Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #6 – முகுல் சந்திர தே: கல்கத்தா ஓவியப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர்

இந்திய ஓவியர்கள் #6 – முகுல் சந்திர தே: கல்கத்தா ஓவியப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர்

முகுல் சந்திர தே

‘நீண்ட நாட்களாக அஜந்தா குகைகளைக் காணவேண்டும் என்னும் என் கனவு 1911இல் கைகூடியது, அவ்வோவியங்களைப் படியெடுக்க முடிவு செய்தேன் எனினும் பயணத்துக்கான பணம் இருக்கவில்லை. தென்னிந்தியாவெங்கும் சுற்றிச் செல்வந்தர்களின் முகங்களைச் சொற்பத் தொகைக்கு ஓவியமாக வரைந்து கொடுத்தேன்.’ – முகுல் தே

1905இல் இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் வங்காள மாகாணம் என்று அழைக்கப்பட்ட நிலப்பகுதியின் கிழக்கில் உள்ள டாக்கா நகரில் (இன்றைய பங்களா தேஷ்) குலசந்திரதே பூர்ண சசிதேவி தம்பதியருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒருவர் முகுல். முகுலுக்கு 22 வயதாயிருந்தபோது அவரது தந்தை காலமானார். அப்போது அவரது தம்பி மனிஷிதே எட்டு வயதுச் சிறுவன். (பின்னாளில் இருவருமே புகழ்பெற்ற ஓவியர்களாகத் திகழ்ந்தனர். மனிஷி தே பற்றித் தனியாகப் பார்ப்போம்).

முகுல் சந்திர தே

முகுல் சந்திர தே

முகுல் தனது ஓவியக் கல்வியை சாந்திநிகேதனில் தொடங்கினார். தனது 21 ஆவது வயதில் (1916) ரவீந்திரநாத் தாகூருடன் ஜப்பான் சென்ற முகுல் அங்கு ஓர் ஆண்டு ஜப்பானிய வழி ஓவியம் பயின்றார். கொல்கத்தா திரும்பிய அவர் உலோகத் தகடு செதுக்கும் (Etching) நுணுக்கங்களைக் கற்க விரும்பி சிகாகோ நகரத்துக்குச் சென்றார். ஓர் ஆண்டு பயிற்சிக்குப்பின் இந்தியா திரும்பிய முகுல், செதுக்கல் மூலம் நுண் கலைப் படைப்புகளை உண்டாக்கத் தொடங்கினார். கொல்கத்தாவில் அப்போது உலோகச் செதுக்கல் என்பது பெரும்பாலும் விளம்பரம், பத்திரிகைகளில் கோட்டோவியங்களை அச்சிடுவது போன்றவற்றுக்கே பெரும்பாலும் பயன்பட்டு வந்தது.

முகுல் பிரபலமானவர்களின் முகங்களை முதலில் தாளில் வரைந்துகொண்டு பின்னர் செதுக்கல் (Etching) முறையில் படைத்துப் புகழ்பெற்றார். 1920இல் இந்தத் திறமையை மேம்படுத்திக்கொள்ள மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இம்முறை அது இங்கிலாந்தாக இருந்தது. அங்கு ஸ்லேட் ஓவியப்பள்ளியில் பயின்றார். இப்படி வெளிநாடு சென்று பயின்ற முதல் இந்தியர் இவர்தான்.

முகுல் தே ஓவியம் - சிவா - பார்வதி

முகுல் தே ஓவியம் – சிவா – பார்வதி

ஒரு முறை தனது கோட்டுச் சித்திரங்களை ஒரு பிரபல போலந்து நாட்டுச் சிற்பியிடம் (Stanislaw Szukalski) காண்பித்தார். அவரிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்ற முகுல் தனது உயர் பயிற்சியை பாரிஸ் நகரில் முழுமையாக்கிக் கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்கு சிற்பி அளித்த பதில் கீழே.

‘பாரிஸ் நகரம் கண்டின்ஸ்கி, பிகாசோ போன்றவர்களை உயர்த்திப் பிடித்து மற்ற நாட்டின் கலைஞர்களை மூளைச்சலவை செய்கிறது. நீ இப்போதே திறமை கொண்ட ஓவியர்தான். அங்கு செல்வதால் புதிதாக எதையோ பெறப் போவதாக நினைக்கிறாய். ஆனால் அது ஒரு புதிய மதம்போல உன்னை விழுங்கிவிடும். அங்கு நவீனமாதல் என்று அவர்கள் சீப்பு, முள்கரண்டி தூரிகைகளைத் தமது நாசியுடன் பொருத்திக் கொண்டு ஓவியத்துக்கும் சிற்பத்துக்கும் செய்யும் இழிவைத் தனித்தன்மை என்று சொல்கிறார்கள். அனுபவமும் திறமை முதிர்ச்சியும் பெற்றபின் பாரிஸுக்குப் போ. அழுகிப்போன ஐரோப்பியக் கலை வெளிப்பாட்டைச் சரியாகப் புரிந்து கொள்வாய்.’

இந்த அறிவுரை முகுலைத் தாய்நாடு திரும்பச் செய்துவிட்டது. தாகூருக்கு இதில் மட்டற்ற மிகிழ்ச்சி. 1911இல் முகுல் அஜந்தாவுக்கு கிரிஸ்டியானாவுடன் சென்று ஓவியங்களை நேரில் தீட்டிய படைப்பு அனுபவத்தை ஒரு நூலாக ஆங்கில மொழியில் பதிவுசெய்தார். அதில் அந்த ஓவியங்களும் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக பலநூல்களுக்குப் பின்னர் ஓவியங்களைத் தொடர்ந்து தீட்டிக்கொடுத்தார்.

1928இல் கொல்கத்தா அரசு ஓவியப்பள்ளியில் முகுல் முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 33. அப்பள்ளியின் முதல் இந்திய முதல்வர் அவர்தான். 1943 வரை அவர் அங்குப் பணியாற்றினார். ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பள்ளியை விடுவிக்க முடிவெடுத்த முகுல், கும்பினி ஓவியங்களைப் படைத்துக்கொண்டு இருந்த ஓவிய ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்துவிட்டார். பெண்களும் ஓவியம் கற்குமாறு கல்லூரியின் கல்விச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தார்.

முகுல் தே ஓவியம் - தாகூர், கதிரடிக்கும் தளம்

முகுல் தே ஓவியம் – தாகூர், கதிரடிக்கும் தளம்

முகுல், ஹரென் தாஸ்போல வங்கநிலம் சார்ந்த மரப்பலகை செதுக்கல்களைப் படைக்கவில்லை. மாறாக, Drypoint Etching எனப்படும் மேலைநாட்டுச் செதுக்கல் முறையைப் பின்பற்றினார். ஆனால், படைப்புகளுக்குத் தேர்வு செய்த கருப்பொருள் எங்கும் சுற்றித் திரியும் பால் (Baul) பாடகர், கொல்கத்தா நகரத்து வணிக வளாகம், வங்கத்து கிராம மக்கள், சந்தால் பழங்குடி மக்கள் போன்றோரே. வங்கத்து ஆற்றுப் படுகையும் அவரது செதுக்கல் படைப்புகளில் மிகுதியாக இடம்பெற்றது. தனது செதுக்கல் படைப்புகளில் நீர் வண்ணத்தைக் கைக்கொண்டு பூசி வண்ண எழுதுகோல்கள் கொண்டு வரைந்து பிரதிகளை எடுத்தார்.

1915இல் ரவீந்திரநாத் தாகூர் தமது இல்லத்தில் ‘விசித்ரா மன்றம்’ தொடங்கியபோது ஓவியர் நந்தலால்போஸ், அசித்குமார் ஹல்தார், என்.கே. தேவால், முகுல் போன்ற இளைஞர்களின் வருகையால் அது துடிப்பாகச் செயற்பட்டது. சாந்திநிகேதனில் ‘சித்ரலேகா’ என்னும் பெயரில் உள்ள முகுலின் இல்லத்தில் அவரது அரிய சேகரிப்புகளும் படைப்புகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பாராட்டுகள் விருதுகள்

டெல்லி லலித கலா அகாதெமி 1987இல் ‘கலா ரத்னா’ விருதளித்து சிறப்பித்தது. அதே ஆண்டில் கொல்கத்தா ரவீந்திர பாரதி சர்வகலாசாலை கௌரவ முனைவர் பட்டமளித்துப் பெருமைப்படுத்தியது.

0

படம்: முகுல் தே ஓவியம் – கங்கைக் கரையில் சந்திர கிரகணம், நடனமாடும் பெண்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பகிர:
nv-author-image

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *