத்தசேதனம் செய்துகொள்வது போன்ற இஸ்லாமியப் மதப்பழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்த சமூகங்கள் உள்வாங்கிக்கொண்டிருந்தன. ஆனால், இவை எதுவும் அவர்களின் கிருஷ்ணர் வழிபாட்டைத் தடுக்கவில்லை. அதாவது, முன்னர் அவர்கள் மேற்கொண்டிருந்த எந்தப் பழக்கங்களையும் அவர்கள் கைவிடவில்லை. ஏற்கெனவே இருந்த பழவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றோடு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியப் பழக்கவழக்கங்கள் அவர்களிடம் பெருக ஆரம்பித்தன. இதனைத்தான் Accretion என்கிறார் ரிச்சர்ட் ஈட்டன். 18ஆம் நூற்றாண்டில், பெங்கால் இஸ்லாமியர்கள் கடவுளைக் குறிக்கப் பிரபு, நிரஞ்சன், கர்த்தர் போன்ற பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

மதமாற்றம் என்பது ஏற்கெனவே இருந்த பழைய நம்பிக்கையைச் சுத்தமாக அறுத்தெறிந்துவிட்டு முற்றிலும் புதிய மதநம்பிக்கைகளையும் பழக்கங்களையும் ஏற்றுக்கொள்வது. ஆனால், இங்கு நடந்தது வேறுமாதிரியான மதமாற்றம். சட்டென்று முன்பிருந்த மதத்தின் தொடர்புகளை அறுத்துவிட்டு வேறு மதத்துக்கு மக்கள் மாறிவிடவில்லை. 13ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்கெனவே இருந்த பழக்கவழக்கங்களோடு இஸ்லாமிய மதப்பழக்கங்களையும் மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர்.

அதன்பின்னர், 19ஆம் நூற்றாண்டில் இந்திய இஸ்லாமியர்களுக்கு மெக்காவுடன் அதிகளவில் தொடர்பு ஏற்பட்டது. மெக்காவுக்குச் சென்று வந்தப்பின்னர், இஸ்லாம் மதம் உலகளவில் பரவியிருக்கிற மதம் என்று அறிந்துகொண்டார்கள். இவர்கள் சீர்திருத்த இயக்கங்களை இந்தியாவில் உருவாக்கினர். அந்த இயக்கங்களின் மூலம் ‘உண்மையான இஸ்லாம்’ என்பதை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் பரப்புரை செய்தனர்.

அதன் பின்னர்தான் பழைய பழக்கவழக்கங்களைக் கொஞ்சம்கொஞ்சமாக மக்கள் கைவிட ஆரம்பித்தனர்.

இப்படியாக 13ஆம் நூற்றாண்டுவாக்கில் ஆரம்பித்து 19ஆம் நூற்றாண்டில்தான் இந்தப் பெருந்திரள் மதமாற்றம் என்பது முழுமைபெற்றது. இன்றுவரை பல்வேறு இஸ்லாமியச் சமூகங்களிடம் இன்னும் பழைய பழக்கவழக்கங்கள் தங்கியிருக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தின் மியோ சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், இந்தச் சீர்திருத்த இயக்கங்களினால் பெரிதாகப் பாதிப்படையவில்லை. இன்றுவரை அவர்களின் திருமணம் சார்ந்த சடங்குகள் ‘ஹிந்து’ மதமுறைப்படியே இருக்கிறது.

1911ஆம் ஆண்டு, குஜராத் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் தங்களை ‘முகம்மதிய ஹிந்துக்கள்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். ‘மொலெசலாம் கிராசியா ராஜ்புத்’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓர் இஸ்லாமியப் பெயர், ஒரு ஹிந்து பெயரைக் கொண்டிருந்தனர்.

உலகெங்கும் பின்பற்றப்பட்ட இஸ்லாமுக்கும் இந்தியாவில் உள்ள இஸ்லாமுக்கும் மிக ஆழமான வேறுபாடுகள் இருப்பதாக அம்மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் மிக முக்கியமான காரணம் மேற்சொன்னதுபோல,

i) முகலாய அரசர் அக்பர் இஸ்லாம் மதத்தைத் துறந்து ‘தின்-ஐ-இலாஹி’ என்ற மதத்தைக் கண்டறிந்து அதை மக்களிடம் போதித்தார். இம்மதம் பிராமணிய, சமண, புத்த மதநம்பிக்கைகளோடு இஸ்லாமிய நம்பிக்கைகளையும் கலவையாக ஏற்றுக்கொண்ட மதமாக இருந்தது.

ii) இஸ்லாம் மதத்திலேயே ‘சூஃபி’ என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் இஸ்லாம் மதத்தை மிக நெகிழ்வான முறையில் கொண்டு சேர்த்தனர். அமைதியைப் போதிக்கும் அத்தனை நம்பிக்கைகளையும் சேர்த்தே அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பொதுமக்களிடம் கொண்டுசேர்த்தனர்.

iii) இந்தியாவில் இஸ்லாமிய மதமாற்றம் என்பது அம்மக்களின் பழைய நம்பிக்கைகளை உடனடியாக அழித்துவிடவில்லை. ஏற்கெனவே இருந்த பழக்கங்களோடு இஸ்லாமியப் மதப்பழக்கங்கள் இணைந்துகொண்டன. பல நூறாண்டுகள் கழித்தே சீர்திருத்த இயக்கங்கள் மூலம் இஸ்லாமிய மதம் இந்தியத்துணைக்கண்டத்தில் தனித்துவத்தை அடைந்தது.

வரலாற்றில் மிகக்கொடூரமான மதவெறி கொண்ட அரசனாக ஒளரங்கசீப் சித்தரிக்கப்படுகிறார். இஸ்லாமியர் அல்லாதவர்கள் மேல் ‘ஜஸ்யா’ என்ற வரிவிதிப்பைச் செய்ததினால் பலரும் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இஸ்லாமியர் அல்லாதவர்கள் மேல் ஜஸ்யா விதிக்கப்பட்டிருந்ததுபோல், இஸ்லாமியர்கள் மேலும் ‘ஸகத்’ என்கிற வரி விதிக்கப்பட்டிருந்தது.

இதுமட்டுமின்றி பலரையும் கட்டாய மதமாற்றம் செய்ததாக ஒளரங்கசீப் குற்றம்சாட்டப்படுகிறார். ஆனால், அவரது காலத்தில் நடந்த மதமாற்றம் குறித்து அத்தனை ஆதாரங்களையும் தன் தீவிர முயற்சியால் சேகரித்த வரலாற்றாய்வாளர் எஸ்.ஆர்.ஷர்மா, தனது ‘Religious Policy of Mughal Emperors’ என்ற நூலில், அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் நடந்த இஸ்லாமிய மதமாற்றங்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டவில்லை என எழுதியுள்ளார்.

இஸ்லாமிய மதமாற்றம் பற்றிய உண்மை இவ்வாறு இருக்க, இந்திய இஸ்லாமியர்கள் அனைவரும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்ற பொய்யான வரலாறு சொல்லப்பட்டு வருகிறது. இதன் தொடக்கம், ஆரிய சமாஜ் என்கிற ‘ஹிந்து’ சீர்திருத்த இயக்கம். இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களை மீண்டும் பிராமணிய வர்ணக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கு எழுந்த இயக்கம்தான் ஆரிய சமாஜ். அதனூடாகவே பிராமணிய மதம் ‘ஹிந்து’ மதமாகக் கட்டமைக்கப்பட்டது. அங்கிருந்துதான் ‘இந்தியத் தேசியமும்’ கட்டமைக்கப்பட்டது. இவற்றை அடுத்ததடுத்த பகுதிகளில் விரிவாகக் காணலாம்.

(தொடரும்…)

 

______________

மேற்கோள் நூல்கள்
1. H.G.Rawlinson, Ancient and Medieval History of India, Bharathiya Kala Prakashan (December 2003)
2. Richard M.Eaton, The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760, University of California Press (1st ed. 1996)
3. Edited by Richard C.Martin, Approaches to Islam in Religious Studies, One World (2nd ed. 2013)
4. Harbans Mukhia, Communalism and the Writing of Indian History, People’s Publishing House Pvt.Ltd (Aug.1969)
5. S.R.Sharma, Religious Policies of Mughal Emperors, Book Enclave (March 2012)
6. K. S. Lal: Growth of Muslim population in medieval India (A.D. 1000-1800), Research Publications in Social Sciences (1973)
7. Harbans Mukhia, The Mughals of India, Blackwell Publishing Ltd. (1st ed. 2004)

உதவிய ஆராய்ச்சிக்கட்டுரைகள
1. Ravi.K.Mishra, Islam In India And The Rise Of Wahhabism, India International Centre Quarterly AUTUMN 2019, Vol. 46, No. 2 (AUTUMN 2019), pp. 1-30
2. Shayan Sheik, India’S Muslims: The “Other” Within?, The Columbia Journal of Asia 2022 VOL I, Issue 1, pp. 74 – 79
3. Dr. Munazza Batool, Conversion to Islam in the Indian milieu: A reconsideration of Dawah and Conversion Process during the Pre Mughal Period, Research Gate, https://www.researchgate.net/publication/334465794 (Sep. 2018)
4. Richard M.Eaton, Shrines, Cultivators, and Muslim ‘Conversion’ in Punjab and Bengal, 1300 – 1700, The Medieval History Journal, 2009: 191-220, SAGE Publications

உதவிய செய்திக்கட்டுரைகள்
1. Atul Sethi, ‘Trade, not invasion brought Islam to India’, Times of India (24 June 2007)
2. Ziya Us Salam, Imaginary Enemies, Frontline The Hindu ( 06 March 2021)

பகிர:
வாஞ்சிநாதன் சித்ரா

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *