ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதோபுர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான பலேரில் ராம்கோபால் 1905 இல் பிறந்தார். சிறுவனான அவரிடம் இருந்த படைப்பு ஆர்வத்தை முதலில் ‘ராம் ஸ்னேஹி ஸம்ப்ரதாயப்’ பிரிவுத் துறவி ஒருவர் காண நேர்ந்தது. அவர் எப்போதும் ராமர் பெயரை ஜபித்தவாறு பயணித்தபடியே இருப்பவர். ஓவியரான அத்துறவி தமது பயணத்தின்போது காணும் பல்வேறு காட்சிகளை சிவப்பு அல்லது கருப்புப் பென்சிலால் தாளில் வரைவார். சிறுவன் ராம் கோபாலுக்கு அவர்தான் முதல் குருவாகி வரையும் திறமையை வளர்த்தார்.
ராம்கோபாலின் தந்தை தனது மகன் பள்ளியில் கல்வி கற்று அரசுப்பணி அல்லது வர்த்தகத் தொழிலில் ஈடுபடவேண்டும் என்று விரும்பினார். அவரது கல்விக்காக ஆசிரியர்களையும் தருவித்தார். ஆனால் ராம்கோபாலுக்குப் படிப்பு என்பது வேப்பங்காய்தான். சலித்துப்போன தந்தை மகனது எதிர்கால ஆசையைப் பற்றிக் கேட்டபோது, தான் ஓவியம் கற்றுச் சிறந்த ஓவியனாக ஆகவேண்டும் என்று தெரிவித்தான். தந்தை அவனை மஹாராஜா நுண்கலை / கைவினைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அந்தப் பள்ளி மஹாராஜா ராம்சிங் அவர்களால் 1866 இல் தொடங்கப் பட்டது. அதன் கற்பிக்கும் திறமையால் புகழ்பெற்றது. ராம்கோபால் சேர்ந்த சமயம் சாந்திநிகேதனில் பட்டம்பெற்ற ஸைலேந்திர நாத் தே என்னும் ஓவியர் அதன் முதல்வராக இருந்தார். ராம்கோபாலின் படைப்பாற்றலைக் கண்ட அவர் ஐந்து ஆண்டுகள் கொண்ட ஓவியப் படிப்பில் ஐந்தாம் ஆண்டில் சேர்த்துக் கொண்டார். ஒரே ஆண்டில் ராம்கோபால் பட்டம் பெற்றுவிட்டார்.

அந்த நாட்களில் ஓவியர்களுக்குச் சமூகத்தில் கட்டடத் தொழிலாளிக்குக் கிட்டிய மரியாதைதான் தரப்பட்டது கலைஞர் என்னும் நிலையில் அவர்கள் வைக்கப் பட்டிருக்கவில்லை. ராம்கோபாலின் தந்தைக்கும் தனது மகன் ஓர் ஓவியன் என்பது சமூகத்தில் கௌரவமான நிலையென்று தோன்றவில்லை. எப்படியோ அவரை ஓர் அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகச் சேர்த்துவிட்டார். ஆனால் ஒரே ஆண்டில் பணியில் அவருக்கு அக்கரை இல்லை என்னும் காரணத்தைச் சொல்லி பள்ளி நிர்வாகம் அவரைப் பணியிலிருந்து நீக்கிவிட்டது. தந்தையின் முயற்சியால் இன்னொரு பள்ளியில் ஓவிய ஆசிரியர் வேலை கிட்டியது. ஆனால் அங்கும் அவர் ஓர் ஆண்டிற்குமேல் நிலைக்கவில்லை. ஆனால் ஓவியம் தீட்டுவது நிற்காமல் தொடர்ந்தது. முக்கியமாக பத்திரிகைகளில் அவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின. தனது 30 வயதிலேயே ராம்கோபால் புகழும் செல்வமும் கொண்டவரானார்.
ராஜஸ்தான் கலாமந்திரின் முதல்வராக 1945 முதல் பணிசெய்தார். அப்போது அவரது வயது 40. 1961-66 இல் ராஜஸ்தான் ஓவியப்பள்ளியில் முதல்வராக நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் லலித் கலா அகாதமி அவரை துணை ஆளுனராக 1958-60களில் பொறுப்பேற்க அழைத்தது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
சாந்திநிகேதனின் பாணியுடன் கலந்த ராஜஸ்தான் பாணி அவரது படைப்புகளில் பின்பற்றப்பட்டது. அவரது பல படைப்புகள் காளிதாஸ் (மேகதூதம்) மற்றும் உமர் கயாம் போன்றோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டன.
ஓவியரான ராம் கோபால் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்டார். அவரது நூல்களில் சில…
1934- விஜயவார்க்கியா ஓவியத்தொகுப்பு
1945- மேகதூத சித்ராவளி (ஓவியங்களின் தொகுப்பு)
1945- பிஹாரி சித்ராவளி ( பிஹார் மாநில ஓவியப்படைப்புகள் பற்றின கட்டுரைகள்)
1952- ராஜஸ்தான் ஓவியங்கள் (கட்டுரைகள்)
1991- ரூபாங்கர் (தன் வரலாறு)
இவையல்லாமல் புதினங்களும் கவிதைகளும் உண்டு.
பெற்ற விருதுகள்
1958- பத்மஸ்ரீ விருது
1988- லலித் கலா அகாதமி-டில்லி கலா ரத்னா கௌரவம்
1988- அவரைப் பற்றிய கட்டுரையுடன் கூடிய அவரது படைப்புகளின் கையேடு லலித் கலா அகாதமி டில்லி வெளியீடு
1998- ப்ரயாக் ஹிந்தி சாஹித்ய சம்மேளன் ‘சாஹித்ய வாசஸ்பதி’ விருது
0