Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இங்கிலாந்தில் பிறந்த கிரிஸ்டியானா ஜேன் ஹெரிங்கம் (Christiana Jane Herringham) ஓர் ஓவியர், கலை ஆதரவாளர், முந்தைய நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சிக்கால ஐரோப்பிய ஓவியங்களை நகல் எடுப்பவர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். கிரிஸ்டியானாவின் கவனம் 1889 முதல் பெண்களின் துயரங்களைக் களையும் இயக்கத்தில் திரும்பியது.

ஓவிய உலகத்துக்கு அவரது மிகப்பெரிய பங்களிப்பாக மூன்றைக் குறிப்பிட முடியும். ஒன்று, கிறிஸ்தவத் துறவியான செனினோ டி’ஆந்தேரே செனினி என்பவர் க்வாட்ரோ சென்டோ ஓவியங்கள் பற்றி எழுதிய ‘Il Libro dell’arte’ என்னும் நூலை ஆங்கிலத்தில் ‘The Book of Art’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தார். (இத்தாலியில் 15ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட குறிப்பிட்ட வகை ஓவியங்களையே Quattrocento Art எனும் பொதுப்பெயரால் அழைக்கிறார்கள்). நம் நாட்டில் 6-7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சித்ரசூத்ரம்’ எனும் ஓவிய இலக்கண நூல் போன்றது ‘The Book of Art‘.

கிரிஸ்டியானா ஹெரிங்கம்
கிரிஸ்டியானா ஹெரிங்கம்

கொல்கத்தா அரசு நுண்கலைப்பள்ளியின் முதல்வராக இருந்த ஹேவல் (E.B. Havell) 1910 பிப்ரவரி மாதத்தில் ஒரு மாலைப்பொழுதில் லண்டனின் கலை அமைப்பான ராயல் சொஸைட்டி ஆஃப் ஆர்ட் நடத்திய கூட்டத்தில் இந்தியக் கலைச்சிறப்பு பற்றி ஓர் உரை நிகழ்த்தினார். கூட்டத்தின் தலைமை இருக்கையில் இருந்த ஜார்ஜ் பிரிட்வுட் இந்தியாவுக்கு அத்தகைய கலை வரலாறு எதுவும் கிடையாது என்னும் எதிர்வினைக் கருத்தை முன் வைத்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக பல ஆங்கில அறிவுஜீவிகள் தி டைம்ஸ் இதழில் கடிதங்கள் எழுதினர். இதன் தொடர்ச்சியாக 1910 மார்ச் மாதத்தில் ஆங்கிலேயருக்கு இந்திய நுண்கலை பற்றிய புரிதலையும் அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளத் தூண்டும் விதமாகவும் ‘India Society’ என்னும் அமைப்பு ஈ.பி. ஹாவெல் என்பவரால் லண்டன் நகரில் தொடங்கப்பட்டது.

அப்போது அங்கு படித்துக் கொண்டிருந்த ஜவாஹர்லால் நேருவும் அதில் ஓர் உறுப்பினரானார். இந்த அமைப்புதான் ரவீந்திரநாத் தாகூரின் ‘கீதாஞ்சலி’ கவிதைகளை ஆங்கிலத்தில் நூலாகக் கொண்டுவந்தது. 1913இல் இந்நூலுக்கு நோபல் பரிசு கிட்டியது.

1925 முதல் இந்த அமைப்புக்கு ஆங்கில அரசின் ஆதரவும் பொருளுதவியும் கிடைக்கத் தொடங்கியது. 1944-1948இல் ராயல் இந்தியா சொசைட்டி எனவும், 1948-1950 இல் ராயல் இந்தியா-பாகிஸ்தான் சொசைட்டி எனவும் 1950-66 இல் ராயல் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் சிலோன் சொசைட்டி என்றும் இந்த அமைப்பு பெயர் மாற்றம் பெற்றது. இந்தச் சங்கத்தின் கூட்டங்கள் லண்டனில் கிரிஸ்டியானா இல்லத்தில் நிகழ்ந்தன.

1914இல் கிரிஸ்டியானாவின் கணவர் ஹெரிங்கம் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சங்கத்தின் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக அமைந்த அஜந்தா சுவர் ஓவியங்களை முதன் முறையாகத் தாளில் பிரதி எடுத்து அதுபற்றி உலகுக்குச் சொன்னதுதான் கிரிஸ்டியானாவின் இரண்டாவது பங்களிப்பு.

1906ஆம் ஆண்டிலும் பின்னர் 1911ஆம் ஆண்டிலும் அவர் அஜந்தாவில் இரு ஆண்டுகள் தொடர்ந்து தங்கி, தன்னுடன் அழைத்து வந்த சாந்தி நிகேதனில் பயின்ற அசித்குமார் ஹல்தா, முகுல் சந்திர தவே போன்ற இளம் ஓவியர்களின் துணையுடன் ஓவியங்களைப் பிரதி எடுத்தார்.

’சிபி-ஜாதகா’ - அஜந்தா ஓவிய பிரதி
’சிபி-ஜாதகா’ – அஜந்தா ஓவிய பிரதி

அஜந்தா பகுதி அப்போது ஹைதராபாத் மன்னர் நிஜாமின் ஆளுகையில் இருந்தது. மன்னர் இதற்கான முறையான ஒப்புதலையும் அனைத்து உதவிகளையும் நல்கினார். ஓவியங்கள் பின்னர் லண்டன் கிறிஸ்டல் பேலஸ் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த ஓவியங்கள் பின்னர் ‘அஜந்தா சுவரோவியங்கள்’ (Ajanta Frescos) என்னும் தலைப்பில் நூலாகவும் வெளிவந்தது. (இணையத்தில் கிடைக்கிறது).

மூன்றாவதாக, டெம்பெரா வழி ஓவியம் தீட்டுவதை மீட்டு எடுக்கும் பணியில் தன்னை அழுத்தமாக ஈடுபடுத்திக்கொண்டார் கிரிஸ்டியானா. 1901இல் டெம்பெரா ஓவியர் சங்கம் (The Society of Painters in Tempera) ஒன்றை லண்டனில் தொடங்கினார். அதில் இங்கிலாந்தின் ஓவியர்கள் பலரும் உறுப்பினர்களாக இணைந்தனர்.

சங்கத்து ஓவியர்களின் டெம்பெரா படைப்புகள் லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள கார்ஃபெக்ஸ் கலைக் காட்சிக்கூடத்தில் மூன்றுமுறை காட்சிப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் தோராயமாக ஐம்பது ஓவியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். 1909 வரை துடிப்புடன் இயங்கிய சங்கம் பின்னர் தொய்வடையத் தொடங்கியது.

டெம்பெரா வழி ஓவியம்
டெம்பெரா வழி ஓவியம் – Head of the Magdalene, Portrait of a Lady, Head of St Catherine – ஓவியர் பாட்டிசெல்லியின் நகல்கள்

1930இல் சங்க ஓவியர்களின் ஓவியக்காட்சி White Chapel கலைக்கூடத்தில் நடத்தப்பட்டது. அப்போது Mural Decorators and Painters in Tempera என்று தனது பெயரை சங்கம் விரிவுபடுத்திக்கொண்டது. அந்த அமைப்பு உறுப்பினர் டெம்பெரா ஓவியங்களைப் பற்றின அரிய பல தகவல்களை அவ்வப்போது (1901-1954) கட்டுரைகளாக எழுதினர். பின்னர் அவை நான்கு தொகுதிகளாக அச்சிடப்பட்டன.

1977இல் சங்கம் மீள் வடிவம் பெற்று உறுதிபட இயங்கத் தொடங்கியது. இப்போது அதன் கிளைகள் ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து இரு நாடுகளிலும் இயங்குகின்றன.

1914இல் லண்டன் திரும்பிய கிரிஸ்டியானாவுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டது. மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அவர் அங்கேயே அதிலிருந்து மீளாமல் 1929இல் காலமானார்.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *