Skip to content
Home » இந்திய ஓவியர்கள் #12 – மனிஷி சந்திர தே

இந்திய ஓவியர்கள் #12 – மனிஷி சந்திர தே

மனிஷி தே தமது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை. (மூன்றாவது மகன்) அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை குலசந்திர தே காலமானார். மனிஷி, ரவீந்திரநாத் டாகூரின் கல்விக்கூடமான ‘பத பவனா’ (patha Bavana) சிறுவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்தக் கல்விமுறை அவருக்கு ஒத்துவரவில்லை. இதனால் அடங்காத மாணவனாக மாறினார். ஆனால் அவனேந்திரநாத் டாகூரின் வங்கவழி ஓவியப் பாணி பயில்வித்தல் அவரை அமைதிப்படுத்தியது. பின்னாளில் ஒரு துடிப்பான மாணவனாக மாற்றம் கொண்டார். நந்தலால்போஸ், அசித்குமார் ஹல்தார், சாரதா உகில், அண்ணன் முகுல்தே, K.வெங்கடப்பா, ஜாமினி ராய் போன்ற அவனேந்திரநாத் டாகூரின் மாணவர்களுடன் அவரும் ஒருவரானார்.

மனிஷி தே
மனிஷி தே

ஒற்றை வண்ணப்படைப்பு -1928 -1947 (Monochrome Period -1928-1947)

மனிஷிதே சலிப்பின்றித் தொடர்ந்து இந்தியாவெங்கும் தொடர் பயணம் செய்தார். கலையின் வெவ்வேறு வடிவங்களைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்ள இது அவருக்குப் பெரிதும் உதவியது. அவரை ஒரு முழுமையான இந்திய ஓவியனாகவும் ஆக்கியது. வண்ணத்தைக் கழுவிப் படைக்கும் ஓவிய வழியில் அவர் பெரும் திறமை பெற்றவரானார். தமது 19 ஆவது வயதிலேயே மனிஷிதே முதல் ஒருநபர் ஓவியக் காட்சியை 1928 இல் கொல்கத்தாவில் வைத்தார். அவரது படைப்புகள், குழு ஓவியக் காட்சிகளில் தொடர்ந்து இடம்பெறத் தொடங்கின.

புது டெல்லியில் இயங்கும் AIFACS அமைப்பு அமிர்தா-ஷெர்-கில், ஸைலோஸ் முகர்ஜியா போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளுடன் மனிஷியின் ஓவியங்களையும் காட்சிப்படுத்தியது. ஒற்றை வண்ணத்தில் ஓவியம் படைப்பது அவரது பெரு விருப்பமாக இருந்தது. பிந்தைய 1940களிலும் தொடக்கக் கால 1950களிலும் அவரது வசித்தல் டெல்லியில் இருந்தபோது M.F.ஹுசைன், F.N.ஸூஸா, S.H.ரஜா, சைலோஸ் முகர்ஜியா, சந்தனு உகில் போன்ற ஓவியர்களுடன் அவருக்கு நெருக்கமான நட்பு உண்டாயிற்று. மும்பையில் உருவான PAG ஓவியர் குழுவில் அவரும் உறுப்பினரானார். அந்தத் தொடர்பு அவருக்கு க்யூபிஸம் பற்றியும் மேலைநாட்டு நவீனச் சிந்தனை பற்றியும் தெரிந்துகொள்ள நுழைவாயிலாயிற்று. மேலை நாட்டுப்பாணி சிந்தனைப் படைப்புகளை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தவர்களில் அவருக்கும் பெரும் பங்குண்டு.

சிவப்பு காவி வண்ணப்படைப்புக்காலம்-1948-1966

1949 இல் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த இந்தியர்களின் முகங்களை 22 ஓவியங்களாகத் தீட்டினார். அவர்களின் வலியையும் துயரையும் அவற்றில் பதிவு செய்தார். ஓவியர், எழுத்தாளர், கவிஞர், கலை விமர்சகர், புகைப்படக் கலைஞர், என்னும் பன்முகத்திறன் கொண்ட ரிச்சர்ட் பார்த்தலோமியோ (Richard Bartholomew 1926 – 1985) தான் அவ்வப்போது எழுதி வெளிவந்த பல கலை விமர்சனங்களை ‘A Critic’s Eye’ .‘The Art Critic’ என்னும் இரு நூல்களாக வெளியிட்டார். மனிஷி இவற்றின் தாக்கத்தால் வங்கபாணிச் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக வெளிவந்தார். அடையாரில் மையம் கொண்டு செயற்படும் பிரம்மஞான சங்கத்தின் ஆளுனராகச் செயற்பட்ட இலங்கைக் குடிமகனான ஜீனராஜதாஸா அவரது நண்பரானார். அவரது சொற்பொழிவுகள் நூலாகத் தொகுக்கப்பட்டபோது நூலின் மேலட்டையில் மனிஷியின் ஓவியம் இடம்பெற்றது.

PAG குழு கலைக்கப்பட்டு அதன் உறுப்பினரில் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கத் தொடங்கினர். ஹுசைன் தமது முதுமைக்காலத்தில் இந்தியாவில் வசிக்க இயலாமல் (ஹிந்து அடிப்படைவாதிகள் கொடுத்த நெருக்கடி) துபாய் சென்று அங்கேயே காலமானார். மனிஷி தே தமது இறுதிக்காலம் வரை டெல்லியிலும் மும்பையிலுமாக வசித்தார். 1966 இல் தமது 57 ஆவது வயதில் அவர் கொல்கத்தாவில் காலமானார்.

0

பகிர:
அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *