Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

‘இந்திய விடுதலை இயக்கம்’ குறித்தும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரலாறு’ குறித்தும் பேசும்பொழுது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை குறித்துப் பேசாமல் நகரவே முடியாது. ஏனெனில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைதான் இவ்வரலாறுகளின் மையச்சரடு. மேற்சொன்ன இரு வரலாற்றையும் பேசும்பொழுது தவறாமல் பெரும்பாலான பாடநூல்களிலும் வரலாற்று நூல்களிலும் முக்கியமான ஓர் அத்தியாயத்தைச் சேர்த்துக்கொள்வார்கள். அதுதான் ‘முஸ்லிம் வகுப்புவாதம்’.

தனி வாக்காளர் தொகுதிமுறையும், அதனை முன்வைத்து இஸ்லாமியர்கள் செய்த வகுப்புவாத அரசியலும்தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கான காரணம் என்று சொல்வதற்காகவே எழுதப்பட்ட அத்தியாயமாக அது இருக்கும். சுமித் சர்கார் சொல்வதுபோல, இங்கேயும் இஸ்லாமியர்கள்தான் ‘Whipping Boys’. இஸ்லாமியர்களின் வகுப்புவாதமும் மதவெறியும் பிரிவினைவாத அரசியலும்தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் என்று மொத்தப் பழியையும் இஸ்லாமியர்கள் மீது திணித்துவிடுவார்கள்.

இப்படியாக, தனிவாக்காளர் தொகுதிமுறைக் கோரிக்கை பிரிவினைவாதத்தின் முதல்படியாகப் பேசப்படும். ஆனால், வங்கப் பிரிவினையின்போதும் அதற்கு முன்னரும் நடந்த ஹிந்துக்களின் அணிதிரட்சி குறித்தும், இஸ்லாமியர்கள் அரசியல் அரங்கில் ஒதுக்கப்பட்டது குறித்தும் மறந்தும் பேசிவிடமாட்டார்கள் மிகைத் தேசியவாதிகள். தேசியத்தின் எழுச்சியாக மட்டுமே வங்கப்பிரிவினை அவர்களால் பேசப்படும். உண்மையில், ஹிந்துத் தேசியத்தின் எழுச்சிதான் வங்கப்பிரிவினை என்பதையும் இஸ்லாமியர்களை ஒதுக்கிவைத்தது வங்கப்பிரிவினையின் ஹிந்துத் தேசியவாதத்தன்மையே என்பதையும், கடந்த இரு பகுதிகளில் மிக விரிவாகவே பார்த்துவிட்டோம்.

இவையே இஸ்லாமியர்கள் தனிவாக்காளர் தொகுதிமுறையைக் கேட்டதற்கும் அதனைத் தொடர்ந்து அனைத்திந்திய முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப்பட்டதற்கும் காரணம். ஹிந்துப் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களைச் சமூக அரசியல் தளங்களில் விலக்கியதன் விளைவே அது. அப்போதும் இஸ்லாமியர்கள் தனிநாடு கேட்கவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். அவர்கள் கேட்டது தனி வாக்காளர் தொகுதிமுறையும் அரசியலமைப்புச் சட்டத்தில் மேலும் சில பிரத்தியேக பாதுகாப்புகளும்தான்.

இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த மிண்டோ மற்றும் இந்தியாவுக்கான தலைமைச் செயலாளராக இருந்த மார்லி ஆகிய இருவரும் இஸ்லாமியர்களின் தனிவாக்காளர் தொகுதி கோரிக்கைக்கு இசைவு தந்தனர். பொதுவாக, பிரித்தாளும் சூழ்ச்சி என்ற இராஜதந்திரத்திற்காகத்தான் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பிரிட்டிஷ் அரங்கேற்றியது எனச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், ‘Lord Minto and the Indian Nationalist Movement, with Special Reference to the Political Activities of the Indian Muslims,1905-1910’ என்ற நூலில் பேராசிரியர் சையத் ரசி வஸ்தி இதற்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறுகின்றார்.

1909ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள், இஸ்லாமியர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிமுறையை வழங்கியது.

இதைக் காங்கிரசில் இருந்த ஹிந்துத் தலைவர் கோபால கிருஷ்ண கோகலே அவர்களும் ஆதரித்திருந்தார்.

ஆனால், தனிவாக்காளர் தொகுதிமுறையில் இஸ்லாமியர்களுக்குத் தரப்பட்ட அதிகப்படியான பிரதிநிதித்துவத்தை அவர் எதிர்த்தார். அதாவது, இஸ்லாமியர்களின் மக்கள்தொகைச் சதவிகிதத்தைவிட அதிக விகிதத்தில் அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. 1919ஆம் ஆண்டு நிலவரப்படி, வங்காளம், அசாம், பஞ்சாப் மாகாணத்தைத் தவிர்த்து மீதமுள்ள மாகாணங்களில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகையைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு தொகுதிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

எடுத்துக்காட்டாக, மெட்ராஸ் மாகாணத்தில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 6.7%. ஆனால், ஒட்டுமொத்த சட்டசபைத் தொகுதிகளில் அவர்களுக்கு 10.6% ஒதுக்கப்பட்டிருந்தது.

இடங்கள் 

இஸ்லாமியர்  ஒதுக்கப்பட்ட 
மாகாணம்    (சதவிகிதத்தில்)
மக்கள்தொகை 
(சதவிகிதத்தில்)

பாம்பே

19.8 25.4
வங்காளம் 30.8

54.6

ஐக்கிய மாகாணம்
(இன்றைய உ.பி.)

26

14.3

பஞ்சாப்

40.4 55.2

பீகார், ஒரிசா

18.9

10.9

மத்திய மாகாணம் (இன்றைய ம.பி.)

9.6

4.4

அசாம் 30

30.2

மெட்ராஸ் 10.6

6.7

1909ஆம் ஆண்டே தனிவாக்காளர் தொகுதிமுறை அமலுக்கு வந்திருந்தபோதும், காங்கிரஸ் அதை வரவேற்கவில்லை. அதன்பின்னர், 1916ஆம் ஆண்டு முகமது அலி ஜின்னா அவர்களின் முயற்சியால் லக்னோ ஒப்பந்தம் உருவானது. தனிவாக்காளர் தொகுதிமுறையைப் பொறுத்தவரை காங்கிரஸையும் முஸ்லிம் லீக்கையும் ஒரு சமரசத்திற்குக் கொண்டுவந்தார் ஜின்னா. இஸ்லாமியர்களின் மக்கள்தொகை விகிதத்தைக் காட்டிலும் கூடுதலான விகிதத்தில் சட்டசபையில் இடங்கள் ஒதுக்கப்படுவதற்குக் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. இதனால் மேற்சொன்னபடியான நிலவரம் 1919ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்தது.

‘ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கான தூதுவர்’ என ஜின்னா போற்றப்பட்டார். 1906ஆம் ஆண்டே ஜின்னா காங்கிரஸில் இணைந்திருந்தார். 1913ஆம் ஆண்டு முஸ்லீம் லீக்கிலும் இணைந்தார். லக்னோ ஒப்பந்தத்தில் ஜின்னாவின் பங்கு குறித்து கே.எம்.முன்ஷி தன்னுடைய Pilgrimage to Freedom எனும் நூலில், இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘லக்னோ ஒப்பந்தம் உருவான காலத்தில் ஜின்னா, காங்கிரஸ், லீக் என இரு கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருந்தார். இந்தியாவின் மாதிரி அரசியலமைப்பை வடிவமைப்பதில் மிக முக்கிய பங்காற்றியதோடு, காங்கிரஸ் மற்றும் லீக் ஆகிய இரண்டு கட்சிகளும் தத்தமது அமர்வுகளில் அதனை ஏற்குமாறும் செய்தார்’.

1940வரை ஜின்னாவுக்குப் பாகிஸ்தான் குறித்த எண்ணமெல்லாம் இருந்ததே இல்லை. அவ்வளவு ஏன் ஜின்னா தனி வாக்காளர் தொகுதிமுறையைக்கூட தன்னளவில் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. 1910ஆம் ஆண்டு நடந்த வருடாந்திரக் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற ஜின்னா, தனிவாக்காளர் தொகுதிமுறை உள்ளாட்சித் தேர்தல்களுக்கு நீடிக்கக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அவரே தனிவாக்காளர் தொகுதிமுறையினால்தான் மத்தியச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

1937 வரை ஜின்னா கடைந்தெடுத்த தேசியவாதியாகவே இருந்தார். வலிமைவாய்ந்த மத்திய அரசு கொண்ட நாடாக இந்தியா அமையவேண்டும் என விரும்பியது காங்கிரஸ் மட்டுமல்ல ஜின்னாவும்தான் என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆயிஷா ஜலால். வலிமை குறைந்த கூட்டாட்சியை ஜின்னா விரும்பவில்லை, இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கு நெருக்கமான பார்வையையே கொண்டிருந்தார். ஆனால், அவர் இஸ்லாமியர்களின் கோரிக்கையை நன்றாகவே புரிந்துகொண்டிருந்தார்.

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கப்பட்ட தனிவாக்காளர் தொகுதிமுறையை விட்டுத்தரத் தயாராகவே இருந்தார் ஜின்னா. தனிவாக்காளர் தொகுதிக்கு மாற்றாக ஜின்னா வைத்த கோரிக்கைகள்:

i) சிந்து பகுதியில் ஒரு புதிய முஸ்லிம் மாகாணத்தை உருவாக்குதல்.

ii) வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்துக்குச் சிறப்பு உயர் அந்தஸ்து வழங்குதல்.

iii) பஞ்சாபி, வங்காள இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் வழங்குதல்.

iv) மத்தியச் சட்டசபையில் இஸ்லாமியர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்படுதல்.

இவற்றை வழங்கினால், தனிவாக்காளர் தொகுதிமுறையைக் கைவிடுவதற்கு ஜின்னா தயாராக இருந்தார். ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸையும் முஸ்லிம் லீக்கையும் ஒரு சமரசத்திற்குக் கொண்டுவர ஜின்னாவால் முடியவில்லை.

பிரிட்டிஷ் கொண்டுவந்த அனைத்து அரசியல் சீர்திருத்தங்களுக்கும் இந்தியர்களிடம் எதிர்ப்பு வந்தவண்ணம் இருந்தது. இதனால் கோபமடைந்த பிரிட்டிஷின் இந்தியாவுக்கான அன்றைய தலைமைச் செயலாளர் பிர்கென்ஹெட், இந்தியாவுக்கென ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் காட்டுமாறு ஜூலை 1925ஆம் ஆண்டு இந்தியர்களுக்குச் சவால் விடுத்தார்.

ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு தலைவராகப் பதவி வகித்த ‘நேரு குழு’ இந்தச் சவாலைக் கையிலெடுத்தது. அக்குழு சமர்ப்பித்த ‘நேரு அறிக்கை’ இந்தியாவுக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கைகளை வரையறுத்தது. இஸ்லாமியர்களுக்கான தனிவாக்காளர் தொகுதிமுறையை நிராகரித்தது அந்த அறிக்கை. மாறாக, ஒன்றுபட்ட வாக்காளர் தொகுதிமுறையில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க முடிவு செய்தது, அதுவும் 10 வருடங்களுக்கு மட்டுமே.

நேரு அறிக்கையில் கொண்டு வரவேண்டிய மாற்றங்களை, 14 அம்சக் கோரிக்கையாக லீக் முன்வைத்தது. இவை ஜின்னாவின் 14 அம்சக்கோரிக்கைகள் என்று அழைக்கப்பட்டன.

1929இல் முஸ்லிம் லீக் வகுத்தளித்த 14 அம்சக் கோரிக்கைகள்:

1.வகுப்புத்தீர்வு குறித்து காங்கிரஸ் காட்டிவரும் அனைத்து எதிர்ப்பையும் விலக்கிக்கொள்ள வேண்டும். அதனைத் தேசியத்துக்கு எதிரானது என்று வர்ணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

2. அரசுப் பணிகளில் இஸ்லாமியர்களுக்கான பங்கு அரசியலமைப்புச் சட்டத்திலேயே திட்டவட்டமாக நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்குரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

3. இஸ்லாமியர்களின் தனிநபர் சுதந்திரமும் கலாச்சாரமும் சட்டரீதியாக உத்திரவாதம் செய்யப்பட வேண்டும்.

4. சாகத் சஞ்ச் மசூதி சம்பந்தப்பட்ட கிளர்ச்சியில் காங்கிரஸ் பங்குகொள்ள வேண்டும். அந்த மசூதி முஸ்லிம்கள் வசம் வருவதற்குக் காங்கிரஸ் தனது தார்மீக நிர்ப்பந்தத்தைப் பயன்படுத்த வேண்டும்.

5. அஜான் அழைப்பதற்கும், தங்களது சமயவினை முறைகளை ஆற்றுவதற்கும் முஸ்லிம்களுக்குள்ள உரிமை எவ்வகையிலும் தடை செய்யக்கூடாது.

6. இறைச்சிக்காகப் பசுவதை செய்வதற்கு முஸ்லிம்களுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும்.

7. இஸ்லாமியர்கள் தற்போது பெரும்பான்மையினராக உள்ள மாகாணங்களில் எத்தகைய பிரதேச மறுசீரமைப்பு மூலமோ, எல்லைச் சீரமைப்பு மூலமோ அவர்களது பெரும்பான்மை எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது.

8.வந்தே மாதர கீதம் பாடுவது நிறுத்தப்பட வேண்டும்.

9. உருது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

10. உருது பயன்படுத்தப்படுவது கட்டுபடுத்தப்படமாட்டாது என்றும், அதற்கு எத்தகைய ஊறும் விளைவிக்கப்படமாட்டாது என்பதற்கும் சட்டரீதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

11. ஸ்தல ஸ்தாபன அமைப்புகளில் இஸ்லாமியப் பிரதிநிதித்துவ வகுப்புத்தீர்ப்பு, கோட்பாடுகளின் அடிப்படையில், அதாவது தனி வாக்காளர் தொகுதிகள், மக்கள்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

12.மூவண்ணக்கொடி மாற்றப்பட வேண்டும், இல்லையென்றால் முஸ்லிம் லீக் கொடிக்குச் சமத்துவ முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

13.முஸ்லிம் லீக், இஸ்லாமியர்களின் ஒரே அதிகாரப்பூர்வமான பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14.கூட்டு மந்திரி சபைகள் அமைக்கப்படவேண்டும்.

ஆனால், மோதிலால் நேரு இதனைp புறந்தள்ளினார். இவை, ‘மிகவும் மதிகெட்ட கோரிக்கைகள்’ என்றார். அவை விவாதிக்கப்படவே இல்லை. இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளானார் ஜின்னா.

பஞ்சாப் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவரான ஃபசல்-ஐ-ஹசன், அனைத்திந்திய முஸ்லிம்கள் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

i) தனிவாக்காளர் தொகுதிமுறையைத் தக்கவைக்கவேண்டும்.

ii) சிந்து பகுதியில் ஒரு புதிய முஸ்லிம் மாகாணத்தை உருவாக்குதல்.

iii) வடமேற்கு எல்லைப்புற மாகாணத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுப்பது.

iv) பஞ்சாபி மற்றும் பெங்காலி இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் வழங்குதல்.

1930ஆம் ஆண்டு நடந்த முதலாவது வட்டமேசை மாநாட்டில், மேற்சொன்னவையே இஸ்லாமியர்களின் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. இத்தகைய பாதுகாப்புகள் வழங்கப்படாவிட்டால், எம்மாதிரியான தலைமைக்கும் உட்படுவதாக இல்லை என்ற நிலையில் அவர்கள் இருந்தனர். முடிவில், முதலாவது வட்டமேசை மாநாட்டில் இவ்வகையிலான தீர்வும் எட்டப்படவில்லை. இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் இதே நிலையே தொடர்ந்தது. சிறுபான்மையினர் வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஒரு சமரசம் கொண்டுவர இந்தியத் தலைவர்களால் முடியவில்லை.

அதனால், இரண்டாம் வட்டமேசை மாநாடு முடிந்த பின்னர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மெக்டொனால்ட் ஒரு தீர்வு வழங்கினார். இஸ்லாமியர்கள், பட்டியலின மக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு தனிவாக்காளர் தொகுதிமுறை கடைபிடிக்கப்படும் என்பதே அத்தீர்வு. டாக்டர் அம்பேத்கர் இதனை வரவேற்றார். ஆனால், காந்தியோ பட்டியலின மக்களுக்குத் தனிவாக்காளர் தொகுதிமுறை வழங்கியதை எதிர்த்தார். ஹிந்து மக்களைப் பிரிக்கும் செயலாக நினைத்தார். இது மாற்றப்படாவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

அதனூடாகவே பூனா ஒப்பந்தத்தில், பட்டியலின் மக்களுக்கு ஒன்றுபட்ட வாக்காளர் தொகுதிமுறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1935ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டத்தில், இஸ்லாமியர்களுக்கான தனிவாக்காளர் தொகுதிமுறை உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், காங்கிரஸுக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை.

இதன்பின்னர் 1937ஆம் ஆண்டு நடந்த அரசியல்ரீதியான சம்பவங்கள் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருந்த விரிசலைச் சரிசெய்யமுடியாத அளவுக்கு அதிகரிக்க செய்துவிட்டன.

1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டப்படி, 1937ஆம் ஆண்டு நடந்த மாகாணச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றியைக் கண்டது. மெட்ராஸ், ஐக்கிய மாகாணம், பீகார், மத்திய மாகாணம், ஒரிசா ஆகிய இடங்களில் தனிப்பெரும்பான்மை பெற்றது. பாம்பே மாகாணத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதித் தொகுதிகளில் வெற்றிபெற்றது. அசாம், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அதிகத் தொகுதிகளில் வென்ற கட்சியாக உருவெடுத்தது. வங்காளம், பஞ்சாப், சிந்து மாகாணங்களில் மட்டுமே சிறுபான்மை வெற்றியைக் காங்கிரஸ் பெற்றது. ஒருபுறம், காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றியை ஈட்டியது.

மறுபுறம், முஸ்லிம் லீக் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. போட்டியிட்ட 458 தொகுதிகளில் வெறும் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸ் தான் போட்டியிட்ட 58 முஸ்லிம் தொகுதிகளில் 26 இடங்களில் வென்றது. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸும் முஸ்லிம் லீகும் ஒற்றுமையாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வெளிப்படையாகக் கூட்டணி என அறிவித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் ஒன்றாகவே வேலை பார்த்தனர்.

காங்கிரஸும் முஸ்லீம் லீக்கும் ஒரே மேடையில் ஒன்றாக வாக்கு சேகரித்தனர். பெரும்பாலான இடங்களில், ஒரே தொகுதியில் காங்கிரஸும் லீகும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளாமல் இருக்கும்வகையில் இருகட்சிகளும் பார்த்துக்கொண்டனர். அதனால்தான், காங்கிரஸ் வெறும் 58 முஸ்லிம் தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.

தேர்தலில், தனிப்பெரும்பான்மை கிடைக்கும் எனக் காங்கிரஸ் நினைத்திருக்கவில்லை. அதனால்தான், லீக்குடன் சேர்ந்து வேலை செய்தது காங்கிரஸ். ஆனால், வெற்றிப்போதை தலைக்கேறிய காங்கிரஸ் தேர்தலுக்குப் பிறகு, முஸ்லிம் லீக்குடன் கூட்டு அமைச்சரவை அமைக்க மறுத்துவிட்டது. ஐக்கிய மாகாணத்தில் காங்கிரஸ் – லீக் கூட்டு அமைச்சரவை உருவாக்க ஜின்னா வேண்டினார். ஆனால், காங்கிரஸ் இங்கே மிகப்பெரிய முட்டுக்கட்டை போட்டது.

ஐக்கிய மாகாணங்களை (இன்றைய உ.பி) பொறுத்தவரை, மொத்தம் இருந்த 64 முஸ்லிம் தொகுதிகளில் லீக் 24 இடங்களை வென்றிருந்தது. காங்கிரஸ் வெறும் ஓர் இடம் மட்டுமே. காங்கிரஸ் – லீக் கூட்டு அமைச்சரவையில் இரண்டு பேர் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தால் போதுமானது என்று லீக் கோரிக்கை வைத்திருந்தது. பதிலுக்கு, பஞ்சாப் மாகாணத்தில் தனிப்பெரும்பான்மை பெற்ற யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர் சிக்கந்தர் ஹையத்கான் அவர்கள், ஹிந்து மகாசபைக் கட்சித்தலைவர் ஒருவரைத் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வதாக அறிக்கை விட்டார்.

ஆனால், காங்கிரஸ் நிபந்தனைகள் என்ற பெயரில் முஸ்லிம் லீக்கையே பலிகேட்டது. ஐக்கிய மாகாணத்தில் காங்கிரஸ் – லீக் கூட்டு அமைச்சரவை ஏற்படவேண்டுமென்றால் முஸ்லிம் லீக் கீழ்க்கண்ட நிபந்தனைகளை ஒத்துக்கொள்ளவேண்டும் என்றது காங்கிரஸ்.

i) முஸ்லீம் லீக்கின் ஆட்சிமன்றக் குழுவைக் கலைத்துவிடவேண்டும்.

ii) இதன்பின்னர், நடக்கும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்களையே லீக் முழுமையாக ஆதரிக்க வேண்டும். லீக் தனது வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது.

iii) ஐக்கிய மாகாணச் சட்டசபையில் இருந்த லீக் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துவிட வேண்டும். முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் தனித்து இயங்காமல் காங்கிரஸ் கட்சி விதிக்கும் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்.

iv) மேலும், காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்டமன்றத்தில் எந்தக் கொள்கையைப் பின்பற்றவேண்டும் என ஆணையிடுகிறதோ, அதையே லீக் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதுகுறித்து வரலாற்றாசிரியர் மூன், இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘லீக்கிற்குக் காங்கிரஸ் அதனுடைய பங்கு உரிமையைத் தர முன்வரவில்லை, மாறாக, முஸ்லிம் லீக்கையே தன்வயப்படுத்திக்கொள்ள காங்கிரஸ் முயற்சித்தது’ என்கிறார்.

ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரெச்சர், 1937ஆம் ஆண்டுத் தேர்தலை ஒட்டி காங்கிரஸுக்கும் லீகுக்கும் இடையே ஏற்பட்ட இவ்விரிசல் பற்றி எழுதியிருப்பவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

‘தேர்தல் பிரச்சாரங்களின்போது காங்கிரஸும் லீக்கும் பெருமளவு ஒத்துழைப்புடன் செயல்பட்டன. குறிப்பாக ஐக்கிய மாகாணங்களில் கூட்டு அமைச்சரவை உருவாக்கப்படும் என்ற அளவுக்கான புரிதலுக்கு இருகட்சிகளுக்கும் வந்திருந்தன. ஆனால் இவை தேர்தலுக்கு முந்தைய நிலவரம், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.

தேர்தலுக்குப் பிறகு, எவ்விதச் சலுகைகளும் கொடுக்கவேண்டியத் தேவை காங்கிரஸுக்கு இருக்கவில்லை. லீக்கின் கூட்டு அமைச்சரவைக் கோரிக்கை காங்கிரஸால் அலட்சியத்துடன் அணுகப்பட்டது. நேரடியாக முற்றிலும் அது நிராகரிக்கப்படவில்லை. மாறாக ஏற்றுக்கொள்ளமுடியாத பல நிபந்தனைகளைக் காங்கிரஸ் அக்கோரிக்கையின் மீது வைத்தது.

1937ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியின் உடனடி விளைவாக அமைந்தது, முஸ்லிம் லீக்குடன் ஏற்பட்ட பிணக்குதான். வெற்றியின் போதையில் காங்கிரஸ் பிற கட்சிகளிடம் காட்டிய ஆதிக்க மனப்பான்மை என்பது ஓர் இமாலயத்தவறு. பின்னர் வந்த ஆண்டுகளில் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது’ என்று பதிவு செய்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ஆசாத் இதுகுறித்து கூறுகையில், ‘ஐக்கிய மாகாணத்தின் முஸ்லிம் லீக் ஒத்துழைக்க முன்வந்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லிம் லீக் கட்சியானது நடைமுறை சம்பந்தப்பட்டவரை காங்கிரஸுடன் கலந்திருக்கும். ஐக்கிய மாகாணத்திலிருந்துதான் (இன்றைய உ.பி) முஸ்லீம்லீக் மாற்றியமைக்கப்பட்டது என்பதை இந்திய அரசியல் நிலைமைகளைக் கவனித்து வந்துள்ள எல்லோரும் அறிவர். இந்த நிலைமையை ஜின்னா முழுதும் பயன்படுத்திக்கொண்டு, அவர் மேற்கொண்ட தாக்குதல்தான் இறுதியாகப் பாகிஸ்தான் ஏற்படுவதில் கொண்டு போய்விட்டது’.

வரலாற்றாசிரியர் மஜூம்தார் இதுகுறித்து பதிவு செய்துள்ள கருத்து மிக முக்கியமானது. ‘காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த முடிவானது புத்திசாலித்தனமற்ற ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது பேரழிவுக்கான அத்தனை பின்விளைவுகளையும் கொண்டிருந்தது. தனியானதொரு சமூகமாகத் தமக்கு எம்மாதிரியான அரசியல் எதிர்காலமும் இல்லை என்பதை இஸ்லாமியர்கள் முழுமையாக உணர்ந்தனர். காங்கிரஸின் இந்த இறுதி முடிவானது பிரிவினைக்கான பீடிகையாகத் தோன்றியது. அதனைத் தொடர்ந்து நடந்த தவிர்க்கமுடியாத சம்பவங்கள், பாகிஸ்தான் உருவாக்கத்துக்கு அடித்தளம் அமைத்தது.’

அதாவது, தனிவாக்காளர் தொகுதிமுறை இருந்தாலும்கூட பெரும்பான்மை ஹிந்துக்களின் ஆட்சியே இங்கு நடக்கும், அதிகாரத்தில் எவ்விதமான பகிர்வும் தமக்குக் கிடைக்காது என்கின்ற புரிதலுக்கு இஸ்லாமியர்கள் வந்தனர். இஸ்லாமிய அமைச்சர்கள் இருந்தாலும் அவர்கள் காங்கிரஸுக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் அல்லது காங்கிரஸ்காரர்களாக இருக்கவேண்டும் என்ற காங்கிரஸின் எண்ணம்தான் காங்கிரஸுக்கும் லீகுக்கும் இடையே மிகப்பெரும் விரிசலை உண்டாக்கியது. இந்தியா முழுமைக்கும் ஒரே பிரதிநிதியாகத் தான் மட்டுமே இருக்க வேண்டுமெனக் காங்கிரஸ் நினைத்தது.

மேலும், காங்கிரஸ் இஸ்லாமியர்களை எவ்வாறு அணுகியது என்பதை ராஜேந்திர பிரசாத் தன்னுடைய ‘India Divided’ எனும் நூலில் விளக்குகிறார். ‘1937 தேர்தலுக்குப் பின்னர், இஸ்லாமியர்கள் தங்கள் மத அடையாளத்தை விட்டுவிட்டு காங்கிரஸில் சேரும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்ட அழைப்பு, ஹிந்து மகாசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் அதே நேரத்தில் காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களுக்கு இம்மாதிரியான அழைப்புகள் விடுக்கப்படவில்லை.’

காங்கிரஸின் மனநிலையை பிரெச்சர் பதிவு செய்த கீழ்க்கண்ட உரையாடல் தெளிவாக நமக்குக் காட்டுகிறது. மார்ச் 1937ஆம் ஆண்டு நேரு ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தியாவில் தற்போது இருப்பது இரண்டே சக்திகள்தான், ஒன்று, பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம். மற்றொன்று, காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியத் தேசியம்’ என்றார். அதற்கு உடனடியாகப் பதில் கூறும் விதமாக, ‘இல்லை, மூன்றாவதாக ஒரு சக்தி உள்ளது, அவர்கள்தான் இஸ்லாமியர்கள்’ என்றார் ஜின்னா.

1937ஆம் ஆண்டு, அக்டோபர் 15 அன்று, லக்னோவில் பேசிய ஜின்னா, ‘ஹிந்துஸ்தான் ஹிந்துக்களுக்கே என்பதைப் பெரும்பான்மைச் சமூகம் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டது.’ என்றார். மேலும், ‘காங்கிரஸ் கட்சியின் தற்போதைய கொள்கை வகுப்புகளுக்கு இடையே கசப்பையும், மதவாதம் மோதல் ஏற்படுவதற்கே வழிவ குக்கும்’ என்றார்.

இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு ஜின்னாவுக்குக் கடிதம் எழுதிய காந்தி, ‘நான் படித்தவரையில் உங்கள் மொத்தப்பேச்சும் ஒரு போர்ப்பிரகடனம்போல உள்ளது’ என்றார்.

இதற்கு 1937ஆம் ஆண்டு நவம்பர் 5 அன்று பதிலளித்த ஜின்னா, தான் பேசியதைப் போர்ப்பிரகடனம் எனக் காந்தி நினைத்திருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாக எழுதினார். தான் பேசியது முற்றிலும் தற்காப்புக்காகத்தான் என்றும், தான் பேசியதை மீண்டும் ஒருமுறை படித்துப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட ஜின்னா, கடந்த 12 மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளைக் காந்தி சரியாகப் பின்தொடர்வதில்லை என்றும் கூறினார்.

அப்போதுகூட ஜின்னா பாகிஸ்தான் என்றத் தீர்வை நோக்கி நகர்ந்திருக்கவில்லை என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். 1937 நவம்பர் வரையிலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற தீர்வைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மேற்கண்ட ஜின்னா – காந்தி உரையாடலிலிருந்து நாமும் புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆனால், அதன்பின்னர் ஜின்னாவுக்கும் நேருவுக்கும் இடையே நடந்த உரையாடல் இந்தப் பிரச்சனையை இன்னும் மோசமாக்கிவிட்டது. ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹெக்டர் போலிதோ பதிவு செய்துள்ள உரையாடல் முக்கியமானவை. அவற்றையும் அதன் பின்விளைவுகளையும் அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.

(தொடரும்…)

 

______________

மேற்கோள் நூல்கள்
1. Abhinav Chandrachud, Republic of Religion : The Rise and fall of Colonial Secularism in India, Penguin Random House India (1st ed.2020)
2. Stanley A. Wolpert, Tilak and Gokhale: Revolution and Reform in the Making of Modern India, University of California Press (1962)
3. H M Seervai, Partition of India – Legend and Reality, Universal Law Publishing and Co Ltd (2nd ed.2021)
4. K M Munshi, Pilgrimage to Freedom, Bhavans (2nd ed.2018)
5. Ayesha Jalal, The Sole Spokesman: Jinnah, The Muslim League and the Demand for Pakistan, Cambridge University Press (1994)
6. Michael Brecher, Nehru : A Political Biography, Oxford University Press (1959)
7. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.3, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)
8. Maulana Abul Kalam Azad, India Wins Freedom: The Complete Version, Orient Blackswan (1st ed.1988)
9. Rajendra Prasad, India Divided, Hind Kitabs Publishers Bombay, (Reprint ed. May 1946)
10. Hector Bolitho, Jinnah : Creator of Pakistan, London : John Murray (1st ed.1954)
11. ப.திருமாவேலன், காந்தியார் சாந்தியடைய, மாற்று வெளியீட்டகம் (டிசம்பர் 2017)
12. கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி, தங்கம் பதிப்பகம் (2nd ed.2017)

உதவிய ஆராய்ச்சிக்கட்டுரைகள்
1. Ayesha Jalal & Anil Seal, Alternative to Partition: Muslim Politics between the Wars, Modern Asian Studies, Vol.15, No.3, Power, Profit and Politics: Essays on Imperialism, Nationalism and Change in Twentieth-Century India (1981), pp. 415 – 454
2. M. R. A. Baig, The Partition Of Bengal And Its Aftermath, The Indian Journal of Political Science, Vol. 30, No. 2 (April—June 1969), pp. 103 – 129

பகிர:
வாஞ்சிநாதன் சித்ரா

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *