ஜாமினி ராய் மேற்கு வங்காள மாநிலத்தில் பங்குரா மாவட்டத்தில் உள்ள பெலியாடோக் கிராமத்தில் விளைச்சல் நிலம் கொண்ட நடுத்தர விவசாயக் குடும்பத்தில் 1887 இல் பிறந்தார். தனது 16 ஆவது வயதில் கொல்கத்தா அரசு ஓவியப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்போது அவனேந்திரநாத் தாகூர் அதன் துணை முதல்வராக இருந்தார். மேலைவழிப் பாட திட்டத்தின்படி பயின்ற ராய் 1908 இல் படிப்பை நிறைவுசெய்து பட்டம் பெற்றார்.
மற்ற பல ஓவியர்களைப் போலவே அவரும் தனது ஓவிய வாழ்க்கையை ஒப்பந்த முறையில் முகங்களைத் தீட்டுவதில்தான் தொடங்கினார். தனது படைப்பு உந்துதலுக்கு மேலைப் பாணி கைகொடுக்காது என்று உணர்ந்துகொண்ட அவர் தனது மண்ணிலேயே அதற்கான தேடுதலைத் தொடங்கினார்.
அதன் விளைவாக 1920களில் முகங்களை ஓவியமாக்குவதை அவர் முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டார். வங்கத்து நாட்டுப்புறக் கலைவழிகள், சந்தால் பழங்குடியினரின் கலைப்பாணி, காளிகாட் ஓவியப்படைப்பு முறை ஆகியவற்றை ஆழ்ந்து நோக்கி, தனது தேடலுக்கான இலக்கைக் கண்டு கொண்டார்.
பிறகு, தனக்கென்று ஒரு கலைப்படைப்பு வழியை அமைத்துக் கொண்டார். அவரது படைப்பு முற்றிலும் புதியதாக மாற்றம் கொண்டது. ஆனால் அவரது காலத்து சக ஓவியர்களிடமிருந்து அவருக்குக் கடும் எதிர் மறைக் கருத்துகள் கொண்ட விமரிசனம்தான் கிட்டியது.
அவரது முதல் ஒருநபர் ஓவியக்காட்சி 1938 இல் கொல்கத்தாவில் உள்ள பிரிட்டிஷ் இந்தியா சாலையில் நிகழ்ந்தது. கொல்கத்தாவில் ஓர் இந்திய ஓவியர் காட்சி வைப்பது அதுதான் முதல்முறை.
1940களில் அவருக்குப் புகழும் பாராட்டுகளும் குவியத் தொடங்கின. ஆங்கிலேயரும் அவரது ஓவியங்களை ஈடுபாட்டுடன் வாங்கியது அவருக்கு வியப்பாக இருந்தது. 1946இல் லண்டன் நகரிலும், 1953 இல் நியூயார்க் நகரிலும் அவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றின் மூலம் அவருக்குப் புகழுடன் பணமும் கிட்டியது.
1946இல் சாரதா சரண் தாஸ் (1906–1992) – புகழ்மிக்க ரசகுல்லா இனிப்பு அவரது பாட்டனாரால் உருவானது – அளித்த பொருளுதவி கொண்டு 106 செ.மீ x 76 செ.மீ அளவுடைய 17 கித்தான்களில் அவர் ராமாயணத்தைத் தொடரோவியம் ஆக்கினார்.
காளிகாட் ஓவியப் பாணியில் அவை இயற்கை வண்ணம் கொண்டு தீட்டப்பட்டன. வால்மீகி முனிவரின் குடிலில் தொடங்கி சீதையின் தீக்குளிப்பில் நிறைவு செய்தார். இன்று அந்த ஓவியங்கள் சாரதா சரண் தாஸ் ‘ரசகுல்லா’ இனிப்பக மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எளிய கிராமத்துக் கலைஞரிடமிருந்து படைப்பு வழியைக் கற்று, தனக்கான பாணியை உருவாக்கிக்கொண்ட அவர் தன்னை ஒரு கிராமத்துக் கலைஞன் (படுவா) என்றே கூறிக்கொண்டார். பிறரும் அவ்வாறே அழைப்பதையும் விரும்பினார்.
எனது ஓவிய ஆசான் கே. ஸ்ரீநிவாசுலுவின் தொடக்ககாலப் படைப்புகளில் இவரது கட்டமைப்புத் தாக்கம் காணப்படும். பின்னாளில் அவர் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.
ஜாமினி ராயின் வாழ்க்கை விவரங்கள் பற்றித் தெரியவில்லை. பெரும்பாலும் அவர் கொல்கத்தாவில்தான் வாழ்ந்தார். ஓவியங்கள் படைப்பதிலேயே பெரும் பொழுதினைக் கழித்தார். பணம் ஈட்டும் குணம் அவரிடம் இருக்கவில்லை.
நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். 85 ஆண்டுகள் வாழ்ந்த அவர் 1972 இல் பிறந்தநாள் கொண்டாட்ட விழா முடிந்த சில தினங்களில் இவ்வுலகை நீத்தார். கொல்கத்தாவில் அவர் கட்டிய இல்லத்தில் அவரது வழித்தோன்றல்கள் வசிக்கிறார்கள்.
விருதுகளும் பாராட்டுகளும்
1934 – வைஸ்ராய் தங்கப்பதக்கம் – அனைத்திந்திய ஓவியக்காட்சி.
1955 – இந்திய அரசின் ‘பத்மபூஷண்’ விருது.
அதே ஆண்டில் டில்லி மைய லலித் கலா அகாதமி ‘கலாரத்னா’ அளித்து அவரைச் சிறப்பித்தது. அந்த விருதைப்பெற்ற முதற் கலைஞர்.
1976 – இந்தியத் தொல்லியல் கழகம்( பண்பாட்டுத் துறை) அவரது படைப்புகளை நாட்டின் சொத்தாக அறிவித்தது.
அவ்விதம் அறிவிக்கப்பட்ட மற்ற எட்டுக் கலைஞர்கள் அவனேந்திரநாத் தாகூர், அமிர்தா ஷெர்-கில், ககனேந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ் , ருஷ்யக் குடிமகனான நிகோலஸ் ரோரிச், ரவீந்திரநாத் தாகூர் , ராஜா ரவிவர்மா, ஸைலோஸ் முகர்ஜியா.
0