B.C. சன்யால் என்று அறியப்படும் பபேஷ் சந்திர சன்யால் 1902 இல் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள துப்ரி மாவட்டத் தலைநகரான துப்ரியில் ஒரு சராசரி வங்கக் குடும்பத்தில் பிறந்தார். 1905 இல் வங்காள மாநிலம், ஆங்கில அரசால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது மூன்று. சன்யால் தனது ஆறாவது வயதில் தந்தையை இழந்தார். பொம்மைகள் செய்வதில் மிகுந்த ஈடுபாடுகொண்ட தாயாரிடமிருந்து சிற்பம் வடிக்கும் ஆசை அவருக்குள் விதைக்கப்பட்டது.
தொடக்கமாக அவர் கொல்கத்தா அரசு நுண்கலைப்பள்ளியில் பெர்ஸி பிரவுன், J.P.கங்கூலி ஆகிய இருவரிடமும் பயிற்சி பெற்றார். பின்னர் மேற்கு வங்கத்தில் செராம்பூர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அடுத்த ஆறு ஆண்டுகள் கற்பதும் கற்பிப்பதுமாக அவரது கலை மேம்படுத்துதல் நிகழ்ந்தது. ஆனால், வங்க பாணி, விக்டோரியா பாணி என்னும் இரண்டிலும் அவர் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.
1929 இல் அவரது கலைப்பயணத்தில் ஒரு திருப்புமுனை தோன்றியது. சைமன் கமிஷனை எதிர்த்து லாஹூரில் அமைதிப் போராட்டம் நடத்திய லாலா லஜ்பத் ராய் அப்போது நிகழ்த்தப்பட்ட தடியடியில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைப் பலனின்றி மாண்டுபோனார். லாஹூரில் நிகழவிருந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக் கூட்டத்தில் அவரது உருவச்சிலையை நிறுவ முடிவெடுத்து சிலையை வடிக்க சன்யால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் காரணமாக அவர் லாஹூருக்குச் சென்றார். சிலையை முடித்த அவருக்கு மேலும் சிலைகளை வடிக்க ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன.
தொடர்ந்து லாஹூரிலேயே தங்கிய அவர் மாயோ ஓவியக் கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். அவரது பணிக்காலத்தில் சதிஷ் குஜ்ரால், போன்ற சிறந்த ஓவியர்கள் உருவாயினர். 1936 இல் ஆங்கில அரசால் ‘கலகம் உண்டாக்குபவர்’ என்னும் குற்றச்சாட்டுடன் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
லாஹூரிலேயே தொடர்ந்து வசித்த சன்யால் கற்பதற்கும் படைப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கும் ஏற்றவிதத்தில் ‘லாஹூர் நுண்கலைக் கல்லூரி’ என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். லாஹூர் கிருஸ்துவக் கல்லூரி வளாகத்தில் அது செயல்படத் தொடங்கியது. 1947 இல் இரண்டாகப் பிரிந்து இந்தியா பாகிஸ்தான் என்று உருவானபின் அவர் தனது மனைவியுடன் இந்தியாவுக்கு வந்து டெல்லியில் வசிக்கத் தொடங்கினார். தனது இறுதிவரை அங்குதான் வாழ்ந்தார்.
‘அகதிக் கூடம்’ என்னும் பெயரில் அவர் தொடங்கிய அந்தக் கலைக்கூடம் எப்போதும் ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகளால் உயிர்த்துடிப்புடன் இருந்தது. பின்னர் அது கேலரி 26 என்று பெயர் மாற்றம் கொண்டது. மனிதப் போராட்டங்களும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட பிரிவின் கருப்பொருளையும் மையமாகக் கொண்ட தனது ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
தனது ஓவிய / சிற்ப நண்பர்களின் உதவியுடன் ‘டெல்லி சில்ப சக்ரா’ என்னும் குழுவையும் தொடங்கினார். 1860-69களுக்கு இடைப்பட்ட காலத்தில் லலித் கலா அகாதெமியின் செயலாளர் பொறுப்பில் இருந்தார். AIFACS எனப்படும் அனைத்திந்திய நுண்கலை – கைவினைக் கலை சங்கத்திலும் அவரது பங்களிப்பு தொடர்ந்தது. லலித் கலா அகாதெமியின் துணைத் தாளாளராகவும் நியமிக்கப்பட்டார்.
2000 ஆயிரம் ஆண்டில் அவரது 100 ஆவது அகவையை ஒட்டி இந்திய அரசு அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலையில் அவரது உருவத்தை வெளியிட்டது. 22-4-2001 இல் அவரது 100 வயது நிறைவடைந்ததை ஒட்டி ‘டெல்லியில் உள்ள ‘கலைகளுக்கான இந்திராகாந்தி இந்திய மையம்’ (Indira Gandhi National Centre for the Arts ) ஒரு கலைக்காட்சியை ஏற்பாடு செய்தது. அதில் 170க்கும் மேலான கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளைக் காட்சிப் படுத்தினர்.
B.C. சன்யாலுக்கு 102 அகவை நிறைந்தபோது (9-8-2003) அவர் இம்மண்ணுலகிலிருந்து விடை பெற்றார்.
விருதுகள் – பாராட்டுகள்
1980 – அனைத்திந்திய லலித் கலா அகாதெமி கலா ரத்னா விருது
1986 – இந்திய அரசின் பத்மபூஷண் விருது-
1993 – ககன் அபானி புரஸ்கார் (விஸ்வபாரதி-சாந்தினிகேதன் கொல்கத்தா)
1999 – சங்கர் தேவ் விருது (அஸ்ஸாம் மாநிலம்)
0