இந்திய ஓவியர்கள் சிலரை நினைவு கொள்ளும் விதமாக அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புடன் அவர்களது படைப்புகளையும் அவை சார்ந்த விமர்சனங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்த ஓவியர்கள் அனைவரும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதில் இந்திய ஓவியர்கள்தான் இடம் பெறுவர் என்றாலும் இலங்கை, பாகிஸ்தான், பங்ளாதேஷ், ருஷ்ய ஓவியர்களுக்கும் இடம் உண்டு. இவர்களில் பெரும்பாலோரை நான் சந்தித்தது கிடையாது. ஆனால் நான் மதராஸ் ஓவியப்பள்ளியில் ஓவியம் கற்ற காலத்தில் (1956-1960) எனக்கு அவர்களது படைப்புகள் நெருக்கமானவையாக இருந்தன. அதுதான் அவர்களது விலாசம்.
நான் இவர்களைத் தேர்ந்தெடுக்கப் பின்பற்றிய வழி பற்றியும் கூறவேண்டும். தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் லலித கலா அகாதெமி, ‘கலா ரத்ன’ (ஃபெலோஷிப்) என்னும் தேசிய விருதை ஓவியர், சிற்பி, கலை விமர்சகர் போன்றவர்களுக்கு 1955 முதல் கொடுத்து வருகிறது. தனது நூல்கள் வெளியிடும் பிரிவில் தெரிந்தெடுத்த கலைஞர்களை அறிமுகம் செய்யும் விதமாக அவர்களது வாழ்க்கை, படைப்பு விவரம் படைப்புகளின் தொகுப்பு கொண்ட நூல்களையும் ஆங்கில மொழியில் Contemporary Indian Art என்னும் வரிசையில் மோனோகிராஃபாக வெளியிட்டு வருகிறது. விலையும் குறைவு.
நான் இந்த இரண்டின் துணையுடன் ஓவியர்களைத் தெரிவு செய்து அவர்களைப் பற்றின கூடுதல் விவரங்களைத் தேடிச் சேகரித்து ஓர் அறிமுகம்போலக் கொடுத்துள்ளேன். இதில் இடம் பெறுபவர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககால ஓவியர்கள். என்னிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர்கள்.
முற்றிலும் மேலைநாட்டு நவீன சிந்தனை வழியில் படைத்தவர்கள், இந்திய பாணியில் நவீனத்தைக்கலந்து சோதனைப்படைப்புகளை உருவாக்கியவர்கள், மேலைநவீன சிந்தனையிலிருந்து அகன்று மரபை மீட்டெடுக்க முனைந்தவர்கள் என்று இவர்களை மூன்று பிரிவுகளில் காணலாம் இந்திய நவீன கலை சிந்தனை வழிக்கு மைல்கல்லாக இவர்களை நான் கருதுகிறேன். ஓவியர்களை அவர்களது பிறந்த ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன். இவர்களை முதல்வரிசை ஓவியர்களாக நான் கருதுகிறேன்.
ஓவியர் குழு, விருதுகொடுத்த நிறுவனங்கள் போன்றவற்றின் செய்திக்குறிப்புகள் ஓவியர்களைப்பற்றி படிக்கும்போது புரிதலுக்கு உதவும் என்பதால் தொடக்கமாக வைத்துள்ளேன்.
- இந்தியாவின் தலைநகரில் மையம் கொண்டு இயங்கும் லலித் கலா அகாதமி ஓவிய, சிற்ப நுண்கலைக் கலைஞர்களை வளர்த்துப் பெருமைப்படுத்தும் பிரிவாகும். அரசின் பொருளுதவியுடன் தனித்து இயங்கும் (autonomous) அகாதமி ஆண்டுதோறும் அனைத்திந்திய கலைப்படைப்புப் போட்டி நடத்தி அதில் பத்துக் கலைஞர்களைத் தேர்வுசெய்துப் பரிசு வழங்கும். தொடக்கத்தில் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய். இப்போது ஒரு லட்சம்.
- லலித் கலா அகாதமி கலைஞர்களை அவர்களது வாழ்நாள் சாதனையைப் போற்றும் விதமாக ‘கலா ரத்ன’ என்னும் பட்டம் அளித்து சிறப்பிக்கும். ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்டவரைத் தேர்ந்தெடுத்தும், சில ஆண்டுகளில் ஒருவரைக்கூடத் தேர்ந்தெடுக்காமலும் இது நிகழ்கிறது. ரூ.25000/-பணமுடிப்பு, பட்டயம், சால்வை கொண்டது அது. 1955 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 56 கலைஞர்கள் விருது பெற்றுள்ளனர். தமிழ்நாட்டுக் கலைஞர்களான K.C.S. பணிக்கர் (ஓவியர் 1976 ), S. தனபால் (சிற்பி 1982 ), K. ஸ்ரீநிவாசுலு (ஓவியர் 1985) எல்.முனுசாமி ஆகியோர் இந்த விருது பெற்றவர்கள். (இன்னும் சிலர் இருக்கக்கூடும்; விவரம் கிட்டவில்லை).
- இப்பொழுது நேஷனல் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் என்று விளிக்கப்படும் ஓவியப்பள்ளி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் லாஹூர் நகரில் 1875 இல் ‘மாயோ கைவினைப் பள்ளி’ (Mayo School of Industrial Arts) என்னும் பெயரில் ஆங்கில அரசால் தொடங்கப்பட்டது. தெற்கு ஆசியாவில் இதுதான் இரண்டாவது பழைய பள்ளி. அந்தச் சமயத்தில் (1875) கொலை செய்யப்பட்ட இந்திய வைஸ்ராய் மாயோவின் நினைவாக அவரது பெயரைத் தாங்கியிருந்த இப்பள்ளி 1958 இல் பெயர் மாற்றம் கண்டது.
- Triennale India தலைநகரான டெல்லியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் பன்னாட்டு நுண்கலைவிழா போட்டியாகும். இது அனைத்து நாட்டவருக்கும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கும் நிகழ்ச்சியாகும். இந்திய மற்றும் வெளிநாட்டு வல்லுனர் குழுவால் தேர்வு செய்யப்படும் பத்துக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்படும். மேலும், இந்தியப் படைப்பாளிகளுக்கென தனிப் பிரிவும் உண்டு. இந்திய அரசின் கலைப்பண்பாட்டு அமைச்சகம் இதற்கு நிதி உதவி செய்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
- காளிதாஸ் சம்மான் விருது. 1980 முதல் ஆண்டுதோறும் மத்தியப் பிரதேச அரசால் வழங்கப்படும் இந்த விருது செவ்வியல் நடனம், இசை, நாடகம் மற்றும் ஓவிய/சிற்ப கலைகளில் உச்சம் தொட்டவர் என்று தேர்வுசெய்து அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இசை, நடனக்கலைஞருக்கு ஓர் ஆண்டிலும் நாடக ஓவிய/சிற்பத்துக்கு மறு ஆண்டிலும் விருது வழங்கியது. 1986-87 முதல் நான்கிற்கும் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஓவியக்குழுக்களின் செயற்பாடுகள்
இளம் துருக்கியர் (Young Turks) குழு
பம்பாயில் பி.டி.ரெட்டியை மையமாகக் கொண்டு ஒரு குழு 1941இல் செயற்பட்டது. ஜே.ஜே. ஓவியக்கல்லூரியின் முதல்வர் சார்லஸ் கெரால்ட் கொடுத்த உந்துதலால் தனது முதல் ஓவியக் காட்சியை நடத்தியது. அதன் உறுப்பினர்களான பி.எஸ். சென்யால் லாகூருக்கும் சைலொஸ் முகர்ஜியா டில்லிக்கும் பணி வாய்ப்புக்காகப் பயணப்பட்டனர். குழு விரைவிலேயே செயலிழந்துவிட்டது.
Progressive Artists’ Group, மும்பை
ஒருங்கிணைந்த இந்தியாவானது இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவானபின் 1947இல் PAG என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் The Progressive Artists’ Group என்னும் ஓவியர்களின் குழு இன்று இந்தியாவில் மேலை நவீன படைப்புச் சிந்தனையை அறிமுகப்படுத்தியவர்கள் என்று புகழப்படும் கலைஞர்களால் மும்பையில் இயங்கத் தொடங்கியது.
தங்களது காலத்து கலைச் சிந்தனையில் சலிப்புற்ற இளம் படைப்பாளிகளான ஸூஸா, ரஜா, ஆரா மற்றும் கலை விமர்சகர் ரஷித் ஹுஸைன் ஆகியோர் 1946 டிசம்பர் மாதம் 5 ஆம் நாளில் ஒன்று கூடினர். ஓவியக்காட்சிகளுக்குப் படைப்புகளைத் தெரிவு செய்வதில் பின்பற்றப்பட்ட முறையில் குறைபாடு உள்ளதாகக் கருதினர். அந்த முறையிலிருந்து விலகியவிதமாக ஒரு மாற்று முறையைக் கொணர்வதன் மூலம் தகுந்த படைப்புகளுக்கு விரிவான இடம் காட்சியில் கிட்டும் என நம்பினர்.
1947 செப்டெம்பர் மாதம் குழு தொடங்கப்பட்டபோது எஃப்.என். ஸூஸா (F. N. Souza), எஸ்.ஹெச். ரஜா (S. H. Raza), எம்.எஃப். ஹுஸைன், கே.ஹெச். ஆரா (K. H. Ara), ஹெச்.ஏ. கடே (H. A. Gade), எஸ்.கே. பக்ரே (S. K. Bakre) ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாகச் செயற்பட்டனர்.
குழு ஒரு குறிப்பிட்ட பொது அணுகுமுறை எதையும் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டாலும் அங்கு மேலை நாட்டு நவீனப் படைப்புச் சிந்தனை அழுத்தமாகப் படிந்தது. எழுத்தாளரும் கலை விமர்சகருமான முல்க் ராஜ் ஆனந்தால் அது இந்தியாவின் புதிய கலைப்பார்வையைப் பறை சாற்றும் குழு என்று புகழப்பட்டது.
குழு புதிய இந்தியப் புதிய படைப்பு சிந்தனை என்னும் தளத்தில் செயற்பட்டது. எவ்வித மனத் தடையும் இல்லாமல் படைக்கவேண்டும்; எந்த மரபுச் சிந்தனையும் நம்மைக் கட்டுப்படுத்த விடக்கூடாது. அடிப்படைச் சிந்தனை என்பது இங்கிருந்து பெறப்படலாம். ஆனால் அதுவே நம்மை வழிநடத்தும் கோட்பாடாக இருந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக நின்றார்கள்.
தொடக்கத்தில் ஆறுபேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த குழு பின்னர் மனிஷி தே, ராம் குமார், தையூப் மேத்தா ஆகியோரையும் 1950களில் க்ரிஷன் கன்னா, மோஹன் ஸமன்த், வி.எஸ். கைடோண்டே போன்ற படைப்பாளிகளைக் கொண்டதாக விரிவடைந்தது. ஆனால் அவர்கள் அவரவருக்கான தேர்ந்தெடுத்த வழியில் படைத்தனர். இந்திய நிலக் கருப்பொருளை Post-Impressionism, Cubism, Expressionism போன்ற மேலைப் படைப்புச் சிந்தனையில் இணைத்துப் பரிசோனைகளை மேற்கொண்டனர்.
குழு தொடங்கும்போது அதன் தூண்களாக விளங்கிய ஸூஸா, பக்ரே இருவரும் 1951இல் லண்டனுக்கும் ரஜா பாரிஸுக்கும் சென்றுவிட்டதால் குழு தனது செயற்பாட்டில் தளர்ச்சி காணத் தொடங்கியது. ஹூஸைனும் மும்பை, டெல்லி என்று மாறிமாறி வசித்தார். உறுப்பினரிடையே இருந்த தொடர்பும் நலிவடைந்தது. 1956 இல் குழு முறைப்படி கலைக்கப்பட்டது.
கொல்கத்தா ஓவியர் குழு
1943இல் வங்கத்தில் உருவான கொல்கத்தா ஓவியக்குழுவுக்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஓவியர் குழு என்னும் சிறப்பு உண்டு. ஆனால் 1953 இல் குழு கலைக்கப்பட்டுவிட்டது. பத்து ஆண்டுகளே இயங்கியபோதும் இந்திய ஓவியச் சிந்தனையில் மறுமலர்ச்சி உண்டாகக் காரணமாக இருந்தது. சமகால உலகப் படைப்புச் சிந்தனையுடன் இந்தியச் சிந்தனையையும் உலகின் பார்வைக்குக் கொணர்ந்தது.
அவநீந்தரநாத் டாகூரின் தம்பி மகனான ஸுபோ டாகூர் தனது ஓவியப் படிப்பை கொல்கத்தா அரசினர் ஓவியப்பள்ளியில் முடித்தார். உயர் கல்விக்காக சில ஆண்டுகள் லண்டன் சென்று மீண்ட அவர் கொல்கத்தாவில் ஓர் ஓவியர் குழுவைத் தொடங்க விழைந்தார். தனது நண்பர்கள், கமலா தாஸ் குப்தா, நிரோத் மஜூம்தார், கோபால் கோஷ், ப்ரோதோஷ் தாஸ்குப்தா மற்றும் பரிதோஷ் ஸென் ஆகியோரைக் கொண்ட ஓவியர் குழுவை 1943 இல் முறைப்படி கொல்கத்தாவில் தொடங்கினார். பின்னர் அக்குழுவில் ரதின் மித்ரா, கோபர்தன் ஆஷ் சுனில் மாதவ் ஸென் மற்றும் ஹேமந்த மிஷ்ரா ஆகியோர் இணைந்துகொண்டனர். அனைவருமே வங்கத்தில் பிறந்தவர்கள்.
குழுவின் முதல் ஓவியக்காட்சி 1945ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-18 தினங்களில் எண் 28, சௌரங்கி சாலை சர்வீஸஸ் ஆர்ட் கிளப் கூடத்தில் நடை பெற்றது. நிரோத் மஜூம்தார், ப்ரோதோஷ் தாஸ்குப்தா, கமலா தாஸ்குப்தா, கோபால் கோஷ், ப்ரான்க்ரிஷ்ன பால், பரிதோஷ் ஸென் ஆகிய ஏழுபேரின் படைப்புகள் காட்சியில் இடம் பெற்றன.
சிற்பி ராம் கிங்கர் பைஜ் உறுப்பினராக இல்லாதபோதும் காட்சியில் பங்கு கொண்டார். இந்தக் குழு சாந்தி நிகேதனில் முன்னெடுக்கப்பட்ட சுதேசி படைப்புவழிச் சிந்தனையான இந்திய மரபின் மறுமலர்ச்சி என்னும் தளத்திலிருந்து விலகி இந்தியக் கலைப்படைப்பு வளர்ச்சியைப் பன்னாட்டுக்கொப்பான விதமாக உயர்த்தவும் விரிவுபடுத்தவும் முனைந்தது.
அப்போது பிளவுபடாத வங்காள மக்கள் போர், பஞ்சம், மதம் சார்ந்த கொலைகள், இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் தோற்றத்தால் உடைந்த வங்கம் அதன் கொடுமைகள் அனைத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்தக் குழு தனது செயற்பாட்டுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வெறும் கற்பனைச் சார்ந்த அழகியல் படைப்புகளை நீக்கிவிட்டு நாட்டு நிலைமை, அரசியல் போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டவற்றை ஓவியங்களாக்குவோம். ஓவியத்திலிருந்து மதத்தை நீக்குவோம், படைப்பைப் பொதுவாக்குவோம் என்றது அந்த அறிக்கை. ஆனால் இது மத விரோத முன்னெடுப்பு என்று பலராலும் கண்டிக்கப்பட்டது. ‘ஆர்டிஸ்டிக் ஸ்காண்டல்’ என்றும் இகழப்பட்டது.
1940களின் இறுதியில் குழுவிலிருந்த பல ஓவியர்கள் பாரிஸ் நகரத்துக்குப் பயணம் சென்றனர். அவர்களில் நிரோத் மஜூம்தார்தான் பிரான்ஸ் அரசால் உயர்கல்விக்கான ஊக்கத்தொகை பெற்ற முதல் இந்தியர்.
இதன் தாக்கத்தால் 1944 இல் சென்னையில் K.C.S. பணிக்கரின் வழிநடத்தலில் ஒரு குழு (Progressive Painters Association) தொடங்கப்பட்டது. 1947 இல் மும்பையில் ஒரு குழுவும் (Progressive Artists Group ) 1949இல் தலைநகரில் ஒரு குழுவும் (Delhi Shilpi Chakra) தொடங்கப்பட்டது.
டில்லி சில்பி சக்ரா குழு
பம்பாய் முன்னேற்றக் குழு 1947இல் உருவானது. அதைத் தொடர்ந்து டில்லி சில்பி சக்ரா குழு தொடக்கம் கண்டது. பி.சி.சென்யால், கன்வல் கிருஷ்ணா, கே.எஸ். குல்கர்னி, தன்ராஜ் பகத், பி.என். மகோ போன்றோரைக் கொண்ட இந்தக் குழு சமகால முன்னேற்றங்களுக்குத் தக்கவாறு மக்களின் ஆத்மாவை உள்ளடங்கிய படைப்புகளைக் கலைஞர்கள் உருவாக்கவேண்டும் என்னும் செயற்பாட்டுடன் இயங்கியது. கலைப்படைப்புகளைச் சந்தைப்படுத்துவதிலும் புதிய வழிகளைப் பின்பற்றியது. கலைஞர்கள் கூடி விவாதிப்பதும் தொடர்ந்து நடந்தது.
குழு உறுப்பினர்கள் தங்களது படைப்புகளை சாந்தினி சவுக், கரோல்பாக், டில்லி பல்கலைக்கழக வளாகம் போன்ற இடங்களில் 1949-1950களில் காட்சிப்படுத்தினர். அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகை தந்தனர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் படைப்புக்களை வாங்கினர். முழுப்பணமும் கொடுக்க இயலாதவர் தவணை முறையில் தரும் வழியும் கைகொள்ளப்பட்டது. இந்தக்குழு துடிப்புடன் 1960 வரை செயற்பட்டது.
டில்லியில் உள்ள லலித் கலா அகாதெமி ஒன்பது ஓவிய/சிற்பக் கலைஞர்களை நுண்கலைப் படைப்பு மேதைகள் என்று அறிவித்துள்ளது. அவர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு:
சாங்கோ சவுத்தரி, எம்.எஃப். ஹுஸைன், கோபால் தேசுகர், கே.சி.எஸ்.பணிக்கர், சதிஷ் குஜ்ரால், ஹெப்பர், ராம்குமார், என்.எஸ். பெந்தரே, எஸ். சாவ்தா.
இந்தியத் தொல்லியல் துறை (கலாசாரத் துறை அமைச்சரவை) 1976இல் ஒன்பது கலைஞர்களின் படைப்புகளை நாட்டின் சொத்தாக அறிவித்தது:
ஜாமினி ராய், அவனேந்திரநாத் டாகூர், அமிர்தா ஷெர்-கில், ககனேந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், ருஷ்யக் குடிமகனான நிகோலஸ் ரோரிச், ரவீந்திரநாத் தாகூர், ராஜா ரவிவர்மா, ஸைலோஸ் முகர்ஜியா.
(தொடரும்)
படம்: ஓவியர் நந்தலால் போஸ்
Waiting for the next chapter to come…