Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #19 – சிதைவுக்குள்ளாகும் இடஒதுக்கீடு எனும் சமரச ஏற்பாடு!

இந்திய மக்களாகிய நாம் #19 – சிதைவுக்குள்ளாகும் இடஒதுக்கீடு எனும் சமரச ஏற்பாடு!

இந்திய மக்களாகிய நாம்

ஹிந்துப் பெரும்பான்மையினால் பாதிப்புக்குள்ளான இஸ்லாமியர்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இருப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் சில பாதுகாப்புகளைக் கோரியிருந்தனர். இதனைக் கடைசிவரை வழங்குவதற்கு ஹிந்துப் பெரும்பான்மையும் காங்கிரஸும் தயாராக இருக்கவில்லை. இதுவே இந்தியத் துணைக்கண்டத்தில் இரு நாடுகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.

இதுவே, இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தையும் சிதைவுக்குள்ளாகிற்று. இஸ்லாமியர்கள் ஒன்றுபட்ட இந்தியாவில் தக்கவைக்கப்பட்டிருந்தால் கூட்டாட்சித் தத்துவம் இன்றுள்ளதுபோல பெரும் சிதைவுக்கு ஆளாகியிருக்காது. பாகிஸ்தானோடு பறிகொடுக்கப்பட்டவை ஒன்றுபட்ட இந்தியா மட்டுமல்ல, முறையான கூட்டாட்சித் தத்துவமும் மாநில உரிமைகளும்தான். அவற்றை முந்தைய பகுதிகளில் விரிவாகப் பார்த்தோம்.

எதிர்காலச் சுதந்திர இந்தியா அமையும்போது, அதன் அரசியலமைப்பில் போதிய பாதுகாப்புகள் தங்களுக்கு வேண்டும் எனக் கேட்டவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல.

இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பு குறித்து முடிவெடுக்க, இந்தியா மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பிரதிநிதிகளை வட்டமேசை மாநாட்டுக்கு அழைத்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு.

ஆனால், இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே பிரதிநிதியாகத் தன்னை தானே காங்கிரஸ் நிறுவிக்கொண்டபோதும், இந்தியாவில் இருந்த பல்வேறு தரப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஏனென்றால், ஒவ்வொரு மக்களுக்கும் வெவ்வேறு பாதுகாப்புகள் தேவையாக இருந்தன. காரணம், சாதி ஹிந்துக்கள் (பட்டியலின் மக்கள் மற்றும் பழங்குடிகள் அல்லாத ஹிந்துக்கள்), இஸ்லாமியர்கள், பட்டியலின மக்கள், பழங்குடிகள் ஆகிய வெவ்வேறு சமூக மக்கள் யாவரும் பொதுசமூகத்தில் வெவ்வேறு நிலைகளில் இருப்பவர்கள்.

1870களில் இருந்து, குறிப்பாகப் பசுவதை விஷயத்தில், இஸ்லாமியர்கள் ஹிந்துக்களின் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பட்டியலின மக்கள் ஜாதி ஹிந்துக்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பழங்குடிகள் பொதுசமூகத்துடன் தொடர்பற்ற வாழ்க்கையில் இருத்திவைக்கப்பட்டனர். இவ்வாறாகப் பல்வேறு சமூக மக்கள் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொண்டனர்.

ஏனெனில், ஹிந்துக்கள் மட்டும் இந்தியா அல்ல. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பழங்குடிகள் உட்பட இன்னும் பலதரப்பட்ட மக்கள் சேர்ந்ததுதான் இந்தியா. எனவே, இப்படி அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நாடாக இந்தியாவை ஒன்றுபட்டு வைத்திருக்க வேண்டுமானால், அனைவருக்குமான அரசியலமைப்பாக அது இருக்கவேண்டும். அனைவருக்குமான பாதுகாப்பை அது வழங்கவேண்டும். பெரும்பான்மையோ சிறுபான்மையோ எம்மக்களும் யாருடைய ஆதிக்கத்தின்கீழ் அடிபணிந்து வாழும்நிலை இருந்துவிடக்கூடாது.

இஸ்லாமியர்கள் கேட்டதுபோன்ற சில பாதுகாப்புகளைப் பட்டியலின மக்களும் கேட்டனர். அவர்களுக்காக வாதாடியவர் டாக்டர்.அம்பேத்கர். பட்டியலின மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய பல கோரிக்கைகளை வலுவாக முன்வைத்து போராடினார். பட்டியலின மக்களுக்குத் தனிவாக்காளர் தொகுதி வேண்டும் என்றவர் அம்பேத்கர். பிரிட்டிஷ் பேரரசும் அதனை வழங்கிவிட்டது.

ஆனால், அவ்வாறு பட்டியலின மக்களுக்குத் தனிவாக்காளர் தொகுதி வழங்கப்பட்டால், அது ஹிந்துச் சமூகத்தையே பிளக்கும் செயலாகிவிடும் என்று கூறிய காந்தி, சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்தார். காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி கண்ணீர் மல்க அம்பேத்கரைச் சந்தித்து பட்டியலின மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதிமுறையைக் கைவிட வேண்டினார்.

அதன் ஊடாக உருவானதே பூனா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி, பட்டியலின மக்களுக்கு வழங்கிவிருந்த 78 தனிவாக்காளர் தொகுதிக்கு பதிலாக, ஒன்றுபட்ட வாக்காளர் தொகுதிமுறையில் 148 தொகுதிகள் பட்டியலின மக்களுக்கென ஒதுக்கப்பட்டன. கடைசிவரை, அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தபோதும் அவற்றுக்கு ஜாதி ஹிந்துப் பெரும்பான்மையும் செவிசாய்க்கவில்லை. பிரிட்டிஷும் செவிசாய்க்கவில்லை.

1946ஆம் ஆண்டு தேர்தலில் அம்பேத்கரின் பட்டியல்சாதி கூட்டமைப்புக் கட்சி, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் படுதோல்வி அடைந்ததைக் காரணம்காட்டி மந்திரிசபைத் தூதுக்குழு உருவாக்கிய நிர்வாகச் சபையில் பட்டியலின மக்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைத்தது பிரிட்டிஷ். ஆக மொத்தத்தில், நலிவடைந்த சமூகங்களுக்குக் கோரிய சில பாதுகாப்புகளுக்குப் பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் முடிவில் அவர்களுக்கு வழங்கிய சமாதானம் ‘இடஒதுக்கீடு’ மட்டுமே.

இந்த இடஒதுக்கீடு என்பது இந்தியாவின் அடித்தட்டு மக்கள், அதிகார அமைப்புக்குள் ஒரு அங்கமாக நுழைவதற்கான ஒரு ஏற்பாடு.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முழுதாக அமலுக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதலில், யார் யாருக்கு இடஒதுக்கீடு வழங்கியது என்று பார்ப்போம்.

i) பட்டியலின மக்கள் மற்றும் பட்டியலினப் பழங்குடிகள் ஆகியோருக்கு நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது அவர்களின் மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப வழங்கப்பட்டது.

ii) பட்டியலின மக்கள் மற்றும் பட்டியலினப் பழங்குடிகளுக்கு அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இது மக்கள்தொகைக்கு ஏற்ப கொடுக்கப்படவில்லை. போதிய பிரதிநிதித்துவம் மட்டுமே கொடுக்கப்படும் என்றது அரசியலமைப்புச் சட்டம்.

iii) மேலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படலாம் என்றது. இதுவும் போதிய பிரதிநிதித்துவம் மட்டுமே.

அதாவது, பட்டியலின மக்கள், பட்டியலினப் பழங்குடிகள், பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் என மூன்று பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால், கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதலில் அங்கீகரித்திருக்கவில்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பிருந்தே மெட்ராஸ் மாகாணத்தில் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அமலில் இருந்து வந்தது. அதனை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பர். ஏனெனில், அது அனைவருக்கும் இடங்களை ஒதுக்கி வைத்திருந்தது. முன்னேறிய வகுப்பினருக்கும்கூட.

ஒரு கல்லூரியில் உள்ள ஒவ்வொரு 14 இடங்களையும் இவ்வாறாகப் பிரித்தது மெட்ராஸில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம்:

பிராமணர் அல்லாதார் – 6
பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்கள் – 2
பிராமணர்கள் – 2
பட்டியலின மக்கள் – 2
ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் இந்தியக் கிறிஸ்தவர்கள் – 1
இஸ்லாமியர்கள் – 1

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அமலில் இருந்த காரணத்தினால்தான் தங்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது என்று, செம்பகம் துரைராஜன் மற்றும் சீனிவாசன் என்ற இரு பிராமண மாணவர்கள், 1951ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.

முதன்முதலில் அமலான எந்தத் திருத்தங்களுக்கும் உட்படாத இந்திய அரசியலமைப்புச் சட்டம், கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு வழங்கவில்லை. எனவே, ‘கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று கூறிய உச்சநீதிமன்றம், ‘மெட்ராஸ் அரசு versus செம்பகம் துரைராஜன்’ எனும் இந்த வழக்கில், அதுவரை மெட்ராஸ் மாகாணத்தில் வழங்கிவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பே நம் அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் வருவதற்கு வழிவகை செய்தது. இத்தீர்ப்பு வந்தபின் பெரியார் தலைமையில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. செம்பகம் துரைராஜன் தீர்ப்பு வந்த ஒரு மாதக் காலத்துக்குள், மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த போராட்டங்களைக் குறிப்பிட்டு பேசிய நேரு, அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவந்தார்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், பட்டியலின மக்கள் மற்றும் பட்டியலினப் பழங்குடிகள் ஆகியோருக்குக் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கொடுக்கவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தத்தை வரவேற்று பேசிய மைசூர் மாகாணத்தின் எம்.ஷங்கரய்யா, ‘கல்வி நிலையங்களில் இடங்கள் ஒதுக்கப்படவில்லையெனில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எப்படி அரசாங்க வேலைகளைப் பெறமுடியும்’ என்றார்.

இடஒதுக்கீடு எதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது, இங்கே மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம். சமூகத்தில் பல்வேறு வகைகளில் பின்தங்கிய மக்களால் சமூகத்தில் முன்னேறிய நிலையில் இருக்கும் மக்களுடன் சரிசமமாகப் போட்டியிட முடியாது. இதற்கு மிக முக்கியமான காரணம், ஹிந்து மதம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வான சமூகக் கட்டமைப்பு. இதுகுறித்துப் பகுதி 9இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்கள் ஆயிரமாண்டுகளாகப் பொதுச் சமூகத்தால் தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டனர். பொதுக்கிணறுகளைப் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி கிடையாது. ஹிந்துக்களாகவே இருப்பினும் கோயில் நுழைவுக்கு அனுமதி இருந்ததில்லை. எல்லாரும் நடமாடும் தெருக்களில் நடமாடக்கூட பட்டியலின மக்களுக்கு அனுமதி கிடையாது. பள்ளிகளில் நுழைய அனுமதி கிடையாது. அவரவர் ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களைச் செய்ய மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இப்படிப் பல்வேறு தலைமுறையாகக் கல்வி மறுக்கப்பட்ட பின்னணியிலிருந்து வரும் பட்டியலின நபர் ஒருவரும், பல்வேறு தலைமுறைகளாகக் கல்வியின்மீதும் அரசாங்க வேலைகளின்மீதும் ஏகபோக உரிமை கொண்டாடிய முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த நபர் ஒருவரையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடியாது.

பிராமணர் சமூகம் உள்ளிட்ட பிற சில முன்னேறிய ஜாதி மக்களுக்கு சமூகத்தில் புழங்க எவ்விதத் தடையும் இருந்ததில்லை. அவர்கள் எங்கேயும் செல்லலாம், எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். என்ன செய்தும் பிழைத்துக்கொள்ளலாம். எனவே, வாழ்க்கையில் முன்னேற அவர்களுக்கு எவ்விதத் தடையும் கிடையாது. ஆனால், பட்டியலின மக்களுக்கு வாழ்வின் அடிப்படைகள் அனைத்துக்குமே தடைதான்.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் முன்னர்வரை சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆனால், சமஸ்கிருதத்தைப் பிராமணர்கள் தவிர்த்து யாரும் படிக்கக்கூடாது என்பது ஹிந்து சமுகத்தின் விதி. அப்போது, பிராமணர்கள் தவிர யாரும் மருத்துவம் கற்கவே முடியாது. அந்த விதிகள் மாற்றப்பட்ட பின்னரே பிற சமூகங்கள் மருத்துவம் கற்க முடிந்தது.

பட்டியலின மக்கள் மட்டும் ஜாதிக்கொடுமைகளுக்கு ஆளானவர்கள் அல்ல. வர்ணாசிரமக் கட்டமைப்பின்படி பிராமணர்களுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த பிற ஜாதிகளும் பல்வேறு வகையிலான ஜாதியக் கொடுமைகளை அனுபவித்து வந்தன. சமூகத்தில் முன்னேற பல தடைகள் இருந்தன. காலங்காலமாக, முன்னேறிய வகுப்பினர் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மீது நடத்திய ஆதிக்கமும் அவற்றால் அச்சமூகங்கள் அனுபவித்தவையும் எதனாலும் ஈடுசெய்யமுடியாதவை. அவை திரும்பப்பெற்றக்கொள்ள முடியாதவை.

பணம் இல்லாமல் பொருளாதாரத்தில் கீழே இருப்பவனுக்கு பணம் கொடுத்து வறுமையைப் போக்குவது என்பது காயம்பட்டவருக்கு மருந்து போடுவதைப் போல. மருந்து அக்காயத்தை ஆற்றிவிடும். பணம் இல்லாததனால் ஏற்படும் அவலங்களைப் பணத்தை கொடுப்பதன்மூலம் நாம் சரிசெய்து விடலாம்.

ஆனால், சமூகரீதியான பின்னடைவு என்பது வேறு. நம் உடலில் உள்ள உறுப்புகள் ஏதேனும் அகற்றப்பட்டால், என்ன செய்தாலும் முன்புபோல் நம்மால் காலம் முழுக்க இயங்கமுடியாதல்லவா? அதுபோல ஒரு சமூகம் என்பது உடலென்றால், ‘கல்வி’ அவ்வுடலுக்குக் கை, கால் போன்றதொரு முக்கிய உறுப்பு. பன்னெடுங்காலமாக அதனை அகற்றிவைத்திருப்பதன் மூலம் ஏற்பட்ட இழப்பை என்ன செய்தும் பழையநிலைக்குக் கொண்டுவர முடியாது.

பணம் கொடுப்பதன்மூலம் எந்தவொரு சமூகத்தின் பின்னடைவையும் முழுதும் சீர் செய்திட முடியாது. பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் ஓர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் அனுபவிக்கும் ஜாதியப் பாகுபாடுகளை, முன்னேறிய வகுப்பினர் எவரும், பொருளாதாரத்தில் தாழ்வுற்றிருந்தாலும், அனுபவிக்கமாட்டார்கள்.

வரலாற்றில் ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத சமூகரீதியான கல்விரீதியான இழப்புகளைப் பொருளாதாரத்தின் இன்மை கொண்டு மட்டுமே அளவிட முடியாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும், சமூகத்தின் அதிகார அமைப்பில் பல்லாண்டு காலமாக அங்கம் வகிக்காமல்போனதால், அவர்களை அதிகார அமைப்புக்குள் நுழைய வைக்க உதவும் திட்டம்தான் இடஒதுக்கீடு. இட ஒதுக்கீடு என்பதும் வறுமையை ஒழிக்கும் திட்டமல்ல. அது சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சீர்செய்யும் ஏற்பாடுகளுள் ஒன்று.

எனவேதான், அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களின் நோக்கம் பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுப்பதாக இருந்ததில்லை. பல்வேறு காலங்களில் நீதிமன்றங்களும் இதை ஆழ அறிவுறுத்தி வந்திருக்கின்றன.

ஓட்டுமொத்தத்தில், அனைவருக்குமான அரசியலமைப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் இல்லாதபோதும், இடஒதுக்கீடு என்பது அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கும் ஏற்பாடாக நம் அரசியலமைப்பில் அமைந்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படுவதற்கு முன் பல்வேறு வகைப்பட்ட மக்களுக்கு வேண்டிய போதிய பாதுகாப்புகள் கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தாலும் அவை ஏற்கப்படவில்லை. அவற்றுக்கெல்லாம் சமரசமாகவே இடஒதுக்கீடு என்ற ஏற்பாடு வழங்கப்பட்டது.

ஆகவே, சமூக ரீதியான பின்னடைவும் கல்வி ரீதியான பின்னடைவுமே இடஒதுக்கீட்டுக்கான அடிப்படை. ஆனால் இப்போது இந்த இடஒதுக்கீடு என்ற ஏற்பாடும் சிதைவுக்கு ஆளாகியுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு (EWS இடஒதுக்கீடு – Economically Weaker Section) கொடுப்பதற்காக, 2019ஆம் ஆண்டு பாஜக அரசால் அரசியலமைப்புச் சட்டம் திருத்தி எழுதப்பட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் EWS இடஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு மிகவும் ஆச்சரியமளிக்கும் தீர்ப்பாக அமைந்தது என கௌதம் பாட்டியா உட்பட பல்வேறு முன்னணி அறிவுஜீவி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஏன் இது ஆச்சரியமளிக்கும் தீர்ப்பு என்று சொல்கிறார்கள் என்றால், பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீடு என்கிற ஏற்பாட்டின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்கும் செயல். இது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள இடஒதுக்கீடு என்ற ஏற்பாடு குறித்த சரியான சட்டப்பார்வையும் வரலாற்றுப்பார்வையும் சமூகப்பார்வையும் அவசியம்.

எனவே, இங்கே பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கிய இடஒதுக்கீடு (EWS இட ஒதுக்கீடு) ஏன் இந்திய அரசியலமைப்புக்குப் புறம்பானது என்பதைப் பல்வேறு வழக்குகளின் உதவியுடன் விவரித்துள்ளேன். அதனூடே இடஒதுக்கீடு என்ற ஏற்பாடு குறித்த சரியான சட்டப்பார்வையையும் வரலாற்றுப்பார்வையும் சமூகப்பார்வையையும் பெற முடியும்.

முன்னேறிய வகுப்பினருக்குப் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை வழங்கும் 103வது அரசியல் சட்டத்திருத்தம் , அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதா?

பல ஆண்டுகளாகவே, இடஒதுக்கீடு சார்ந்த விவாதம் எழுகிறபோதெல்லாம் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இடஒதுக்கீடு இருக்கவேண்டும் என்ற குரல் முன்னேறிய வகுப்பினரிடமிருந்து வந்தபடியே இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 2019ஆம் ஆண்டுவரை சமூகரீதியாக மற்றும் கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடிகள் ஆகியோருக்கு மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

1991இல் நரசிம்ம ராவ் அரசு, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது. ‘இந்திரா சாஹ்னி’ vs. ‘இந்திய ஒன்றிய அரசு’ என்ற வழக்கின்மூலம் அத்தகைய பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வந்ததையடுத்து, அந்த இடஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டது. ஏனெனில் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ஒருபோதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்ததில்லை.

எனவே, பாஜக அரசு 2019ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 103வது சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. அது, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்குக் (Economically Weaker Section of Forward Class), கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்க வழிவகை செய்தது. இந்த அரசியல் சட்டத்திருத்தம் செல்லுமா? செல்லாதா? போன்ற கேள்விகள் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.

அரசியல் சட்டத்திருத்தம் ஒன்று அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு உள்ளது என அதனை வீழ்த்த முடியுமா? இந்த அரசியல் சட்டத்திருத்தத்தில் உள்ள சிக்கல் என்ன?

இந்தியாவில் உள்ள அனைத்துச் சட்டங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஏதேனும் சட்டம் இயற்றப்பட்டாலோ அல்லது ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிராக இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டாலோ , அத்தகைய சட்டம் ரத்து செய்யப்படும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

அப்படி ஏதேனும் ஒரு சட்டம் அமலில் வருவதற்கு, அரசியலமைப்பின் சரத்துகள் எவையேனும் இடைஞ்சலாக இருந்தால், அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய சட்டத்திருத்தம் செய்தபின்னர், அந்தச் சட்டத்தை அமல்படுத்தலாம். பொதுவாக, நாட்டில் உள்ள மற்ற சட்டங்களில் சட்டத்திருத்தம் செய்வதுபோல், அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய சரத்துகளில் சுலபமாக ஒரு திருத்தத்தை கொண்டுவர இயலாது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட பின்னர், மூன்றில் இரண்டு பங்கினர் ஓட்டளிக்க வேண்டும். மற்ற சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு இரு அவைகளின் இரண்டில் ஒரு பங்கு ஓட்டு இருந்தால் போதுமானது.

அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் எதை வேண்டுமானாலும் மாற்ற முடியுமா?

பொருளாதார இடஒதுக்கீடு என்பதை அரசியலமைப்புச் சட்டம் என்றும் அனுமதிக்காததால், அது அமலில் வருவது தடையாக இருந்தது. ஆனால் தற்போதுதான் அதற்குரிய சட்டத்திருத்தம் அரசியலமைப்பில் செய்துவிட்டார்களே, இனி என்ன பிரச்சனை? எனக் கேட்டால், ஒரு பிரச்னை இருக்கிறது.

நாடாளுமன்ற இரு அவைகளின் 2/3 பங்கு ஆதரவு இருக்கிறது என்பதால் சட்டத்திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தையே தங்களின் கட்சி கொள்கைகளுக்கு ஏற்றார்போல், மொத்தமாக ஒரு அரசாங்கத்தால் மாற்றிவிட முடியும் அல்லவா? ஜனநாயக நாட்டை, மன்னராட்சி நாடாக மாற்றிவிட முடியும் அல்லவா? எனவேதான் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் எல்லையை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் ‘அடிப்படை கட்டமைப்புக் கோட்பாடு’ என ஒன்றை நிறுவியது.

இப்படிப்பட்ட எல்லை ஒன்று இல்லையெனில் அரசியலமைப்பின் மூலம் அரசியலமைப்பையே அழித்துவிட முடியும். 1973ஆம் ஆண்டு ‘கேசவானந்த பாரதி’ versus ‘கேரளா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பில், இந்த ‘அடிப்படைக் கட்டமைப்பு’ எனும் கோட்பாட்டை உச்சநீதிமன்றம் நிறுவியது.

என்ன சொல்கிறது இந்த ‘அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு’?

பெரும்பான்மை இருப்பதால் மட்டுமே ஒரு அரசாங்கத்தால், அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் இஷ்டம்போல் மாற்றங்களைக் கொண்டுவர இயலாது. அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தவொரு சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலும் அத்தகைய சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை தகர்ப்பதாக இருக்கக்கூடாது.

அப்படி ஓர் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்குமாயின், அத்தகைய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செல்லாது என நீதிமன்றம் ரத்து செய்யமுடியும். இதுதான் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு.

எவை எவையெல்லாம் அடிப்படைக் கட்டமைப்புக்குள் வரும் என்பதையும் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் நிறுவியுள்ளது. இந்திய இறையாண்மை, மதச்சார்பின்மை, அனைத்து மக்களுக்கும் சம உரிமையும், சம வாய்ப்புகளையும் உறுதி செய்வது போன்ற இன்னும் சில அம்சங்களை இந்திய அரசியலமைப்பின் ‘அடிப்படை கட்டமைப்பு’ என உச்சநீதிமன்றம் பல்வேறு தருணங்களில் தீர்ப்பின்மூலம் நிறுவியுள்ளது.

103வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டை மீறுகிறதா?

ஆம், ‘அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு’ எனும் அம்சத்தை இந்த அரசியல் சட்டத்திருத்தம் மீறுகிறது. அப்படிப் பார்த்தால் அனைத்து வகையான இடஒதுக்கீடும் மேற்சொன்ன அம்சத்தை மீறுவதாக தானே உள்ளது? என்ற கேள்வி எழலாம், ஆனால் அது அப்படியில்லை. இங்கேதான் நாம் இந்த அம்சத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 14இல் நிறுவப்பட்டுள்ள ‘சமத்துவம்’ என்ற அம்சத்தின் பொருள், ‘அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவது’ என்பதுபோல் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும். ஆனால், அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவது என்பது பலருக்கான அநீதியாக முடிந்துவிடும்.

எப்படியென்றால், சமூகத்தில் ஒரே மாதிரியான நிலையில் உள்ளவர்களை மட்டுமேதான், ஒரே மாதிரி, அதாவது சமமாக நடத்த வேண்டும். வெவ்வேறு நிலைகளில் உள்ள மக்களை சமமாக நடத்துவது சமத்துவத்திற்கே எதிரானது. இதில் நிலை என்பது சமூகரீதியான கல்விரீதியான பொருளாதார ரீதியான நிலையைக் குறிக்கின்றது.

இங்கே சமத்துவம் என்பது சமமான நிலைகளில் உள்ள மக்களை மட்டுமே சமமாக நடத்தவேண்டும் என்பதே. சமமற்றவர்களை சமமாக நடத்துவதை நம் அரசியலமைப்புச் சட்டம் எதிர்க்கிறது. எனவேதான் முன்னேறிய வகுப்பு மக்களைத் தவிர்த்து மற்ற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

சரத்து 15(4) மற்றும் 16(4) மூலம் இவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பதன் அடிப்படைச் சரத்து 14இல் உள்ளது. சரத்து 14இல் உள்ள ‘சமத்துவம்’ என்பது அடிப்படைக் கட்டமைப்பு அம்சங்களில் ஒன்று. சரத்து 16(4)ன் மூலம் அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

எந்த வகையில் ‘பொருளாதார இடஒதுக்கீடு’ சமத்துவம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை மீறுகிறது?

‘நாடாளுமன்றமும் மாநிலச் சட்டமன்றங்களும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு உட்பட்ட அம்சங்களை மீற முடியாது. சரத்து 14இல் உள்ள சமத்துவம் என்ற அம்சம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று. சரத்து 16(1) என்பது சரத்து 14இன் ஒரு பகுதி’ என ‘இந்திரா சாஹ்னி vs. இந்திய ஒன்றிய அரசு’ (1999) எனும் வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதன் மூலம், எல்லாருக்கும் வேலைகளில் சமவாய்ப்பை உறுதி செய்யும், சரத்து 16இல், ஏதேனும் மாற்றம் கொண்டுவந்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு அம்சத்தை மீறுவதாக இருக்கக்கூடாது என்பது தெளிவாகிறது.

சரத்து 16 என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் என்பது உறுதியாகிவிட்டது. சரத்து 16இல் நிறுவப்பட்டுள்ள சமவாய்ப்பு என்ற அம்சத்தைப் பாதிக்காமல்தான் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். எவ்வெவற்றைக் கணக்கில் கொண்டு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் ‘நாகராஜ் vs. இந்திய ஒன்றிய அரசு’ எனும் வழக்கின் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதற்கு 2 சோதனைகளைத்தாண்டி அந்த இடஒதுக்கீடு நிற்க வேண்டும். அவை ‘அகலச் சோதனை’ மற்றும் ‘அடையாள சோதனை’.

முதலில் இந்த அகல சோதனையில் உள்ள 4 விதிகளைப் பார்ப்போம்.

ஒன்று, ஒட்டுமொத்தத்தில் இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது.

இரண்டு, இடஒதுக்கீட்டை பெறும் வகுப்புகள், போதுமான அளவு ‘பிரதிநிதித்துவம் அடையாத’, ‘பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களாக இருத்தல் வேண்டும்.

மூன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாகவே இருப்பினும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த ‘கிரீமி லேயர்’ பிரிவினராக இருப்பின் அவர்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது.

நான்கு, இடஒதுக்கீடு கொடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த நிர்வாகத்திறன் பாதிப்படையாமல் இருத்தல் வேண்டும்.

ஒன்று, ஒட்டுமொத்தத்தில் இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது.

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியோரின் நோக்கம் என்னவோ அதனை மீறியதாக ஓர் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் இருத்தல்கூடாது. அப்படி இருப்பின் அது மேற்சொன்ன அடையாளச் சோதனையை மீறிவிடும். அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய வரைவுக்குழுவின் தலைவரான அம்பேத்கர் சரத்து 16(4)ஐ அரசியலமைப்பு அவையில் விவாதத்துக்குக் கொண்டுவந்தபோது, கூறியவற்றைக் கவனிக்க வேண்டும். ‘சரத்து 16(1)ல் நிறுவப்பட்டுள்ள ‘வேலைகளில் சமவாய்ப்பு’ என்ற அம்சத்துடன் இடஒதுக்கீடு ஒத்துப்போக வேண்டுமெனில் அது சிறுபான்மை அளவில் இருக்க வேண்டும்.’ என்றார்.

இதனைக்கருத்தில் கொண்டு ‘பாலாஜி vs. மைசூர் அரசு’ எனும் வழக்கில் இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றம் 1962இல் தீர்ப்பளித்தது. அதனை மேற்கோள்காட்டி மீண்டும் ‘இந்திரா சாஹ்னி vs. இந்திய ஒன்றிய அரசு’ (1993) வழக்கில் உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீட்டின் அளவு 50% சதவிகிதத்தைத் தாண்டுவதாக இருக்கக்கூடாது எனத் தீர்ப்பளித்தது.

இப்போது ஏற்கெனவே ஒன்றிய அரசு வேலைகளில் அமலில் உள்ள 49.5 சதவிகித இடஒதுக்கீட்டோடு மேலும், பொருளாதாரத்தை நலிவடைந்தோருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கினால், ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 59.5% என ஆகி 50 சதவிகிதத்தைத் தாண்டிவிடும்.

‘80% பிற்படுத்தப்பட்டோர் இருக்கும் மாநிலத்தில் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது எனச் சொல்வது அர்த்தமற்றது’ என்று ‘கேரளா அரசு எதிர் என்.எம்.தாமஸ்’ என்ற வழக்கில் கூறியிருப்பதைக் கருத்தில்கொண்டு இந்திரா சாஹ்னி தீர்ப்பு மேற்கூறிய ‘50%’ விதியைத் தவிர்க்கமுடியாத சூழலில் தளர்த்திக்கொள்ளவும் அனுமதித்துள்ளது. அந்தவகையில்தான் தமிழ்நாட்டின் ‘69%’ இடஒதுக்கீடு என்பது ஒன்பதாம் அட்டவணையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. (தமிழ்நாட்டில் OBC,SC,ST ஆகியோரின் மொத்த மக்கள்தொகை 89% என்பது குறிப்பிடத்தக்கது.) அரசியலமைப்பின் ஒன்பதாம் அட்டவணையில் வைக்கப்பட்ட சட்டத்தின்மீது வழக்கு தொடுப்பது மிகவும் கடினம்.

ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினரை, பிற்படுத்தப்பட்டோராகக் கருதவேண்டிய தவிர்க்கமுடியாத சூழல் என்ன என்ற கேள்விக்கு, 103ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பதில் ஏதும் அளிக்கவில்லை. அதற்கு எந்த ஆணையத்தின் அறிக்கையும் ஆதரவாகவும் இல்லை.

இரண்டு, இட ஒதுக்கீட்டை பெறும் வகுப்புகள், போதுமான அளவு ‘பிரதிநிதித்துவம் அடையாத’ , ‘பிற்படுத்தப்பட்ட வர்க்க(ம்)’ங்களாக இருத்தல் வேண்டும்.

இடஒதுக்கீடு குறித்து முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், ‘இடஒதுக்கீடு என்பது ஒருவரின் ஜாதிரீதியாகக் கொடுக்கப்படுவதில்லை, அவர் ‘பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தை’ சேர்ந்தவராக இருக்கிறாரா? என்ற ரீதியில்தான் கொடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு ஜாதி முழுவதுமாக பிற்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்குமாயின், அந்த ஜாதி, சரத்து 16(4)ன், கீழ் பிற்படுத்தப்பட்ட வர்க்கமாக கருதப்படும். ஆனால் இடஒதுக்கீட்டுக்குத் தகுதிபெற பிற்படுத்தப்பட்ட நிலைக்கான வரையறையை ஒரு ஜாதி பூர்த்தி செய்தால் மட்டும் போதாது, அந்த ஜாதி அரசாங்க வேலைகளில் போதிய பிரதிநிதித்துவத்தை அடையாத ஒன்றாக இருத்தல் அவசியம்.’ (இ.சா.93 பத்தி:83)

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய வரைவுக்குழுவின் தலைவராக உள்ள டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் யாருக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் நோக்கம் கொண்டிருந்தார் என்பதைப் பார்ப்போம்.

சரத்து 16, அரசியலமைப்பு அவையில் முன்மொழியப்படும்போது அவர் பேசியவை:

‘அரசாங்க வேலைகளில் சமவாய்ப்பு அவசியம் என்று சொல்லப்படும் அதேவேளை, இதுவரை அதிகாரத்தில் நுழையாதிருந்த பல்வேறு வகுப்பு மக்களுக்கு, அதிகார அமைப்பில் பங்கு கொடுக்கும்பொருட்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ஆனால் அப்படி வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை எண்ணிக்கையிலான இடங்களாகத்தான் இருக்கவேண்டும். இங்கே நாம் இரு விஷயங்களைக் காக்கவேண்டும்,

ஒன்று, சமவாய்ப்பு கொள்கை, மற்றொன்று, பிரதிநிதித்துவம் அடையாத வகுப்புகளை அதிகார அமைப்புக்குள் நுழைய வைப்பதற்கான ஏற்பாடு செய்தல்.

‘பிற்படுத்தப்பட்ட’ நிலையில் உள்ள வகுப்புகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு கொடுத்தல் வேண்டும். இல்லையெனில் இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே அது அழித்துவிடும்’ என்றார்.

எனவே, இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை அரசியலமைப்பை இயற்றியவர்களின் நோக்கம் என்பது, போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்புகளுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்பதற்காகவே என்பது தெளிவாகிறது. அம்பேத்கர் கூறியது போல ஜாதி என்பது ஒரு மூடப்பட்ட வர்க்கம். இந்த வர்க்கத்தை மனதில் வைத்துதான் அரசியலமைப்பு அவை, சரத்து 16(4)ஐ இயற்றியுள்ளது. (இ.சா.93 பத்தி:82)

சரத்து 15(4)ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘பிற்படுத்தப்பட்ட வர்க்கம்’ என்பது ‘ஜாதிகளின் தொகுப்பு’ என்பதாகவே அம்பேத்கர் கூறியுள்ளார்.

ஒருவரின் ஜாதியினால்தான் அவர் தாழ்த்தப்பட்ட தொழிலைச் செய்யவேண்டியுள்ளது, அது தாழ்த்தப்பட்ட சமூக நிலையை மட்டுமல்ல ஏழ்மையையும் உருவாக்குகிறது. ஜாதி – தொழில் – ஏழ்மை மூன்றும் நம் சமுகத்தில் ஒன்றுக்கொன்று நெருக்கமாகப் பிணைந்ததாக இருக்கையில், ஜாதியின்மூலம் பிற்படுத்தப்பட்ட நிலையைக் கண்டறிவது எவ்வகையிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது அல்ல. (இ.சா. பத்தி: 82,83).

மேலும் அமெரிக்காவில் நிறத்தின் அடிப்படையில் நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒடுக்குமுறை அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் சிறுபான்மையாக உள்ள ‘வெள்ளைநிற இனம் அல்லாதோருக்கு’ பல்வேறு பல்கலைக்கழகங்கள் இடஒதுக்கீடு கொடுத்து வந்தது. அதுகுறித்து தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் மீண்டும் மீண்டும் அமெரிக்க உச்சநீதிமன்றம், ‘ஒடுக்குமுறைக்கு நிறம்சார்ந்த இனம் காரணமாக இருக்குமாயின் அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிகட்ட கொண்டு வரப்படும் இடஒதுக்கீட்டின் அடிப்படையும் நிறம்சார்ந்த இனமாக இருக்கலாம்’ என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது. (இ.சா.93 பத்தி 82).

பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தின் குடிமகன் என தகுதிபெற வேண்டுமெனில் அவர் சமூகரீதியிலும், கல்விரீதியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறும்வரை நிர்வாகத்துறைகளில் உயர்சாதியைச் சேர்ந்தோர் மட்டுமே இருந்தார்கள். சூத்திரர்கள், பட்டியலின மக்கள், பட்டியல் பழங்குடிகள், மற்றும் இவர்களைப்போன்ற முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சமூகங்களில் உள்ள, பிற்படுத்தப்பட்ட சமூகக் குழுவைச்சேர்ந்த மக்கள் நடைமுறையில் நிர்வாகத்துறையில் நுழையவே முடியாமல் இருந்தனர். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். (இ.சா.93 பத்தி: 85)

எனவே, இந்தியச் சூழ்நிலையில், சமூகரீதியில் பிற்படுத்தப்பட்டிருப்பதால்தான் கல்விரீதியாக ஒருவர் பிற்படுத்தப்பட்டவராகிறார். இவ்விரண்டு பின்னடைவும் சேர்ந்துதான் ஏழ்மைக்கு ஒருவரை இட்டுச்செல்கிறது, பின்னர் அந்த ஏழ்மை ஒருவரை கடைசிவரை சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவராகவே வைத்துவிடுகிறது. (இ.சா.93 பத்தி: 85)

‘ஜானகிபிரசாத் பரிமூ vs. ஜம்மு காஷ்மீர் அரசு’ (1973) மற்றும் ‘உத்தரப் பிரதேச அரசு vs. பிரதீப் டன்டான்’ (1974) ஆகிய வழக்குகளில், ‘சமூக மற்றும் கல்விரீதியான பின்னடைவைக் கண்டறிய ஏழ்மையை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளமுடியாது’ என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய இந்திரா சாஹ்னி தீர்ப்பு, ‘இடஒதுக்கீடு வறுமையை ஒழிக்கும் திட்டமல்ல’, என்றும் அது ‘சமூக மற்றும் கல்விரீதியான பின்னடைவை நீக்குவதற்காக’ என்று கூறியுள்ளது.

பின்னடைவைக் குறிக்க ஜாதி ஓர் அளவுகோல் என்பதை இந்திரா சாஹ்னி தீர்ப்பு ஏற்றுக்கொண்டது. ‘சமூகப் பின்னடைவு’ என்பதுடன் கூடுதலாக, பொருளாதாரத்தை ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, இடஒதுக்கீடு தருவதற்குப் பொருளாதாரம் ஒன்றை மட்டுமே தனியொரு அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது. (இ.சா.93 பத்தி:90) ‘

‘கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் vs. ஆலன் பக்கே’ என்ற இடஒதுக்கீடு சார்ந்த அமெரிக்க வழக்கை குறிப்பிட்டுப் பேசிய இந்திரா சாஹ்னி தீர்ப்பு, அவ்வழக்கு பொருளாதார அளவுகோலை பற்றிப் பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

GPA மற்றும் MCAT ஆகிய தேர்வுகளில் மாணவர்களிடையே மதிப்பெண் வித்தியாசங்கள் இருப்பதற்கு, அவர்களின் இனம், நேர்மறையான ஒரு பாதிப்பு காரணியாக உள்ளது, ஆனால் பொருளாதாரப் பின்னடைவு எவ்விதப் பாதிப்பையும் மதிப்பெண்களின் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில், பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள வெள்ளை இனத்தவர்களைவிடப் பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ள வெள்ளை இனத்தவர்கள் எவ்வகையிலும் குறைவான மதிப்பெண்களை எடுப்பதில்லை. ஆனால் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள கறுப்பின மக்கள், பொருளாதாரப் பின்னடைவில் உள்ள வெள்ளை இனத்தவர்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களையே எடுத்துள்ளனர். (இ.சா.93 பத்தி:46)

எனவே, முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு இடஒதுக்கீட்டில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், பின்னடைவைக் குறிக்க பொருளாதாரத்தை மட்டுமே ஒரு காரணியாக எடுத்துக்கொள்ள முடியாது. அது அரசியலமைப்பை இயற்றியோரின் நோக்கங்களுக்கு எதிரானதாக மட்டுமல்ல, அதன் அடிப்படைக் கட்டமைப்புக்கே எதிரானதாக உள்ளது.

ஒரு வர்க்கம், பிற்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வது?

சரத்து 16(4)ல் சொல்லப்பட்டுள்ளது போலவே, அந்தந்த அரசாங்கத்தின் கருத்தின்படி ஒரு வர்க்கத்தைப் பிற்படுத்தப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டறிய ஆணையம் ஒன்றை அந்தந்த அரசுகள் அமைக்கலாம். அந்த ஆணையம் தாக்கல் செய்யும் கணக்கெடுப்பு , மதிப்பாய்வுகளைக் கணக்கில் கொண்டபின் ஒரு வர்க்கத்தைப் பிற்படுத்தப்பட்டதாக அந்தந்த அரசுகள் கணக்கில் கொள்ளலாம். (இ.சா.93 பத்தி:89)

ஓர் ஆணையத்தைப் புதிதாக அமைக்கலாம் அல்லது ஏற்கெனவே வேறு ஆணையங்கள் சமர்ப்பித்த அறிக்கையையும் அரசு கணக்கில் கொண்டு பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களைக் கண்டறியலாம். அதாவது பிற்படுத்தப்பட்ட வர்க்கங்கள் என ஒரு வர்க்கத்தை முடிவுசெய்யும்முன் அதற்குரிய கணக்கெடுப்போ மதிப்பாய்வோ ஒன்று இருப்பது அவசியம். ஏனெனில், சமூகத்தின் சமகாலச் சூழ்நிலைகளை அரசின் நிர்வாகத்துறை அறிந்து வைத்திருப்பது அவசியம். (இ.சா.93 பத்தி:89)

1979ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய், பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களைக் கண்டறிய ‘பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல்’ என்பவரின் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தார். ‘மண்டல் ஆணையம்’ என்று அறியப்படும் இந்த ஆணையம், ‘3743’ ஜாதிகள் மற்றும் வர்க்கங்கள் பிற்படுத்தப்பட்டவையாக உள்ளன என்று கண்டறிந்தது. இந்த ஆணையம் இதற்காகப் பயன்படுத்திய வழிமுறைகளை நாம் இங்கு உற்றுநோக்கவேண்டியது அவசியம்.

1) சமூக மற்றும் கல்விரீதியான கள ஆய்வு,
2) 1931ஆம் ஆண்டின் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு,
3) நாடுமுழுவதும் சென்று சேகரித்த தனிப்பட்ட செய்திகள், தகவல்கள்,
4) பல்வேறு மாநிலங்கள் அறிவித்த பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களின் பட்டியல்

என இந்த நான்கை அடிப்படையாகக் கொண்டுதான் பிற்படுத்தப்பட்ட வர்க்கங்கள் கண்டறியப்பட்டன.

முதலில் சமூக மற்றும் கல்வி ரீதியான கள ஆய்வு மேற்கொள்ள, இந்தியாவில் இருந்த மிகப்பெரிய சமூகவியல் விஞ்ஞானி மற்றும் வல்லுநர்களைக் கொண்ட, ‘ஆராய்ச்சி திட்டமிடல் குழு’ பேராசிரியர் எம்.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு வழிகாட்டுவதற்காக, மத்தியப் புள்ளிவிவர அமைப்பின் இயக்குனர் டாக்டர்.கே.சி.சீல் என்பவர் தலைமையில் ‘தொழில்நுட்ப ஆலோசனைக்குழு’ அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில், பொருளாதார மற்றும் புள்ளிவிவர மாநிலப் பணியகத்தின் இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

இவர்களுடன் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும் இணைந்து செயல்பட்டார். இந்தக் களஆய்வை மேற்கொள்ளும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களின் புள்ளிவிவர அமைப்பிடம் கொடுக்கப்பட்டது. கள ஆய்வை மேற்கொள்ளும் ஊழியர்களுக்குப் பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டது.

அப்போதைய இந்தியாவில் இருந்த 406 மாவட்டங்களில் அனைத்திலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கிராமங்கள் மற்றும் ஒரு நகர்ப்புறத் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் களஆய்வு நடத்தப்பட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் ‘இந்திய மின்னணுவியல் ஆணையத்தின் தேசியத் தகவல் மையத்தில்’ கொடுக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

வர்க்கங்களின் பின்னடைவைக் கண்டறியும் அளவுகோல்களைத் தயார் செய்ய, வல்லுநர்களைக்கொண்ட துணைக்குழு ஒன்றை நியமித்தது தொழில்நுட்ப ஆலோசனைக்குழு. 4 சமூக அளவுகோல்கள், 3 கல்விரீதியான அளவுகோல்கள் மற்றும் 4 பொருளாதார அளவுகோல்கள் என மொத்தமாக 11 அளவுகோல்களை அந்தக்குழு கண்டறிந்தது.

இதில் சமூக அளவுகோல்களுக்கு 3 புள்ளிகளும் கல்விரீதியான அளவுகோல்களுக்கு 2 புள்ளிகளும் பொருளாதார அளவுகோல்களுக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டது.

மொத்தம் 11 அளவுகோல்களுக்கான மொத்த புள்ளிகள் 22. இதில் பாதி அதாவது 11 புள்ளிகளை அடைந்தால் ஒரு ஜாதி பிற்படுத்தப்பட்ட வர்க்கமாகக் கருதப்படும்.

இம்மூன்று வகையான அளவுகோல்களுக்கும் ஒரே மதிப்பீடு வழங்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பொருளாதாரத்தைவிடச் சமூக மற்றும் கல்விரீதியான அளவுகோல்களுக்கு அதிக புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதன் காரணம், ஒரு சமூகத்தின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக மண்டல் ஆணையமும் சமூக மற்றும் கல்விரீதியான காரணிகளைத்தான் குறிக்கின்றன. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின் ஊடாகத்தான் மண்டல் ஆணையம் இந்த முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார அளவுகோல் என்றவுடன் வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டவை அவை அல்ல. அந்தப் பொருளாதார அளவுகோல்கள் என்னவென்றால்:

1) குறிப்பிட்ட ஜாதி/ வர்க்கங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பச் சொத்து சராசரி, மாநிலச் சராசரியைக் காட்டிலும் குறைந்தது 25 சதவிகிதத்துக்கும் கீழே இருக்க வேண்டும்.

2) குறிப்பிட்ட ஜாதி/ வர்க்கங்களில், கூரை வீட்டில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை மாநிலச் சராசரியைக் காட்டிலும் குறைந்தது 25 சதவிகிதம் அதிகம் இருக்க வேண்டும்.

3) குறிப்பிட்ட ஜாதி/ வர்க்கங்களில், 50%க்கும் மேற்பட்டவர்களின் வீட்டிலிருந்து குடிநீர் மூலம் அரைக்கிலோமீட்டர் தாண்டியிருக்கவேண்டும்.

4) குறிப்பிட்ட ஜாதி/ வர்க்கங்களில் நுகர்வு கடன் வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, மாநில சராசரியைக் காட்டிலும் 25% அதிகமாக இருக்க வேண்டும்.

மேலே உள்ளவற்றை நாம்கூர்ந்து கவனித்தால், இவை வெறும் பொருளாதார அளவுகோல்கள் மட்டுமல்ல சமூகப்பொருளாதார அளவுகோல்கள் என்பது புரியும். இதுமட்டுமின்றி இந்த 11 அளவுகோல்களில், மற்ற 7 அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாமல், சமூக அளவுகோல்கள் நான்கை மட்டும் பூர்த்தி செய்தாலே 12 புள்ளிகள் பெறும் அந்த வர்க்கம் பிற்படுத்தப்பட்டதாக கருத்தில் கொள்ளப்படும்.

எனவே ஜாதிய/வர்க்க பாகுபாட்டின்மூலம் ஏற்பட்ட பாதிப்பைச் சமூகக்காரணிகள் கொண்டு அளவிடுவதன் முக்கியத்துவம் இந்த விஞ்ஞானப்பூர்வ கள ஆய்வில் தெரியவருகிறது. மேலும் பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒருவர் சந்திக்கும் பாகுபாட்டை அறியமுற்படும்போதும் அதில் சமூகக் காரணியை விலக்கிவிட்டுப் பார்க்க இயலாது என்பது புரியவரும்.

இந்த மண்டல் ஆணையத்தின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் முறையே 1982,1983 ஆகிய ஆண்டுகளில் ஒவ்வொருமுறை விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து அன்றைய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஆர்.வெங்கடராமன், ‘நாடாளுமன்ற அவையின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஒட்டுமொத்தமாக மண்டல் ஆணையத்தின் அறிக்கையை ஒருமனதாக ஏற்றனர்’ என்று கூறியுள்ளார்.

ஹிந்து அல்லாத பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 8.4% என்றும் ஹிந்து மதத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 43.73% எனவும் ஒட்டுமொத்தமாகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 52% என்றும் மண்டல் ஆணையத்தின் அறிக்கை கூறியது.

ஹிந்து மதத்தில் உள்ள சாதிகள் மட்டுமல்ல, ஜாதி அமைப்புகளை உறுதி செய்யாத மதமான கிறிஸ்துவ மக்களும் இந்தியாவில் சாதியத்தைப் பின்பற்றுகின்றனர். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட சமூகமாகவே கருதப்படுவதால், அனைவரையும் உள்ளடக்கியதாக, ‘பிற்படுத்தப்பட்ட வர்க்கங்கள்’ என வகைப்படுத்தப்படுகிறது.

மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று ‘பாலாஜி vs. மைசூர் அரசு’ வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டதைக் கருத்தில்கொண்டு, ஏற்கனவே பட்டியலினத்தவர்களுக்கும் பட்டியலினப் பழங்குடிகளுக்கும் 22.5% அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்ததால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று மண்டல் ஆணையம் பரிந்துரை செய்தது.

இப்படி மிகப்பெரும் செயல்முறைகளைக் கடந்துதான் 1991ல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (OBC) அரசு வேலையில் 27% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதற்கு அடிப்படையாக எந்த ஆணையத்தின் அறிக்கையும் இல்லை. இதற்கு ஆதரவாக சின்ஹோ ஆணையத்தின் அறிக்கையைதான் அரசாங்கம் காட்டுகிறது.

ஆனால் சின்ஹோ ஆணையம், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என எங்குமே பரிந்துரை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, ‘இந்தியச்சூழ்நிலையில் இடஒதுக்கீடு என்பது சமூக மற்றும் கல்விரீதியான பின்னடைவை நீக்குவதற்கான நடவடிக்கை மட்டுமே, அவற்றைப் பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு நீட்டிக்க முடியாது’ என்பதைத் தெளிவாகக்கூறியுள்ளது. ‘நலத்திட்டங்கள் பொதுவாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கும் போய் சேரவேண்டும்’ என்பதை மட்டும்தான் தன் பரிந்துரையாக முன்வைத்திருந்தது.

எவ்விதமான போதிய தகவல்களும் இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் வர்க்க பட்டியலில், எந்தச் சாதியையும் இயந்திரத்தனமாக சேர்க்கக்கூடாது. (இ.சா.1999 பத்தி:9)

எனவே, பொருளாதாரத்தை மட்டுமே வைத்து ஒரு வர்க்கம் பிற்படுத்தப்பட்டது என்று கருதப்பட்டால் அது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கே எதிரானதாகிவிடும் என்பது உறுதியாகத்தெரிகிறது.

மூன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாகவே இருப்பினும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த ‘கிரீமி லேயர்’ பிரிவினராக இருப்பின் அவர்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகவே இருப்பினும், பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக இருப்பின் அவர்கள் ‘கிரீமி லேயர்’ எனக் கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாது என இந்திரா சாஹ்னி தீர்ப்பு கூறுகிறது. அதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளது அந்தத் தீர்ப்பு.

1) ஒரு வர்க்கத்தினுள் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தால், அது ஒருபடித்தான வர்க்கம் என்ற தன்மையை இழக்கிறது

2) பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தில், பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை விலக்காவிட்டால், இடஒதுக்கீட்டின் பலனை அவர்கள் மட்டுமே அனுபவிக்க நேரிடும். அது இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே வீழ்த்திடும்.

3) பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்து கடந்து வந்தவர்களை, பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தில் உள்ள மற்றவர்களோடு ஒன்றாக வைத்திருப்பது, சமமற்றவர்களை சமமாக நடத்தியதாகக் கணக்கில் கொள்ளப்பட்டு சரத்து 14ஐ மீறியதாக ஆகிவிடும்.

இப்படிப்பட்ட மூன்று காரணங்களை முன்வைத்து, இந்திரா சாஹ்னி வழக்கில் தீர்ப்பெழுதிய 9ல் 8 நீதிபதிகள் ‘கிரீமி லேயர்’ பிரிவுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது எனத் தீர்ப்பளித்தார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன் என்ற நீதிபதி மட்டும், ‘பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக இருப்பினும் சமூகரீதியாக அவர்கள் பிற்படுத்தப்பட்டிருந்தால் அவர்களை முன்னேறிய வகுப்பினருடன் சேர்த்து சமமாகப் பார்க்கக்கூடாது’ என்று தனியாகத் தீர்ப்பு எழுதினார்.

முடிவில் பிற்படுத்தப்பட்ட வர்க்கத்துக்குக் கொடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை இந்திரா சாஹ்னி தீர்ப்பு செல்லும் என்றே அறிவித்தபோதும், அந்த இடஒதுக்கீடு ‘பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அதாவது கிரீமி லேயருக்கு பொருந்தாது’ என்றது.

இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினரை விலக்காமல் இருப்பது அல்லது முன்னேறிய வகுப்பினரைப் பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தில் சேர்ப்பது போன்றவைச் சட்டத்திற்கு புறம்பானது. இந்திய அரசியலமைப்பின் அடிநாதத்தையே பாதிக்கும் இவற்றை அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தினால்கூட அனுமதிக்க முடியாது. (இ.சா.1999 பத்தி 66)

கிரீமி லேயர் பிரிவினரை விலக்குவதால், பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதித்துவம் போதுமான அளவு இல்லாமல் போகுமென்றாலும், அக்காரணத்தைக்கொண்டு கிரீமி லேயர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது. (இ.சா.1999 பத்தி 54)

எனவே தற்போதுள்ள நிலை என்னவெனில், பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தில் உள்ள கிரீமி லேயர் பிரிவினர் பொதுப்பிரிவில்தான் போட்டியிட வேண்டும். குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளவர்களுக்கே இடஒதுக்கீடு கிடைக்கும்.

இங்கே பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையே பொருளாதாரம் தான். ஆகவே இங்கேயும் முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுகளில் குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படும்.

இங்கே முன்னேறிய வகுப்பினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என இரு பிரிவினருக்கும், குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் இடஒதுக்கீடு என்ற நிலை நிலவுகிறது. இதன் விளைவு என்னவெனில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் கல்விரீதியான பின்னடைவைக் கணக்கில் கொள்ளாமல், முன்னேறிய வகுப்பினருடன் அவர்களைச் சமமாக நடத்துவதாக ஆகிறது, (பொருளாதாரத்தை மட்டும் கணக்கில் கொண்டு).

ஆகவே இங்கே சமூகரீதியாகக் கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேறிய வகுப்பினரோடு சமமாக நடத்துவதால் , அது சரத்து 14இன் படி சமமற்றவர்களைச் சமமாக நடத்துவதாக ஆகிறது. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைத்துவிடுகிறது.

ஏனெனில் சமூகரீதியாக மற்றும் கல்விரீதியாகப் பின்னடைவை சந்தித்தோருக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பை இயற்றியவர்களின் நோக்கம்.

மாறாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினரில், குறிப்பிட்ட பிரிவினரை கிரீமி லேயராகக் கருதி விலக்கி வைப்பது அவசியம். ஆனால் இங்கே இடஒதுக்கீட்டின் அடிப்படையே பொருளாதாரம் என்றானபின், இந்த வகுப்பிலுள்ள கிரீமி லேயர் பிரிவினை அதாவது முன்னேறிய பிரிவினரை எந்த அளவுகோல் வைத்து விலக்குவது என்றொரு கேள்வி எழுகிறது. சமூக ரீதியான காரணங்களை அளவுகோலாக வைத்தால் இந்த ஒட்டுமொத்த வகுப்பையும் விலக்கிதான் வைக்கவேண்டும்.

கிரீமி லேயரை விளக்குவதற்கு பதில், பொருளாதார ரீதியாக கொடுக்கப்படும் இடஒதுக்கீடு, முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும்தான். பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பட்டியலின மக்கள், பட்டியலின பழங்குடிகள் ஆகியோருக்குக் கிடையாது. சமூக மற்றும் கல்விரீதியான பின்னடைவுக்காக வகைப்படுத்தப்பட்ட வர்க்கங்களில், முன்னேறிய வகுப்பினரைவிட வறுமை இருப்பினும் அவர்கள் விலக்கப்படுகிறார்கள். இது சரத்து 14,15,16ல் உள்ள சமத்துவ அம்சத்தைச் சீர்குலைக்கிறது.

ஏனெனில் இந்தியாவின் ஓர் இடத்தில் முன்னேறிய வகுப்பாகக் கருதப்படும் ஒரு சாதி, இந்தியாவின் வேறொரு பகுதியில் பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களுக்கான அளவுகோலைப் பூர்த்தி செய்யும்போது அது பிற்படுத்தப்பட்ட வர்க்கங்கள் பட்டியலில் சேர்க்கப்படும். ஆனால் இங்கே முன்னேறிய வகுப்பு ஏழைகளைவிட அதிக ஏழைகளாகவும் அதிக எண்ணிக்கையில் ஏழைகளை மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கொண்டிருந்தாலும் அவற்றுக்குப் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை மறுப்பது சமத்துவத்திற்கு எதிரானது.

ஆகவே, அகல விதியின் முக்கியமான மூன்று நிபந்தனைகளை, இந்தப் பிரச்சனைக்குரிய இடஒதுக்கீடு பூர்த்தி செய்யவில்லை என்பது தெளிவாகிறது.

‘மினர்வா மில்ஸ் vs. இந்திய ஒன்றிய அரசு’ என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதி, அரசியலமைப்பின் அடையாளத்தை உறுதி செய்யும் ‘அடையாளச் சோதனை’யை ஆய்வு செய்ய மூன்று வழிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

1) நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் கொள்கை நோக்கங்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைச் சேதமாக்குகிறதா?

2) முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், அரசியலமைப்பை வடிவமைத்தவர்களின் எண்ணங்களுடன் ஒத்துப்போவதாக இருக்கிறதா? என்ற வரலாற்றாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

3) சவாலுக்குட்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை, அரசியலமைப்பின் அடையாளத்துடன் ஒத்துப்போகும்படி, அதனை மாற்றியமைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

1) நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் கொள்கை நோக்கங்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை சேதமாக்குகிறதா?

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தின் அடிப்படையில் நலிவடைந்தோருக்கு மட்டும் இடஒதுக்கீடு கொடுக்கும் இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் நோக்கம், பிற்படுத்தப்பட்ட தன்மையைப் பொருளாதாரக் காரணியைக் கொண்டு மட்டுமே அளவிடுவதாக உள்ளது. பிற்படுத்தப்பட்டத் தன்மையை அளவிடுகையில் சமூக மற்றும் கல்விரீதியான காரணிகளை விடுத்துவிட்டு அளவிடுவது சரத்து 16இன் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானதாக உள்ளதை முன்னர் இந்தக்கட்டுரையில் பார்த்தோம். எனவே, அடையாளச் சோதனையின் முதல் விதியைச் இந்தச் சட்டதிருத்தம் மீறுகிறதெனத் தெளிவாகிறது.

2) முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், அரசியலமைப்பை வடிவமைத்தவர்களின் எண்ணங்களுடன் ஒத்துப்போவதாக இருக்கிறதா? என்ற வரலாற்றாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

சரத்து 16ஐ அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் முன்மொழியும்பொழுது, அரசியலமைப்பை வடிவமைத்த வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பேச்சுகளைக் கவனிக்கையில், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அவர் குறிப்பிடுபவர்கள், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் சாதி உள்ளிட்ட பல்வேறு பாகுபாடுகளால் அடைந்த பின்னடைவையே குறிக்கிறது.

அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. மேலும், அதிகார அமைப்பில் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட ஜாதிகள்/வர்க்கங்கள் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமலும் சிறுபான்மை முன்னேறிய வகுப்பினர் அளவுக்கு அதிகமான பிரதிநிதித்துவத்தோடு இருப்பதனால் மட்டுமே இடஒதுக்கீடு கொடுக்க முற்படுவதாக அம்பேத்கர் கூறினார்.

ஆனால் மேற்சொன்ன எண்ணங்களுடன் இந்தச் சட்டத்திருத்தம் ஒத்துபோகாமல் இருப்பதையும் கட்டுரையில் முன்னர் பார்த்தோம். ஆக, அடையாளச் சோதனையின் இரண்டாவது விதியையும் இந்தச் சட்டத்திருத்தம் மீறுகிறது.

3) சவாலுக்குட்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை, அரசியலமைப்பின் அடையாளத்துடன் ஒத்துப்போகும்படி, அதனை மாற்றியமைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பொருளாதார ரீதியாகக் கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டைப் பிற பிற்படுத்தப்பட்ட வர்க்கங்கள், பட்டியலின மக்கள், பட்டியலினப் பழங்குடிகள் ஆகியோருக்கும் நீட்டிப்பதன் மூலம் இந்தச் சட்டத்திருத்தத்தை அரசியலமைப்பின் அடையாளத்தைச் சிதைக்காத வகையில் தக்க வைக்க முடியும், அப்போது சமத்துவ அம்சம் சிதையாது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அப்படியே செய்தாலும் இடஒதுக்கீடு வெறும் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருப்பது அரசியலமைப்பை இயற்றியோரின் நோக்கங்களுக்குட்பட்டதா என்றால் இல்லை. பல்வேறு தீர்ப்புகளும், சமூகரீதியான கல்விரீதியான பின்னடைவுகளை விடுத்துப் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இடஒதுக்கீடு இருக்க முடியாது என்பதைத் தங்களது தீர்ப்பில் கூறிவிட்டன. மேலும், இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது, ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 59.5 சதவிகிதமாக ஆகி, இடஒதுக்கீட்டின் உச்சபட்ச அளவை மீறிவிடும்.

எனவே, இது அடையாள சோதனையின் மூன்றாவது விதியைப் பூர்த்தி செய்வது அரசியலமைப்பின்படி மிகவும் சிக்கலான ஒன்று.

ஓர் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செல்லபடியாகாது என்று நிறுவ வேண்டுமெனில், அது அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டைச் சிதைத்தால் மட்டுமே சாத்தியம்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் அம்சமாக உள்ள சரத்து 14இன் முகங்களாகச் சரத்து 15,16இம் இருப்பதால், இவ்விரு சரத்துகளின் அடிப்படையை ஓர் அரசியல்சட்டத்திருத்தம் குலைக்குமெனில் அது அரசியலமைப்பையே சிதைப்பதாக கொள்ளப்படும்.

நாகராஜ் வழக்கில் சொல்லப்பட்டுள்ள ‘அகலச் சோதனை’ மற்றும் ‘அடையாளச் சோதனை’யை இந்தப் பிரச்சினைக்குரிய 103வது அரசியல் சட்டத்திருத்தம் பூர்த்தி செய்யாததால் இது அரசியல் அமைப்பின் அடிப்படையை அனைத்து வகையிலும் சிதைக்கிறது என்பது நிரூபணம் ஆகிறது.

சமூகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்காக கேட்கப்பட்ட பாதுகாப்புகள் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்படவில்லை. அதற்குச் சமரசமாக வழங்கப்பட்ட இடஒதுக்கீடு என்ற ஏற்பாடு வழங்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக மட்டுமே முன்னேறிய வகுப்பினர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் 103ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் தற்போது தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது.

(முற்றும்)

 

______________

குறிப்புகள்
இ.சா. 1993 – இந்திரா சாஹ்னி vs. இந்திய ஒன்றிய அரசு (AIR 1993 SC 477)
இ.சா. 1999 – இந்திரா சாஹ்னி vs. இந்திய ஒன்றிய அரசு (AIR 1999 SCW 4661)

மேற்கோள் நூல்
Abhinav Chandrachud, These Seats Are Reserved, Penguin Random House India (1st.ed. 2023)

பகிர:
வாஞ்சிநாதன் சித்ரா

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *