நந்தாலால் போஸ் (3 டிசம்பர் 1882-16 ஏப்ரல் 1966) பிகார் மாநிலத்தில் முங்கேர் மாவட்டத்தில் கரக்பூர் என்னும் ஊரில் பிறந்தார். நடுத்தர வருமானம் கொண்ட வங்காளக் குடும்பம். அவரது தந்தை தர்பங்கா பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
1898இல் தனது 18ஆவது வயதில் போஸ் உயர்பள்ளிக் கல்விக்காக கொல்கத்தாவுக்குப் புறப்பட்டார். மத்தியக் கல்லூரியின் பகுதியான ஒரு பள்ளியில் 1902இல் இறுதித் தேர்வு எழுதி பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். அந்தக் கல்லூரியிலேயே பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.
முறையாக ஓவியம் கற்க மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார் நந்தாலால் போஸ். எனினும் இல்லத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். 1905இல் கல்லூரியை மாற்றியபோதும் தேர்வில் திரும்பவும் தோல்விதான். பெற்றோரிடம் தொடர்ந்து நச்சரித்து அவர்களைச் சம்மதிக்கச் செய்து கொல்கத்தா அரசு ஓவியப் பள்ளியில் சேர்ந்தார் போஸ். அங்கு அவநேந்திரநாத் தாகூரிடம் மாணவராக ஓவியம் பயின்றார்.

1922இல் சாந்தி நிகேதனின் நுண்கலைப் பிரிவான கலாபவனின் முதல்வர் பதவியை ரவீந்திரநாத் தாகூரின் அழைப்பை ஏற்று ஒப்புக்கொண்டார். தாகூர் குடும்பத்தின் பாதிப்பு அவரிடம் மிகுந்து காணப்பட்டது. அஜந்தா ஓவியங்கள்தான் அவரது வழிகாட்டி.
இந்தியத் தொன்மைக் கலாசாரத்தை மீட்டெடுக்கும் இயக்கம் தொடங்கப்பட்டிருந்த சமயம் அது. அவரும் அதில் இணைந்துகொண்டார். உப்புக்கு வரி செலுத்த மறுத்து காந்தி முன்னெடுத்து தண்டி சத்தியாகிரகப் போராட்டத்தின் தாக்கத்துக்கு உள்ளானார். கையில் பிடித்த தடியுடன் காந்தி நடந்து செல்லும் விதமாக லினோகட் செதுக்கல் முறையில் கருப்பு – வெள்ளை ஓவியமாக வரைந்தார். அது சத்தியாகிரகப் போராட்ட இயக்கத்தைச் சொல்லும் படைப்பாக அடையாம் காணப்பட்டு, பரவலாகப் பாராட்டப்பட்டது.
1938இல் ஹரிபுராவில் நிகழ்ந்த அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு காந்தியின் வேண்டுகோளை ஏற்று ஏழு பேரோவியங்களை தீட்டிக் கொடுத்தார். மாநாட்டுத் திடலில் அவை காட்சிப்படுத்தப்பட்டன.
நந்தாலால் போஸின் மாணவர்களில் பினோத் பிஹாரி முகர்ஜி, ராம் கிங்கர் பைஜ், கே.ஜி. சுப்ரமணியன், ஏ.ராமசந்திரன், சத்யஜித் ரே, கொண்டபள்ளி சேஷகிரிராவ் போன்றவர் குறிப்பிடத்தக்கவர்கள்.

விருதுகளும் சிறப்புகளும்
1907 – Indian Society of Oriental Art அவருக்கு உயர் கல்விக்கு ஊக்கத்தொகை அளித்தது.
1954 – பத்ம விபூஷன் இந்திய அரசு விருது கிடைத்தது.
1956 – டெல்லி லலித் கலா அகாதெமி கலாரத்ன (Fellowship) விருது அளித்தது. (அதைப் பெற்ற இரண்டாவது ஓவியர்).
1957 – கொல்கத்தா பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் அளித்தது, விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ‘தேசிகோத்தம்’ பட்டம் கொடுத்தது.
டெல்லி லலித் கலா அகாதெமி இந்தியாவின் ஒன்பது சிறந்த ஓவிய, சிற்ப கலைஞர்களில் ஒருவராக அவரைச் சிறப்பித்தது.
நேருவின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசியல் அமைப்பு சட்ட நூலை ஓவியங்களால் அலங்கரித்தார்.
பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற அரசு விருதுகளுக்கு நேரு அவரை வரைபடம் செய்து கொடுக்கச் சொன்னார்.
டெல்லியில் உள்ள அரசு நவீன கலைப் படைப்புக் கூடத்தில் அவரது படைப்புகள் (எண்ணிக்கையில் 7,000) ஒரு தனிப்பிரிவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
0
படம்: நந்தலால் போஸ் ஓவியங்கள் – காந்தி நடைப் பயணம், சதி, அண்ணபூரனி