டிசம்பர் 9, 1946. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காகக் கூட்டப்பட்ட முதல் அமர்வு, மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின்படியே அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அமர்ந்தது. ஆனால், அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் பிளக்கப்பட்டு, இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாவது உறுதியானது. அதன்பின்னர், மந்திரிசபைத் தூதுக்குழுவின் திட்டத்தை மூட்டைக்கட்டிவிட்டு, சர்வ அதிகாரங்களும் நிரம்பிய ஒன்றிய அரசை உருவாக்க உட்கார்ந்தது நம் அரசியலமைப்புச் சட்டநிர்ணயச் சபை.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் ஒன்றுபட்ட இந்தியாவை மட்டும் நாம் இழக்கவில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் தங்கள் அதிகாரங்களை இழந்ததும் அங்கேதான். மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின்படி, தகவல்தொடர்பு, பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் இவை மூன்று குறித்தான சட்டமியற்றும் அதிகாரம் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்திருக்கும். மற்ற அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கே!
நாம் முன்னரே பார்த்ததுபோல, அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காகக் கூடிய முதல் அமர்வு, மந்திரிசபைத் தூதுக்குழு திட்டத்தின்படியே அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அமர்ந்தது.
எழுதவிருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் விளக்கும்வகையில் டிசம்பர் 13, 1946 அன்று கொள்கை நோக்கத் தீர்மானத்தை (Objective Resolution) நிறைவேற்றுவதற்காக முன்மொழிந்தார் காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு.
இந்தியா சுதந்திரமான இறைமைமிக்க குடியரசு நாடாக அமையும் என இந்த அரசியலமைப்புச்சட்ட நிர்ணய அவை அறிவிக்கிறது.
பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள், சுதேச மன்னர் சமஸ்தானங்கள் மற்ற பிற பிரதேசங்கள் ஆகியவை இணைந்த ஒன்றிய அமைப்பாகச் சுதந்திரமான இறைமைமிக்க குடியரசு நாடாக இந்தியா அமையும்.
மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் நீங்கலாக, பிற எல்லா அதிகாரங்களையும் பணிகளையும் நிர்வாகங்களையும் மாநிலங்கள் பெற்றிருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அமையும் மாநிலங்கள் எஞ்சிய அதிகாரங்களுடன்கூடிய தன்னாட்சி பெற்ற உறுப்புகளாக விளங்கும்.
இறைமைமிக்க சுதந்திர இந்தியா மற்றும் அதன் அரசு அமைப்புகள், உறுப்புகள் ஆகியவற்றின் எல்லா அதிகாரங்களும் உரிமைகளும், மக்களிடமிருந்தே பெறப்படுகின்றன.
இந்தியாவின் எல்லா மக்களுக்கும், சமுதாய, பொருளாதார, அரசியல்ரீதியான நீதி உறுதியளிக்கப்படும். சட்டத்தின்முன் சம வாய்ப்பும், அந்தஸ்தும் நிலைநாட்டப்படும். பொதுமக்களுக்குச் சட்டத்துக்குட்பட்ட, பேச்சுச் சுதந்திரம், மதச் சுதந்திரம், வழிபாடு, தொழில், சங்கம் அமைத்தல் ஆகிய உரிமைகள் உறுதியளிக்கப்படும்.
சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் பகுதிகள், ஒடுக்கப்பட்ட வர்க்கம், பிற பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்குத் தேவையான போதிய பாதுகாப்புகள் அளிக்கப்படும்.
நீதியின் அடிப்படையிலும், நாகரிகம் மிகுந்த நாடுகளுடைய சட்டத்தின் அடிப்படையிலும், குடியரசினுடைய (இந்தியா) பகுதிகளின் ஒருமைப்பாடு மற்றும் நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் அதற்குரிய இறைமைமிக்க உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
இந்தப் பழமைமிக்க நாடு உலக அரங்கில் தனது நியாயமான, பெருமைக்குரிய இடத்தைப் பெறுகிறது. மேலும், உலக அமைதிக்கும் மனித இனத்தின் மேம்பாட்டுக்குமான முழுப்பங்களிப்பை உளமார்ந்த விருப்பத்துடன் புரிந்திடும்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமானது மூன்றாவது பத்தி மற்றும் நான்காவது பத்தி.
நான்காவது பத்தியில் சொல்லப்படுவது குறித்து ஏற்கெனவே இத்தொடரின் மூன்றாம் பகுதியில் பார்த்துவிட்டோம். இருப்பினும், அதை இங்கே மீண்டும் ஒருமுறை பார்த்துவிடலாம்.
நான்காவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இறைமை என்ற சொல்லுக்கான பொருளை மீண்டும் இங்கே பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
‘இறைமை’ என்பது ஆட்சி அதிகாரத்தில், வேறு எந்த நாட்டிற்கும் அடிபணியாமல் இருப்பது. நம் நாட்டு விவகாரங்களில் நாம் மட்டுமே ஈடுபடுவது. குடியரசு நாட்டில் இந்த இறைமை எங்கிருந்து வருகிறதென்றால், மக்களிடமிருந்துதான் வருகிறது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து. குடியரசு நாடு மக்களுக்கு மட்டுமே அடிபணிந்த ஒன்று. குடியரசு நாடு என்பது அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகளை அந்நாட்டு மக்களே தேர்வு செய்வது, மன்னராட்சிப் போலல்லாமல் நாட்டின் முதல் குடிமகனையும் மக்களே தேர்ந்தெடுப்பர்.
பிரிட்டிஷ் நாட்டை பொறுத்தவரையில், அவர்களின் நாடாளுமன்றமே சர்வவல்லமை மிக்கது. பிரிட்டிஷ் நாடாளுமன்றமே இறைமைமிக்கது. ஆனால், குடியரசு நாட்டில் மக்களே இறைமைமிக்கவர்கள்.
ஒரு நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் எழுதிவைக்கப்பட்டால், அந்த அரசியலமைப்புச் சட்டம்தான் நாட்டில் எல்லாவற்றுக்கும் தலையாயது. அப்படி நாட்டில் எல்லாவற்றையும்விட தலையாய ஒன்றாக இருக்கும் ஒரு சட்டப்பத்திரத்தை (அரசியலமைப்புச் சட்டம்) இயற்றுவதற்கான அதிகாரம் எனப்படுவது மக்கள் தந்த அதிகாரம்.
ஏனெனில், குடியரசு நாடு ஒன்றில் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள்தான் அரசியலமைப்புச்சட்ட நிர்ணய அவையில் அமர்ந்து அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவர். எனவே, குடியரசு நாட்டில் மக்கள்தான் தலையாயவர்கள். அவர்களே இறைமைமிக்கவர்கள். இந்தியாவில் மக்களிடமிருந்தே இறைமை என்பது பெறப்படுகிறது.
மேலே நான்காவது பத்தியில் நம்நாட்டின் ‘இறைமை’ மக்களிடமிருந்தே பெறப்படுவதாக வெளிப்படையாகவே அறிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அமர்ந்த நிர்ணயச் சபைக்கு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் அதிகாரம் என்பது மக்கள் கொடுத்ததே. ஆனால், இதில் சில முரண்பாடுகள் உள்ளன. அவற்றை இங்கே காண்போம்.
1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டப்படி, 1946ஆம் ஆண்டு பதினொரு மாகாணச் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபைக்குச் செல்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள். அதாவது, அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபைக்கு நடக்கும் தேர்தலுக்கான வாக்காளர்களையே மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். அதனால்தான், அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபைக்கான உறுப்பினர்களை மக்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இவை ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரும் தந்த அதிகாரம் அல்ல. ஏனென்றால், 1946ஆம் ஆண்டு பதினொரு மாகாணத்துக்கும் நடந்த தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தது வெறும் 14 சதவிகித மக்களே. ஏனெனில், அப்போதிருந்த 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை இருக்கவில்லை.
சொத்துரிமை படைத்த, வெறும் 14 சதவிகித மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. ஆகவே, அரசியலமைப்புச் சட்டநிர்ணயச் சபை என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கவில்லை. சொத்துரிமை படைத்தவர்களின் பிரதிநிதியாக மட்டுமே இருந்து அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியிருக்கிறது.
எனவே, ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அரசியலமைப்புச் சட்டநிர்ணயச் சபை அமையவில்லை என்பதே உண்மை.
0
அரசியலமைப்புச் சட்டநிர்ணயச் சபைக்குத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் 292 உறுப்பினர்கள். இவர்கள் பிரிட்டிஷ் இந்திய அரசில் இருந்த பதினொரு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
பதினோர் மாகாணங்கள்போக, பல பகுதிகள் சமஸ்தானம் எனப்படும் மன்னராட்சியின்கீழ் இயங்கிவந்த பகுதிகள் இருந்தன. அவர்களும் பிரிட்டிஷாருக்குக் கட்டுப்பட்டவர்களே! அந்த மன்னர் மாநிலங்களின் பிரதிநிதியாக.
அந்தச் சமஸ்தானங்களில், பெரும்பான்மையான நிலபுலங்களை வைத்திருந்த பெரும்பண்ணைக்காரர்கள், அரசியலமைப்புச் சட்டநிர்ணயச் சபையில் பங்குகொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது, இவர்கள் யாவரும் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரடி மக்கள் பிரதிநிதிகள் அல்லர்.
இப்படியாக ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாக அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை இல்லாமல்போனது மட்டுமே பிரச்னை அல்ல. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்கூட முழுவதுமாக அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் பங்கேற்கவில்லை என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு பிரச்னை.
குறிப்பாக, மேற்சொன்ன அரசியலமைப்புச் சட்டத்துக்கான கொள்கை நோக்கத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சபையில் கலந்துகொள்ளவில்லை. மொத்தம் தேர்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 292 பேரில், 73 பேர் முஸ்லிம் லீக்கைச் சார்ந்தோர். மன்னர் மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து பேசிய எம்.ஆர். ஜெயகர் என்கிற உறுப்பினர், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும், மன்னர் மாநிலப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட பின்னர் அரசியலமைப்புச் சட்டத்துக்கான கொள்கை நோக்கத் தீர்மானத்தை நிறைவேற்றலாமெனக் கூறினார். லீக் உறுப்பினர்களும் மன்னர் மாநிலப் பிரதிநிதிகளும் இல்லாமல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம்கூடச் சபைக்கு இல்லை என்பது அவர் கருத்தாக இருந்தது.
முஸ்லிம் லீக் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் வந்து கலந்துகொள்வதற்காக வழி ஏற்படுத்தவேண்டுமெனில் இக்கொள்கை நோக்கத் தீர்மானத்தை அவர்கள் வந்து கலந்துகொள்ளும்வரை ஒத்திவைக்கவேண்டும் என அவர் கருதினார்.
இதுகுறித்து 16.12.1946 அன்று அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் எம்.ஆர். ஜெயகர் பேசியவற்றைப் பார்ப்பது அவசியம்:
முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வராமல் போனால், மன்னர் மாநில உறுப்பினர்கள் வராமல்போவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. பின்பு என்ன நடக்கும்? ‘A’ பிரிவில் உள்ள மாநிலங்களுக்காக மட்டும் ஓர் அரசியலமைப்பை உருவாக்குவீர்கள். அந்த மாநிலங்களுக்கு மட்டுமானதொரு ஒன்றிய அரசை வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பலாம்.
அப்படி நடந்தால், நிச்சயமாக உங்களால் ‘B’ பிரிவில் இருக்கும் மாநிலங்களுக்கு அரசியலமைப்பை வகுக்க முடியாது, ஏனெனில் அங்கு முஸ்லிம் லீக்தான் பெரும்பான்மை. ஜின்னா கேட்பதுபோல் ‘B’ மற்றும் ‘C’ பிரிவு மாநிலங்களுக்கு அரசியலமைப்பு எழுதுவதற்காக, வேறொரு அரசியலமைப்பு அவை அமைக்கவேண்டிய விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்.
விருப்பப்படாதவர்கள்மீது அரசியலமைப்பைத் திணிக்க முடியாது என்ற மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின் அடிநாதத்தை முன்வைத்து, ‘அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் எங்கள் பங்கு எதுவும் இல்லாமல் ஆனதால், இந்த அரசியலமைப்பை எங்கள் மீது திணிக்கக்கூடாது’ ஒருசாரார் சொல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அப்படியானால், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்துக்கும் ஓர் அரசியலமைப்பை அமைக்கவேண்டும் என்ற நம் பெருமுயற்சி வீழ்த்தப்படும். இதனால், ஹிந்துக்களுக்கு ஓர் அரசியலமைப்பு, இஸ்லாமியர்களுக்கு ஓர் அரசியலமைப்பு, மன்னர் மாநிலங்களுக்கு வேறு அரசியலமைப்பு என்பதாக அமைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மையத்தில் ஒன்றிய அரசு என்ற ஒன்று அமைக்கப்படாமலே போகும். ‘B’ மற்றும் ‘C’ பிரிவு மாநிலங்கள் ஏதோவொரு வகையில் பாகிஸ்தான் போன்ற ஒரு குழுவை அமைத்துக்கொண்டாலும், அனைத்துப் பிரிவுகளுக்கும் மையமான ஓர் ஒன்றிய அரசையாவது பெறக்கூடிய ஒரு சாதகமாவது தற்போது உங்கள் பக்கம் உள்ளது.
ஆகையால், தற்போதைக்கான நிச்சயமான தேவை என்பது முஸ்லிம்களை இங்கே (சபைக்கு) அழைப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்துவிடுவது மட்டுமே. முஸ்லிம்கள் வருவதை நாம் இன்னும் கடினமானதாக ஆக்கிவிடக்கூடாது… முஸ்லிம் லீக் சபைக்கு வராது என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட பின்னரே அரசியலமைப்பை எழுதும்பணி தொடரவேண்டும். வரும் ஏப்ரல் மாதம் வரையாவது அரசியலமைப்புச் சட்டப் பணிகள் ஒத்திவைக்கப்படவேண்டும்…
‘அரசியலமைப்புச் சட்டநிர்ணயச் சபைக்கு வரமாட்டோம்’ என முஸ்லிம் லீக் இறுதியாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் நீங்கள் என்ன செய்யலாம் என்று முடிவெடுங்கள். ஆனால், முஸ்லிம் லீக் சபைக்கு வந்துசேராது என்று நாமாகவே முடிவுசெய்யக்கூடாது. அது நடைமுறை அரசியல் அன்று. அதுவரை கொள்கை நோக்கத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒத்திவைப்பதில் என்ன ஆகிவிடும்? எப்படியும் ஜனவரி 20 (1947) வரை, அதாவது நான்கு வாரங்களுக்கு நாம் எதுவும் செய்துவிடப்போவதில்லை.
அதுவரையிலாவது, முஸ்லிம் லீக் சபைக்கு வந்துசேருவதற்கும் விவாதங்களில் பங்கேற்பதற்குமான வழியை நாம் விட்டுவைக்கவேண்டும்… இத்தீர்மானம் முன்மொழியப்படும்பொழுதும் அதனைத்தொடர்ந்து நடக்கவிருக்கும் விவாதங்களின்போதும் சபையில் இருப்பதற்கும், தீர்மானம் சார்ந்த பங்களிப்புகளைத் தருவதற்குமான உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.
தயவுசெய்து, சமீபத்தில் லண்டனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முஸ்லிம் லீக் எழுப்பியிருக்கிற குறையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ‘செய்துமுடிக்கப்பட்ட செயல் ஒன்றின் அங்கமாக இருக்க நான் விரும்பவில்லை* என்று அவர் கூறியிருக்கிறார்.
*(‘I do not want to be presented with a fait accompli’ என்பதே லண்டனில் ஜின்னா கூறிய அசல் சொற்கள். Fait Accompli என்பது ஒரு ஃபிரெஞ்சு சொல். ‘ஒரு செயல் செய்வதால் யாருக்கு பாதிப்போ, அவர்களுக்கே அச்செயல் செய்துமுடிக்கப்பட்டது என்பதைத் தெரியப்படுத்தாமல், அச்செயலுக்குப் பதிலாக வேறு ஏதாவது செய்வதற்கோ அல்லது அச்செயலில் திருத்தம் கொண்டு வருவதற்கோ பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்படாமல், செய்து முடிக்கப்பட்ட செயலை அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்லிப் பாதிக்கப்பட்டவர்கள் மீது திணிக்கும் செயலை ஃபிரெஞ்சில் fait accompli என்பர். – ஆசிரியர் குறிப்பு)
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கொள்கை நோக்கத் தீர்மானம் என்பது மிக முக்கியமாக விவாதிக்கப்படவேண்டிய அம்சம். அத்தகையதை முஸ்லிம் லீக் இல்லாத நேரத்தில் செய்துமுடிப்பதன் மூலம், ஜின்னா கூறிய குறை நியாயமானதுதான் என்று அவர்கள் நினைக்கொள்ளவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு (முஸ்லீம் லீகுக்கு) வழங்கவிருக்கிறீர்களா?
இப்படிச் செய்வதன்மூலம், அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபைக்கு முஸ்லிம் லீக் வருவதை நீங்கள் மேலும் கடினமாக்குகிறீர்கள். இத்தீர்மானத்தின் மீது நான் கொண்டுவந்த திருத்தம் என்ன? ‘பொறுமையாகச் செயல்படுங்கள்’ என்பதே. அதனால் என்ன தீங்கு நிகழ்ந்துவிடப்போகிறது? ‘நாங்கள் பொறுமையாகச் செயல்படுவோம், ஆனால், உங்கள் சட்டத்திருத்தம் கேட்பதுபோல், முஸ்லிம் லீக்கைச் சபைக்கு அழைத்து வருவதற்காக நாங்கள் பொறுமையாகச் செயல்பட முடியாது’ என்பதாக நீங்கள் கூறினால் அது கண்ணியம் மிகுந்ததாக இருக்காது. மிகவும் அற்பமான ஒன்று.
‘முஸ்லிம் லீக் சபைக்கு வந்து கலந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்க நாங்கள் விரும்புவதால் இத்தீர்மான முன்மொழிவை ஒத்திவைக்கிறோம், ஏனெனில் இந்தக் கேள்வி (கொள்கை நோக்கத் தீர்மானம்) குறித்தான விவாதமும் இறுதி முடிவும் முஸ்லிம் லீக் சபையில் இருக்கும்பொழுது நடக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’ என்று நீங்கள் சொல்வீர்களானால் அதுதான் தகுந்த நேர்த்தியான செயலாக இருக்கும்…
இத்தீர்மானத்தை ஒத்திவைப்பதன் மூலம் முஸ்லிம்களின் ஒத்துழைப்பை நாம் நாடவேண்டும். நாம் பின்பற்றுவதாகச் சொல்லப்படும் மகாத்மா, இங்கிருந்து பல மைல்களுக்கு அப்பால் சரியான உறக்கமின்றி, உணவின்றி, பாழடைந்த உடல்நலத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார். நல்லெண்ணமும் நட்பெண்ணமும் கொண்ட ஒத்துழைப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தை (ஒத்துழைப்பை) வெல்ல முயற்சிக்கிறார். அவரை ஏன் நாம் எடுத்துக்காட்டாகப் பின்தொடரக்கூடாது?…
என் கோரிக்கையின் சாரம் இதுதான், இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நம்முடன் முஸ்லிம் லீக் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அல்ல, தீர்மானம் முன்மொழியப்படும் பொழுதிலிருந்தே அவர்கள் நம்முடன் உட்கார்ந்து பேசுவதற்கான வாய்ப்பை நாம் வழங்கவேண்டும். இதுதான் உண்மையான ஒத்துழைப்பாக இருக்கமுடியுமே தவிர, நீங்கள் முடிவெடுத்தபின் அவர்களை அழைத்து உங்கள் முடிவை ஒத்துக்கொள்ளவைப்பதல்ல…
உங்கள் சார்பில் (காங்கிரஸ் கட்சி) நான் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், வரவிருக்கும் பிரிவினை குறித்த ஆபத்துகளைத் தெரிவிக்கவேண்டியது என் கடமை. அதனைத் தவிர்க்கவேண்டியது நம் கடமை…
என்று தன் உரையை முடித்துக்கொண்டார் ஜெயகர்.
டாக்டர் அம்பேத்கர், ஃபிராங் அந்தோணி, ஹிருதய நாத் குன்ஸ்ரூ ஆகியோர் ஜெயகர் கொண்டுவந்த மேற்சொன்ன திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், சபையில் பெரும்பான்மையானோர் கொள்கை நோக்கத் தீர்மானம் முன்மொழியப்பட்டதை ஆதரித்தே பேசியிருந்தனர். அத்தோடு ஜெயகர் கொண்டுவந்த திருத்தத்தைச் சபை நிராகரித்தது. இந்த நிராகரிப்பே முஸ்லிம் லீக்குக்கு ஒரு பிரச்சார ஆயுதமாக மாறியது.
‘அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது, அரசியலமைப்பை எழுதுவதற்காகக் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் நபர்களை மட்டுமே கொண்ட கமிட்டிகளை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையை வெறும் குறுங்குழுவாகக் காங்கிரஸ் மாற்றிவிட்டது.
அதன்மூலம் மந்திரிசபைத் தூதுக்குழுவின் அறிக்கை கூறியவற்றுக்கு மாறான ஒன்றையே காங்கிரஸ் வழங்கி வருகிறது.’ என்று கூறிய முஸ்லிம் லீக், கொள்கை நோக்கத் தீர்மானத்தை இயற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபைக்கு அதிகாரம் இல்லை என்றும் அது சட்டவிரோதம் என்றும் கூறியது.
லீக்கின் ஒத்துழைப்பு தேவையில்லை என்பதைத்தான் காங்கிரஸ் நிரூபித்திருக்கிறது என்பதாக லீக் கருதியது.
இதனையடுத்து, டிசம்பர் 21 அன்று கொள்கை நோக்கத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அடுத்த கூட்டத்தொடருக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சபைக்கு வந்து சேர்ந்துகொள்வதற்காகவே இந்த ஒத்திவைப்பு என்று சொல்லப்பட்டது.
இதற்கிடையே 1947ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குத் தனது அடுத்தகட்ட நகர்வு பற்றிய முடிவை ஒத்திவைத்திருந்தது முஸ்லிம் லீக். ஆனால் அடுத்த கூட்டத்தொடர் ஜனவரி 20, 1947 ஆரம்பித்தது. ஜெயகர் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கொள்கை நோக்கத் தீர்மானத்தின்மீது கொண்டுவந்த திருத்தங்கள் திரும்பப் பெறப்பட்டன.
1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி ஜவாஹர்லால் நேரு கொள்கை நோக்கத் தீர்மானத்தின் மீதான தன் இறுதி உரையைப் பேசினார். தீர்மானத்தைச் சபைத்தலைவரான இராஜேந்திர பிரசாத் மீண்டுமொருமுறை வாசித்தார். அன்றே, எவ்விதத் திருத்தங்களும் இன்றி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் லீக்கின் செயற்குழு ஜனவரி 31,1947 அன்று, மிக நீண்ட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மந்திரிசபைத் தூதுக்குழு முன்வைத்த மாகாணக்குழு அமைப்பது பற்றிய விதிகளின் உண்மையான பொருள்விளக்கத்தைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மீண்டும் லீக் அத்தீர்மானத்தில் கூறியிருந்தது.
ஆரம்பம் முதலே மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தில் இருந்த மாகாணக் குழுக்கள் அமைப்பது பற்றிய விதிகளுக்குக் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்து வந்ததோடு, வெளிப்படையாக ஜூலை 10,1946 அன்று நேரு அளித்த பேட்டியில், ‘மாகாணக் குழுக்கள் அமைவதற்கான வாய்ப்புகளே இல்லை’ என்றார். கடைசிவரை இதில் தன் சரியான நிலைப்பாட்டைக் காங்கிரஸ் தெளிவாகக் கூறவே இல்லை.
இதனால் நவம்பர் 17,1946 அன்று ஜின்னா இந்தியாவின் அப்போதைய தலைமை ஆளுநர் வேவலுக்கு எழுதிய கடிதத்தில், ‘முஸ்லிம் லீக்குக்கு என்ன மாதிரியான உத்தரவாதம் வேண்டும் என்பதை என்னிடம் கேட்டிருந்தீர்கள்… (வேவல் ஜின்னாவுக்கு எழுதிய நவம்பர் 5, 1946 தேதியிட்ட கடிதத்தில் அவ்வாறு கேட்டிருந்தார்.) அவை என்ன என்று தங்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமை. முதலாவதாக, மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின் அடிப்படைகளுக்குக் காங்கிரஸ் தெளிவான மொழியில் ஒப்புக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, ஒருவேளை காங்கிரஸ் தான் சொன்ன சொல்லை மீறினால், தூதுக்குழுவின் அடிப்படைகளைச் செயல்படுத்துவதற்கும் அவற்றை அமல்படுத்துவதற்குமான வழிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் வகுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இவ்வாறு செய்தால் அது அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் வேலைகள் மீது அதிகாரத்தைச் செலுத்துவதாக இருக்கும் என்பதால் ஜின்னா கேட்ட உத்தரவாதம் பிரிட்டிஷ் தரப்பிலிருந்து தரப்படவில்லை.
இவற்றின் தொடர்ச்சியாக, மேலும், மே 16, 1946 அன்று அறிவிக்கப்பட்ட மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தை ‘காங்கிரஸ் ஏற்காத காரணத்தால் அத்திட்டம் தோல்வியடைந்தது’ என்று அறிவிக்கக்கோரி பிரிட்டிஷ் அரசை அழைத்தது லீக்கின் ஜனவரி 31,1947 தீர்மானம். அத்தோடு, அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் விவாதங்களும் அவை எடுத்த முடிவுகளும் அதிகாரத்தைத் தாண்டிய செயல் என்றும், செல்லுபடியற்றவை என்றும், சட்டவிரோதமானவை என்றும் அறிவித்து காலதாமதமின்றிச் சபையைக் கலைக்க வேண்டும் எனக் கோரியது.
அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துகொண்டே வந்ததால், ஜூன் 1948க்குள் அதிகாரம் முழுவதுமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் அட்லீ பிப்ரவரி 20, 1947 அன்று அறிக்கை வெளியிட்டார்.
அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபைக்கு வராமல் சபையைp புறக்கணித்த முஸ்லிம் லீக் சுதந்திரப் பாகிஸ்தான் அமைப்பதற்கான தீவிர வேலைகளில் இறங்கியது. ஆனால், மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தை முழுவதுமாகச் செயல்படவைக்க வேண்டும் என்பதே பிரிட்டிஷ், மவுண்ட்பேட்டன் பிரபுவுக்குக் கொடுத்திருந்த பணி. இந்தப்பணியில், அப்போது பதவியேற்றிருந்த இந்தியாவின் தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு முன் இருந்த சவால்கள்:
i) காங்கிரஸின் இடைக்கால அரசை டொமினியன் மந்திரிசபையாக அறிவிக்கவேண்டும் எனவும் அதன் அரசமைப்புத் தலைவராக இந்தியாவின் தலைமை ஆளுநர் இருந்தல் வேண்டும் என்பது காங்கிரஸின் கோரிக்கை. அதாவது, காங்கிரஸ் தான் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்றது.
ii) சமநிலைக் கொள்கை வேண்டும் என்பது முஸ்லிம் லீக்கின் கோரிக்கையாக இருந்தது. மேலும், அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் தேர்ந்தெடுக்கப்படும் இஸ்லாமியர்களை முஸ்லிம் லீக் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றது. (பெரும்பான்மையின் மூலம் காங்கிரஸ் இஸ்லாமியர்களின் உரிமைகளைp பறித்துவிடக்கூடாது என்பதால் அரசியலமைப்புச் சட்ட நிர்ணய அவையில் ஹிந்துக்களுக்குச் சரிசமமான பிரதிநிதித்துவத்தைக் கேட்டிருந்தது. சாப்ரு குழுவின் அறிக்கையும் இதைத்தான் சொன்னது என்பது குறிப்பிடத்தக்கது.)
iii) காங்கிரஸ் முற்றிலுமாக மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் டிசம்பர் 6, 1946 அன்று வெளியிட்ட பொருள் விளக்கத்திற்கேற்ப ஒப்புக்கொண்டதா?
ஆனால், இருவருக்கும் இடையே சமரசத்தைக் கொண்டுவர முடியாமல் போனதால் மவுண்ட்பேட்டன் ஜூன் 3 அன்று பிரிவினையை அறிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாவது உறுதியானது.
‘இந்தியத் துணைக்கண்டத்தில் நடந்த நாட்டுப்பிரிவினையால் அரசியலமைப்பு மீது விழுந்த விளைவு என்னவென்றால், ஊசல் குண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்றது. குறைந்தபட்ச அதிகாரம் உடைய கூட்டாட்சியை உருவாக்கும் யோசனையிலிருந்து கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களும், அவர்களைவிடத் தீவிரமாக அவர்களைப் பின்பற்றியோரும், சர்வ அதிகாரங்களும் நிறைந்த ஒரு கூட்டாட்சி முறையைக் கொண்டுவர நினைத்தனர். அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் இருந்த ஒரு சில உறுப்பினர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒற்றையாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவர எண்ணினார்கள். ஆனால், அச்சபையில் இருந்த குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தத்தால் அது நிகழாமல் போனது’ என்று கே. சந்தானம் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
ஆகவே ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த ஜவகர்லால் நேரு நிறைவேற்றிய கொள்கை நோக்கத் தீர்மானத்தின் நான்காவது பத்தியில் சொல்லப்பட்டதுபோல் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் இந்த அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மூன்றாவது பத்தியும் (அதிகாரம் மிகுந்த மாநிலங்கள்) நிறைவேறவில்லை.
‘ஒட்டுமொத்தத்தில், 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் அடிப்படை அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்வதென்ற முடிவுக்கு அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை வந்தடைந்தது’ என்று கே.சந்தானம் கூறுகிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாறு எங்கிருந்தெல்லாம் கடன்வாங்கப்பட்டுள்ளது, 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்திலிருந்து கடன்வாங்கியதில் என்ன பிரச்னை என்பது குறித்து இத்தொடரின் ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. அவை குறித்தும் கூட்டாட்சி குறித்தான சரத்துகள் குறித்தும் அடுத்த பகுதியில் விரிவாகக் காணலாம்.
(தொடரும்…)
______________
மேற்கோள் நூல்கள்
1. H M Seervai, Partition of India – Legend and Reality, Universal Law Publishing and Co Ltd (2nd ed.2021)
2. Constituent Assembly of India Debates (Proceedings) Vol 1, 13/12/1946
3. Constituent Assembly of India Debates (Proceedings) Vol 1, 16/12/1946
4. Constituent Assembly of India Debates (Proceedings) Vol 1, 17/12/1946
5. B.Shiva Rao, The Framing of India’s Constitution Vol.1, Indian Institute of Public Administration (1st ed. 1966)
6. B.Shiva Rao, The Framing of India’s Constitution : A Study, Indian Institute of Public Administration (1st ed. 1968)
7. K.Santhanam, Union – States Relations in India, Indian Institute of Public Administration : New Delhi (1st ed. Reprinted. 1963)
8. Durga Das Basu, Introduction to the Constitution of India (9th ed.1982)
9. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.3, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)
10. Maulana Abul Kalam Azad, India Wins Freedom: The Complete Version, Orient Blackswan (1st ed.1988)
11. ஆலடி அருணா, இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், விகடன் பிரசுரம் (டிசம்பர் 2017)
12. கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி, தங்கம் பதிப்பகம் (2nd ed.2017)
13. முரசொலி மாறன், மாநில சுயாட்சி, சூரியன் பதிப்பகம் (3rd ed.2017)