Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #7 – தேவி பிரசாத் ராய் சௌத்ரி: ‘உழைப்பின் வெற்றி’ சிலையை வடித்தவர்

இந்திய ஓவியர்கள் #7 – தேவி பிரசாத் ராய் சௌத்ரி: ‘உழைப்பின் வெற்றி’ சிலையை வடித்தவர்

Triumph of Labour

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா இருந்தபோது இப்போதுள்ள பங்களாதேஷ் என்னும் நாடு முன்னர் உடைபடாத வங்கமாக இருந்தது. ஜூன் மாதம் 15ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு ரங்கபுர் மாவட்டத்தில் உள்ள தேஜ்ஹட் என்னும் சிறிய ஊரில் ராய் சௌத்ரி பிறந்தார். அங்கேயே அவரது பள்ளிப்படிப்பு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொல்கத்தாவிலுள்ள அரசு ஓவியப் பள்ளியில் முறையாக ஓவியம் பயின்றார். அப்போது அங்கு துனண முதல்வராக இருந்தவர் அவநேந்திரநாத் டாகூர்.

தனது ஓவிய உயர் கல்வி பயிற்சிக்காக ராய் சௌத்ரி இத்தாலிக்குப் பயணமானார். அப்போதுதான் அவருக்கு மேலை நாட்டு நவீனச் சிற்பம் பற்றிய அறிமுகம் கிடைத்தது. முன்னரே கொல்கத்தாவில் அவர் ஹிரோமணி ராய்சௌத்ரியிடம் சிற்பம் கற்றதால் அவரது கலை நாட்டம் அதில் திரும்பியது. தனது மானசீக குருவாக பிரஞ்சு நாட்டுச் சிற்பி Aguste Rodin-னை வரித்துக் கொண்டார். இந்தியா திரும்பிய அவர் பெங்கால் ஓவியப் பள்ளியில் உயர் படிப்புக்காகச் சேர்ந்தார்.

1828 இல் அவர் சென்னைக்கு வந்து ஓவியக் கைவினைப்பள்ளியில் கற்றலைத் தொடர்ந்தார். பின்னர் அங்கேயே நுண்கலைப் பிரிவில் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். உதவி முதல்வராக பதவி உயர்வு பெற்று, பின்னர் முதல்வர் பதவியிலும் தனது பணிக்காலம் முடியும் வரை – (1957), 26 ஆண்டுகள் இருந்தார். அதன்பின் பல்லாவரத்தில் (சென்னை) வசித்த அவர் 1975 ஆம் ஆண்டு காலமானார்.

தேவி பிரசாத் ராய் சௌத்ரி
தேவி பிரசாத் ராய் சௌத்ரி

இந்தச் சுருக்கமான பின்னணியில் நாம் அவரைப்பற்றிப் பேசுவோம்.

ராய் சௌத்ரி ஓவியம் கற்ற காலத்தில் கொல்கத்தா நகரத்து வங்கக் கலைஞர்கள் அவரிடம் இணக்கமாக இருக்கவில்லை. பொதுவாகவே அவர்கள் யாரையும் பாராட்டும் குணம் கொண்டவர்கள் இல்லை எனும் ஒரு கருத்து உண்டு. அவரது ஓவியங்களை அவநேந்திரநாத் டாகூர் புறந்தள்ளியதாகவும் வங்க வழிப் படைப்புகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தியதாகவும் அதனால் கடும் எரிச்சல் அடைந்த சௌத்ரி பள்ளியை விட்டு விலகியதாகவும் ஒரு செய்தி உண்டு.

இத்தாலி சென்று மீண்டும் வருவதற்கு முன் அவர் நீர் வண்ண ஓவியங்களைத்தான் பெருமளவில் படைத்தார். அவை அவநேந்திரநாத் அப்துர் ரஹ்மான் சுக்தாய் இருவரின் தாக்கம் கூடியதாகவும் இருந்தன. சென்னை வந்த பிறகு அவரது படைப்புகள் முற்றிலும் மேலை நாட்டுக் கலைப் பாணியைக் கொண்டதாக மாற்றம் கொண்டன.

தொடக்கத்தில் வேலை இல்லாததால் அவர் மும்பையில் நாடக அரங்கத்தின் திரைகளை படைத்துக் கொடுத்தார். அவருக்கு கல்கத்தா நகரம் இடம் கொடுக்கவில்லை.

டோலி- (Doli)- என்னும் பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். அவரது கலைப்பயணத்திற்கு உறுதுணையாக அவரது மனைவி விளங்கினார்.

0

படைப்புகள்

சௌத்ரி தனது திறந்தவெளி பேருருவச் சிற்பங்களுக்காகப் பெரும் புகழ் பெற்றார். அவற்றில் மிகவும் சிறப்பாக பேசப்படுபவை:

1. உழைப்பின் வெற்றி – (Triumph of Labour), மற்றும் தடியுடன் நடக்கும் காந்தியின் சிலை – இவை இரண்டும் சென்னையில் மெரினா கடற்கரையில் இருக்கின்றன.

2. சுதந்திரப் போராட்டத்தில் கொடிக்காக உயிர்த்தியாகம் செய்த ஏழு சகோதரர்களின் நினைவுச் சின்னச் சிலைக் கூட்டம் (Martyrs Memorial) பாட்னா.

3. டெல்லியில் உள்ள தண்டி யாத்திரை.

4. திருவனந்தபுரம் மன்னர் சித்திரைத் திருநாள் பலராமவர்மாவின் சிலை.

5. ஜெய்ப்பூர் மகாராஜாவின் சிலை.

An inmate of Harem, Ras Leela, A dramatic pose of man in Large Cloack and Hat, The Tribune போன்ற ஓவியங்களும் அவர் புகழ் பேசும்.

ஓவியரும் கலை விமர்சகருமான ஜெயா அப்பாசாமியுடன் (1918 – 1984) இணைந்து அவர் எழுதிய ‘தேவி ப்ரசாத் ராய் சௌத்ரி’ என்னும் தலைப்பு கொண்ட ஒரு நூல் வெளியிடப்பட்டது.

0

1936 ஆம் ஆண்டு நவம்பர் பன்னிரண்டாம் நாளில் திருவனந்தபுரம் சமஸ்தான மன்னர் சித்திரைத் திருநாள் பாலவர்மா அனைத்து சமூகத்தினரும் பத்மநாபஸ்வாமி ஆலயத்தில் வழிபாடு செய்யலாம் என்னும் அரசு ஆணையின் மூலம் ஒரு பெரும் புரட்சியை இந்து மதத்தில் செய்தார். அது அப்போது மிகப்பெரிய செய்தி. இதைக் கொண்டாடும் விதமாக மக்கள் அவருக்கு ஒரு சிலை அமைக்க முடிவு செய்தனர். ஆள் உயர வெண்கலச்சிலை உருவாக்கும் ஒப்பந்தம் ராய் சௌத்ரியிடம் கொடுக்கப்பட்டது.

சௌத்ரி மன்னரின் தோற்றத்தைப் பாரிஸ் மாவு கொண்டு உருவாக்கினார். அதன் பின் வெண்கலத்தில் வார்ப்பெடுத்து உருவாக்க அது இத்தாலிக்கு அனுப்பப்பட்டது. சிலை இந்தியா வந்தபின் அதன் பீடத்தை முறையாக அமைக்க ராய் சௌத்ரி சென்னையிலிருந்து திருவனந்தபுரம் சென்றார். அவரது நேரடிப் பார்வையில் பீடம் உருவானது.

இந்தச் செய்தி அப்போதைய ஹிந்து நாளிதழில் வெளி வந்தது. சிற்பியின் சீடர்களில் ஒருவரான பி. நடேசனின் மருமகன் கே. ஹரி அதுபற்றிப் பேசும்போது, ‘சிலை உருவாகும்போது ராய் சௌத்ரிக்கு உதவிகள் செய்து வந்த ஒருவர் சிலையின் மேலாடையின் ஒரு பகுதியை, தான் வடிவமைத்ததாக தன் நண்பர்களிடம் தன்னை உயர்த்திக்கொள்ளும் நோக்கில் கூறியிருக்கிறார். இந்தச் செய்தி விரைவில் ராய் சௌத்ரியின் காதுகளுக்கு எட்டியது. அடுத்த நாள் முதல் வேலையாக அவர் அந்தப் பகுதியை சுத்தியல் கொண்டு அடித்து உடைத்துவிட்டார்’ என்று தனது மாமன் கூறியதாகப் பதிவு செய்கிறார்.

இதுபோல, ஒருநாள் அவர் ஓவியம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு இருந்த சமயம் மாணவர்கள் அதை ஈர்ப்புடன் கவனிக்கும்போது அவர் அருந்திக் கொண்டிருந்த காபி கைதவறி ஓவியத்தில் கொட்டிவிடுகிறது. ஆனால் அதற்காக அவர் சிறிதும் பதற்றப்படவில்லை. மேலும் காபி கொண்டுவரச் சொல்லி கித்தானில் ஊற்றி ஒரு புதிய வண்ணத் தோற்றத்தை உண்டாக்கினார் என்பது இன்னொரு செய்தி.

தண்டி யாத்திரையைக் காட்சிப்படுத்திய சிற்பத்தொகுதியில் காந்தியின் பின் செல்வோர் பத்து தொண்டர்கள். அவர்களில் இருவர் பெண்கள்; மாதங்கினி ஹஸ்ரா, சரோஜினி நாயுடு. இவர்களுடைய தோற்றத்தையும் அவர் சிற்பத்தில் கொண்டுவந்துள்ளார். ஆண்களில் ப்ரம்மபதந்த உபாத்தயாய, அப்பாஸ் தையாம்ஜி ஆகியோரின் சாயல் தெரியும். மிகவும் நேர்த்தியும் துடிப்பும் கொண்ட அந்தச் சிலைகள் முடியும் காலத்தில் தேவி பிரசாத் ராய் சௌத்ரி இவ்வுலகை விட்டு மறைந்தார். அவரது மனைவியும் சீடர்களும் தொடர்ந்து சிலைகளை உருவாக்கி முடித்தனர். அவரது மனைவியைப் பற்றிய எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. அவரது மகன் பரதநாட்டியம் பயின்று அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருந்தபோது சாலைவிபத்தில் அடிபட்டுப் படுத்த படுக்கையாக பலமாதம் இருந்து காலமான செய்தியை நான் பேப்பரில் படித்துத் தெரிந்துகொண்டேன். அவன் பெயர் நினைவில் இல்லை.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ஒருமுறை சென்னைக்கு வருகை தந்தார். ராய் சௌத்ரியைச் சந்திக்க விரும்பினார். ஆனால், அவரது நிகழ்ச்சிக் குறிப்பில் அது இடம்பெற்றிருக்கவில்லை. செயலர் சௌத்ரியிடம் தொடர்பு கொண்டார். சிற்பி தனது வேலை நெருக்கடி காரணமாக நேருவைக் காண வர இயலாது என்று தெரிவித்து விட்டார். நேரு தானே புறப்பட்டு ஓவியப் பள்ளிக்குச் சென்றுவிட்டார். சௌத்ரியைச் சந்திக்க பொறுமையாகக் காத்துக் கொண்டு இருந்தார். பின்னர் சந்தித்துச் சென்றார். இதுவும் செவிவழிச் செய்தி என்றாலும் ஒரு கலைஞனுக்கு நேரு அளித்த மரியாதை உன்னதமானது.

விருதுகளும் பாராட்டுகளும்

1937 இல் அவருக்கு இங்கிலாந்து அரசு M.B.E. (Member of the order of the British Empire) எனும் பட்டத்தை வழங்கியது. இது ஆங்கிலேய அரசு தரும் மூன்றாம் நிலை சிறப்புத் தகுதி.

மத்திய அரசால் 1955 இல் தொடங்கப்பட்ட லலித் கலா அகாதெமியின் முதல் சேர்மன் என்னும் பொறுப்பில் அவர் அமர்த்தப்பட்டார். அந்த அமைப்பு உருவாகவும் அவர் காரணமாயிருந்தார்.

1962 இல் லலித் கலா அகாதெமி அவருக்கு ‘கலா ரத்னா’ விருது அளித்துச் சிறப்பித்தது.

1958 இல் இந்திய அரசு ‘பத்ம பூஷண்’ விருது அளித்தது.

1968 இல் சாந்தி நிகேதன் ரவீந்திர பாரதி பல்கலைக் கழகம் அவருக்கு முனைவர் பட்டம்- D.lit – அளித்துச் சிறப்புச் செய்தது.

0

‘அறையை வீடாக்கும் சுவர்களும் சுவர்களின் மீதேறிய ஓவியங்களும்’ என்னும் எனது தன்வரலாற்று நூலில் அவரைக்குறித்து ஒரு 16 வயதுச் சிறுவனாக நான் கண்டவாறு பதிவுசெய்ததையும் இங்குச் சேர்க்கிறேன்.

முதல்வர் திரு தேவிபிரசாத் ராய்சௌத்ரி (1899-1975)

பள்ளி முதல்வரான திரு தேவிபிரசாத் ராய் சௌத்ரி ஓவியமும் சிற்பமும் கற்றது கொல்கத்தா அரசு கலைக் கல்லூரியில்தான். என்றபோதும் அவர் மேலைநாட்டுப் பாணிக்கு ஈர்க்கப்பட்டார். இதனால் சாந்திநிகேதனில் ஊக்குவிக்கப்பட்ட தாய்நிலம் சார்ந்த கலை சிந்தனையிலிருந்து விலகியதால் மற்றையோரின் வசைக்கு ஆளானார். சென்னை ஓவியப்பள்ளி வளாகத்தில் அவருக்கு வசிக்க ஒதுக்கப்பட்ட வீடு ஒரு பெரிய மாளிகை. அது பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருந்தது. சில படிகள் ஏறித்தான் மாளிகையின் நுழைவாயிலை அடையவேண்டும். மாளிகைக்கும் படிகளுக்கும் இடையில் அகலமான நடை பாதை உண்டு. அவர் தோட்டக் கலையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஜப்பான் கண்டுபிடிப்பான ‘போன்ஸாய்’ தாவரங்கள் மாளிகையின் முன்புறம் அமைந்த சுற்றுச் சுவரின் மேல் தொட்டிகளில் காணக் கிடைக்கும். நான் அப்போதுதான் முதல் முறையாக அவற்றைக் காண்பதால் அவை எனக்கு அளவில்லா ஆச்சர்யத்தைக் கொடுத்தன. புளியமரம், ஆலமரம், வேப்பமரம் போன்றவை ஓரடியாகக் குறுகித் தொட்டியில் வளர்வது எனக்குப் பேரதிசயமாக இருந்தது.

அவரது அலுவலக அறை அதனுடன் கூடிய சிற்பக்கூடம் இரண்டும் காந்தி இர்வின் மேம்பாலத்தை ஒட்டியிருந்தது. அவர் அப்போதுதான் உழைப்பாளிகள் சிலை, சுதந்திரத் தியாகிகள் சிலை இவற்றை வடிவமைத்தார். முதலில் சிறிய (தோராயமாக 6 அங்குல உயரத்தில்) அளவில் மெழுகில் (இங்கு என் நினைவு முடிவானதாக இல்லை. அது களிமண்ணிலும் இருந்திருக்கலாம்) வடிவமைக்கப்பட்டு, பின்னர் ‘பிளாஸ்டர்’ மாவில் உருக்கி ஊற்றி (cast), என்று எப்போதும் படுபிஸியாக இருப்பார். திரு ராய் சௌத்ரி முதலில் சிறியதாகப் படைத்த உருவங்களைப் பின்னர் பகுதி பகுதியாகப் பெரிய அளவில் வடித்து முடிவில் வெண்கல வார்ப்பாகச் செய்து பொருத்தினார் என்று நினைவு. பூதாகாரமான கால்களும் கைகளும் உடலும் தலைகளும் அவரது சிலைக் கூடத்திலும் அதைச்சுற்றிலும் கிடந்த காட்சி இன்னும் பசுமையாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் ‘உழைப்பாளிகளின் வெற்றி’ சிலை வடிவ அமைப்பில் குறை இருப்பதாக எழுத்தாளர் சிவகாமி (IAS) போன்றோர் சுட்டிக் காட்டி விவாதித்தனர். அவர் வடித்த நிலையில் அந்த பாறாங்கல் உருண்டால், பாறையைப் பின்புறமாக தூக்கும் உழைப்பாளி அதனுடனேயே விழும் சாத்தியக்கூறு உள்ளது, எனவே அது புவி ஈர்ப்பு விசை தத்துவத்துக்கு எதிராக உள்ளது என்பது அதன் சாரம். அது இலக்கிய இதழ் ‘கணையாழி’யில் சில ஆண்டுகளுக்கு முன் இடம் பெற்றது. சிலை படைக்கப்பட்ட அந்த நாட்களிலேயே அவரது படைப்பு விவாதத்திற்கு (இது விஷயமாக அல்ல) உட்பட்டது. அதன் கலை உன்னதம் பற்றிக் கேள்விகள் எழுந்தன. அவர் வடித்த காந்தியின் முகம்கூட காந்தியின் சாயலைச் சரியாகப் பிரதிபலிக்க வில்லை என்றோரும் உண்டு.

ராய் சௌத்ரி பெரிய உருவம் கொண்டவர், இளவயதில் குத்துச் சண்டையில் ஈடுபட்டவரென்பதால் கட்டுமானம் மிகுந்த உடல், வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர், பளீரென்ற வெளுப்பு, அனேகமாக வழுக்கையான தலை. பெரும்பாலும் மாணவர்களுடன் தொடர்பே இல்லாதவராகவே தோன்றினார். எப்போதும் வெண்மையான குர்த்தா பைஜாமாதான் அணிந்தார். பைஜாமாவின் சுற்றளவு கூடுதலாக இருக்கும். ஓரிருமுறை எங்கள் வகுப்புக்கு வந்தபோது நாங்கள் ஒருவித அச்சத்துடன் இருந்தோம் அவர் எல்லோருடைய வரைதல்களையும் பார்வையிட்டபடி வந்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. நான் அங்குச் சேர்ந்த வருட முடிவில் (1956) ஓய்வு பெற்று பல்லாவரத்தில் வசிக்கத் தொடங்கினார்.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *