Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #9 – பினோத் பிஹாரி முகர்ஜி

இந்திய ஓவியர்கள் #9 – பினோத் பிஹாரி முகர்ஜி

பினோத் பிஹாரி முகர்ஜி (Benode Behari Mukherjee), கொல்கத்தா நகரின் ஒரு பகுதியான பெஹலா (Behala)வில் முகர்ஜி 1904 இல் பிறந்தார். ஒரு கண் பார்வையின்றியும் மறுகண்ணில் மயோபியா எனப்படும் கிட்டப் பார்வையுடனும் பிறந்த அவருக்குப் பார்ப்பது என்பதே பெரும் சிக்கலானதாக இருந்தது. 1919 இல் அவர் சாந்திநிகேதனின் ஓவியப் பிரிவான கலாபவனில் ஓவியம் பயிலச் சேர்ந்தார். ஓவிய மேதை நந்தலால் போஸின் நேரடிப் பார்வையில் அவரது கற்றல் நிகழ்ந்தது. 1925 இல் அவர் அங்கேயே ஓவிய ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். காஹர் குப்தா, ராமாநந்த பந்தோபாத்யாயா, K.G. சுப்ரமண்யன், பெஹார் ராம் மனோஹர் சின்ஹா, சோம்நாத் ஹோரே, ரிதென் மஜூம்தார், சத்யஜித்ரே போன்ற கலை மேதைகள் அவரது வழிகாட்டுதலில்தான் உருவாயினர்.

1949 இல் நேபாள தேசத்தின் அரசு அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பாளராகப் பணியேற்று (curator) கலாபவனிலிருந்து விலகினார். 1951-52 இல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பனஸ்தாலி வித்யாபீட் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1952 இல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசௌரி மலை வாசத்தலத்தில் தனது மனைவியுடன் ஓவியப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். ஆனால் பொருளாதார நெருக்கடிப் பிரச்னையால் அது விரைவிலேயே மூடப்பட்டது. 1958 இல் அவர் மீண்டும் கலாபவனில் சேர்ந்து ஓவியம் கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் அதன் முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றார்.

பினோத் பிஹாரி முகர்ஜி
பினோத் பிஹாரி முகர்ஜி

அவர் அவ்வப்போது ஓவியம் பற்றி வங்கமொழியில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்ட நூல் ‘சித்ரகார்’ என்னும் பெயரில் 1979 இல் வெளிவந்தது.

1956 இல் அவருக்குக் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அவர் ஏறத்தாழ ஒரு பார்வையற்றவராகவே இருந்தார்.

பினோத் பிஹாரி முகர்ஜி இந்திய ஓவியக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ‘வங்காள மறுமலர்ச்சி பானி’யிலிருந்து பிரிந்து, நவீன ஓவியக் கலைப் பள்ளியை நிறுவினார். அவரது படைப்புகளில் கீழைநாட்டுப் பாணியான நீர்வண்ணக் கழுவும் உத்தி (wash tecnique) தூக்கலாக இருக்கும். அவர் ஜப்பான், சீனா நாடுகளில் தூரிகை கொண்டு எழுதும் முறை (calligraphy) வண்ணத்தைக் கழுவிப் படைக்கும் ஓவிய முறை ஆகியவற்றை அந்த நாட்டு ஓவியர்களிடமிருந்தே முறையாகக் கற்றார். அது போலவே ராஜஸ்தான், முகலாயச் சுவர் ஓவிய நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார். அவரது படைப்புகளில் மேலைநாட்டு நவீனச் சிந்தனையும் இடம் பெற்றது (குறிப்பாக க்யூபிஸம்). நவீன இந்தியாவில் சுவரோவியங்களை கலை வெளிப்பாட்டின் ஒரு முறையாக எடுத்துக் கொண்ட ஆரம்பகால கலைஞர்களில் இவரும் ஒருவர். அவர் தீட்டிய இந்தவகைச் சுவர் ஓவியங்கள் அவருக்குப் பெரும் புகழ் சேர்த்தன. சாந்தி நிகேதன் விஸ்வபாரதி சர்வகலாசாலை வளாகத்தில் உள்ள சுவர் ஓவியம் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இவரது ஓவிய மாணவரான உலகப்புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜிரே 1972 இல் ‘The Inner Eeye’ என்னும் தலைப்பில் ஒரு குறும்படம் தயாரித்தார். முகர்ஜி எவ்வாறு பார்வைக் குறைபாட்டுடன் ஓவியராக வெற்றிபெற்றார் என்பதைப் பேசும் படம் அது. முகர்ஜியின் மகள் மிருணாளினியும் ஓவியர்தான்.

அவர் பெற்ற விருதுகள் / பாராட்டுகள்

1970 – லலித கலா அகாதமி – டெல்லி கலா ரத்னா விருது

1974 – பத்ம விபூஷண் விருது

1977 – விஸ்வபாரதி சர்வகலாசாலை அளித்த ‘தேசிகோத்தம’ பட்டம்

1981 – ரவீந்திர புரஸ்கார் (மேற்குவங்க மாநில அரசு அளிக்கும் இலக்கிய விருது அவரது ‘சித்ரகார்’ நூலுக்கு அவர் காலமான பின்னர் வழங்கப்பட்டது).

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *